என்றென்றும் இசை முரசு E.M. ஹனிபா

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் டீ குடிக்கும் கடைக்குப் போனேன். எப்போதும் சினிமாப் பாடல் போடும் கடைக்கார பாய் நேற்று வழக்கத்திற்கு மாறாக நாகூர் ஹனிபா பாடல்களை ஒலிக்கவிட்டிருந்தார்.அதுவும் மிகப் பழைய பாடல்கள்.நான் போகும்போது …

” ஈட்டியின் முனையில் நிறுத்தியபோதும்
ஈமான் இழக்க மாட்டோம்
காட்டிக் கொடுத்திடும் கயவர்கள் தம்மை
கனவிலும் விட மாட்டோம் .
எல்லாம் இயன்ற ஏகனுக்கல்லால்
எவருக்கும் அஞ்ச மாட்டோம்
நல்ல நம் நாட்டு நன்றியை மறந்து
நழுவியே ஓட மாட்டோம் …”

ஐம்பது வருடங்களுக்கு முன்னால் சிம்மக் குரலில் ஹனிபா அண்ணன் எழுப்பிய சங்கநாதம் இது.டீ குடித்துவிட்டு மேலும் ஒரு பாடலை கேட்டுவிட்டு நான் கிளம்பி விட்டேன்.ஆனால் …மனதுக்குள் ஒரு பெரிய சிந்தனையோட்டம்.

பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரம் கொடிகட்டிப் பறந்த அந்த காலகட்டத்தில்… திராவிட இயக்கத்தில் இருந்துகொண்டே இப்படி ஒரு பாடலைப் பாட ஹனிபா அண்ணனுக்கு அசாத்திய துணிச்சல் இருந்திருக்க வேண்டும்.அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்ச மாட்டோம் என்று அறைகூவல் விடுக்கின்ற அந்த துணிச்சல் ஹனிபா அண்ணனுக்கு அன்றைக்கே இருந்தது ஆச்சரியம்.ஒரு கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு போய் விடுவதைப் போன்றதல்ல ஒரு பாடலைப் பாடுவது.ஒரு முறை படித்து இசைத்தட்டாக வந்தால் அது நாட்டின் பட்டி தொட்டியெங்கும் பல்லாயிரம் முறை ஒலிக்கும்.அப்படி தான் கொண்ட கொள்கைகளை அச்சமில்லாமல் ஒலிக்க விட்ட ஆண்மை அண்ணன் ஹனிபா அவர்களுக்கு இருந்தது.

” இதுதான் நாங்கள் செய்த துரோகமா
அல்லது நீங்கள் கூறும் வகுப்பு வாதமா “

என்ற பாடல் மனதுக்குள் ரீங்காரமிட இன்றைய அரசியல் சூழலை எண்ணிப் பார்க்கிறேன்.அப்போதே முஸ்லிம்களை வம்புக்கிழுக்க முற்பட்டவர்களுக்கு சரித்திர சான்றுகளோடு பதில் கொடுத்த சாட்டையடி பாடல் இது. இன்னும் இதுபோல் ஒரு பாடல் வரவில்லை .

இசை ஹராம்… நாகூர் ஹனிபா இஸ்லாத்தில் அனுமதிக்காத ஹராமான செயலை செய்கிறார் என்று கூப்பாடு போடும் இஸ்லாமிய வியாபாரிகளுக்குத் தெரியாது….

அன்றே ஏகத்துவப் பிரச்சாரத்தை அச்சமில்லாமல்.. தனக்கென்று கூட்டம் சேர்க்காமல் … தன்னை தலைவனென்று பிரகடனப் படுத்தாமல் … இயக்கம் ஆரம்பிக்காமல்…தன்னை விமர்சிப்பவர்களை தரம்கெட்டு ஏசாமல் அரசுக்கோ இஸ்லாத்தின் எதிரிகளுக்கோ அஞ்சாமல்இஸ்லாத்தின் மாண்புமிக்க கொள்கைப் பிரச்சாரத்தை பகிரங்கமாக செய்தவர் ஹனிபா  அண்ணன்தான் என்பது .

” பொன்மொழி கேளாயோ
நபிகளின் பொன்மொழி கேளாயோ … ”
பாடலில்
” வாழ்க்கையிலே ஒருபோதும் நீ வட்டி வாங்காதே
என்றுரைத்தார்
வீழ்ந்து சமாதியில் பூஜைகள் செய்வதை விட்டொழி
என்றுரைத்தார் …”
என்று பாடுவார் .

“திருமறையின் அருள் நெறியில் விளைந்திருப்பதென்ன ”
என்ற பாடலில் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளை அழகாகக் கூறுவார் .
மற்றொரு இனிய பாடலில் …

” அலைகடலும் சூரியனும்
அருமைக் காற்றும் பெருமழையும்
இரவு நேரத்திலே வானில்
அலையும் விண்மீன் கூட்டங்களும்
எல்லையில்லா உந்தன் புகழை
என்றும் சொல்லும் உண்மை இதுதான்
எல்லாம் உன் செயல் அல்லாஹு …”

இலக்கிய நயமிக்க இந்த பாடலில் எல்லாமே அவன் செயல் என்பதை எத்தனை இனிமையாக மக்கள் மனங்களில் பதிய வைக்கிறார் ஐம்பது வருடங்களுக்கு முன்னாலேயே . இந்த பாடலைப் பாடியபோது இன்றைக்கு அவரை விமர்சிக்கும் பலர் பிறந்தே இருக்கமாட்டார்கள் .

பேராசிரியர் கபூர் சாஹிப் எழுதிய பாத்திஹா சூராவின் தமிழாக்கத்தை ஹனிபா அண்ணன் பாடிய இனிமையை நம்மால் மறக்க முடியுமா ?
” அருளன்பு பண்பில் நிகரற்ற உந்தன்
திருநாமம் போற்றி துவக்குகின்றேன் அல்லாஹ் …
எல்லா உலகும் ஏகமாய் ஆளும்
வல்லான் உனக்கே வான் புகழ் அல்லாஹ் …
உன்னையே நாங்கள் உவந்தேத்துகின்றோம்
உன்னிடத்தன்றோ உதவியும் அல்லாஹ் …”

இதைவிட அழகானத் தமிழில் இறை வாழ்த்தை சொல்ல யாரால் இயலும் ? இதுபோல் எண்ணற்ற பாடல்களை பாடி ஏக இறைக் கொள்கையை இந்தத் தமிழ் மண்ணில் விதைத்தவர் இசைமுரசு.அவர் போகாத இடங்களிலும் அவர் பாடாத இடங்களிலும் அவர் பாடிய பாடல்கள் மக்கள் மனங்களை ஈர்த்து இஸ்லாத்தின் கொள்கைகளை அறிந்து கொள்ள வைத்தது.

இதுவெல்லாம் தங்களை உயர்வாகவும் மற்ற எல்லோரையும் தாழ்வாகவும் எண்ணும் அகங்காரம் மிக்கவர்களின் அரை குறை அறிவுக்கு எட்டாத விஷயங்கள்.

ஹனிபா அண்ணன் இருபதாம் நூற்றாண்டின் சகாப்தம் என்று சொன்னால் அது மிகையாகாது.
இன்றைக்கும் மனசுக்குள் அருவிபோல் பாய்ந்து கொண்டே இருக்கிறதே அண்ணன் ஹனிபாவின் பாடல்கள்.

” வாழ்நாளெல்லாம் போதாதே வள்ளல் நபிகளின் புகழ்பாட ”
” இறையோனும் அவன் மலக்குகளும் இயம்புவார் சலவாத் நபிமீது .
நிறைவாய் நாமும் அவர் மீது மாண்புடன் சொல்வோம் சலவாத்து ”
” ஸலாத்துல்லாஹ் ஸலாமுல்லாஹ்
அலாதாஹா ரசூலுல்லாஹ் … ”
இப்படியெல்லாம் பெருமானார் மீது நெஞ்சம் உருகி உருகி பாடிய பாடல்கள் எத்தனை இன்பம் …

என் வகுப்புத்தோழன் கிருஷ்ணகுமார் .பள்ளிக் கூடத்தில் படிக்கும் போதே பாட்டுப்பாடுவதில் ஆர்வம் உள்ளவன்.படிப்பு முடிந்து இசைக்குழுவோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு இன்றைக்கும் மேடைகளில் ஒரு பாடகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.நாங்கள் அடிக்கடி சந்தித்து அன்பை பரிமாறிக் கொள்வதுமுண்டு.நான் பாடச் சொன்னால் எந்த இடமாக இருந்தாலும் உடனே பாடுவான்.
” சங்கரா … ” என்று எஸ்பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல்தான் அவன் மேடையில் முதலில் பாடும் பாடல்.
அப்படியிருந்தும் … ஸலாத்துல்லாஹ் ஸலாமுல்லாஹ் பாடலை அட்சரம் பிசகாமல் அத்தனை இனிமையாகப் பாடுவான்.
நாகூர் ஹனிபா அண்ணனின் பாடல்களை பாடுவதில் அவனுக்கு அப்படி ஒரு ஆத்ம திருப்தி.
” அருள் மழை பொழிவாய் ரஹ்மானே ”
” இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை ” போன்ற பாடல்களை மனம் உருகி அவன் பாடுவதை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

இப்படி முஸ்லிம்களை மட்டுமல்ல மாற்றுமத மக்களையும் தன்னுடைய பாடல்களால் இஸ்லாத்தின்பால் ஈர்த்தவர் ஹனிபா அண்ணன்.
ஒருநாள் சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்கு புறப்பட தனியார் பேருந்தில் ஏறினேன். அது ஒரு கிறிஸ்தவருக்கு சொந்தமான புது பேருந்து. வண்டி புறப்படுவதற்கு முன்னால் ஓட்டுனர் போட்ட முதல் பாட்டு ” இறைவனிடம் கையேந்துங்கள் “.எனக்கு மனம் சிலிர்த்துவிட்டது. இருந்தில் இருந்த அத்தனை பெரும் அந்த பாட்டில் மனம் லயித்து ஒன்றியிருந்தார்கள்.

ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கியவுடன் சொன்ன முதல் வார்த்தை “எல்லாப் புகழும் இறைவனுக்கு “.
ஹனிபா அண்ணன் இதை எல்லோரும் கூறும் வண்ணம் அப்போதே பாடி வைத்தார்…
” எல்லாப் புகழும் இறைவனுக்கு
அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு ”
பரிசுத்தமான ஈமானிய பாடல் .

இப்படி அவர் பாடிய ஒவ்வொரு பாடலுக்கும் குறைந்த பட்சம் நூறு வரியாவது விமர்சனம் எழுதலாம். அத்தனை சிறப்புக்குரியவை அவர் பாடிய பாடலகள்.அந்த பாடல்களை புகழ்பெற்ற கவிஞர் பெருமக்கள் எழுதி இருக்கிறார்கள்.ஹனிபா அண்ணன் பாடிய பிறகுதான் அந்த கவிதைகளுக்கும் கவிஞர்களுக்கும் மேலும் பிரகாசமான புகழ் கிடைத்தது.

ஒரு டீக்கடையில் கேட்ட ஒரு பாடல் எனக்குள் ஏற்படுத்திய சிந்தனைகள் ஆயிரமாயிரம்.அவை அத்தனையையும் இங்கே கொட்டி வைக்க முடியாது.தனது குரலால் கொள்கைப் பிடிப்பால் நேரிய பண்பால் எவருக்கும் அஞ்சாத குணத்தால் இறந்தும் மக்கள் மனங்களில் வாழுகின்ற ஒரு மூத்த சகோதரனுக்கு இந்த எளியவன் வழங்கும் வாழ்த்துரையே இது … எங்கள் நெஞ்சிருக்கும் வரை ஹனிபா அண்ணனின் நினைவிருக்கும் !

இணையற்ற இறைவன் … தனது அன்புக்கு உரித்தானவர்களின் கூட்டத்தில் ஹனிபா அண்ணனையும் சேர்த்து வைத்து தனது அருட்கொடைகளை வாரி வழங்குவானாக …. ஆமீன்..

ஆக்கம் – அபூ ஹாஷிமா.