ஆங்கிலவழிக் கல்வியில் பயின்றபின் தமிழில் எழுத வருவோர் அனைவரும் குறிப்பிட்ட வகையான சொல்லாடல்களுக்குள் சிக்கித் திணறுகிறார்கள்.
நம் எழுத்தாளர்களின் கால்களில் நான்கு வார்த்தைக் குண்டுகள் தொங்குகின்றன.
அவையாவன : மற்றும், ஒரு, பற்றி, என்பது என்பனவாம். இவற்றைக் காலில் கட்டிக்கொண்டபடி ஓடப்பார்க்கிறார்கள். அதன் விளைவாக அவர்களின் தமிழ்நடையில் எழுச்சியில்லை. புதிய முறையில் மொழியைக் கையாள முடியவில்லை.
அவர்கள் தம் எண்ணவோட்டங்களை எழுத நினைப்பது மகிழ்ச்சியானது. ஆனால் தமிழின் வளமும் வீச்சும் பெருகுமாறு செய்ய வேண்டுமென அவர்கள் கருதுவதில்லை. அதற்கான காரணங்கள் பல.
முதலில் அவர்கள் இருபதாண்டுகளுக்கும் முற்பட்ட நூல்களைக்கூட வாசித்திருப்பதில்லை; ஆர்வம் இருந்திருந்தால் வாசித்திருப்பார்கள். அந்நூல்களில் – மற்றும், என்பது – மிக அபூர்வமாகவே வரும்.
மேற்கூறப்பட்ட நான்கு வார்த்தைகளில் – மற்றும், என்பது – இன்று தமிழ்மொழிக்கு உப்புபோன்று ஆகிவிட்டன. துயரம்; பெரும் துயரம்.
இன்று எழுதக்கூடிய அனைத்துத் தமிழ் எழுத்தாளர்களும் அந்த வார்த்தைகள் இல்லாமல் ஒற்றைவரியைக்கூட எழுதுவதில்லை. மற்றும், என்பது – எனும் இரு வார்த்தைகளும் அவர்களின் உயிர்நாதமாக மாறிவிட்டன.
ஒரு பத்திரிகைக்கு ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கட்டுரை கேட்டால், ஆயிரம் வார்த்தைகளில் கட்டுரை தந்துவிடுகிறார். அதனை நம் மொழியின் கட்டளைக் கல்லில் உரசினால் இருநூறு வார்த்தைகள் சடங்களாக உதிர்ந்துவிடுகின்றன.
சடங்களாக உதிர்ந்த வார்த்தைகள் என்னென்னவெனப் பார்த்தோமானால், அவை – மற்றும், ஒரு, பற்றி, என்பது – எனும் வார்த்தைகளாக இருக்கின்றன.
இந்த இருநூறு வார்த்தைகளும் நம் எழுத்தாளரின் சிந்தனைகளை வற்றடித்துவிட்டன. அவ்வார்த்தைகள் இல்லாமல் இருந்திருக்குமேயானால் இன்னும் சில கருத்துகள் வெளிப்பட்டிருக்கும்தானே?
எல்லையில்லாத் திறனோடு கட்டுரையில் மொழியைக் கையாள வேண்டிய தருணத்தில் இந்த நான்கு சொற்களும் முட்டுக்கட்டைகளாக விழுந்து நம் படைப்பாளியின் திறனைத் தடுத்தாட்கொள்கின்றன. புதிய கூறுமுறைகளால் வாசகரின் சிந்தையை ஈர்க்க வேண்டும் எனும் ஆர்வம் எழாமல் நம் எழுத்தாளர் கீழே விழுந்துகிடக்கிறார்.
என்பது – என்ற வார்த்தையை நூற்றுக்கணக்கில் பயன்படுத்துவதன் வாயிலாக, நாம் வாசகரையும் குறைத்து மதிப்பிடுகிறோம்; எவ்வாறெனில் வாசகரின் மண்டையில் குட்டி, நான் எழுதியதைச் சரியாகப் புரிந்துகொண்டாயா என்று கேட்பதுபோல் உள்ளது. ‘ மற்றும் ‘ என்ற வார்த்தையைப்போல ‘ என்பது ‘ என்ற வார்த்தையை முற்றுமுழுதாகத் தொலைத்துவிட முடியாதுதான். ஆனால் கட்டுப்படுத்திவிடலாம்.
இங்கே சிலவற்றை எடுத்துக்காட்டுகளாக முன்வைக்கிறேன்.
- கொரோனா நோய்த்தொற்று குறைந்துவிட்டது என்பது உண்மைதான்.
இதனை இப்படி எழுதலாம் கொரோனா நோய்த்தொற்று குறைந்திருப்பது உண்மைதான்.
- அவன் கைவசம் பல வாகனங்கள் இருப்பது என்பது எல்லாருக்கும் தெரியும்.
அவன் கைவசம் பல வாகனங்கள் இருப்பது எல்லாருக்கும் தெரியும்.
மேற்கூறப்பட்ட வாக்கியங்களில் ‘என்பது’ என்ற வார்த்தை ஆறாவது விரலாகத் தொங்குவது தெளிவு. அது இல்லாமல் எழுத முடிகிறதுதானே? வலிந்து வலிந்து என்பது என்ற வார்த்தையைத் திணித்து ஏன் மொழியை வீங்க வைக்க வேண்டும்?
அவ்வார்த்தையை ஏன் அதிகமாகப் பயன்படுத்துகிறார்களென்று கொஞ்சம் யோசித்துப்பார்த்தேன்; விடை கிடைத்தது.
வாக்கியத்தை எதிர்மறையாக எழுத ஆரம்பிக்கும்போது அந்த விபத்து நிகழ்கின்றது. எப்படி, எவ்வாறு, எது, ஏன் – எனும் கேள்விக் கணைகளை முன்வைத்து எழுதுகையில் இவ்வாறு ஆகிவிடுகின்றது. ” போர்ச்சூழல் ஒரூ மனிதனை எப்படி மாற்றுகின்றது என்பதை அவர் நன்கு அறிவார்.” அதை இப்படி நச்சென்று எழுதலாம் போர்ச்சூழல் ஒருவரை மாற்றிவிடுவதை அவர் நன்கறிவார்.
இப்படி எழுத முயலாமல் ஏன் தலைசுற்றி வர வேண்டும்? ஆங்கிலவழிக் கல்வி இவ்வாறாக ஒவ்வொருவரையும் களைப்புறச் செய்யும் பயணத்திற்குத் தள்ளிவிடுகின்றது.
என்பது என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது பெருவழக்காக மாறிவிட்டது. அனைத்துப் பத்திரிகைகளும் இவ்வாறுதான் தலையங்கங்களையும் கட்டுரைகளையும் எழுதுகின்றன. அவை பெரும் சலிப்பைத் தருவதுடன் மொழிக்கு ஊறும் விளைவிக்கின்றன; வாசிப்பதில் சுவையும் இல்லை.
கட்டுரைகளை விடுங்கள்; கதை கவிதைகளிலும் இப்படியான போக்கு தென்படுகின்றது. அவ்வாறான ஒரு கதையை வாசித்து நொந்துநூலாகிவிட்டேன். படைப்பிலக்கியத்தில் வார்த்தைக் காளான்கள் முளைக்குமானால் பயிர்கள் செழிப்புறா.
அந்தச் சலிப்பினால் இதை எழுத வேண்டியதாயிற்று.
ஆக்கம்: களந்தை பீர் முகம்மது