இதோ புனித ரமலான் வந்து விட்டது. அதிகாலை நேரம் … சீக்கிரமாய் எழுந்து சாப்பிட்டு , தஹஜ்ஜத் தொழுது , ஃபஜ்ரின் பாங்கு சொல்லப்படும் வரை குர்ஆன் , திக்ரில் ஈடுபட வேண்டும் என்கிற அழகிய எண்ணத்துடன் சாப்பிட அமர்கிறீர்கள் … சாப்பிட்டு முடிக்கும் வரை உங்கள் எதிரே ஒய்யாரமாய் உட்கார்ந்து இருக்கும் டிவியை ஆன் செய்து சஹர் நேரத்தில் கூட நம்மை அழைத்து தலையில் துண்டால் முக்காடிட்டு பின்னணி இசையோடு உபதேசம் செய்யும் உலமாக்களின் அற்புத உரைகள் கேட்க துவங்குகிறீர்கள் … அதிலே மெய் மறந்து.. தட்டை கூட பார்க்காமல் என்ன உணவு சாப்பிடுகிறோம்..? என்கிற உணர்வின்றி சாப்பிட்டு முடிக்கிறீர்கள் …
“ரமலானை எப்படி பயனுள்ள மாதமாக, நன்மைகளை அள்ளிக் குவிக்கும் மாதமாக மாற்றலாம்” என்று டிவியில் ஆலிம் பெருமக்கள் நமக்கு அழகாக சொல்லி தருகிறார்கள். பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்கி, குர்ஆன் திலாவதுக்கள் அதிகம் ஓதி, திக்ருகள் சலவாத்துக்களில் நமது நாவை ஈடுபடுத்தி, நடுநிசியில் தஹஜ்ஜத் தொழுது, பாவ மன்னிப்பு தேடி, சஹர் செய்து.. பின் சுபுஹு தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் தொழுது அமல்களால் ரமலானை புனிதப் படுத்தச் சொல்லி உலமாக்களின் உரை தொடர்கிறது. அல்ஹம்து லில்லாஹ்…
இந்நிலையில்….அழகிய பயானை உள்வாங்கிய நீங்கள் மறுநாள் ரமலானின் கடமையான நோன்பை நோற்கவும், பரகத்தான சஹர் உணவை சாப்பிடவும், பின்பு அமல்கள் செய்யவும் சீக்கிரம் துயில் எழுகிறீர்கள். தஹஜ்ஜத் தொழுகை மற்ற நாட்களை விட ரமலானில் தொழுவது உங்களுக்கு மிக இலகு. ஆனால் அதை செய்யாமல்… ஸஹர் நேரத்தில் முன்னரே எழுந்து நீங்கள் இப்போது மீண்டும் டிவிக்கு முன்னர் சாப்பாடு தட்டை எடுத்துக்கொண்டு அமர்ந்து விடுகிறீர்கள்.
இப்படி எல்லா சேனல்களிலும் இயக்கம் சார்பாக , டிரஸ்ட்கள் சார்பாக , தனியார் வியாபார சேனல்கள் சார்பாக என எக்கச்சக்க சஹர் ப்ரோகிராம்களால் உங்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது … இதனை அவசியம் பார்க்க சொல்லி ஏகப்பட்ட விளம்பரங்கள் வேறு. அதிலும் இடையிடையே இசையுடன் கூடிய அரை குறை ஆடையுடன் ஏகப்பட்ட வர்த்தக விளம்பரங்கள். உபதேசங்களுக்கு இடையில் விளம்பரம் என்பது போய் விளம்பரங்களுக்கு இடைவெளியில் சில உபதேசங்களை கேட்கிறீர்கள்..
அழகிய சஹரின் நேரமும் , அந்த பொன்னான தஹஜ்ஜத்தின் நேரமும் இந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதிலேயே உங்களை கடந்து செல்கிறது .. குறைந்த நேரமே இருந்தும், அதில் தட்டை பார்த்து சாப்பிடாமல்… டீவியை பார்த்துக்கொண்டே சாப்பிட்டு அவசர அவசரமாக சஹர் செய்துவிட்டு கேட்ட உபதேசத்தில் இருந்து ஏதேனும் அமல் செய்யலாம் என நீங்கள் நினைக்கும் போது பள்ளியில் முஅத்தின் சுபுஹு தொழுகைக்கு அழைக்கும் பாங்கொலி காதில் அறைகிறது… ஆக.. அன்றைய சிறப்பான அதிகாலை இரவு அந்த ஆலிம் பெருந்தகை சொன்ன எந்த அமல்களும் செய்யப்படாமல் கழிகிறது. அடுத்த நாள் இரவும் இப்படியே.. இவ்வாறாக சேனல்களின் சேட்டைகளால் உங்களின் ரமலான் வீணாகவே கழிந்து கொண்டிருக்கிறது.
அந்த ஸஹரின் நேரம், தஹஜ்ஜத் தொழும் நேரம், தொழுதுகொண்டே சஜ்தாவில்… அல்லது தொழுதுவிட்டு இருகரம் ஏந்தி… மனம் ஒருமித்து…. நமது தேவைகளை நாம் கேட்கும் துஆவுக்காக அல்லாஹ் ஏற்படுத்தி தந்த சிறந்த நேரம். ஆனால் அந்த நல் அமல்களை செய்ய விடாமல் பாழ்படுத்துகின்றன இந்த சஹர் நேர ப்ரோகிராம்கள்..!
என் இஸ்லாமிய சமூகமே….. இஸ்லாமிய சொற்பொழிவு என்றாலும்… அந்த ஸஹர் நேர டிவி நிகழ்வுகளை எல்லாம் முழுமையாய் ஒதுக்கி விட்டு… நாம் நமக்கான நன்மையை பெற்றுக் கொள்ளும் அந்த அழகிய நேரத்தை அமல்களால்நிரப்புவோம்…
அற்புத உபதேசமே ஆனாலும் நம் அமல்களை பாழ் படுத்தும் நேரத்தில் அவைகள் நமக்கு தேவையில்லை என்பதை புரிந்து கொள்வோம் … பொருத்தம் இல்லாத நேரத்தில் செய்யப்படும் அந்த உபதேசங்கள் சமூகத்தில் “ஹும்மிலுத் தவ்ராத்” (பொதி சுமக்கும் கழுதையாக) மாறி விடும் அபாயம் அதிகம் உண்டு என்பதை விளங்கிக் கொள்வோம் …
நம் ரமலான் நல் அமல்களால் நிரம்பட்டும் இன்ஷா அல்லாஹ்…
செய்யது அஹமது அலி . பாகவி