சங்கத் தமிழ் இனமே தீங்கு சூழுது தினமே!

 

தமிழ்மொழியில் வழக்காடு மன்றங்களில் வாதாடக்கூட முடியாத சூழ்நிலை தமிழகத்தில்-தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட தமிழ்நாட்டில் இருக்கிறதென்றால் எந்த அளவிற்குத் தமிழர்களும் தமிழ்மொழியும் பின்தள்ளப்பட்டிருக்கிற நிலைமை நிலவுகிறது என்பது எண்ணிப் பார்க்கப்பட  வேண்டியதாகும்.

கூடங்குளம் மின் அணு நிலையம், நாகை மாவட்ட நிலக்கரி மற்றும் எரிவாயு சக்தித் திட்டம், தேனி மாவட்ட நியூட்ரினோ திட்டம் போன்றவை எல்லாம் வருங்காலத் தமிழர்களைப் பல்வேறு நோய்களுக்கும் பாதிப்புகளுக்கும் ஆளாக்கவும் தமிழகத்தை வறண்ட பூமியாக்கவும்  செய்யப்படுகிற சோதனைகளை ஆகுமெனக் கூறுகின்றனர். கொச்சியிலிருந்து பெங்களூருக்கு எரிவாயுவை எடுத்துச் செல்லும் குழாய்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 136 கிராமங்களின் வழியே கொண்டு செல்லப்படுவதன்மூலம் இந்தக் கிராமங்களின் விவசாயப் பூமிகள் தரிசாக மாறிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி நீரைப் பெற்றுத் தருவதில் உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பைக்கூடச் செயல்படுத்த மத்திய அரசு தயங்குவது மறந்தும்கூடத் தமிழகத்தைச் செழுமையாக்கிவிடக் கூடாதென்ற நினைப்பே காரணமாக இருக்கலாமென்றும் கருதப்படுகிறது. இவ்வாறு தமிழக நிலவளமும், நீர்வளமும் சிதைக்கப்பட்டு வருகின்றன. சுகாதாரச் சூழல் கெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாட்டில் மத்திய அரசின் ஆளுகைக்குக்கீழ் இயங்கும் பாரதமிகுமின் நிறுவனம்,  நெய்வேலி அனல் மின் நிலையம், படைக்கலத் தொழிற்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், வருமான வரி அலுவலகங்கள், அஞ்சலகங்கள், வங்கிகள் முதலியவற்றில் அண்மைக் காலத் தேர்வுகளில் அதிகமான  அளவில் வெளிமாநிலத்தவர்கள் வேலை வாய்ப்புப் பெற்றுவருவதும் தமிழகத்தைச் சார்ந்தோர் புறக்கணிக்கப் பெற்றுவருவதும் கவனிக்கப்பட வேண்டியவை ஆகும். ஐ.டி. நிறுவனங்களிலும் தமிழகத்தைவிட வெளிமாநிலங்களைச் சார்ந்தோர் மிகுந்த பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். இரயில்வே பணிகளிலும் பாலம்-சாலை அமைப்புப் பணிகளிலும், கட்டடப் பணிகளிலும், கண்காணிப்புக் காவலர் பணிகளிலும், ஹோட்டல் பணிகளிலும் வெளிமாநிலத்தவர்களே மிக அதிகமான எண்ணிக்கையில் பணியாற்றி வருவதையும் காணமுடிகிறது. தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்று வரும் கொலை, கொள்ளைகளுக்கும் இந்தப் போக்கும் ஒரு காரணமென்று கூறுகின்றனர்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிகமான எண்ணிக்கையில் 80 இலட்சம் பேர் வேலை வாய்ப்பு கேட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவைத்துள்ளனர். பதிவு செய்யாதவர்கள் பல இலட்சம் இருக்கக்கூடும். 6.7 கோடி  தமிழ்நாட்டு மக்களில் ஏறக்குறைய ஒரு  கோடி பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிக்கிறபோது வெளிமாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தமிழ் நாட்டில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பது சிந்தனைக்குரியது மட்டுமல்ல விழிப்புப் பெறுவதற்குமுரியதாகும்.

சமீபத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வில் இந்தியா முழுவதும் உள்ளவர்களைச் சேர்த்ததால் பல நூறு இடங்கள் வெளிமாநிலத்தவர்களுக்குக் கிடைத்தன. தேர்வுத்தாள் திருத்தல் முறைகேடு காரணமாக இதன் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 11.02.2018 அன்று நடைபெறும் வருவாய்த்துறை எழுத்தர்கள், கிராம நிர்வாகி அலுவலர்கள் முதலான 9351 பணியிடங்களுக்கான தேர்வுக்கு இந்தியா முழுவதும் உள்ளவர்கள், நேபாளம் மற்றும் பூட்டானைச் சேர்ந்தவர்கள், இலங்கை, வங்காளதேசம் முதலிய நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களும் கலந்துகொள்ளலாம் எனத் தமிழக அரசின் 14.11.2017 தேதிய அறிவிக்கை தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத புதிய மாற்றமாக இது பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகவே இதனைக் கருத வாய்ப்புண்டு.

பல்வேறு வகைகளிலும் தமிழ் மொழிக்கு, தமிழ்நாட்டிற்கு, தமிழர்களுக்கு அவர்கள்தம் உயர்வைச் சிதைக்கும் வகையில் சதிவலைகள் பின்னப்பட்டு வருகின்றன. தமிழ் மண்ணின் மரபுகளை அந்நிய மரபுகளின் ஆளுகையில் அழித்தொழிக்கும் செயல்பாடுகள் ஊக்கப்படுத்தப்பட்டுக்கொண்டு வருகின்றன. தமிழகத்தின் அமைதியைக் குலைத்து, மதத்தின் பெயரால் சாதி சமயத்தின் பெயரால் இந்த மண்ணைக் குருதிக் களமாக்கச் சதிராட்டங்கள் முனைப்போடு தீட்டப்பெற்றுச்  செயல்வடிவப் படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவே சமீபத்தியச் சம்பவங்கள் எண்ண வைக்கின்றன. கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழர்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடைகள் போடப்பட்டு வருவதையும் நுணுகிக் காண முடிகிறது. உள்ளத்தால், உணர்வால், எண்ணத்தால், செயலால் ஏற்றம் பெற்றிலங்கிய சங்கத் தமிழனின் நாகரிகத்தை, பண்பாட்டை, மரபை நாசப்படுத்தி அவனது முன்னேற்றத்தை ஒடுக்க முனையும் செயல்பாடுகள் முனைப்புப் பெற்று வருவதாகவே பலரும் எண்ணுகின்றனர். சங்கத் தமிழ் இனத்தைத் தீங்கு தினம் தினம் சூழ்ந்து வருவதை நடப்புச் செயல்பாடுகள் உறுதிப்படுத்துவதாக உள்ளன. எனவே சிங்கத் தமிழனே சீறு கொண்டு எழுக; எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று முழங்கி எழுக; எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே என எழுக. அந்த எழுச்சியே வருங்காலத் தமிழகத்தைக் காப்பாற்றும்.

-சேமுமு

=======================================