முஸ்லிம் சமூகத்தில் பொதுவாக தர்ஹாக்களை பற்றிய ஒரு அதிருப்தி உண்டு பண்ணப்பட்டிருக்கிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால்? இஸ்லாமிய தஃவா எனும் பிரச்சாரக் களத்தில் பங்காற்றுவதாக கூறிக் கொள்பவர்களே இந்த அதிருப்தியை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
தர்ஹாக்கள் இஸ்லாமிய இறையியல் கோட்பாட்டில் இடையூறு செய்கின்றன என்று தன்னிச்சையாக குற்றம் சாட்டுகிற அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரப் பயணத்தில் தர்ஹாக்களில் அடக்கம் பெற்றுள்ள நல்லவர்கள் ஆற்றிய மகத்தான பணிகளின் கனத்தை எண்ணிப் பார்க்க அறவே தவறிவிடுகிறார்கள். அல்லது எண்ணிப்பார்க்க மறுக்கிறார்கள்.
தம்மை மட்டுமே தஃவாவின் காவலாளிகளாக கருதிக் கொளகிற மடத்தனம் இதற்கு காரணமாக இருக்கலாம்.
ஒருமுறை பாக்கிஸ்தான் நாட்டின் அதிபர் சர்தாரி அஜ்மீர் தர்ஹாவிற்கு ஜியாரத் செய்ய வந்திருந்தபோது ஜியாரத் செய்து விட்டு அஜ்மீர் தர்காவின் அலுவலகத்தின் விருந்தினர் புத்தகத்தில் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் ஆசிப் அலி சர்தாரி என்று கையெழுத்திட்டு, சர்தாரி என்ன எழுதினார் என்பதை ஆசிய டைம்ஸ் நாளிதழ் குறிப்பிடுகிறது.
“Is mukkadas mukaam par aakar mujhe jo roohani khushi mili hai, woh nakaabile bayaan hai. Allah taala se dua hai ke tamaam insaniyat ke liye asaaniya paida kare “
“இந்தப் புனித தளத்திற்கு வந்தததால் எனக்கு ஆத்மார்த்தமான மகிழ்ச்சி கிடைத்தது. அதை விவரிக்க இயலாது. அனைத்து மனித சமூகத்தின் சிரமங்களை இலேசாக்கட்டும் என்பதே உயர்ந்தவன் அல்லாஹ்விடம் நான் வைக்கும் பிரார்த்தனை”.
தர்ஹாக்கள் அல்லாஹ்வை மறக்கடிப்பவை அல்லது துறக்கச் செய்பவை என்ற துர்ப்பிரச்சாரத்தின் கிளிப்பிள்ளைகள் இந்தவார்த்தைகளில் கொஞ்சம் கவனம் செலுத்தட்டும்
முஸ்லிம் சமுதாயம் தெளிவாகவே இருக்கிறது. தம்மை மட்டுமே தூய்மையானவர்களாக – அறிவாளிகளாக காட்டிக் கொள்ள முயல்கிற சிலசுய நல சக்திகள் மட்டுமே அது களங்கிக்கிடப்பதாக “ புரளி ” கிளப்புகிறார்கள்.
தர்ஹாக்களில் நடை பெறுகிற மார்க்கத்திற்கு முரணான செயல்கள் கண்டிப்பிற்குரியதாக இருக்கலாம். சொந்த தேவைகளுக்கு பணம் சம்பாதிப்பதற்காக தர்ஹாக்களைப் பயன்படுத்துகிறவர்கள் கணடனத்திற்குரியவர்களாக இருக்கலாம் ஆனால், தர்ஹாக்களில் அடக்கமாகி இருப்ப்பவர்கள் நம் கவனத்திற்குரியவர்கள். ஒவ்வொரு ஊரிலும் அவர்களது ஈமானிய வாழ்வும் இஸ்லாமிய பற்றும் போதனைகளும் சமுதாயத்திற்கு அவசியமானவை.
தர்ஹாக்களில் அடக்கம் பெற்றுள்ளவர்கள் வாழ்ந்த போதும் சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக இருந்தார்கள் மறைந்த பிறகும் பயன் தருபவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பலனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது புத்திசாலி சமூகத்தின் கடமையாகும்.
தர்ஹாக்களின் மேலுள்ள கோபத்தில் அங்கு அடக்கமாகியுள்ள பெரியோர்களின் மார்க்கச் சாதனைகளையும் இறை பக்தியையும் கூட கவனிக்க மறுப்பது நியாயமல்ல.
இறை நேசர்கள் அல்லாஹ்வின் போர்வைக்குள் இருக்கிறார்கள், அவர்களை அல்லாஹ்வே அறிவான் என இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதுண்டு. இறைநேசர்களின் மார்க்கப் பணியும் சமுதாயச் சேவையுமே பல சந்தர்ப் பங்களில் அவர்களில் சிலரை மக்களுக்கு அடையாளம் காட்டியுள்ளது.
ஏர்வாடி இபுறாகீம் ஷஹீத் வலியாகட்டும் , நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகமாட்டும் தங்களது சமுதாய்ப் பணிகளின் காரணமாகவே மக்களால் அடையாளம் காணப்பட்டார்கள்.
அஜ்மீரில் அடக்கமாகியுள்ள காஜா முஈனுத்தின் சிஸ்தி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் அன்னாரது மார்க்க சமுதாயப் பணிகள் காரணமாகவே இந்த மரியாதையை ப் பெற்றார்கள்.
சமயத்தின் வளர்ச்சியில் மிகப் பிரம்மாண்ட சாதனைகளை படைத்த அந்த நல்லவர்களின் வழிகாட்டுதல்களையும், மாக்கப் பிரச்சாரத்திற்கு அவர்கள் கையாண்ட உத்திகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள இன்றுள்ள முஸ்லிம் சமுதாயம் மறுக்கும் அல்லது மருகும் எனில் இன்று முஸ்லிம் சமூகத்தின் முன் எழுந்துள்ள மிகப் பெரும் சவால்களை சமாளிப்பது சிக்கல் மிக்கதாக மாறிவிடும்.
தஃவா எனும் பெயரில் ஆர்ப்பாட்டமாக அலட்டலாகவும் வீடீயோ வெளிச்சத்தில் மேதாவித்தனம் காட்டுவோர் கவனித்துக் கொள்ளட்டும். சர்தாரி விஜயம் செய்த காஜா முஈனுத்தீன் ஜிஸ்தி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 90 இலட்சம் பேர் இந்தியாவில் இஸ்லாமை தழுவியுள்ளதாக வரலாற்றாசிரியர் ஆர்னால்டு கூறுகிறார். வட இந்தியாவில் இஸ்லாம் என்பது ஜிஸ்தி அவர்களின் சேவைக்கு கிடைத்த கொடை என வரலாறு கூறுகிறது.
இஸ்லாமிய வரலாற்றில் இத்தனை அதிகமான அளவில் இஸ்லாத்தைப் பரப்பிய ஒரு பெரியாரை காண்பது அரிது ‘எனஇஸ்லாமிய கலைக் களஞ்சியம் கூறுகிறது.
இந்தியாவில் ஆங்கில ஆட்சி அமைந்த பிறகு கவர்னர்கள் பலரும் அஜ்மீருக்கு வந்து சென்றுள்ளனர். 1902 ல் கர்சன் பிரபு அஜ்மீருக்கு வந்தார். அப்போது “ இந்தியாவில் இந்த அடக்கவிடம் ஜாதி மத பேதமின்றி பேரரசு புரிகிறது என்று எழுதினார்.
கர்சன் பிரபிவின் வார்த்தைகளை இன்றைய முஸ்லிம்கள் கவனிக்கட்டும். அனைத்து தரப்பு மக்களும் இஸ்லாமை தேடி வருகிற தளங்களாக இன்றளவும் தர்ஹாக்கள் திகழ்கின்றன.
இன்றைய உலகில் இஸ்லாம் செயல்பட வேண்டிய முக்கிய களமாக இந்தியா இருக்கிறது என்பதை வெகு தாமதமாக இன்றைய இஸ்லாமிய அறிஞர்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமின் நன்மை சுமார் 80 கோடி மக்களுக்கு தேவையுடையதாக இருக்கின்றது . போதை, ஆபாசம், வட்டி, சூது, சாதீய வன் கொடுமைகள், தீண்டாமை,உருவ வழிபாடு போன்ற தீமைகளிலிருந்து மீளாத காரணத்தால் துறவிகள் என்ற போர்வையில் இருக்கிற போலியான மனிதர்களின் மந்தைகளாக மக்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். கல்வி அறிவில் கலாச்சார முதிர்ச்சியில் தேர்ந்த பிறகும் கூட அந்த மாயைகளிலிருந்து விடுபடாமல் மேலும் மேலும் அதிலேயே திழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்தியாவின் தொன்மை வேதங்களான ரிக் யஜூர் சாமவேதங்கள் உருவ வழிபாட்டிற்கு எதிரானவை. அத்வைதகோட்பாடு பிரம்மம் உருவற்றது என்கிறது. பண்டையசித்தர்களும். இப்போதைய ராம் மோகன்ரம், வள்ளலார், தயானந்தசரஸ்வதி போன்றவர்களும் உருவ வழி பாட்டை மறுப்பவர்களே. ஸ்தூல வடிவில் தெய்வச் சிலையும் அது குடியிருக்க கோயிலும் வேத்த்தில் இல்லாதது என இந்திய தத்துவ இயல் அறிஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். இந்தியாவின் பண்டைய பாரம்பரியமே அரபுலகில் இஸ்லாமாக எழுச்சியுற்று திரும்பியிருக்கிறது. இந்திய மக்கள் கற்பொழுக்கத்திலும் கருணை மிக்க வாழ்விலும் நாட்ட முள்ளவர்கள் இஸ்லாம் என்பது அவர்களது வாழ்வோடு மிக நெருக்கமானது. இந்த எதார்த்தங்களை எளிதாக புரிய வைக்க தர்ஹாக்கள் துணை செய்வது போல வேறெதுவும் எளிதாக இருக்க முடியாது/
மக்களை நீங்கள் தேடிப் போக வேண்டியதில்லை.
பிரசுரங்களை நீட்ட வேண்டியதில்லை,
கேள்வி பதில்களை பதிவு செய்ய வீடியோகிராபர்களை அலைய விட வேண்டியதில்லை.
முஸ்லிம்களை தேடி மக்கள் கூட்டம் கூட்டமாக தங்களது துயரங்களோடும் பிரச்சினைகளோடும் வருகிறார்கள். அவர்களை அங்கு கொண்டு சேர்ப்பதற்கு அரசு பேருந்துகளை இயக்குகிறது. இரயில் வசதி செய்து கொடுக்கிறது. சாலைகள் செப்பனிடப்படுகின்றன.
பக்குவமாகவும் முறையாகவும் செயல்பட்டால் இஸ்லாமின் நன்மகளை எடுத்துச் சொல்ல இதைவிட சிறப்பான தளம் வேறு ஏது?
இலட்சக்கணக்கான மக்கள். தாமாக முன்வந்து மரியாதை செலுத்த வருவது ஒரு தனிமனிதருக்கு காட்டும் பக்தி என்று பார்க்காமல் அவரது இஸ்லாமிய வாழ்வுக்கும், சமுதாயப் பணிகளுக்கும், அவரால பெற்ற நன்மைக்கும் தருகிற மரியாதையே என்ற கண்ணோட்ட்த்தோடு தர்ஹாக்களைப் பார்க்க்கிற மனோநிலை சமுதாயத்தில் வளருமானால், அது இஸ்லாமின் ஈர்ப்பு சக்தியாக விளங்கிய நல்லடியார்களை அவர்களது மறைவிற்குப் பின்னரும் இஸ்லாமை நோக்கி மக்களை திரட்ட பயன்படும்.
அவ்வாறு பயன்பட வேண்டுமானால்,
தர்ஹாக்களை இஸ்லாத்திற்கு எதிரானதாக காட்டும் முட்டாள் தனத்திற்கு முதலில் முடிவு கட்டிவிட வேண்டும். அனாச்சாரங்களை சீர் செய்வது அதிருப்தி வழியில் ஒரு போதும் சாத்தியமாகாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இறைநேசர்களை உண்மையாக மதிப்பிடவும் மதிக்கவும் வேண்டும்.
அவர்கள் எப்படி இஸ்லாத்தை மக்களின் இதயத்திற்கு அருகே கொண்டு சென்றார்கள் என்ற வழி முறைகளை ஆயவு செய்யவும் அந்த வழிமுறைகளை பின்பற்றவும் வேண்டும்.
தர்ஹா வழிபாடு என்ற சொல்லில் சிறு மாற்றம் செய்து தர்ஹாக்களில் அடக்கமாகியிருப்போர் காட்டும் வழிக்கு வழிப்படுவது என திருத்திக் கொள்வது குறித்து சமுதாயம் யோசிக்குமானால் தஃவாவிற்கான எதார்த்தமான வழிகள் ஏராளமாக திறக்கும்.
இன்னொரு முறை ஏதாவது ஒரு தர்ஹாவை கடந்து செல்லும் போது அந்த நல்லவருக்கு ஒரு சலாமை சொல்லி விட்டு இது பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! 5 கோடி தேவையில்லை. இவர் என்ன சாதனை செய்தார் என்று ஒரு ஐந்து நிமிடம் யோசியுங்கள் மாற்றங்களுக்கான வழிகள் அந்த நிமிட்த்திலிருந்து ஆரம்பமாகும்…
அப்துல் அஜீஸ் பாகவி
கோவை.