~~~~ ( 2 ) ~~~~~
“அபு துராப் பக்ஃஷி” என்கிற அந்த இறைநேசரின் உள்ளத்தில் நீண்ட நாட்களாக ரொட்டியும், முட்டை குருமாவும் சாப்பிடவேண்டும் என்கிற ஆசை மேலோங்கிக் கொண்டே இருந்தது.
பொதுவாகவே ஏதாவது குறிப்பிட்ட ஒன்றை சாப்பிட வேண்டும் என்கிற ஆசை அவ்வப்போது மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய ஒன்று தான். ஆனால் மனிதர்களுக்கும் மஹான்களுக்கும் சின்ன வித்தியாசம் உண்டு. சாப்பிட வேண்டும் என்று நம் மனம் ஆசைப்பட்டதை எப்படியாவது , எப்போதாவது சாப்பிட்டு மனதின் ஆசையை நிறைவேற்றி அதை சமாதானப்படுத்தி விடுவோம்.
ஆனால் மஹான்கள் அப்படியல்ல.. “உனக்கு என்ன அப்படி ஒரு ஆசை”..? என்று மனதிடமே கேள்வி கேட்டு அதை அடக்குவதற்கு பயிற்சி எடுத்துக் கொள்வார்கள். அதனால்தான் அவர்கள் மஹான்கள்.
அப்படித்தான் அபு துராப் பக்ஃஷி அவர்களும் அவ்வப்போது ரொட்டிக்கும் முட்டை குருமாவுக்கும் மனம் ஆசைப்படும் போதெல்லாம் அதன் மண்டையில் கொட்டிக் கொண்டே இருந்தார்கள்.
ஒரு நாள் வெளியூருக்கு ஒரு வேலையாக சென்றிருந்தபோது அந்த ஊரின் தெரு வழியாக நடந்து கொண்டிருக்க எதிரே ஒருவன் அபு துராப் பக்ஃஷி அவர்களிடம் பதைபதைப்புடன் வந்து … “என் ஆடு காணாமல் போய்விட்டது அதை பார்த்தீர்களா”..? என்று கேட்டான்.
“இல்லையப்பா … அதை நான் பார்க்கவில்லை”.. என்றார் அபு துராப் பக்ஃஷி
கேட்டவனுக்கு சந்தேகம்.. இவர்தான் ஊரில் புதிதாக நடமாடிக் கொண்டிருக்கிறார். பார்ப்பதற்கு டிப்டாப் ஆசாமியாகவும் இல்லை. பொதுவாகவே இறைநேசர்கள் உடைய ஆடைகள் அலங்காரமாக இருப்பதில்லை . பலதரப்பட்ட ஒட்டு போடப்பட்ட துணியோடுதான் அவர்கள் வலம் வருவார்கள். வந்தவன் சந்தேகப்பட்டதிலும் தவறில்லை.. “இவர் ஒருவேளை என் ஆட்டை திருடி விற்பதற்காக ஒளித்து வைத்து இருப்பாரோ”..? என்கிற சந்தேகம் அவனுக்கு.
மீண்டும் அழுத்தி , கொஞ்சம் அதிகாரத்தோடு கேட்டான்… “என் ஆட்டை நீங்கள் பார்க்கவில்லையா”..? கேட்பவன் நம்மை சந்தேகத்தோடு கேட்கிறான் என்பதை புரிந்துகொண்ட அபு துராப் பக்ஃஷி அவர்கள் “உன் ஆட்டை பற்றி எனக்கு எதுவும் தெரியாது”.. என்று அவன் நினைப்பை புரிந்துகொண்டு சிரித்துக்கொண்டே பதில் கூறினார்.
ஆனால் கேட்டவனுக்கோ … தன் ஆடு தொலைந்துபோனது என்கிற வருத்தம், எரிச்சல் ஒருபுறம் சிரித்துக்கொண்டே நக்கலாக இவர் பதில் கூறுவது மேலும் அவன் கோபத்தை அதிகப்படுத்த பக்கத்திலிருந்த மரக்கிளை ஒன்றை ஒடித்து அபு துராப் பக்ஃஷி அவர்களை அடிக்கத் துவங்கினான்.
“நீ உன்னை பெரிய இறைநேசர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்.. ஆனால் உன்னை திருடன் என்று ஒருவன் அடித்துக் கொண்டிருக்கிறான் பார்”.. என்று தன் நப்ஸை பார்த்து சிரித்துக் கொண்டே அவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். சுமார் ஒரு எழுபது அடி வாங்கி இருப்பார்.
அப்போது அந்த வழியாக அபு துராப் பக்ஃஷி அவர்களை நன்கு அறிந்திருந்த பெரியவர் ஒருவர் வேக வேகமாக வந்து அவனை தடுத்து நிறுத்தி “ஏய்.. நீ யாரை அடித்துக் கொண்டிருக்கிறாய் என்று தெரியுமா..? இவர் எப்படிப்பட்ட மஹான் என்று உனக்கு தெரியுமா..? ஒரு மிகச்சிறந்த இறைநேசச் செல்வர் அபு துராப் பக்ஃஷியை அல்லவா நீ அடித்துக் கொண்டிருக்கிறாய்”..? என்று கூறியதுதான் தாமதம்..
“நீங்கள்தான் அபு துராப் பக்ஃஷியா..? உங்களைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். என் வாழ்நாளில் ஒரு முறையாவது அபு துராப் பக்ஃஷி என்கிற மஹானை பார்க்க வேண்டுமென்று நான் ஆசைப்பட்டு இருக்கிறேன்… யார் என்று தெரியாமல் உங்களை நான் அடித்து விட்டேன்… என்னை மன்னித்து விடுங்கள்”.. என்று அவரின் காலை பிடித்து கண்ணீரோடு கெஞ்ச துவங்கினார் அடித்தவர்.
தாயிஃபில் கல்லால் தன்னை அடித்த கல்நெஞ்சக்காரர்களை கூட மன்னித்த காத்தமுன் நபியின் மரபுவழி வந்த மஹான்கள் அல்லவா இறைநேசர்கள். தன்னை அடித்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் “சரி மன்னித்துவிட்டேன்.. பரவாயில்லை”..என்று அங்கிருந்து நகர துவங்கினார் அபூ துராஃப் பக்ஃஷி.
அடித்தவரோ அவரை விட வில்லை.. “நீங்கள் என் வீட்டில் வந்து ஒரு வாய் சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும் .. அப்போதுதான் என் மனம் சாந்தி அடையும்”.. என்று மீண்டும் கெஞ்சத் துவங்கினார்.
அவனின் வற்புறுத்தல் தாங்காமல் “அல்லாஹ் அடியும் கொடுக்கிறான்.. அடித்தவன் கையால் சாப்பாடும் கொடுக்கிறான்”.. என்று நினைத்து சிரித்துக்கொண்டே அவனோடு செல்ல… விஷயம் வீட்டிலேயே சொல்லப்பட்டு அபூ துராஃப் பக்ஃஷி அவர்களுக்கு ஒரு சிறிய விருந்து அங்கு தயாராக இருந்தது .
சாப்பிடுவதற்கு தயாரான அபூ துராஃப் பக்ஃஷி அவர்களுக்கு முன் தட்டையை வைத்து தன் வீட்டில் தயார் செய்யப்பட்டு மூடி வைக்கப்பட்ட உணவு பாத்திரங்களின் மூடியைத் திறந்தார் வீட்டுக்காரர்.
அங்கே.. இவர் மனம் நெடுநாளாய் ஆசை பட்ட ரொட்டியும் முட்டை குருமாவும் இவரைப் பார்த்து புன்னகைத்தது.அபு துராஃப் பக்ஃஷி அவர்கள் மெதுவாக தன் நப்ஸை பார்த்து
“நடுரோட்டில் முன்பின் தெரியாத ஒருவனிடம் திருட்டு பட்டம் சூட்டப்பட்டு , எழுபது அடிகள் வாங்கி நீ இந்த ரொட்டியும் முட்டை குருமாவும் சாப்பிட வேண்டுமா”..? “இது உனக்கு தேவையா”..? “இனிமேல் இப்படி நீ ஆசைப்படுவாயா”..? என்று கூறியவாறே ஆசைக்கு ஒரு கவளம் மட்டும் எடுத்து உண்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.
ரமலான் என்கிற ஒரு மாதத்தில் நம்முடைய நப்ஸை அடக்குவதற்கு படாதபாடு படுகிறோம். ஆனால் வாழ்நாள் முழுக்க தன் நப்ஸை தனக்கு அடிமையாக்கி வாழ்ந்தவர்கள் தான் இறைநேசச் செல்வர்கள்.
மஹான் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் தங்களின் கவிதையிலே இப்படிச் சொல்லுவார்கள் ..
“மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னில் வந்து உன்னாசை ஒழித்தேன் உடையவனே நீ அறிவாய்.. என்னாசை ஒழித்து உன்னாசை என்னில் வர கன்னாஸை விட்டும் காத்தருள்வாய் ரஹ்மானே”…
( கன்னாஸ் : உள்ளத்தில் உலகத்தின் ஆசைகளை ஏற்படுத்தும் ஷைத்தானியத்தான மனதிற்கு பெயர் . (அல் கன்னாஸ்.. அல்லதி யு வஸ்விஸு ஃபீ ஸுதூரின்னாஸ்)
மீண்டும் ஓர் சூபித்துவ இறைநேசரின் வரலாற்றோடு விரைவில் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்..
* செய்யது அஹமது அலி. பாகவி *