என்ன சப்தம் இந்த நேரம்?

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைக்கான 16 –வது தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கின்றது.

மதச்சார்பற்ற (திமுக,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்) கூட்டணி, ஆளும் பாஜக, கடந்த 10 ஆண்டுகளாக ஆண்ட அஇஅதிமுக (மதவாத) கூட்டணி, மநீம தலைமையிலான கூட்டணி, அமமுக தலைமையிலான கூட்டணி என நால்முனை போட்டியை இந்த முறை தமிழகம் சந்திக்கின்றது.

இந்த 16 –வது தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தலில் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 442 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இதில், 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பெண் வாக்காளர்களும், 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 472 ஆண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 246 மூன்றாம் பாலினத்தவர்களும் வாக்களிக்க இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

ஜனநாயக அரசியலில் முஸ்லிம்கள் பங்கேற்பு?

Government Of the People, By the People, For the People இது தான் Democracy Formula அதாவது, மக்களால், மக்களுக்கென்று உருவாக்கப்பட்ட மக்கள் அரசாங்கமே ஜனநாயகமாகும்.

21 –ஆம் நூற்றாண்டில் உலக மக்களால் அதிகம் கொண்டாடப்படுகிற மகத்தான வாசகம் இது தான் என்றால் அது மிகையல்ல.

கடந்த 200 ஆண்டுகளாக இந்த உலகில் அதிகம் ஒலிக்கப்பட்ட குரலும் இது தான்.

இந்தக் குரலின் பிண்ணனியில் இருக்கிற வலியை நாம் உணர வேண்டும். அடக்குமுறை, அடிமைத்தனம், சுரண்டல், தீண்டாமை போன்ற நச்சுக்களால் பாதிக்கப்பட்ட இவைகளின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த பல நாடுகளின் மக்களின் சுதந்திரக் காற்றை உறுதிப்படுத்தியது இந்த வாசகமும், இந்த குரலும் தான்.

ஆகவே தான் 21 –ஆம் நூற்றாண்டை சமூகவியலாளர்கள் ஜனநாயக நூற்றாண்டு என அழைக்கின்றனர்.

இந்தக்குரலின் வீரியம் மெல்ல மெல்ல அரபுலகத்திலும் உள்வாங்கப்பட்டு பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய போது தான் “ஜனநாயகமும் – இஸ்லாமும்” என்கிற ஆய்வை நோக்கி இந்த உம்மத்தின் அறிஞர் சமூகம் நகன்றது.

ஜனநாயகத்தின் கூறுகளை இஸ்லாத்தின் அடிப்படைகளோடு ஒப்பீடு செய்த சில அறிஞர் பெருமக்கள் “ஜனநாயகம் இஸ்லாத்துக்கு முரணானது” என்று அறிவித்தனர். இன்னும் சில அறிஞர் பெருமக்கள் “இஸ்லாம் கூறும் அரசியல் அதிகாரத்தின் மறு வடிவமே ஜனநாயகம்” தான் என வர்ணித்து முழுமையாக அங்கீகரித்தனர். இன்னும் சில அறிஞர் பெருமக்கள் “சில இடங்களில், சில நேரங்களில் ஜனநாயகம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளோடு முரண்படுவதாகவும், சில இடங்களில், சில நேரங்களில் ஜனநாயகம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளோடு உடன்படுவதாகவும் கூறி நடுநிலை வகித்தனர்.

இன்று வரை இஸ்லாமிய அறிவுசார் உலகு ஆய்வு நோக்கில் இது குறித்து வியத்தகு சிந்தனையை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கின்றது.

எனினும், ஜனநாயகத்தின் அநேகக் கோட்பாடுகள் இஸ்லாத்திற்கு முரண்படாதவாறு இருக்கின்றது என்பதன் அடிப்படையில் இந்த உலகில் சிறுபான்மைச் சமூகமாக எங்கெல்லாம் முஸ்லிம் சமூகம் பயணிக்கின்றதோ அங்கெல்லாம் ஜனநாயக தேர்தலில், அரசியலில் ஆளுமைகளாக, வாக்காளர்களாக பங்கேற்று வருகின்றோம்.

தற்போதைய தேர்தலும்… தமிழக முஸ்லிம்களின் நிலையும்…

1992 –க்குப் பிறகான இந்திய தேர்தல்கள் அனைத்தும் இந்திய முஸ்லிம்களுக்கு மிக முக்கியமான தேர்தல்களாகவே இருந்து வருகின்றன.

ஃபாஸிசத்தின் வளர்ச்சி, அதன் அபாயம் ஆகியவற்றை உணர்ந்தே முஸ்லிம் சமூகம் இந்தியத் தேர்தலை எதிர் கொண்டு வருகின்றது.

அதிலும் குறிப்பாக கடந்த நான்கு தேர்தல்களில் (இரு பாராளுமன்ற, இரு சட்டமன்ற) தமிழக முஸ்லிம் சமூகம் கடுமையான நெருக்கடிகளை சந்தித்தது.

ஆனால், இந்தத் தேர்தலோ அதை விட சவாலாக அமைந்திருப்பதை இந்தச் சமூகம் நன்றாகவே உணர்ந்திருக்கின்றது.

ஒரு புறம் மதவாத பாஜக கூட்டணி, இன்னொரு புறம் மதச்சார்பற்ற கூட்டணி வந்து விடக்கூடாது என்கிற அடிப்படையில் அமைத்திருக்கிற சந்தர்ப்பவாத அமமுக மற்றும் மநீம கூட்டணிகள்.

அதிலும் குறிப்பாக சமூகத்தின் வாக்கு சமூக வேட்பாளருக்கே! என்கிற கோஷம் நம்மில் ஒரு கட்சியினரிடமிருந்தே புறப்பட்டு இருப்பது தான்.

என்ன செய்வது? சமூக வேட்பாளரை ஆதரிப்பதா? மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிப்பதா? என்கிற குழப்பமான ஒரு முடிவிற்கு வரமுடியாத சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் இருப்பதை சோஷியல் மீடியாக்களின் வாத பிரதிவாதங்களை வைத்து நாம் தெரிந்து கொண்டிருக்கின்றோம்.

இது நாம் தர்க்கித்துக் கொண்டிருப்பதற்கான நேரமல்ல, முடிவு செய்து செயல் படுவதற்கான நேரம் என்பதை நாம் உணர வேண்டும்.

வாக்குரிமையை வீணடிப்பது…

வாக்குரிமையை இழப்பது எவ்வளவு ஆபத்தானதோ அது போன்றே நம் வாக்குகளை நாம் சிதறடிப்பது என்பதை முதலில் புரிய வேண்டும்.

இங்கு என்ன சூழல் நிலவுகின்றது? நமக்கான தேவைகள் என்ன? நாம் ஆற்ற வேண்டிய பங்களிப்பு என்ன? என்பதை நாம் புரிந்து கொள்ள தவறி விடக்கூடாது.

ஃபாஸிசம் வேரூன்றி கிளை பரப்பிட தமிழகத்தை களமாக்க நினைக்கின்றது. இந்த நேரத்தில் நம் வாக்கு நம் சமூகத்திற்கு என்கிற குறுகிய பார்வையில், குறுகிய வட்டத்தில் நாம் நின்று விட்டால் நம்மோடு வாழும் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் நிலையும் என்னவாகும் என்று நாம் யோசிக்க வேண்டும்.

எந்த ஆட்சி அமைய வேண்டும்?

பொதுவாக, ஒரு முஸ்லிம் இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்கிற நிலை ஏற்படுமானால், இரண்டில் நல்லது எதோ அதை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

தேர்ந்தெடுக்கும் அந்த பண்பை ஓர் இறைவிசுவாசியின் அழகிய அடையாளமாகவும், வெற்றி பெற்ற மேன்மக்களின் சிறந்த பண்பாகவும், நடுநிலையாளர்களின் சீரிய சிந்தனையின் வெளிப்பாடாகவும் வர்ணிக்கிறது.

யாருக்கு வாக்களிப்பது என்பதில் தடுமாற்றம் தேவையில்லை. யாருக்கு வாக்களித்தால் இந்திய, தமிழக மக்களுக்கும், இந்திய தமிழக முஸ்லிம்களுக்கும் பயன்மிக்கதாய் அமையுமோ அவர்களுக்கு வாக்களிப்பதே சிறந்ததாகும்.

நபிகளாரின் முன்மாதிரி

عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهَا قَالَتْ مَا خُيِّرَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- بَيْنَ أَمْرَيْنِ إِلاَّ أَخَذَ أَيْسَرَهُمَا مَا لَمْ يَكُنْ إِثْمًا فَإِنْ كَانَ إِثْمًا كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ وَمَا انْتَقَمَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- لِنَفْسِهِ إِلاَّ أَنْ تُنْتَهَكَ حُرْمَةُ اللَّهِ عَزَّ وَجَل .

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கும்படி அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களுக்கு விருப்ப உரிமை வழங்கப்பெற்றால், அவர்கள் அவ்விரண்டில் எளிதானதையே – அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் தேர்வு செய்வார்கள்.

அது பாவமான காரியமாக இருந்தால், மக்களிலேயே அவர்கள் தான் அதிலிருந்து விலகி வெகுதொலைவில் சென்றுவிடுவார்கள். (நூல்: முஸ்லிம், பாபு முபாஅததிஹி {ஸல்} லில் ஆஸாமி வஃக்தியாரிஹி)

قال- ثم أتيت بإناءين أحدهما فيه لبن والآخر فيه خمر فقيل لي خذ فاشرب أيهما شئت فأخذت اللبن فشربته فقال لي جبريل أصبت الفطرة ولو أنك أخذت الخمر غوت أمتك

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டிருந்த போது நபிகளாருக்கு ஒரு கோப்பையில் மதுபானமும், இன்னொரு கோப்பையில் பாலும் வழங்கப்பட்டதாம். அப்போது நபிகளார் {ஸல்} அவர்கள் பாலை அருந்துவதற்காக தேர்ந்தெடுத்தார்களாம். அதைக் கண்ணுற்ற ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இயற்கையான பானத்தையே நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நீங்கள் மதுவை தேர்ந்தெடுத்திருப்பீர்களேயானால் உங்களது சமுதாயம் வழிகெட்டுப் போயிருக்கும்” என்று கூறினார்கள். ( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ, பாகம்:6, பக்கம் 173)

முஸ்லிம் ஷரீஃபின் இன்னொரு அறிவிப்பில்..

عَنْ الزُّهْرِيِّ قَالَ قَالَ ابْنُ الْمُسَيَّبِ قَالَ أَبُو هُرَيْرَةَ

إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ بِإِيلِيَاءَ بِقَدَحَيْنِ مِنْ خَمْرٍ وَلَبَنٍ فَنَظَرَ إِلَيْهِمَا فَأَخَذَ اللَّبَنَ فَقَالَ لَهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَاكَ لِلْفِطْرَةِ لَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُك

ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “இயற்கையை தேர்ந்தெடுப்பதற்கு நேர்வழிகாட்டிய

அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்! என்று கூறியதாக, கூடுதலாக அபூஹுரைரா (ரலி) அறிவிப்பின் படி பதிவாகியுள்ளது.

பயன் தருபவற்றையே தேர்வு செய்ய வேண்டும்

فَبَشِّرْ عِبَادِ () الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ أُولَئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ وَأُولَئِكَ هُمْ أُولُو الْأَلْبَابِ ()

“எனவே, (நபியே!) சொல்வதை ஆழ்ந்து கவனமாகக் கேட்டு, பின்பு அவற்றில் சிறந்த அம்சத்தை தேர்ந்தெடுத்து பின்பற்றுகின்ற என் அடியார்களுக்கு நீர் நற்செய்தியை அறிவித்து விடுவீராக! இத்தகையவர்களுக்குத் தான் அல்லாஹ் நேர்வழி காட்டியிருக்கின்றான். அவர்களே விவேகமான அறிவு படைத்தவர்களாவார்கள்.” ( அல்குர்ஆன்: 39:17,18 )

தான் கேட்கிற மார்க்க விஷயங்களில் கூட தேர்ந்தெடுத்து செயல்பட வேண்டும் என்கிற கட்டளையும், அதற்காக நன்மையும் கிடைக்கும் என்றால் ஒரு முஸ்லிமுடைய வாழ்வில் தேர்ந்தெடுக்கும் பண்பு எவ்வளவு முக்கியமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே, ஓர் இறை நம்பிக்கயாளன் தன்னுடைய வாழ்வில் அவன் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அது அவனுடைய ஈருலக வாழ்வின் வளங்களுக்கு எவ்வித பாதிப்புக்களையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு தேர்வு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முஸ்லிமிடமும் இருக்க வேண்டிய ஆறு பண்புகள்!

ஓவ்வொரு முஸ்லிமும் வாழ்க்கையில் சில போது ஒரு முஸ்லிமாக செயல்பட வேண்டும். ஒரு முஸ்லிமாக செயல்படுவதில் பெருமை கொள்ள வேண்டும். அந்த இடத்தில் நான் முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடக்கிற விஷயத்தில் நாம் முஸ்லிமாக செயல்பட வேண்டும். இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் செய்த பிரார்த்தனைகளின் ஒன்றாக பகரா சூராவின் 128 –வது இறைவசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இன்னும் சில போது வாழ்க்கையில் முதல் நிலை முஸ்லிமாக செயல்பட வேண்டும். முதல் நிலை முஸ்லிமாக செயல்படுவதில் பெருமை கொள்ள வேண்டும். அந்த செயல்பாட்டின் போது நான் தான் முதல் நிலை முஸ்லிம் என்று தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ * لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ ) الأنعام/ 162، 16

ஏகத்துவ வாழ்க்கையில் எவ்வித தடுமாற்றம் ஏற்பட்டாலும் இணைவைப்பு மற்றும் ஏகத்துவ வாழ்க்கைக்கு வேட்டு வைக்கிற எந்த ஒன்ற்றிற்கும் உடன் படாமல் முழுக்க முழுக்க தன் வாழ்க்கை முழுவதையும் அல்லாஹ்விற்கு அர்ப்பணிக்கும் விஷயத்தில் முதல் நிலை முஸ்லிமாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநபி {ஸல்} அவர்களுக்கு அல்லாஹ் பிறப்பித்த கட்டளையை அன்ஆம் சூராவின் 162,163 வது இறைவசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்

இன்னும் சில போது வாழ்க்கையில் ஒரு முஸ்லிமாக செயல் படுவதை விட, முதல் நிலை முஸ்லிமாக செயல்படுவதை விட நடுநிலை முஸ்லிமாக செயல்பட வேண்டும்.

وَكَذَٰلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِّتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ

ஏனைய மக்களுக்கு உங்களை நாம் மத்தியஸ்தமான, நடுநிலையான சமூகமாக ஆக்கியிருக்கின்றோம் என அல்லாஹ் பகரா அத்தியாயத்தில் 143 வது வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அந்த வகையில் இந்தத் தேர்தல் என்பது நாம் நம்மை முஸ்லிம் என்று அடையாளப்படுத்துவதை விட, முதல் நிலை முஸ்லிம் என்று அடையாளப் படுத்துவதை விட நடுநிலை பேணுகிற ஒரு முஸ்லிம் என்று பறை சாற்ற வேண்டிய தருணமாக இருப்பதை உறுதிப்படுத்துகின்றது.

عَنِ ابْنِ عُمَرَ: ” أَنَّ رَجُلًا جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ وَأَيُّ الْأَعْمَالِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

மக்களுக்கு பயன் தருபவர்களே அல்லாஹ்விற்கு அதிகம் பிரியமானவர்கள் என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

ஒவ்வொரு முஸ்லிமும் ஏதோவொரு வடிவில் தன்னுடன் வாழும் சக மனிதர்களுக்கு பயன்படுபவனாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

பயனளித்து வாழ்வது என்பது சமூகத்தின் உயர்வு தாழ்வுகளில் பங்கேற்பதற்கு சமமாகும். இந்த வகையில் சமூகத்திற்குப் பயன் தரும் வகையில் செய்யும் எந்தப் பணியையும் இஸ்லாம் ‎உயர்ந்த அமலாக அடையாளப்படுத்துகிறது.

இந்த ஹதீஸின் படி, ஒரு ‎முஸ்லீம் எப்போதும்; சமூகத்தின் நலனில் அக்கறை கொண்டு வாழ்வார் என்று புலப்படுகிறது.

எத்தனையோ விஷயங்களை முஸ்லிமின் மீது கடமை, முஸ்லிமுக்கு அழகு என்று கூறியிருக்கின்ற நபி {ஸல்} அவர்கள் பயன்பாடு என்று வருகின்ற போது முஸ்லிமைத் தாண்டி அனைத்து மக்களுக்கும் தேவையானது என்பதால் இங்கே மாநபி {ஸல்} முஸ்லிம் என்று குறிப்பிடாமல் அந்நாஸ் என்று முழுமனித சமூகத்தையும் சேர்த்து கூறியிருக்கின்றார்கள்.

நாம் அளிக்கும் வாக்கு ஓரிரு முஸ்லிமுக்கு பயன்பாடு தருவது முக்கியமா? இல்லை, ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் பயந்தருவது முக்கியமா? என்பதை சீர்தூக்கி பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.

‎இன்னும், ஒவ்வொரு முஸ்லிமும் சிறந்த சிந்தனைவாதியாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

அந்த வகையில் ஒரு முஸ்லிமின் வாழ்வில் இடம்பெற வேண்டிய அடிப்படை சிந்தனையாக ‎‎’அல்ஜிஹாதை’ இஸ்லாம் கருதுகிறது. இச்சொல் ‘எதிர்த்து நிற்றல்’ (Resisting) மற்றும் ‎‎’சீர்திருத்தல்’ (Reforming ) என்ற இரு பரிமாணங்களைக் கொண்டதாகும்.

كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ ۗ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَّهُم ۚ مِّنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ (110)

இதன் அர்த்தம் ‎என்னவென்றால், மனித சமூகத்தின் சீரான வாழ்வுக்குத் தடையாக உள்ள அனைத்தையும் ஒரு ‎முஸ்லிம் எதிர்க்க வேண்டும். மறுபுறம், சமூகத்தின் சீரான வாழ்விற்கான சீர்திருத்தத்தினை சாத்தியமாக்கும் பாதையில் ‎அவன் உழைக்க வேண்டும். ‘அல்ஜிஹாத்’ பற்றிய இந்தப்புரிதல் தான் ஒரு முஸ்லிமை ஏனைய அனைத்து சமுதாய மக்களிடம் இருந்தும் வேறுபடுத்திக்காட்டும்.

இந்திய தேசத்தின், தமிழக மக்களின் சீரான வாழ்விற்கு தடையாக இருக்கிற மதவாத கூட்டணியை எதிர்த்துப் போராடுவதற்கும் மறுபுறம், இந்த தேசத்தின் தமிழக மக்களின் நலன்களை சீராக்குவதற்கும் பயன்படுத்துகிற பேராயுதமாக நம்முடைய வாக்குகளை நாம் பயன்படுத்தி ஒரு போராளியாக நாம் பங்காற்ற வேண்டும் என்பதை அல்ஜிஹாத் என்கிற பதம் உணர்த்துகின்றது

‎இறுதியாக, ஒவ்வொரு முஸ்லிமும் தன்னளவில் எப்படி சிறந்த தனி மனிதனாக வாழ வேண்டுமோ ‎‎அதே போன்று, பொதுவாழ்வில் பங்கேற்பது இன்றியமையாதது என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

ஏனெனில், அநீதிக்கு எதிராக குரல் கொடுக்காமல், மனித ‎சுதந்திரத்தினை உறுதிப்படுத்துவதற்காக போராடாமல், சமூக நீதிக்காக களத்தில் இறங்காமல் ‎சிறந்த முன்மாதிரி தனிமனிதாக மாற முடியாது. ஏனெனில், ஒரு மனிதனின் தனிப்பட்ட ‎சீர்திருத்தம் என்பது சமூக சீர்திருத்தத்தில் இணைந்த ஒரு அம்சமாகவே இஸ்லாம் ‎பார்க்கின்றது

فَأْتِيَاهُ فَقُولَا إِنَّا رَسُولَا رَبِّكَ فَأَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ وَلَا تُعَذِّبْهُمْ ۖ قَدْ جِئْنَاكَ بِآيَةٍ مِّن رَّبِّكَ ۖ وَالسَّلَامُ عَلَىٰ مَنِ اتَّبَعَ الْهُدَىٰ (47)

அல்லாஹ் ஃபிர்அவ்னின் சமூகத்திற்கு மூஸா (அலை) ஹாரூன் (அலை) ஆகியோரை நபியாக அனுப்பிய போது அநீதியின் சுழலில் சிக்கித்தவித்த, அடிமைத்தனத்தின் கோரப்பிடியில் உழன்று கொண்டிருந்த பனூஇஸ்ரவேலர்களை ஃபிர்அவ்னின் பிடியிலிருந்து விடுவிக்க போராடுமாறு அல்லாஹ் கட்டளை பிறப்பித்தான்.

இந்த உலகின் முதல் சுதந்திர போராட்ட வரலாற்றின் நாயகர்களாக இந்த இரண்டு இறைத்தூதர்களையும் அல்குர்ஆனில் அல்லாஹ் அடையாளப்படுத்துவான்,

குழப்பங்களை புறந்தள்ளுங்கள்!

நமக்கு முன்னால் சொந்த சமூகத்தவரை தேர்ந்தெடுப்பதா? மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதா? என்கிற கேள்வி முன் வைக்கப்படுகின்றது.

234 தொகுதியின் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களா? 6 முஸ்லிம் வேட்பாளர்களா? 16 முஸ்லிம் வேட்பாளர்களா?

சட்டசபையில் குரலெழுப்பி பேசுகின்ற ஓரிருவர் வருவதை விட சட்டமன்றத்தில் கையொப்பமிடுகிற அதிகாரம் இருக்கிற பெரும்பான்மை உறுப்பினர்களோடு ஆட்சி, அதிகாரத்தில் அமர வாய்ப்புள்ளவர்களுக்கு வாக்களிப்பதே புத்திசாலித்தனம் ஆகும்.

எனவே, முஸ்லிம் ஓட்டு முஸ்லிமுக்கே, மண்ணின் மைந்தன் என்றெல்லாம் பார்க்காமல் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் நன்மை ஏற்படுகிற வகையில் நாம் வாக்களிப்பது முஸ்லிம் என்ற வகையில் நமது தார்மிக கடமையாகும்

இன்று அதிக எம்.எல்.ஏ க்களை வைத்திருக்கின்ற எம்.பி க்களை வைத்திருக்கின்ற தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த ஒரு அரசையே பாஜக அடிமையாக வைத்து ஆட்டம் போடுகின்றது என்றால் பாஜகவினரும், இவர்களின் கூட்டணியினரும் எம்.எல்.ஏக்களாக, மேல்சபை உறுப்பினர்களாக தேர்வாகி விட்டால் தமிழக மக்களின் நிலை என்னவாகும்? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

6 –க்கும், 16 –க்கும் முக்கியத்துவம் கொடுத்தால் மிக இலகுவாக அவர்கள் வென்று விடுவார்கள். நாட்டை ஃபாஸிசத்தால் சீரழித்து விடுவார்கள்.

எனவே நமது வாக்குரிமையை சிதறடிக்காமல், நமது சமூகத்தின் ஒரு குழுவினருக்கு முன்னுரிமை வழங்காமல் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நலன் கருதி மதச்சார்பற்ற கூட்டணியைத் தேர்வு செய்வோம்.

இஸ்லாத்தில் ஒரு பண்பாடு ஒன்று நமக்கு வழிகாட்டலாக தரப்பட்டுள்ளது. அதாவது இரண்டு தீமைகள் நம் முன்னால் இருக்கின்றது. அதில் ஏதாவது ஒன்றை செய்தே ஆக வேண்டும் என்கிற நிர்பந்த நிலை ஏற்படுமாயின் இரண்டில் எந்த தீமை மிக இலகுவானதோ அதைத் தேர்ந்தெடுத்து பெரிய தீமையில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

பாஜக பெரிய தீமை என்றால் ஒரு இன்னொரு தேசிய கட்சி சிறிய தீமை, மதவாத கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மாநிலத்தின் பெரிய கட்சி பெரிய தீமை என்றால் மதச்சார்பற்ற கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சி சிறிய தீமை

இரண்டு தேசிய கட்சிகளும் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்ததில் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. அது போலவே இரண்டு மாநில கட்சிகளும் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்ததில் சளைத்ததல்ல.

ஒரு தேசிய கட்சி பாபரி மஸ்ஜிதை இடித்ததென்றால் இன்னொரு தேசிய கட்சி இடிப்பதற்கு இடம் கொடுத்து வேடிக்கைப் பார்த்தது.

ஒரு மாநில கட்சி பாஜகவை தமிழகத்தில் நுழைய ஆதரித்தது என்றால், இன்னொரு மாநில கட்சி அவர்களோடு கை கோர்த்து சிஏஏ வை ஆதரித்து நாட்டை நாசமாக்க இடம் கொடுத்தது.

யார் அதிகம் துரோகம் செய்தார்கள் என்று விவாதம் நடத்த வேண்டிய நேரம் அல்ல இது

யாரின் மூலம் தீமை ஏற்படுவது குறைவு என்பதைப் பார்க்க வேண்டிய நேரம் இது.

அந்த அடிப்படியில் தேசிய கட்சியான காங்கிரஸும், மாநில கட்சியான திமுகவும் இணைந்து நிற்கிற மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிக்க வேண்டும், அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அதுவே சாலச் சிறந்த தேர்வாகும்.

இந்த நிலைப்பாட்டை ஒட்டு மொத்த தமிழக மக்களின் நலன் கருதியும், முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதியும் முஸ்லிம் சமூகத்தின் பெருவாரியான பிரதிநிதிகளைக் கொண்டுள்ள தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் இதர பெரும்பாலான இஸ்லாமிய அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஒன்று பட்டு எடுத்திருக்கும் இந்த முடிவே தமிழக முஸ்லிம் சமூகத்திற்கு சிறந்த முடிவும் ஆகும்.

வாக்குரிமை என்பது…

வாக்குரிமை என்பது ஷரீஆவின் பார்வையில் பிரதானமான நான்கு அம்சங்களில் நோக்கப்படுகின்றது

கலாநிதி முஸ்தபா அல்ஸிபாஈ, முஹம்மத் பல்தாஜீ, பத்ஹி அபுல் வர்த், அப்துல் கரீம் ஸைதான், அப்துல் ரகுமான் அல்பர், யூஸுப் கர்ளாவி, முஹம்மத் அஹ்மத் ராஷித் போன்ற சம கால அறிஞர்கள் பலர் வாக்குரிமை குறித்து ஆய்வு செய்து பின்வருமாறு தெரிவித்துள்ளனர்.

1. ஷஹாதத் – சாட்சி பகர்தல்.

வாக்களிப்பது என்பது சாட்சி பகர்தல் என்று அர்த்தத்தில் சில போது நோக்கப்படும். அதாவது, அனைத்து வகையான தேர்தல்களிலும் வேட்பார்களுக்கு வாக்களிப்பது என்பது நம்பிக்கை ரீதியில் சமூகத்தின் பிரதிநிதியாக அல்லது நாட்டின் தலைவராக வருவதற்கு தகுதியானவர், பொருத்தமானவர் என்று வாக்காளர் வழங்கும் சாட்சியம் ஆகும்.

அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இடம் பெற்றுள்ள சாட்சி பகர்தல் என்ற வார்த்தை வாக்களித்தல் என்பதற்கு சமனானது என்ற கருத்தில் சட்டத்துறை மற்றும் அரசியல் துறை அறிஞர்கள் மத்தியில் கருத்தொற்றுமை நிலவுகிறது.

தேர்தல் காலங்களில் வழங்கப்படும் வாக்காளர் அட்டை என்பது சாட்சி பகர்வதற்கான அழைப்பாகும்.

وَلَا يَأْبَ الشُّهَدَاءُ إِذَا مَا دُعُوا

”சாட்சி சொல்ல வேண்டியவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டால் மறுக்கக் கூடாது” என்ற அல்பகரா அத்தியாயத்தின் 282 –ஆவது வசனத்தில் அல்லாஹ் பணிக்கிறான்.

அவ்வாறே வாக்குரிமையை துஷ்பிரயோகம் செய்வது, மறைப்பது குற்றம் என்ற கருத்தை அதே அத்தியாயத்தின் அடுத்த 283 –ஆவது வசனத்தில் அல்லாஹ்..

وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَنْ يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ

”சாட்சியத்தை நீங்கள் மறைக்கவும் வேண்டாம். எவரேனும் அதனை மறைத்தல் நிச்சயமாக அவருடைய உள்ளம் பாவத்திற்குள்ளாகி விடுகின்றது” என அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

2. ஷஃபாஅத் – பரிந்துரை வழங்குதல்…

வாக்களிப்பது என்பது சாட்சி பரிந்துரைத்தல் என்ற அர்த்தத்தில் சில போது நோக்கப்படும். அதாவது, அனைத்து வகையான தேர்தல்களிலும் வேட்பார்களுக்கு வாக்களிப்பது என்பது நம்பிக்கை ரீதியில் சமூகத்தின் பிரதிநிதியாக இருந்து அல்லது நாட்டின் தலைவராக இருந்து தமது சமூகத்தின் குறை நிறைகளை அறிந்து சமூகத்திற்காக உழைப்பார் எனக் கருதி அந்தப் பொறுப்பிற்கு வாக்குரிமை மூலம் நாம் அளிக்கும் பரிந்துரை ஆகும்.

مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا

“எவர் நன்மையான ஒன்றுக்கு பரிந்துரை செய்வாரோ அந்த நன்மையில் அவருக்கு ஒரு பங்குண்டு. எவர் தீமையான ஒன்றுக்கு பரிந்துரை செய்வாரோ அவருக்கு அதில் ஒரு பங்குண்டு” ( அல்குர்ஆன் 4: 85 )

3. அமானத் – நம்பகத்தன்மை…

வாக்குரிமை என்பது நமக்கு இந்த தேசம் தந்திருக்கும் அடிப்படை உரிமை என்பதை கவனத்தில் கொண்டு பார்க்கும் போது அது இஸ்லாமிய வழக்கில் அமானிதம் என்ற நோக்கில் பார்க்கப்படும்.

அப்படி நம்மிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை நாம் நிறைவேற்ற வேண்டும்.

إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا

“உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அதற்கு உரியவர்களிடம் ஒப்படைக்கும்படி அல்லாஹ் உங்களுக்கு கட்டளை பிறப்பிக்கின்றான்”. ( அல்குர்ஆன்: 4: 58 )

4. வகாலத் – பொறுப்பேற்றல்..

தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் தமது சார்பில் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்கின்றார்

மேலும், ஒருவரிடம் பொறுப்பைக் கொடுத்து உம் கையில் இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி என் சமூகத்தின் பிரச்சனைகளை சரி செய்வதும், என் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதும் உமக்கான பிரதான கடமை என்று சமூகத்தின் சார்பாக அவர் செய்வார் என்கிற நம்பிக்கையில் பொறுப்பேற்பதால் சில போது வகாலத் எனும் பொருளில் நோக்கப்படும்.

ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இருமகள்களில் ஒருவர் மூஸா {அலை} அவர்கள் குறித்து கூற வருகிற போது… பொறுப்பேற்கும் விதமாக

قَالَتْ إِحْدَاهُمَا يَاأَبَتِ اسْتَأْجِرْهُ إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ (26)

“என் தந்தேயே அவரை பணியில் அமர்த்துங்கள்! நிச்சயமாக நீங்கள் பணியில் அமர்த்துபவர்களில் சிறந்தவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும், சக்தியுடையவராகவும் உள்ளார்” என்று கூறினார். ( அல்குர்ஆன்: 28: 26 )

எனவே, வாக்குரிமையை பயன்படுத்துவது ஷரீஆவின் பார்வையில் ஒரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமையும், காலத்தின் கட்டாயத் தேவையும், பொறுப்புணர்ச்சியும் ஆகும்.

நாட்டில் அரசியல் அராஜகம் தலைவிரித்தாடுகிறது. பாஸிச சக்திகளின் கை அனைத்து மட்டங்களிலும் மேலோங்கி வருதை காண முடிகிறது.

தொழுகை தீமையை தடுக்கும் என்றும், நன்மைகள் தீமைகளை தடுக்கும் என்றும், அல்குர்ஆன் கூறுகிறது. இந்த வகையில் வாக்குரிமை என்பது தீமையை தடுப்பதற்கான பலமான ஆயுதமாகும்.

இது மகத்தான சக்தியை பெற்றுத்தரும் அரசியல் ஆதாரம் ஆகும். இந்த நிலையில் வாக்குரிமையை தவறாக நாம் பயன்படுத்தி விட்டால் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும்

எனவே தேசத்தை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். நலன்களை முற்படுத்தி தீமைகளை தவிர்ப்பதற்கோ அல்லது அழிவுகளை, சேதங்களை குறைப்பதற்கோ தேர்தல் ஒரு சிறந்த ஆயுதம்.

அதற்கு வாக்குரிமையை மிகக் கச்சிதமாக பயன்படுத்தவது ஏனைய சமூகத்தைப் போல முஸ்லிம் சமூகத்திற்கு முன்னால் உள்ள சமமான பொறுப்பாகும்.

நிறைவாக..,,

முஸ்லிமை விட்டு விட்டு, காஃபிருக்கு துணை போவதா என்ற குரல் நியாயமானதா?

இன்று முஸ்லிம்கள் முஸ்லிம் வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என்று தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரிவினர் (கட்சியினர்) உரத்துக் குரல் எழுப்புகின்றார்கள்.

சட்டமன்றத்தில் நின்று குரல் எழுப்ப தன் சொந்த சமூகத்திற்கு இந்த முறை கண்டிப்பாக வாய்ப்பு வழங்க வேண்டும் (சேராத இடத்தில் சேர்ந்து விட்டு) என்று முழங்குகின்றார்கள்.

உண்மையில் அப்படி ஏதாவது கட்டாயம் இருக்கின்றதா? என்றா இல்லை என்றே சொல்லலாம்

சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் தாம் வாழும் தேசத்தின் நலன்களை அடைந்து கொள்வதற்கும், தீமைகளை தவிர்ப்பதற்கும் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துவது வாஜிபாகும் என அறிஞர் அப்துல் கரீம் ஸைதான் அவர்கள் குறிப்பிட்டு விட்டு ‘காபிரான அரசிடமிருந்து நலன்தரும் பகுதிவாரியான பயனை பெறுவது ஆகும்’ என்ற ஷரீஆவின் சட்ட விதியின் அடிப்படையில் அதற்கு ஆதாரத்தையும் மேற்கோள் காட்டுகிறார்.

இவ்வாதாரத்தை அவர் தெளிவுபடுத்தி கூறும் போது ஸீராவில் இருந்து பல நிகழ்வுகளை உதாரணமாக குறிப்பிட்டுள்ளார். நபி {ஸல்} அவர்களும் நபித் தோழர்களும் எதிரிகளிடமிருந்து தங்களது உயிரை பாதுகாக்கும் வகையில் குறைஷிக் காபிர்களின் தலைவர்களிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதத்தை பெற்ற பல சம்பவங்கள் ஸீராவில் உள்ளன.

அதன் பொருள் செல்வாக்குள்ள, உயர் அந்துஸ்த்துள்ள குறைஷிக் காபிர் ஒருவர், இன்னாருக்கு நான் பாதுகாப்பு கொடுக்கிறேன் என்று அறிவித்தால் அவருடைய சமூகம், பாதுகாப்பு வழங்கப்பட்ட நபருக்கு முழுமையான உயிர் பாதுகாப்பு கொடுக்கவேண்டும்.

அந்த பாதுகாப்பு அறிவிப்பு ஒரு உடன்படிக்கையாகவே அன்று கருதப்பட்டது. அப்படி பாதுகாப்பு கொடுக்கப்பட்டவருக்கு யாரும் எத்தகைய தீங்கும் செய்ய முடியாது. யாராவது அதனை மீறி பாதுகாப்பு வழங்கப்பட்டவருக்கு தீங்கு செய்தால் அது உடன்படிக்கையை முறித்ததாகவே கருதப்பட்டது. அதற்காக அந்த கோத்திரமே போர் செய்ய களம் இறங்கிவிடுவர்.

அறியாமை (ஜாஹிலிய்யா) க்கால மரபில் இருந்த இந்த பாதுகாப்பு முறைமையை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் அவரது தோழர்களும் தேவையான போது தமது பாதுகாப்பிற்காக பயன்படுத்தினர். அது ஈமானை பாதிக்கும் ஒரு விஷயமாக நோக்கப்படவில்லை.

மாறாக உலக விவகாரத்தில் பரஸ்பர ஒத்துழைப்பை பயன்படுத்தியதாகவே கருதப்பட்டது. உலகவாழ்வில் தேச நலன்களை அடைவதில் ஒரு வழிமுறையாகவே அதனை நாம் காண்கின்றோம்.

رجع النبي ـ صلى الله عليه وسلم ـ من الطائف حزينًا مهمومًا بسبب إعراض أهلها عن دعوته، وما ألحقوه به من أذىً، ولم يشأ أن يدخل مكة كما غادرها، إنما فضل أن يدخلها في جوار بعض رجالها، خاصة أنه حين خرج ـ صلى الله عليه وسلم ـ إلى الطائف عزمت قريش على منعه من العودة إلى مكة، حتى لا يجد مكانا يؤيه، أو أناسا يحمونه .
قال ابن القيم: ” فقال له زيد: كيف تدخل عليهم وقد أخرجوك؟ ـ يعني قريشا ـ ، قال: يا زيد، إن الله جاعل لما ترى فرجا ومخرجا، وإن الله ناصر دينه، ومظهر نبيه، فلما انتهى إلى مكة، أرسل رجلا من خزاعة إلى مُطْعَم بن عدي: أدخل في جوارك؟، فقال: نعم، فدعا بنيه وقومه، وقال: البسوا السلاح، وكونوا عند أركان البيت، فإني قد أجرتُ محمداً، فدخل رسول الله ـ صلى الله عليه وسلم ـ، ومعه زيد بن حارثة حتى انتهى إلى المسجد الحرام، فقام المطعم على راحلته، فنادى: يا معشر قريش، إني قد أجرت محمداً، فلا يهجه أحد منكم، فانتهى رسول الله ـ صلى الله عليه وسلم ـ إلى الركن، فاستلمه، وصلى ركعتين، وانصرف إلى بيته ومطعم وولده محدقون به بالسلاح حتى دخل بيته “.
قال ابن الأثير

” وأصبح المطعم قد لبس سلاحه هو وبنوه وبنو أخيه فدخلوا المسجد، فقال له أبو جهل: أمجير أم متابع؟، قال: بل مجير، قال: قد أجرنا من أجرت

நபிகளார் {ஸல்} அவர்கள் தாயிஃப் நகரத்திலிருந்து மக்காவிற்கு திரும்பியபோது முஷ்ரிக்கான முத்இம் பின் அதியின் பாதுகாப்புடனேயே தாயகம் திரும்பினார்கள். அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் போன்ற பல தோழர்கள் மக்காவில் இருந்தும் கூட அவர்களை இறை தூதர் {ஸல்} அவர்கள் நாடவில்லை. காரணம் நபிகளார் சுதந்திரமாக மக்கா திரும்ப முடியாத அளவிற்கு எதிர்ப்பும் கொலை அச்சுறுத்தலும் அவர்களுக்கு இருந்தது. எனவே உயிர் பாதுகாப்பு பெறாமல் மக்காவினுள் நுழைவது அழிவை தன் கையால் தேடிக்கொண்டதாகவே அமையும் என்று கருதியே அன்றிருந்த பாதுகாப்பு மரபை நபிகளார் தனக்கு சார்பாக பயன்படுத்த முனைந்தார்கள். நபி {ஸல்} அவர்கள் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு முஷ்ரிக்கான முத்இம் பின் அதியிடம் தூதனுப்பினார்கள். அதற்கு முத்இம் சம்மதம் தெரிவித்தார்.

பின்னர் நபி {ஸல்} அவர்கள் முத்இமின் இல்லத்தில் அன்றைய இரவை கழித்து விட்டு அடுத்த நாள் காலையில் முத்இமும் இன்னும் அவரது ஏழு பிள்ளைகளுமாக உருவப்பட்ட வாள்களுடன் மக்காவில் நுழைந்தார்கள். அப்போது குறைஷித் தலைவன் அபூஜஹ்ல் எதிரிலே வந்து நீர் முஹம்மதின் பின்னால் அவரைத் தொடர்ந்து வருவது ஏன்? அவருக்கு நீர் பாதுகாப்பு வழங்கியுள்ளீரா எனக் கேட்டான். ஆம், நான் சும்மா வரவில்லை. முஹம்மதுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளேன் என முத்இம் பதில் கொடுத்தார். அப்படியாயின் உனது பொறுப்பில் உள்ள உடன்படிக்கையை நீர் முறிக்கத் தேவையில்லை எனக் கூறி அந்த பாதுகாப்பை தலைவர் அபூஜஹ்லும் அங்கீகரித்தான். இதுபோன்ற ஏராளமான நம்பகமான நிகழ்வுகளை ஸீராவில் அதிகமாகவே காணமுடியும்.

இவை சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினைகளை கையாள்வதற்கான வழிகாட்டல்களாகும். அநீதி நிலவும் அரசாங்கத்தில் தேர்தல் என்பது தீமையை குறைப்பதற்கான அல்லது நாட்டு நலனில் பங்களிப்பதற்கான அல்லது சத்தியத்தை பரப்புரைப்பதற்கான சிறந்த வழிமுறையாகும். சர்வதிகாரிகளின் கொடுமைகளை எதிர்ப்பதற்கான சாத்வீகமான அரசியல் போராட்ட சாதனமே தேர்தல் அரசியலாகும். மேற்குறித்த சம்பவத்தின் மூலம் மாநபி {ஸல்} அவர்கள் உலக அரசியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு காபிரின் பாதுகாப்பை வேண்டுவது தவறல்ல என்ற நிலையையே சுட்டிக்காட்டுகின்றார்கள்.

எனவே, இந்த சட்டமன்ற தேர்தலில் நாம் நமக்கான வாக்குரிமையை மதவாத கூட்டணிக்கு எதிராக பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில் கையொப்பமிடும் அதிகாரம் யார் வசம் வருமோ அத்தகையவர்களுக்கு நாம் வாக்களிக்க வேண்டும்.

தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் முடிவில் இது தெளிவு படுத்தப் பட்டுள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு அறியத்தருகின்றோம்.

குறிப்பு: உங்கள் மஹல்லாவிற்கு ஏற்ற வகையில் உங்கள் மஹல்லாவின் சூழ் நிலையை கவனித்து நீங்கள் பேசிக் கொள்ளுங்கள்

ஆக்கம்: பஷீர் அஹ்மத் உஸ்மானி