தமிழ்மொழியின், தமிழரின், தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிறப்பு சகிப்புத்தன்மையும், மனித நேயமும்தாம். அதனை மதத்தின் பெயரால் சிதைத்தொழிக்கும் செயல்கள் தமிழகத்தில் தொடக்கம் பெற்றுள்ளனவோ என எண்ணத் தோன்றுகிறது. தந்தை பெரியார் தமது பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் இந்துக் கடவுளரைக் குறித்துக் கணக்கற்ற உரைகள் ஆற்றியுள்ளார்; போராட்டங்கள் நிகழ்த்தியுள்ளார்; பேரறிஞர் அண்ணா கம்பராமாயணத்தை விமர்சனம் செய்து “கம்பரசம்’ எழுதினார். ஆரியர்களின் சூழ்ச்சிகளை அக்குவேறு ஆணிவேறு என்று கழற்றிக் கழற்றி விமர்சிக்கத் தமிழக மண் தவறியதே இல்லை. அப்போதெல்லாம் அவர்களுக்கு எதிராக எந்த ஒரு குரலும் வீரியம் பெற்று ஒலித்ததில்லை. காரணம் தமிழக மக்களிடம் நிறைந்திருந்ததெல்லாம் மதங்கள் அல்ல மனிதநேயம் மட்டுமே. பண்டைய மரபின் அணுக்கள் அவர்தம் குருதியில் இழைந்தோடுவதாலேயே சமயச் சண்டைகளைக்கூட அவர்கள் புறக்கணித்தே வந்தனர். ஆனால் இன்றைக்கோ அந்த உணர்வைப் புரட்டிப் போடுவதற்குச் சிலர் பகிரங்கமாக முயன்று வருகின்றனர்.
புதுதில்- ரெயிலில் புனித ரமளானுக்குப் புத்தாடை வாங்கிக்கொண்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த இஸ்லாமிய இளைஞரைச் சிலர் தாக்கிக்கொன்றபோது மதத்துவேஷத்தைக் கிளப்பப் பலரும் அதில் பங்கேற்ற கொடுமை வடக்கே நிகழ்ந்ததுபோன்று தமிழகத்திலும் நிகழ்வதற்குச் சிலர் தூபம் போட்டு வருவதாகத் தெரிகிறது. அதனால்தான் இலக்கிய விமர்சனமாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றில் ஏற்பட்ட விவாதத்தில்கூட மற்ற மதத்தை இழுத்துப் பேசுகிற இழிநிலையைக் காணமுடிகிறது. துறவறம் பூண்டுள்ள தூயவர்களாகக் கருதப்படுபவர்கள்கூட “சோடா பாட்டில்’ சண்டைக்குத் தயாரெனக் கூறுவது தமிழரின் சகிப்புத்தன்மைக்கு விடுக்கப்பட்டுள்ள துர்பாக்கியக் குறியாகவே தெரிகிறது. சமயத்தின் பெயரால் மதத்தின்பெயரால் தமிழரை-தமிழ்நாட்டை-போர்க்களமாக்கச் சில சக்திகள் திட்டமிடுவதாகவே சமீபத்திய செயல்பாடுகள் முன்னறிவிப்பு செய்கின்றன என்று கருத இடமேற்பட்டுள்ளது.
வடபுலத்திலிருந்து தமிழகத்தில் குடியேறிய மரபினர் வழிவந்த ஹெச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் சர்மா தொகுத்த சமஸ்கிருத-தமிழ் அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது காஞ்சி காமகோடி இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்தது “வேதமொழி சமஸ்கிருதம், நீசமொழி தமிழ்’ என்ற ஆரியரது கொள்கைப் பிரகடனத்தைத் சொல்லாமல் சொல்வதாக அமைந்தது என்று சிலர் கருதுவது தவறென்று கூற இயலவில்லை. தந்தை பெரியார் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கடவுள் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நின்றாராம். கடவுள் இல்லை என்ற கொள்கை கொண்ட பெரியாரை அமரச் சொல்லி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கூறியும் பெரியார் மறுத்து எழுந்து நின்றாராம். “கடவுள் இல்லைதான்; ஆனால் ஒரு சபையில் அனைவரும் நிற்கும்போது நான் மட்டும் அமர்ந்திருப்பது சபை நாகரிகம் அன்று; அது மனிதப் பண்பாடும் அன்று; நான் நாகரிகமும் மனிதப் பண்பாடும் கொண்டவன்” என்று அப்போது பெரியார் கூறினாராம். இதுதான் தமிழ்ப்பண்பாடு. இதனைச் சிதைக்கத்தான் சிலர் பெரிதும் இன்று முயன்று வருகின்றனர். மாமன்-மச்சானாக, அண்ணன்-தம்பியாக, சகோதர-சகோதரியாக மனிதநேய ஒருமைப்பாட்டில் முதிர்ந்த தமிழர்களை மதத்தின்பெயரால் குலைத்தொழிக்கும் முயற்கிள் விதைக்கப்பட்டு முளையும் விட்டு வளரத் தொடங்கிவிட்டது தமிழகத்தை அனைத்து வகைகளிலும் அழித்தொழிக்கத் தொடங்கிவிட்டதன் அடையாளமாகவே கருதப்பட வேண்டியுள்ளது.
தமிழ்மொழியையும், தமிழக மாணாக்கர்களின் மருத்துவத்துறையிலான உயர்வையும் ஒழிக்கவும் ஒடுக்கவும் “நீட்’ தேர்வு புகுத்தப்பட்டுள்ளது. தமிழ்வழி கற்றோர் உயர்ந்துவிடக் கூடாதென்பதற்காகவே செய்யப்பட்ட பெரும் சதி “நீட்’ தேர்வாகும். அதிலும் தமிழ்நாட்டுப் பாடநெறியைப் பாட நெறியைப் பின்பற்றாமல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படியே “நீட்’ தேர்வு நடத்தப்பெறுவது தமிழக மாணாக்கர்களை ஒட்டு மொத்தமாகச் சீர்குலைக்கும் செயலாகும். மாநிலப் பட்டியலில் உள்ள கல்வித் துறை மத்திய அரசின் கபளீகரத்திற்கு ஆளாகிக்கொண்டிருப்பது வேதனை தருவதாகும்.