நிலைக்குமா நூலிழை வெற்றி? {ஜனவரி-2018}

திர்பார்ப்புகளுக்கு மாறாக குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. வாக்குப்பதிவுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் சொன்ன வெற்றியின் வீதாச்சாரம் குறைவாக இருக்கிறது.  பாஜகவின் இலக்கு 150 இடங்கள் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா நிர்ணயித்திருந்தார்.  மாநில ஆட்சியின் பக்கபலம், மத்திய ஆட்சியின் கண்காணிப்பு,  தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்பு, கட்சியின் வலுவான கட்டமைப்பு, குஜராத்  மாடல் குறித்த பிம்பங்கள், எண்ணற்ற அமைச்சர்களின் பிரச்சார முகாம், கடைசி பதினைந்து நாள்களும் குஜராத்தை விட்டு அகலாமல் அங்கேயே காலூன்றி நின்ற பிரதமர் என்ற இத்தனைச் சாதகங்கள் இருந்தன.  இவற்றை மீறி நிகழ்ந்த வெற்றி பாஜகவுக்கும் துரதிர்ஷ்டமாக அமைந்துள்ளது.

2014இல் நாடாளுமன்றத் தேர்தலின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து எடுத்துச் செல்வது பாஜகவின் அவசியமாகும்.  வெற்றிக்கான பாதையை நிர்ணயித்த குஜராத் இன்று பலவீனத்தின் பாதையையும் உருவாக்கியுள்ளது.  பிரதமராக மோடி பல சாதனைகளை நிகழ்த்த விரும்புகிறார்.

உலகில் எங்கும் பரிட்சிக்கப்படாத சோதனை முறைமைகளைக் கையாள்வதினால் வரலாற்றுச் சாதனைகளைப் படைக்கலாம் என்ற கட்டுக்கடங்கா ஆர்வம் அவரிடம் இருக்கிறது.  அவை கட்சியினுடைய திட்டமாக இல்லாமல் அவருடைய சொந்த திட்டமாகவும் இருக்கின்றன.  தானும் கட்சித் தலைவரும் சேர்ந்து கலந்தாலோசித்தால் போதும், தடியால் அடித்துக் கனியவைப்பது தகும் என்ற மனநிலை மோடிக்கு இருக்கிறது.  இப்போக்கு நாட்டின் சமநிலையை அதன் எல்லா தளங்களிலும் குலைத்துக்கொண்டிருக்கின்றன. இந்திய மண்ணையும் அதன் பூகோள அமைப்புகளையும் அயலுறவுகளையும் கருத்தில்கொள்வோர்க்கு மோடி தலைமையிலான அரசின் போக்குகள் கடும் அச்சத்தைத் தருகின்றன.  இது மட்டுமல்லாமல், கண்ணுக்கு நேரே அரசு உருவாக்கும் அவலங்களைப் புறக்கணித்து அவை வெற்றிபெற்ற திட்டங்கள் என மோடி கூறுவது மக்களின் நிரந்தர அல்லலாகும்.

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கானதாக இருந்தாலும் எப்போதும் இத்தகைய தேர்தல் முடிவுகள் மத்திய அரசின் போக்கையும் கணக்கில் கொள்வதாகவே இருந்துவருகிறது;  குஜராத் மாடலுக்குத் துணையாக இந்திய மாடல் இல்லை.  மோடி இந்திய அளவில் தான் சாதித்தவற்றைக் குஜராத் மக்களின் கவனத்திற்குள் கொண்டுபோகாமல் தடுத்தார்.  குஜராத்தியர்களின் கவனத்திற்குள் தன் மத்திய ஆட்சியின் மீதான கணிப்புகள் போகாமல் தடுத்தார்.  தனிநபர் தாக்குதல்கள், மதப்பிரிவினைவாத அம்சங்கள், ஆவேசமாய் நின்று முழங்கிய 56 அங்குல மார்பினைச் சிற்றுருவாக்கிய உருக்கமான பேச்சுகள் என்று வேறொரு பரிமாணத்தில் இருந்தார்.  மோடியின் அரசியலை அதன் வேரிலிருந்து கணித்துப் பாருங்கள்;  மோடி வீழ்ந்துவிட்டார் என்பது தெரியவரும்.

படேல் சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைகள், உனா எழுச்சி, ஜி.எஸ்.டி. வரித் தாக்குதல்கள் போன்றவற்றிலிருந்து குஜராத்தைக் கரைப்பது கடினம் என்கிற நிலை எட்டப்பட்டுள்ளது.  சிறுதொழில் முனைப்பு, சுரங்கத் தொழில், வைரங்கள் பட்டை தீட்டப்படுதல், ஜவுளி உற்பத்தி உள்ளிட்ட சில அம்சங்களில்   குஜராத் எப்போதும் நிறைவான வளர்ச்சியில் இருந்துவந்துள்ளது.  பாஜகவின் செல்வாக்கு நீடித்திருக்கும் மாநிலங்களில் குஜராத் தனித்த அம்சங்களோடு தொடர்ந்து இயங்கிவந்துள்ளது.  இதனை மதவாதத்துக்குள் பொதிந்துவிடுவதில்தான் மோடி வெற்றி பெற்றார்.  ஆரம்பத்தில் அவர் வெற்றிபெற வைத்த குறி இது.  இப்போது அதை முன்னிலைப்படுத்தியும் பழைய வெற்றியைப் பெற முடியவில்லை; தொகுதிகள் குறைந்துவிட்டன;  பல தொகுதிகள் நூலிழையில் தொங்குகின்றன. மதவெறியால் எப்போதும் வெற்றிக் கணக்கைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற அவரின் கனவு கலைகிறது.

காந்தி, படேலுக்குப் பின் குஜராத்திற்கென்று இன்னோர் ஆளுமையாகத் தன்னை முன்னெடுத்திருப்பவர் அவர். இப்போது நாட்டின் பிரதமராகவும் இருப்பது அம்மாநிலத்தின் பலம். இத்தகுப் பெருமைகளைக் குஜராத்தியர்கள் மனங்கொண்டிருப்பதில்தான் இந்த நூலிழை வெற்றியேனும் கிடைத்திருக்கிறது.  எனினும் மோடியும் பாஜகவினரும் இன்னும் தம்முடைய குற்றங்குறைகளைக் காண மறுக்கின்றார்கள்.  இது கடும் சிக்கலை உருவாக்கும்.

நாட்டுமக்கள் மனத்தளவில் பிரிந்துவிட்டால் நாடு பலவீனமடையும்.  இது தவிர்க்கப்படாத வரையில் மோடி கூறும் வளர்ச்சி என்பது தமாஷான நிகழ்ச்சி மட்டும்தான்.