தள்ளாடித் தள்ளாடி நடந்து சென்றார் அந்த மனிதர். தொண்டுக் கிழவரல்லர் அவர் . வாலிபப் பருவத்தினர்தாம். அவரின் தள்ளாட்டத்துக்குக் காரணம் முதுமையின் தாக்கமல்ல, போதை மயக்கம். ஆம் மதுப்பிரியர் அவர்… மதுவுண்ட மயக்கத்தில் நடை தள்ளாடினாலும் அவரிடம் நல்ல உணர்வு இருக்கத்தான் செய்தது.
தெருவில் தள்ளாடியபடியே நடந்து வந்த அவர் திடீரென நின்றார். தரையில் கிடந்த ஏதோ ஒன்று அவர் பார்வையில் பட்டது. குனிந்து எடுத்தார். அது ஒரு காகிதத்துண்டு. உன்னிப்பாகக் கவனித்தார் அதனை.
பின்னர் தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டார். மீண்டும் சிறிது தொலைவு நடந்து ஒரு கடையின் முன் நின்றார். அத்தர் முதலான நறுமணப் பொருள்கள் விற்கப்படும் கடை அது. அதன் முன்னே நின்றவர் தன் சட்டைப் பையைத் துழாவினார். இரண்டு சிறு காசுகள்தான் கையில் கிடைத்தன. விருட்டென அவற்றை வெளியில் எடுத்தவர் கடைக்காரரிடம் கொடுத்தார் .
“இந்தக் காசுகளுக்கு சிறிது அத்தர் கொடுங்கள்”… என்று கேட்டார். கடைக்காரர் ஏற இறங்கப் பார்த்தார் அவரை. வந்தவரின் வார்த்தைகளில் வீசியது மதுவின் நெடி.. கேட்பதோ அத்தர்.
நிலைமையை நிதானித்துக் கொண்ட கடைக்காரர் ஒரு குப்பியில் ஏதோ கொஞ்சம் அத்தரை ஊற்றி அவரின் கையில் தந்து விட்டார். பெற்றுக் கொண்ட அவர் தன் நடையைக் கட்டினார். சற்று வேகமாகவே தம் வீட்டை வந்தடைந்தார் அந்த மனிதர்…
வீட்டினுள் வந்ததும் ஒரு மூலையில் அமர்ந்து சட்டைப் பையில் கையை விட்டு அந்தக் காகிதத்துண்டை வெளியில் எடுத்து பிரித்து கண்கள் விரிய விரியப் பார்த்தார். ஒரே ஒரு வரிதான் அதில் அரபியில் எழுதப் பட்டிருந்தது . அத்தர் குப்பியை திறந்து விரலால் அத்தரைத் தொட்டு அந்த ஒற்றை வரியின் மீது தடவினார். மறுபடியும் அவரின் கண்கள் அதை உன்னிப்பாக பார்த்தன. அவருடைய உதடுகள் அதை உச்சரித்தன.
அவரின் முகத்திலிருந்த சிறு இறுக்கம் விலகலாயிற்று. முகம் மலரலாயிற்று . மீண்டும் ஒரு சொட்டு அத்தரைத் தொட்டு அதில் தடவி மறுபடியும் படித்தார் அந்த ஒற்றை வரியை, பின் அதை தன் கண்களில் ஒற்றிக் கொண்டு அந்தக் காகிதத்தை,முத்தமிட்டு முகர்ந்து தலைக்கு மேலாக உயரத்தில், சுவற்றில் இருந்த ஒரு மாடத்தில் வைத்து, அது பறந்து கீழே விழுந்து விடாமல் ஒரு சிறு பலுவையும் அதன்மேல் வைத்துவிட்டு படுக்கையில் சாய்ந்தார்.
காகிதத் துண்டில் எழுதப்பட்டிருந்த அந்த ஒற்றை வரி…
بسم الله الرحمن الرحيم
“பிஸ்மில்லாஹிர் ரஹ்மானி ர்ரஹீம்” ..
அந்த ஒற்றை வரியை உச்சரித்து தன் கண்களில் ஒற்றிக் கொண்ட அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் ஆன்மீக ஞானி காஜா பிஷ்ருல் ஹாஃபி (ரஹ்) அவர்கள்.
அன்றைய இரவில் அவர்கள் கண்ட கனவு ஒன்றில் “காஜா பிஷ்ருல் ஹாஃபியே .. நம்முடைய பெயரை இன்று மணங்கமழ செய்தபடியே நாமும் இனி உம் பெயரை உலகம் முழுக்க மணங்கமழச் செய்வோம். நம்முடைய பெயரைஇன்று நீர் உயாந்த இடத்தில் வைத்ததைப் போன்றே நாமும் இனி உம் பெயரை இம்மையிலும் மறுமையிலும் உயர்ந்தோங்கச் செய்வோம்”…. என ஓர் சத்தம் அசரீரியாக ஒலித்தது.
மதுப்பிரியராகத் திரிந்த காஜா பிஷ்ருல் ஹாஃபி அவர்களின் தடம் புரண்ட வாழ்க்கையைத் தடைப்படுத்தி, திசை திருப்பி, ஆன்மீகப் பாட்டையில் அவர்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டிய ஆரம்ப சம்பவம் இது இறைவனின் திருப்பெயரைச் சங்கைப்படுத்தியதற்குப் பகரமாக அவர்கள் இறைவனிடம் பெற்ற சன்மானமே “விலாயத்” எனப்படும் ஞானப் பரிவட்டம். மீண்டும் ஓர் சூபித்துவ இறைநேசரின் வரலாற்றோடு விரைவில் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்..
*செய்யது அஹமது அலி. பாகவி*