சங்கத் தமிழ் இனமே தீங்கு சூழுது தினமே!

 

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது அவர்தம் நெறியாகும். அதனால்தான் பின்னாளில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய வழியாகும்; அன்பே அவனுடைய மொழியாகும் என்று பாடினார். இத்தகைய மேன்மைமிகு தமிழையும், தமிழரையும் உருக்குலைக்கும் செயல்கள்தாம் இன்றைக்கு அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்து என்கிற வார்த்தையைக் காணமுடியாது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை எந்த ஒரு வேத நூலிலுமோ உபநிஷத்துகளிலோ இந்து என்கிற சொல்லைக் காணவியலாது. ஆரியர்களுடைய வருகைக்குப் பின்னால்தான் மதம் புகுந்தது; மக்களில் உயர்வு- தாழ்வு பேசும் வர்ணாசிரமம் புகுந்தது; ஏறக்குறைய கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பண்டைய இந்திய வேத நூல்கள் ஆரியரால் அழிக்கப்பட்டு அல்லது திருத்தப்பட்டு அவை ஆரிய வேத நூல்களாக மாற்றம் செய்யப்பட்டன என்றும் கூறுவர்.

800 ஆண்டுகளுக்கு முன்பே பிராமணர்களில் சிவாச்சாரியார், ஐயங்கார், ஐயர் என மூன்று பிரிவினர் இருந்துள்ளனர். வைணவர்களிலும் வடகலை, தென்கலை எனப் பிரிவுகளுமுண்டு. சமயங்களுக்குள்ளேயே பெரும் சண்டைகள் நிகழ்ந்துமுள்ளன. சிவனே பரம்பொருள் என்று சைவரும், திருமாலே பரம்பொருள் என வைஷ்ணவரும் சண்டையிட்டுக் கொள்ளல் இன்றைக்கும் தொடரத்தான் செய்கிறதென்பர். கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டிய ஆண்டாளைப் பற்றி எழுந்த சர்ச்சைகூட சைவத்திற்கும் வைணவத்திற்குமான உரசலே என்று கூறுகின்றனர். ஒரு காலத்தில் திருப்பதியில் முருகன் கோயில் இருந்ததாகவும், அதனைக் கைப்பற்ற சைவ-வைணவர்களிடையே நடைபெற்ற போராட்டத்தில் இறுதியில் வைணவர் வெற்றிபெற வெங்கடேசப் பெருமாள் கோயில் உருவாயிற்று என்றும் கூறப்படுகிறது.  சைவ சமயத்தை ஒப்புக் கொள்ளாததால் இராமானுச்சாரியாரின் சீடர் ஒருவரின் கண்கள் சோழ மன்னன் ஒருவனால் பார்வையற்றதாக்கப்பட்டது என்றும் தெரிகிறது.

ஆயிரக்கணக்கான புத்த விஹார்கள், சமணப் பள்ளிகள் சிதைக்கப்பட்டு ஆங்கே கோயில்கள் கட்டப்பட்ட வரலாறும், ஆயிரக்கணக்கான சமணர்கள் கழுவேற்றப்பெற்ற செய்தியும் தமிழகத்தில் காணக் கிடைக்கின்றன. பண்டைய தமிழரின் வெற்றித் தெய்வமாகக் கருதப்பெற்ற முருகன் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆரியத் தெய்வங்கள் முன்நிறுத்தப்படுகிற நிலையும் தமிழகத்தில் அரங்கேறிக்கொண்டுதானிக்கிறது. இவ்வளவு சைவ, வைணவ, சமண, புத்த சமய மாறுபாடுகளுக்குள்ளும் தன்னிலை தாழாது உயர்ந்து நின்றது தமிழ்மொழி. அதற்குக் காரணம் சங்கக் காலம் தொடங்கி இன்றைக்கு வரை, தனது வளர்ச்சிப் போக்கில் ஒரு சில மாற்றங்களைத் தமிழ்மொழி தன்னுள் ஏற்றுக்கொள்ளத் தயங்காததே ஆகும். இயல், இசை, நாடகம் என எம்மொழிக்கும் இல்லாச் சிறப்பாக முத்தமிழ் பூத்துக் குலுங்கிய தமிழ் மொழி அறிவியல் தமிழாகவும், கணினித் தமிழாகவும் ஒளிவீசிடத் தயங்கவில்லை. மாற்றங்களை ஏற்காத சமஸ்கிருதம், லத்தீன் போன்றவை அழிந்துபோய்விட்டன. சமஸ்கிருதம் வேதமொழியாகச் சில நூறு பேரின் தாய்மொழியாக இன்று இருந்து வருகிறது. இத்தகைய தமிழ்மொழியின் உயர்வையும், உலக அரங்கில் உயர்ந்து வரும் தமிழரின் சிறப்பையும், பல்வேறு சிறப்புத்தன்மைகள் பெற்று வரும் தமிழ்நாட்டின் வளமையையும் அழிக்கும் செயல்பாடுகள் தினம் தினம் இந்தியத் திருநாட்டில் நிகழ்ந்து வருவது நுணுகி ஆராய்வோர் உணர்ந்து வேதனைப் படக்கூடியதாக இருக்கிறது.