சந்தோசம் என நாம் நினைத்துக் கொள்ளும் வெடிகளில் எத்தனை இரத்தமும், சதையும் கலந்திருக்கும் என்ற சிந்தனை ஏற்பட்டிருக்கிறதா நமக்கு?
தீபாவளியைக் காரணமாக்கி சக மனிதர்களைச் சாகடிக்கவும், துன்புறுத்தவுமான ‘சாடிஸ்ட் மனநிலை நமக்குத் தேவைதானா?
நரகாசுரனின் சாவினால் அவனது சம கால மனிதர்கள் சந்தோசம் அடைந்தார்கள் என்றால் அதற்காக இன்றைய மனிதர்கள் நம் சக மனிதர்களைக் சாகடிக்க வேண்டுமா?
விஷத்தைப் புகையாய்க் காற்றில் கலக்க வேண்டுமா?
எந்த நரகாசுரனுக்காக தீபாவளி கொண்டாடுகிறோமோ அந்த ஒருவன் மட்டும்தானா கொடுமைக்காரன்?
நரகாசுரனை நல்லவனாக நினைக்கத் தூண்டும் வகையிலான எத்தனையெத்தனையோ கொடியவர்கள் இந்த பூமியைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறார்களே, அத்தகையவர்களின் சாவுக்காக நாம் ஏங்குகிறோமா? அவர்கள் செத்த பிறகு அதைக் கொண்டாடுகிறோமா? அவ்வாறு கொண்டாடத் துணிந்தால் அநியாயத்தின் விஷக்கரங்களில் அகப்பட்டுச் சிதைந்து கொண்டிருக்கும் உலக மக்களுக்கெல்லாம் நித்தம் நித்தம் தீபாவளிதான்.
அந்த கொண்டாட்டங்களுக்கான பட்டாசுகளின் தேவைகளை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது. ஒரு அளவுக்குமேல் சப்தத்தை எழுப்பும் (125 டெசிபல்) பட்டாசுக்களை வெடிக்கக் கூடாது என்று சட்டம் செய்துள்ள அரசு, உற்பத்தி நிறுவனங்களின் வேரிலேயே வெந்நீர்விட்டால் மக்களுக்குப் புத்தி சொல்லும் தேவை அரசுக்கு ஏற்படாது. விபரீதங்களும் விளையாது.
அரசும், உற்பத்தியாளர்களும் நாட்டு மக்களை மதிக்க வேண்டும், மக்களும் சக மனிதர்களை மதிக்க வேண்டும், செய்வார்களா?
நல்ல விஷயங்களுக்குச் செவிசாய்க்க முடியாத செவிடர்கள் நாம்.
இரவு பத்து மணிக்குமேல் பட்டாசு வெடிக்கக் கூடாது என்ற நீதிமன்ற கட்டளையை நம்மில் யாரேனும் மதிக்கிறோமா?
தீபாவளி தினத்தில் தெருவெங்கும் நிறைந்து கிடக்கும் துண்டுக் காகிதங்கள் பணச் சிதறல்கள் போல் தோன்றுகின்றன. உண்மை அதுதானே!
அவற்றில் வறுமையால் வாடும் ஏழை எளியவர்களின் பசித்த முகங்கள் தெரிகின்றன.
தம் செல்வத் தகுதியைப் பறைசாற்றிப் பெருமைப்பட காகிதக் குப்பையை வீட்டுக்கு முன்னால் வெடி மருந்து நிறைப்போருமுண்டு.
கடன் வாங்கி உண்டியல் சேர்த்து எதிர்ப்போட்டி நடத்தி நடிப்போரும் உண்டு பண்டிகைகள் மன இறுக்கத்தை, சோகத்தை துக்கத்தை மாற்றும் மருந்துகள்.
அது பெரியவர்களைக் குழந்தைகளாக்கும், சிறுவர்களின் மனங்களில் குதூகலத்தைக் குவித்துவிடும், பந்துபோல் மனங்களைக் குதிக்கவிடும்.
அவரவர் தகுதிக்குத் தகுந்த எல்லை மீறாத வரையிலும் எல்லாம் நன்றாகவே இருக்கும். மனத்தைப் பிடித்து இழுக்கும் ஆசை எல்லைக் கோட்டைத் தாண்ட வைத்தால் ஆசை தப்பித்துவிடும். மாட்டிக் கொண்டு மண்டைக் குடைவது நமக்குத்தான்.
ஒரு துக்கம் கொண்டாட்டமானதால் பலருக்கும் துக்கமே பலனாகக் கிடைக்கிறது.
ஆங்கார சப்தங்களால் ஆன விபரீத வெடிகளை விலக்கி, விபத்தில்லாத தீபாவளியை இனிமையாகக் கொண்டாட முடியாதா?
சப்தங்களால் கத்தாமல் வண்ணங்களால் பாடும் மத்தாப்புகளாலும் தீபாவளியை அழகுபடுத்த இயலாதா?
வெடிப்பது வேண்டும் என்றால் குறைந்த சப்தம் உள்ள பட்டாசுகளைப் பயன்படுத்தினால் பண்டிகைக்கு ஆகாதா?
தீபாவளி தீப ஒளியாய்த் திகழ வேண்டுமே தவிர சப்தத் துன்பங்களாக மனத்தின் அமைதியைத் துண்டாடக் கூடாது.
கார்த்திகை தீப விழா எத்துணை அழகு வாய்ந்தது, எத்துணை மென்மையானது. எல்லோராலும் விரும்பத் தகுந்தது.
நட்சத்திரங்கள் பூமிக்கு இடம் பெயர்ந்து விட்டதைப் போன்ற அதன் அழகு யாரையும் வகீகரிக்கும்.
கார்த்திகை தீபநாளில் விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட வீதிகளில் வலம் வருவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
S.T. மஹ்பூப் சுப்ஹானி