என் பெயர் சித்தி ஜீனைதா –
நவீன தமிழ் இலக்கிய உலகில் இஸ்லாமிய படைப்பாக்கங்களை வழங்கிய பெண்மணி நாகூர் சித்தி ஜீனைதாவை உங்களில் பலர் அறிந்திருக்க முடியாது. மார்க்கக் கல்வி கற்றவரும் தமிழ் ஆர்வலருமான எனது தந்தை எனக்கு அந்த நாவலாசிரியையின் பெயரை வைத்திருந்தார்.
தந்தையைப் போலவே நாங்களும் மார்க்கக் கல்வியும் தமிழறிவும் பெற்றிருந்தோம்.
நாங்கள் என்றால் யார்?
எனது அண்ணன் அக்பரலி, நான், எனது தங்கைகள் – ஆயிஷா, பரீனா, அலீமா, கலீமா ஆகிய அறுவர்.
எனது தந்தை ஒரு ஹஜ் டிராவல் சர்வீஸ் கம்பெனியில் பணியாற்றி வந்தார். எனது அண்ணன் ஒரு தோல் மண்டியில் கணக்கராக வேலை செய்து வந்தார்.
சென்னை புளியந்தோப்பில் ஒரு வாடகை வீட்டில்தான் நாங்கள் நீண்டகாலமாக குடியிருந்து வந்தோம். தந்தையின் வருமானத்தில் நகர்ந்த எங்கள் குடும்பம் அண்ணனின் வருமானம் வந்தபின்பும் நகரத்தான் செய்தது. உணவு, உடை, உறையுள் வாடகை எனத்தேவைகளை இருவரின் வருமானமும் நிறைவு செய்தன.
என் அண்ணனின் வயது இருபத்தாறு, என்வயது இருபத்து நான்கு! இருவருக்கும் இரண்டு வயது வித்தியாசம். அடுத்தடுத்துப் பிறந்தவர்களும் இரண்டாண்டுகள் வித்தியாசத்தில் பிறந்தவர்கள். கடைசித் தங்கை கலீமாவின் வயது பதினாறு.
நாங்கள் ஐந்து சகோதரிகளுமே பூப்பெய்தியிருந்தோம்.
எனக்கு கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். வந்த ஒவ்வொரு மாப்பிள்ளையும் பல்வேறு காரணங்களால் என் கரம் பற்ற வரவில்லை!
வசதிவாய்ப்பில்லாமை, வியாபாரிகளாக இல்லாமை, சொந்த வீடில்லாமை, எனக் குடும்பக் காரணங்கள்! வயது அதிகம், நிறம் போதாமை, உத்தியோகம் பார்க்காமை, தெத்துப்பல் என என்னைப் பற்றிய காரணங்கள்!
நகை, கைக்கூலி, சீர்செனத்தி, கல்யாண மண்டபம், விருந்தினர் தொகை எனப் பொருளாதாரக் காரணங்கள்! இதற்கும் மேலாக ஐந்து பெண்களைப் பெற்ற குடும்பம் என ஒரு ‘மாபாதக’ காரணம்!
இதுவரை என்னைப் பெண்பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை என்னிடம் இல்லை!
“எதுக்கும் கவலைப்படாதே சித்திமா எல்லாம் அந்த வல்ல அல்லாஹ் நாட்டப்படியே நடக்கும்” என என் அத்தா ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்ற பாடத்தைக் கற்றுத் தந்திருந்தார்.
எனக்குள்ள கவலையெல்லாம் என் கரத்தை ஒருவன் பற்றிவிட்டால் அடுத்தடுத்து தங்கைகளுக்கும் மணவிழா நடக்குமே! அண்ணனுக்கும் ஒரு துணை கிடைத்து மகிழ்ச்சி வெள்ளம் புரளுமே என்பது தான்!
“உம்மா, நான் கொஞ்சம் கருப்புத்தான், அதனாலும் மாப்பிள்ளை கிடைப்பதில் சிரமம் உள்ளது. நிறத்தைக் காரணமாகக் கூறுபவருக்கு ஆயிஷாவை மணம் முடிக்கலாமே!” என்றேன்.
“போடி, பைத்தியக்காரி! அக்கா இருக்க தங்கச்சிக்குக் கல்யாணமா? அப்படி நாம் நடந்து கொண்டால் வீணாகப் போனதுங்க கூட்டம் உங்க அஞ்சு பேரையும் பார்க்கணும்னு சொல்லும்!” என தாயார் மிகப் பொறுப்புடன் பதில் சொன்னார்.
ஐந்து பவுன் நகை, சமுதாயக் கூடத்தில் கல்யாணம், மாப்பிள்ளை வீட்டார் நூறு பேருக்கு விருந்து, அளவான சீர்ப்பொருள்கள் என்பதில் அத்தா உறுதியோடிருந்தார். வரதட்சனை கிடையவே கிடையாது.
‘விரல் அளவுக்குத்தானே வீக்கம்!’
தொடக்கத்தில் வேலை செய்பவர்கள், சொந்த வீடுள்ளவர்கள், தொழுபவர்கள், நல்ல குடும்பத்தினர் என பெண்கேட்டு வந்தார்கள். அக்காலகட்டம் 1984 முதல் 1994 வரை- 1995-இல் தலைகீழ் மாற்றம்! வேலை செய்யாதவர்கள், அரைகுறைப்படிப்பாளிகள், குடிசை வீடுகளில் வாடகையில் இருப்போர், குடிக்காரர்கள், அடியாட்கள் எனப் பெண் கேட்டு வரத்தொடங்கினார்கள்.
அத்தாவும் அம்மாவும் அடைந்த கவலைக்கு அளவில்லை. அண்ணனும் தங்கைகளும் கண்கலங்கினார்கள். நான் கமுக்கமாக கண் கலங்கினேன். மனதுக்குள் புழுங்கினேன்.
“சரீபா, மெட்ராஸ் மாப்பிள்ளங்க வேண்டாம். நான் எங்க ஊர்ப்பக்கமா போய் மாப்பிள்ளைக்குச் சொல்லிவச்சிட்டு வாரேன்” என என் தாயாரிடம் சொல்லிய அத்தா ஞாயிற்றுக் கிழமையன்று ஆம்பூருக்குப் புறப்பட்டார்.
அத்தாவுக்கு பூர்வீகம் ஆம்பூர்ப் பக்கம் ஏதோவொரு குக்கிராமம். அம்மாவுக்குப் பூர்வீகம் திருநெல்வேலி ஜில்லா. அம்மாவின் சொந்தக்காரர்கள் ஐஸ்ஹவுஸில் இருந்தார்கள். அம்மாவும் அவ்வப்போது எனக்காக ஐஸ்ஹவுஸ், மீர்சாகிப் பேட்டை எனப் போய் வந்தார்.
ஆம்பூருக்குப் போய் வந்த அத்தா மிகவும் நம்பிக்கையோடு பேசினார்.
“உம்ராபாத், மேல் விசாரம், பேரணாம் பட்டெல்லாம் போயிட்டு வந்தேன். இன்னும் ஒரு மாசத்திலே நல்லசேதி” வரும் என்றார்.
ஒருநாள் –
அத்தாவின் நண்பர் அல்லா பக்ஷ் வந்து பேசிக் கொண்டிருந்தபோது “சுக்கூரு, தாஸா மக்கான் பீடி மண்டிக்காரர் பிதாவுல்லாஹ் உன்னைப் பத்தி விசாரித்தார்” என்றார்.
“என்ன விஷயம்!” என அத்தா மிகவும் அமைதியோடு கேட்டார்.
“கோபிச்சுக்க மாட்டியே! அவரு உம்மகளை ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக்க கேட்கச் சொன்னாரு. நான் கேட்க மாட்டேன்னு சொல்லிட்டேன்?” என்றார் அல்லாபக்ஷ். “அவரின் கேட்க மாட்டேன்னு சொன்ன நீங்க இப்போ ஏன் என்னிடம் கேட்டீங்க!” என்ற அத்தாவுக்குக் கோபம் வரவில்லை.
அல்லாபக்ஷ் அத்தாவின் நண்பர் என்றாலும் வயசு அதிகமானவர். அத்தாவின் மதிப்பிற்குறியவர். கேட்காமலேயே பல உதவிகள் செய்தவர்.
“அஞ்சும் பெண்களாயிருக்கு. அளவான வருமானம். பிதாவுல்லாஹ் நல்ல மனசுக்காரன், சொந்தவீடுள்ளவன், வசதிக்காரன், முதல் சம்சாரம் மவுத்தாப் போயிடுச்சு. அவனுக்கும் வயசு முப்பது தான் இருக்கும். ஒருவேளை நீயும் உங்குடும்பமும் விரும்பி அவனை மாப்பிள்ளையா ஏத்துக்கிட்டா உதவி ஒத்தாசைகள் கிடைக்கும்! அதுக்காக தான்….” என அல்லாபக்ஷ் தயங்கித் தயங்கி சொன்ன நிதர்சனங்கள் என்னை அசைத்துப் பார்த்தன.
“ஆம்பூரிலே மாப்பிள்ளைக்கு சொல்லி வந்திருக்கேன். அதைப் பார்த்துட்டு அதுக்கடுத்தபடியா பார்க்கும்போது பீடி மண்டியைப் பத்தி யோசிப்போம்” என்ற அத்தாவின் முகத்தில் புன்னகை!
அல்லாபக்ஷ் எறிந்த கல் எங்கள் குடும்பக் குளத்தில் சிறு அலைகளை ஏற்படுத்தியது!
ஐஸ்ஹவுஸிலிருந்து ஒரு மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். அதுவும் ரெண்டாம் தாரமாம்!
கல்யாணமாகி மூன்றாம்நாள் மணமகள் தற்கொலை செய்து கொண்டுவிட்டாளாம்.
அத்தா “யோசித்துச் சொல்கிறோம்” என்றனுப்பிவிட்டார்.
மண்ணடியிலிருந்து ஒரு மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். “வரதட்சணை, சீரெல்லாம் வேண்டாம். வீட்டிலேயே வைத்து எளிமையான கல்யாணம்” என்றார்கள் தங்களை ‘அஹ்லே குரான்” என்றனர். ‘தமிழ்நாட்டில் தங்களை 19-ஆம் கூட்டம் என்கின்றனர்’ என்பதையும் கூறினர். அத்தா சம்மதிக்கவில்லை.
“ஏங்க, இவுங்க என்ன கூட்டம்? தவ்ஹீத் கூட்டமில்லையா இவுங்க! என என் தாயார் விரக்தியோடு கேட்டார்.
“இவுங்க வேற ஆளுங்க. குர்ஆன் மட்டும் போதுமுன்னு சொல்றவுங்க. நமக்கு இவுங்க சரிப்பட்டு வரமாட்டாங்க.” என்றார் அத்தா.
ஒரு வாரம் கழிந்திருக்கும்-
அத்தாவின் சொந்தக்காரர் ஒருவர் ஆம்பூரிலிருந்து வந்தார். வந்தவர் அத்தாவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
வந்தவரின் குரல் கீச்சுக் குரலாகயிருந்தது அவர் பேசிய சங்கதி எங்களுக்குக் கேட்கவில்லை. அம்மாவுக்குந்தான்!
ஆம்பூர்காரர் போனபின் அத்தா அம்மாவிடம் கீச்சுக்குரலில் கேட்ட செய்தியைச் சொன்னார்.
“சரீபா, வந்து போனவர் சொன்னதைக் கேட்டியா?”
“கீச்சு கீச்சன்னுதான் கேட்டது. பேச்சு புரியலியே!”
ஊம்ராபாத் மதரஸாவிலே உஸ்தாதா இருக்காராம் தன்வீர்னு வாணியம்பாடிக்காரர். அவரு நம்ம சித்தி ஜீனைதாவை கல்யாணம் செய்துக்க சம்மதச்சுட்டாராம். நம்மகிட்ட பேசச் சொல்லியிருக்காரு…”
“சரின்னு சம்மதம் சொல்லிப் பேசி ஆகவேண்டிய வேலைகளைப் பார்க்க வேண்டியதுதானே!”
“கொஞ்சம் யோசித்து கலந்து பேசித்தான் ஆக வேண்டியதைப் பார்க்கணும்!
“இதுல யோசிக்கவோ கலந்து பேசவோ என்னயிருக்கு?”
“அவசரப்படாதே! நான் சொல்றத முழுசா கேட்டுட்டு சிந்திச்சு அப்புறமா பேசு!”
“அந்த உஸ்தாதுக்கு நம்ம அக்பரலி வயசுதானாம்! ஆனா அவருக்கு இடதுகால் கொஞ்சம் ஊனமாம்…” – கவலை ரேகைகள்!
அத்தா- உம்மாவும் பேசிக் கொண்டதை நானும் சகோதரிகளும் கேட்டுக் கொண்டுதான் இருந்தோம். சின்னவீடு என்பதால் யாரும் கமுக்கமாகப் பேச முடியாது. எங்களுக்குள்ளும் எந்தவித ரகஸியமும் கிடையாது!
“ஊனம் ஒரு குறைபாடாகாது! மன ஊனம் உள்ளவர்களைவிட உடலூனம் உள்ளவர்கள் மேலானவர்கள்!” என என் சம்மதத்தைப் பிரகடனப்படுத்த எனக்கு எந்தத் தயக்கமும் ஏற்படவில்லை! என் கண்களில் நீர் கசிந்தது.
அப்போது என் கண்களில் முன் என்னுடைய மணவிழாவிற்குப் பின் எங்கள் குடும்பத்தில் உருவாகப் போகும் ஐந்து ஜோடிகள் நின்றார்கள்.
என் செயலால் எனக்கு மறுமைப் பேறுகிடைத்தால் போதும்!
– தாழை மதியவன்