அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் வரலாறு

முன்னுரை

وَسَيُجَنَّبُهَا الْاَتْقَىۙ‏
இறை அச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார்.
(அல்குர்ஆன் : 92:17)

الَّذِىْ يُؤْتِىْ مَالَهٗ يَتَزَكّٰى‌‏
(அவர் பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன்னுடைய பொருளை(த் தானமாக)க் கொடுப்பார்.
(அல்குர்ஆன் : 92:18)

وَمَا لِاَحَدٍ عِنْدَهٗ مِنْ نِّعْمَةٍ تُجْزٰٓىۙ‏
அவர் பதில் செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் அவர் மீது இல்லாதிருந்தும்,
(அல்குர்ஆன் : 92:19)

اِلَّا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰى‌‏
மிக்க மேலான தன் இறைவனின் திருப்பொருத்தத்தை விரும்பியே (தானம் கொடுப்பார்).
(அல்குர்ஆன் : 92:20)

وَلَسَوْفَ يَرْضٰى‏
(இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார்.
(அல்குர்ஆன் : 92:21)

இவ்வசனத்தில் இறையச்சமுள்ளவர் என குறிப்பிடப்படுபவர் சையிதினா அபூபக்ர் சித்தீக் ரலி அவர்கள். (இப்னு ஹிஷாம்)

இந்த வசனத்தை கொண்டு இந்த வார ஜும்ஆ பயானில் ஹஜ்ரத் அபூபக்கர் சித்திக் ரலி அவர்களின் வரலாற்றை நினைவு கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

பிறப்பு

பெயர் : அப்துல்லாஹ்
சிறப்புப் பெயர் : அபூபக்கர் ( ரலி )

பட்டப் பெயர் : சித்தீக் , அதீக்

தந்தை பெயர் : உஸ்மான் (சிறப்புப் பெயர் : அபுகஹாஃபா )

தாயார் : சல்மா (சிறப்புப் பெயர் : உம்முல்கைர்) அபூபக்கர் ( ரலி ) அவர்களின் பாரம்பரியம் 6 தலைமுறைக்கு முன் பெருமானாரின் தலைமுறையுடன் கலந்துவிடுகிறது .

கோத்திரம் : பனூதமீம்

யானை ஆண்டு என்று அழைக்கப்படும் நிகழ்வு நடந்து இரண்டரை வருடம் கழித்து அபூகுஹாஃபா என்ற உஸ்மானுக்கும் சல்மா என்ற உம்முல் கைர் என்பவருக்கும் மகனாக அபூபகர் (ரலி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள்.

நூல் : அல்இஸாபா பாகம் : 2 பக்கம் : 1088

 

குடும்பம்

அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு நான்கு மனைவிமார்கள் இருந்தார்கள். அவர்கள்:

அப்துல் உஸ்ஸாவின் மகள் கதீலா

ஆமிருடைய மகள் உம்மு ரூமான்

உமைஸுடைய மகள் அஸ்மா

ஹாரிஜாவுடைய மகள் ஹபீபா

இவர்களில் கதீலாவைத் தவிர்த்து ஏனைய மூவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். கதீலா இஸ்லாத்தை ஏற்றாரா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

இந்நால்வரின் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளும் மொத்தம் ஆறு குழந்தைகள் பிறந்தன. அவர்கள் அப்துல்லாஹ், அப்துர்ரஹ்மான், முஹம்மத், ஆயிஷா, அஸ்மா, உம்மு குல்சூம் ஆகியோராவர். இவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

அல்காமில் ஃபித்தாரீஹ் பாகம் : 1 பக்கம் : 396

வம்சாவழித் தொடரில் சங்கிலித் தொடராக நான்கு பேர் நபி (ஸல்) அவர்களின் தோழர்களாக திகழும் சிறப்பு அபூபக்ர் (ரலி) அவர்களின் குடும்பத்திற்குத் தவிர வேறுயாருக்கும் கிடைக்கவில்லை. ஏனென்றால் அபூ குஹாஃபா (ரலி) அவர்களும் அவரது மகன் அபூபக்ர் (ரலி) அவர்களும் அவரது மகள் அஸ்மா (ரலி) அவர்களும் அவரது மகன் அப்துல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றவர்கள்.

கண்ணியமிக்க மனிதர்

இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு அபுபக்கர் (ரலி) அவர்களிடம் காணப்பட்ட நல்லலொழுக்கங்கள், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றுக்காக மக்களிடம் மிகவும் பிரபல்யமான மனிதராகத் திகழ்ந்தார்கள். பிரச்னைக்குரிய விஷயங்களில் மக்கள் இவரிடம் வந்து கலந்தாலோசனை செய்வதும், அவர் கூறக் கூடிய கருத்துக்களுக்கு அதிக மதிப்புக் கொடுக்கக் கூடியவர்களாகவும் மக்கத்து மக்கள் இவரைப் போற்றி வந்தார்கள்.

அன்றைய அரபுலகத்தில் கொலைக்குப் பகரமாக இரத்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளும் வழக்கமிருந்தது. அவ்வாறு பெறக் கூடிய பணம் அபுபக்கர் (ரலி) அவர்களின் சம்மதமில்லாமல் பெறப்படுவதில்லை என்றதொரு நிலை கூட அன்றைய நாட்களில் நிலவி வந்தது. இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்பும் சரி பின்பும் சரி மதுவின் வாடையைக் கூட நுகராத மனிதராகத் திகழ்ந்தவர் தான் சையிதினா அபுபக்கர் (ரலி) அவர்கள்.

மக்களில் மிக அறிந்தவர்
அபூபக்ர் (ரலி) அவர்கள் குரைஷி கோத்திரத்தாரின் வம்சாவழித் தொடரைப் பற்றி மக்களில் மிக அறிந்தவராக இருந்தார்கள். ஒட்டு மொத்த குரைஷிகளின் வம்சாவழியைத் தெரிந்து வைத்திருக்க வேண்டுமானால் விசாலமான அறிவும் சிறந்த மனன சக்தியும் தேவைப்படும். இந்த ஆற்றலை அபூபக்ர் (ரலி) அவர்கள் பெற்றிருந்தார்கள்.

(குரைஷியர்களுக்கெதிராக வசைகவி பாடுவதற்காக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் (ரலி) அவர்களை அழைத்து வர ஆளனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்களிடம் ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் வந்த போது தங்களைச் சத்தியத்துடன் அனுப்பியவன் மீதாணையாக தோலைக் கிழிப்பதைப் போன்று நான் எனது நாவால் அவர்களைக் கிழித்தெறிவேன் என்று ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரப்படாதீர். அபூபக்ர் குரைஷிகளின் வமிசாவளி குறித்து நன்கறிந்தவர். குரைஷியரோடு எனது வமிசமும் இணைந்துள்ளது. அபூபக்ர் உம்மிடம் எனது வமிசாவளியைத் தனியாப் பிரித்தறிவிப்பார் என்று கூறினார்கள். ஆகவே ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று விவரங்களை பெற்றுக் கொண்டு திரும்பி வந்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (4903)

முந்தியவர்கள்!
நபி (ஸல்) அவர்கள் ஆரம்பமாகக் குடும்பத்தார் மற்றும் நண்பர்களில் தனது நம்பிக்கைக்குரியவர்களுக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்தினார்கள். உண்மையை நேசிப்பவர், நல்லவர் என தான் எண்ணியவர்களுக்கும் ஏகத்துவ அழைப்பு விடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களை எந்த வகையிலும் சந்தேகிக்காத ஒரு கூட்டம் அவர்களின் அழைப்பை ஏற்றது.

وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ‏

முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும் நற்செயல்களில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகின்றான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். அன்றி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளை இவர்களுக்கென தயார்படுத்தி வைத்திருக்கின்றான். அவற்றிலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்.
(அல்குர்ஆன் : 9:100)

இஸ்லாமிய வரலாற்றில் இவர்கள் “அஸ்ஸாபிக்கூனல் அவ்வலூன்” (முந்தியவர்கள்! முதலாமவர்கள்!) என்று அறியப்படுகின்றனர்.

அபுபக்கர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் வரிசையில், அதாவது வயது வந்தோர்களின் வரிசையில் முதலாவது நபராகவும், இன்னும் சிறுவர்களின் வரிசையில் அலி (ரலி) அவர்கள் முதலாவது நபராகவும் இருந்தார்கள். இன்னும் கதீஜா (ரலி) அவர்கள் பெண்களில் முதலாவது நபராகவும் இருந்தார்கள். அடிமைகளில் ஜைத் பின் ஹாரிதா (ரலி) அவர்கள் முதலாவது நபராகவும் இருந்தார்கள்.

அழைப்பு பணியில்
“சூரா” முத்தஸ்ஸின் ஆரம்ப வசனங்கள் அருளப்பட்டதும் ஏகத்துவ அழைப்புக்கு நபி (ஸல்) அவர்கள் தயாரானார்கள். ஆனால் அக்கால மக்கள் லாத்,உஸ்ஸா போன்ற சிலைகளை வணங்கி வந்தனர். தங்களது முன்னோர்களை சிலை வணங்கிகளாகக் கண்டார்கள் என்பதைத் தவிர சிலை வணக்கத்திற்காக வேறெந்த ஆதாரமும் அவர்களிடமில்லை. பிடிவாதமும் அகம்பாவமும் அவர்களது இயல்பாக இருந்தன. அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வாள் முனைதான் என்றும், அரபிய தீபகற்பத்தின் மார்க்கத் தலைமைக்கு தாங்களே மிகத் தகுதியுடையோர் என்றும் நம்பியிருந்தனர். அரபிய தீபகற்பத்தின் மார்க்கத் தலைமையிடமான மக்காவை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதை அப்படியே பாதுகாப்பது தங்களது பொறுப்பெனக் கருதினர். இப்பொழுது அவர்களது உணர்வில் ஊறிக் கிடந்த கொள்கைகளைத் தகர்க்கும் முயற்சியை திடீரென செய்தால் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, அழைப்புப் பணியை இரகசியமாகத் தொடங்குவதுதான் விவேகமான செயலாக இருந்தது.

இறை அழைப்புப் பணிக்காக அபூபக்ர் (ரழி) அவர்கள் ஆயத்தமானார்கள். அவர்கள் அனைவரின் நேசத்திற்குரியவராக, மென்மையானவராக, நற்குணமுடையவராக, உபகாரியாக இருந்தார்கள். அவர்களது அறிவு, வணிகத் தொடர்பு, இனிய பேச்சு முதலியவற்றை மக்கள் மிகவும் நேசித்தனர். அவர்களில் தனக்கு மிக நம்பிக்கைக்கு உரியவர்களை முதலில் அழைக்கத் தொடங்கினார்கள். அவர்களது அழைப்பை ஏற்று உஸ்மான் இப்னு அஃப்பான், ஜுபைர் இப்னு அவ்வாம், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஅது இப்னு அபீ வக்காஸ், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகிய எட்டு நபர்கள் இஸ்லாமை முதன்முதலாக ஏற்றுக் கொண்டனர்.

நூல் : ரஹீக் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)

 

சித்தீக் என்ற பெயர் காரணம்

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜெருசலத்தில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு (இரவில்) கொண்டு சொல்லப்பட்ட போது அதிகாலையில் இதைப் பற்றி மக்கள் (ஆச்சரியமாகப்) பேசிக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களை நம்பி உண்மைப்படுத்திய சிலர் (கொள்கையை விட்டும்) தடம் புரண்டார்கள். சில இணைவைப்பாளர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று இன்று இரவு பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக உமது தோழர் (முஹம்மது) கூறிக் கொண்டிருக்கிறாரே அதைப் பற்றி நீர் என்ன நினைகிறீர்? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் இவ்வாறு அவர் (முஹம்மத்) கூறினாரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ஆம் என்றவுடன் முஹம்மத் இதை சொல்லியிருந்தால் திட்டமாக அவர் உண்மை தான் சொன்னார் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இன்று இரவு பைத்துல் முகத்தஸிற்குச் சென்று பகல் வருவதற்கு முன்பே அவர் திரும்பினார் என்பதையா உண்மை என்று நீர் நினைக்கிறீர்? என்று இணை வைப்பாளர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் இதை விட பாரதூரமான விஷயங்களில் எல்லாம் அவரை உண்மையாளர் என்று நான் கருதிக் கொண்டிருக்கிறேன். வானத்திலிருந்து காலையிலும் மாலையிலும் (இறைச்) செய்தி (வருவதாக முஹம்மத் கூறுவதையும்) உண்மை என்று நான் நம்புகிறேன் என்று கூறினார். எனவே தான் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அஸ்ஸித்தீக் (அதிகம் உண்மைப்படுத்துபவர்) என்ற பெயர் இடப்பட்டது.

நூல் : ஹாகிம் பாகம் : 10 பக்கம் : 250

முஸ்லீம்கள் தாக்கப்படுதல்
எப்பொழுது இஸ்லாத்தை அபுபக்கர் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்களோ, அப்போதிருந்தே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக தனது உடல், பொருள், ஆவி, திறமைகள், அனைத்தையும் வழங்கினார்கள்

நபி (ஸல்) அவர்களின் பகிரங்க அழைப்பைத் தொடர்ந்து பல மாதங்கள் எதிரிகள் மேற்கொண்ட தடுப்பு முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவியது. மக்கா காபிர்கள் கையாண்ட வழிமுறைகளால் எவ்வித பயனுமில்லை என்பதை புரிந்து கொண்ட பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையாக மாற்று வழியைக் கையாண்டனர். அதாவது, ஒவ்வொரு சமூகத்தலைவரும் எஜமானரும் தன்னுடைய ஆளுமையின் கீழுள்ளவர்கள், அடிமைகள்- இவர்களில் யாராவது இஸ்லாத்தை தழுவினால் அவர்களைத் துன்புறுத்த வேண்டும். அவர்களுக்கு இன்னல்கள் விளைவிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

தலைவர்களுடன் அவர்களது எடுபிடிகளும் சேர்ந்துகொண்டு முஸ்லிம்களை வாட்டி வதைத்தனர். குறிப்பாக, சாதாரண எளிய முஸ்லிம்களுக்கு அவர்கள் தந்த நோவினைகளைக் கேட்கும்போதே உள்ளம் கசிந்துருகும். அவற்றை சொல்லி மாளாது.

செல்வமும் செல்வாக்குமுள்ள ஒருவர் இஸ்லாமைத் தழுவினால் அவரிடம் அபூஜஹ்ல் நேரே சென்று “உன் செல்வத்தையும் செல்வாக்கையும் ஒன்றுமில்லாமலாக்கி விடுவேன்” என்று மிரட்டுவான். அவர் கொஞ்சம் பலமில்லாதவராக இருந்தால் அடித்துத் துன்புறுத்துவான். (இப்னு ஹிஷாம்)

உஸ்மான் (ரழி) அவர்களது தந்தையின் சகோதரர் அப்பாவி முஸ்லிம்களை பேரீத்தங்கீற்றுப் பாயில் சுருட்டி வைத்து அதற்குக் கீழே புகை மூட்டி மூச்சு திணறடிப்பர். (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)

தனது மகன் முஸ்லிமாகி விட்டதை அறிந்த முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களின் தாயார் அவருக்கு உணவு, தண்ணீர் கொடுக்காமல் வீட்டிலிருந்து விரட்டிவிட்டார். மிக ஆடம்பரமாக வாழ்ந்து வந்த அவர் பெரும் துன்பத்தை அனுபவித்தார். பசி, பட்டினி என்ற வறண்ட வாழ்க்கையினால் அவர்களது மேனியின் தோல் சுருங்க ஆரம்பித்தது. (அஸதுல் காபா)

ஸுஹைப் இப்னு ஸினான் (ரழி) நினைவிழக்கும் வரை கடுமையாக தாக்கப்படுவார். (அஸதுல் காபா)

பிலால் (ரலி) விடுதலை
பிலால் (ரழி) அவர்கள் உமய்யா இப்னு கலஃபுடைய அடிமையாக இருந்தார்கள். உமையா அவர்களது கழுத்தில் கயிற்றைக் கட்டி சிறுவர்களிடம் கொடுப்பான். சிறுவர்கள் அவரை மக்காவின் கரடு முரடான மலைப் பாதைகளில் இழுத்துச் செல்வார்கள். கயிற்றின் அடையாளம் அவர்களது கழுத்தில் பதிந்துவிடும். அவர்கள் “அஹத்! அஹத்!“” என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில வேளைகளில் உமையா பிலாலை மிக இறுக்கமாகக் கட்டி தடியால் கடுமையாகத் தாக்குவான். பிறகு சூரிய வெப்பத்திலும் போடுவான். உணவளிக்காமல் பசியால் துடிக்க வைப்பான். சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் பாலைவன மணலில் கிடத்தி அவர்களது நெஞ்சின்மீது பாறாங்கல்லைத் தூக்கி வைப்பான். அப்போது பிலாலை நோக்கி, “அல்லாஹ்வின் மீதாணையாக! நீ சாக வேண்டும். அல்லது முஹம்மதின் மார்க்கத்தை நிராகரித்து லாத், உஜ்ஜாவை வணங்க வேண்டும். அதுவரை நீ இப்படியேதான் இருப்பாய். உன்னை விடவே மாட்டேன்” என்பான். அதற்கு பிலால் (ரழி) அஹத்! அஹத்! என்று சொல்லிக் கொண்டே, “இந்த “அஹத்’ என்ற வார்த்தையைவிட உனக்கு ஆவேசத்தை உண்டு பண்ணும் வேறொரு வார்த்தை எனக்குத் தெரிந்தால் நான் அதையே கூறுவேன்” என்பார்கள்.

ஒரு நாள் பிலால் (ரழி) சித்திரவதைக்குள்ளாகி இருக்கும்போது அவர்களைக் கடந்து சென்ற அபூபக்ர் (ரழி) அவர்கள் ஒரு ஹபஷி அடிமையை கிரயமாகக் கொடுத்து பிலால் (ரழி) அவர்களை வாங்கி உரிமை விட்டார்கள். சிலர் “ஐந்து அல்லது ஏழு ஊகியா வெள்ளிக்குப் பகரமாக வாங்கி உரிமை விட்டார்கள்” என்று கூறுகின்றனர். (இப்னு ஹிஷாம்)

நூல் : ரஹீக் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)

நூல் : புகாரி (3754)

அஃப்லஹ் (ரலி) விடுதலை
அஃப்லஹ் அபூ ஃபுகைஹா (ரழி) அவர்கள் அப்து தார் கிளையைச் சார்ந்த ஒருவருடைய அடிமையாக இருந்தார். இவரது இரு கால்களையும் சங்கிலியால் பிணைத்து, ஆடைகளைக் கழற்றிவிட்டு சுடுமணலில் குப்புறக் கிடத்தி அசையாமலிருக்க பெரும் பாறையை முதுகின் மீது வைத்து, சுய நினைவை இழக்கும்வரை அவரை அதே நிலையில் விட்டுவிடுவார்கள். இவ்வாறான கொடுமைகள் தொடர்ந்தன. ஒருமுறை அவரது கால்களைக் கயிற்றால் பிணைத்துச் சுடுமணலில் கிடத்தி கழுத்தை நெறித்தார்கள். அவர் சுயநினைவை இழந்தவுடன் இறந்துவிட்டாரென எண்ணி விட்டுவிட்டார்கள். அப்போது அவ்வழியாக வந்த அபூபக்ர் (ரழி) அஃப்லஹை விலைக்கு வாங்கி உரிமையிட்டார்கள். (அஸதுல் காபா)

நூல் : ரஹீக் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)

கப்பாப் இப்னு அரத் (ரழி) அவர்கள் உம்மு அன்மார் என்ற பெண்ணின் அடிமையாகவும், கொல்லர் பணி செய்பவராகவும் இருந்தார்கள். அவர் இஸ்லாமைத் தழுவியதை அறிந்த எஜமானி பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பால் அவர்களது தலையிலும் முதுகிலும் சூடிட்டு “முஹம்மதின் மார்க்கத்தை விட்டுவிடு” என்று கூறுவாள். ஆனால் இவ்வாறான வேதனைகளால் அவர்களது ஈமானும்” மன உறுதியுமே அதிகரித்தது. உம்மு அன்மார் மட்டுமின்றி ஏனைய நிராகரிப்பவர்களும் அவரது முடியைப் பிடித்திழுப்பார்கள்; கழுத்தை நெறிப்பார்கள். நெருப்புக் கங்குகளின் மீது அவரைப் படுக்க வைப்பார்கள். அந்த நெருப்பு அவரது உடலைப் பொசுக்க, அப்போது இடுப்பிலிருந்து கொழுப்பு உருகி ஓடி, நெருப்பை அணைத்து விடும்.(அஸதுல் காபா)

ரோம் நாட்டைச் சேர்ந்த அடிமையான ஜின்னீரா (ரழி) என்ற பெண்மணி இஸ்லாமை ஏற்றதற்காக பலவிதமான கொடுமைக்கு ஆளானார். அப்போது கண்ணில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக பார்வையை இழந்தார். “இவரது கண்ணை லாத், உஜ்ஜா என்ற தெய்வ சிலை தான் பறித்துவிட்டன” என்று நிராகரிப்பவர்கள் கூறினர். அதற்கு ஜின்னீரா, “நிச்சயமாக இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பட்டது. அவன் நாடினால் எனக்கு நிவாரணமளிப்பான்” என்று கூறினார். மறுநாள் அவர்களது பார்வையை அல்லாஹ் சரி செய்தான். அதைக் கண்ட குறைஷியர்கள் “இது முஹம்மதின் சூனியத்தில் ஒன்று” எனக் கூறினர். (இப்னு ஹிஷாம்)

உம்மு உபைஸ் (ரழி) என்ற பெண்மணி அஸ்வத் இப்னு அப்து யகூஸ் என்பவனின் அடிமையாக இருந்தார். இவன் நபி (ஸல்) அவர்களின் கொடும் விரோதியாகவும் நபியவர்களை பரிகசிப்பவனாகவும் இருந்தான். அவன் உம்மு உபைஸை கொடூரமாக வேதனை செய்தான். (இஸாபா)

அம்ர் இப்னு அதீ என்பவனின் அடிமைப் பெண்ணும் இஸ்லாமை ஏற்றார். அவரை (அப்போது இஸ்லாமை ஏற்காதிருந்த) உமர் (ரழி), தான் களைப்படையும் வரை சாட்டையால் அடித்துவிட்டு “நீ மரணிக்கும்வரை உன்னை நான் விடமாட்டேன்” என்று கூறுவார். அதற்கு அப்பெண்மணி “அப்படியே உமது இறைவனும் உம்மைத் தண்டிப்பான்” என்று கூறுவார். (இப்னு ஹிஷாம்)

இஸ்லாமை ஏற்றதற்காக கொடுமை செய்யப்பட்ட அடிமைப்பெண்களில் நஹ்திய்யா (ரழி) என்பவரும் அவரது மகளும் அடங்குவர். இவ்விருவரும் அப்துத்தான் கிளையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் அடிமையாக இருந்தனர். (இப்னு ஹிஷாம்)

இஸ்லாமை ஏற்றதற்காகக் கொடுமை செய்யப்பட்ட ஆண் அடிமைகளில் ஆமிர் இப்னு புஹைரா (ரழி) என்பவரும் ஒருவர். நினைவிழந்து சித்தப் பிரமை பிடிக்குமளவு அவரை கொடுமைப்படுத்தினார்கள். (இப்னு ஹிஷாம்)

இம்மூவரையும் அபூபக்ர் (ரழி) விலைக்கு வாங்கி உரிமையிட்டார்கள். இதைக் கண்ட அவர்களது தந்தையான அபூ குஹாஃபா “நீ பலவீனமான அடிமைகளை விலைக்கு வாங்கி உரிமை விடுகிறாய். திடகாத்திரமான ஆண் அடிமைகளை வாங்கி உரிமையளித்தால் அவர்கள் உனக்கு பக்கபலமாக இருப்பார்களே!” என்றார்.

அதைக் கேட்ட அபூபக்ர் (ரழி) அவர்கள் “நான் அல்லாஹ்வின் திருப்தியை நாடியே செய்கிறேன்” என்றார்கள்.

எனவே தான் அபூபக்கர் சித்திக் ரலி அவர்களை அல்லாஹ் புகழ்ந்து கூறும் வகையிலும் இஸ்லாத்தின் எதிரிகளை இகழ்ந்தும் சில திருக்குர்ஆன் வசனங்களை இறக்கினான்.

நூல் : ரஹீக் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)

துர்பாக்கியசாலிகள்

فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰى‌‏
(மக்காவாசிகளே!) கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன்.
(அல்குர்ஆன் : 92:14)

لَا يَصْلٰٮهَاۤ اِلَّا الْاَشْقَىۙ‏
மிக்க துர்பாக்கியம் உடையவனைத் தவிர, (மற்றெவனும்) அதற்குள் செல்லமாட்டான்.
(அல்குர்ஆன் : 92:15)

الَّذِىْ كَذَّبَ وَتَوَلّٰى‏
அவன் (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான்.
(அல்குர்ஆன் : 92:16)

இவ்வசனத்தில் துர்பாக்கியமுடையவன் என்ற வார்த்தையை கொண்டு மக்கா கொடுங்கோல் காபிர்களான உமைய்யாவையும் அவனுடைய வழியில் முஸ்லிம்களை கொடுமைப் படுத்தியவர்களையும் கண்டித்து எச்சரிக்கை செய்கின்றான்.

கரீனைன் – இணைந்த இருவர்”
தொடர்ந்து அடுத்த வசனத்தில் அல்லாஹுத்தஆலா ஹஜ்ரத் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை புகழ்ந்து குறிப்பிடுவான்.

وَسَيُجَنَّبُهَا الْاَتْقَىۙ‏
இறை அச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார்.
(அல்குர்ஆன் : 92:17)

الَّذِىْ يُؤْتِىْ مَالَهٗ يَتَزَكّٰى‌‏
(அவர் பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன்னுடைய பொருளை(த் தானமாக)க் கொடுப்பார்.
(அல்குர்ஆன் : 92:18)

وَمَا لِاَحَدٍ عِنْدَهٗ مِنْ نِّعْمَةٍ تُجْزٰٓىۙ‏
அவர் பதில் செய்யக்கூடியவாறு எவருடைய நன்றியும் அவர் மீது இல்லாதிருந்தும்,
(அல்குர்ஆன் : 92:19)

اِلَّا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰى‌‏
மிக்க மேலான தன் இறைவனின் திருப்பொருத்தத்தை விரும்பியே (தானம் கொடுப்பார்).
(அல்குர்ஆன் : 92:20)

وَلَسَوْفَ يَرْضٰى‏
(இறைவன் அவருக்கு அளிக்கும் கொடையைப் பற்றிப்) பின்னர் அவரும் திருப்தியடைவார்.
(அல்குர்ஆன் : 92:21)

இவ்வசனத்தில் இறையச்சமுள்ளவர் என்ற வார்த்தையை கொண்டு அபூபக்ர் (ரழி) அவர்களை அல்லாஹ் புகழ்ந்து குறிப்பிடுகின்றான். (இப்னு ஹிஷாம்)

அபூபக்கர் (ரலி) அவர்களும் துன்புறுத்தப்பட்டார்கள்
அபூபக்ர் (ரழி) அவர்களும் துன்புறுத்தப்பட்டார்கள். நவ்ஃபல் இப்னு குவைலித் என்பவன் அபூபக்ர் (ரழி), தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) இருவரையும் தொழக்கூடாது என்பதற்காக ஒரே கயிற்றில் இருவரையும் பிணைத்துவிட்டான். ஆனால், சில நிமிடங்களிலேயே தானாகவே கட்டவிழ்ந்து அவ்விருவரும் தொழுவதைக் பார்த்த நவ்ஃபல் அஞ்சி நடுங்கினான். இருவரும் ஒரே கயிற்றில் பிணைக்கப் பட்டதால் அவர்களை “கரீனைன் – இணைந்த இருவர்” என்று கூறப்படுகிறது. சிலர் இருவரையும் கட்டியது நவ்ஃபல் அல்ல, தல்ஹாவின் சகோதரன் உஸ்மான் இப்னு உபைதுல்லாஹ்தான் என்று கூறுகின்றனர்.

(மேற்கூறிய சம்பவங்கள் மக்கா முஸ்லிம்கள் பட்ட இன்னல்களுக்கு எடுத்துக் காட்டாகும்.) இஸ்லாமைத் தழுவிய எவரையும் அவர்கள் துன்புறுத்தாமல் விட்டதில்லை. எளிய முஸ்லிம்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்காகப் பழிவாங்கவும் எவருமில்லை என்பதால் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பது நிராகரிப்பவர்களுக்கு மிக எளிதாக இருந்தது. அடிமைகளாக இருந்தவர்களை அவர்களது எஜமானர்களும் அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் கொடுமைப் படுத்தினர். இஸ்லாமைத் தழுவியவர் செல்வமும் செல்வாக்கும் உடையவராக இருந்தால், அவர்களுக்கு அவர்களது கூட்டத்தார் பாதுகாவலாக இருந்தனர். சில வேளைகளில் குரோதத்தின் காரணமாக அவர்களது கூட்டத்தினரே அவர்களை கொடுமை செய்தனர்.

குறைஷிகளும் நபியவர்களும்…

நபி (ஸல்) அவர்கள் கம்பீரமாகவும் தனித்தன்மையுடனும் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களை காண்பவர் நண்பரானாலும் விரோதியானாலும் அவரது மனதில் நபி (ஸல்) அவர்கள் பற்றிய உயர்வான எண்ணமும் மதிப்பும் மரியாதையும் தோன்றுவதைத் தவிர்க்க இயலாது. இழி மக்களே நபி (ஸல்) அவர்களிடம் அற்பமாக நடந்துகொள்ளத் துணிவர். மேலும், குறைஷியரின் மிக மதிக்கத்தக்க தலைவராக கருதப்பட்ட அபூதாலிபின் பாதுகாப்பிலிருந்த நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்துவது குறைஷியர்களுக்கு சிரமமாக இருந்தது. இந்நிலை குறைஷியர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தங்களுக்கு எவ்விதத் துன்பமும் ஏற்படாமல் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்பினர். நபி (ஸல்) அவர்களின் காப்பாளரான அபூதாலிபிடம் நுட்பமான முறையிலும் அச்சுறுத்தும் தொனியிலும் பேச்சுவார்த்தை நடத்தி அவரை தங்களது கோரிக்கை களுக்கு இணங்க வைக்க முடிவெடுத்தனர்.

நூல் : ரஹீக் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)

நபியவர்கள் பிரச்சாரம்

عَنِ ابْنِ عَبَّاسٍؓقَالَ: لَمَّا أَنْزَلَ اللهُ تَعَالَي: (وَأَنْذِرْ عَشِيرَتَكَ اْلاَقْرَبِينَ۞) قَالَ: أَتَي النَّبِيُّ ﷺ الصَّفَا فَصَعِدَ عَلَيْهِ، ثُمَّ نَادَي: يَا صَبَاحَاهُ، فَاجْتَمَعَ النَّاسُ إِلَيْهِ بَيْنَ رَجُلٍ يَجِيءُ إِلَيْهِ وَبَيْنَ رَجُلٍ يَبْعَثُ رَسُولَهُ، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ، يَا بَنِي فِهْرٍ، يَا بَنِي يَابَنِي، أَرَأَيْتُمْ لَوْ أَخْبَرْتُكُمْ أَنَّ خَيْلاً بِسَفْحِ هذَا الْجَبَلِ تُرِيدُ أَنْ تُغِيرَ عَلَيْكُمْ صَدَّقْتُمُونِي؟ قَالُوا: نَعَمْ! قَالَ: فَإِنّيْ نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ! فَقَالَ أَبُو لَهَبٍ – لَعَنَهُ اللهُ – تَبّاً لَكَ سَائِرَ الْيَوْمِ! أَمَا دَعَوْتَنَا إِلِاَّ لِهذَا؟ فَأَنْزَلَ اللهُ : تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَّتَبَّ۞).

اخرجه الامام احمد، البداية والنهاية:٣ /٨٨

ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், (وَأَنْذِرْ عَشِيرَتَكَ اْلاَقْرَبِينَ) (நபியே) நீங்கள் தமது நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்” என்ற வசனத்தை அல்லாஹுதஆலா இறக்கிவைத்ததும், நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலையின் மேல் ஏறி உரத்த குரலில், யாஸபாஹாஹ்” மக்களே! அதிகாலையில் எதிரிப் படைகள் நம்மைத் தாக்க இருக்கின்றன. எனவே, இங்கு ஒன்று கூடுங்கள்” என்று அழைத்ததும், மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒன்று சேர்ந்துவிட்டனர், சிலர் தாமே வந்தனர், சிலர் தம் தூதுவரை அனுப்பி வைத்தனர். அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள், அப்துல் முத்தலிபுடைய சந்ததியினரே! ஃபிஹ்ருடைய சந்ததியினரே! கஅபுடைய சந்ததியினரே! இந்த மலைக்குப் பின்னால் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் நடத்த இருக்கின்றது என்று நான் உங்களுக்குச் சொன்னால் என் சொல்லை நீங்கள் நம்புவீர்களா?” என வினவினார்கள், அவர்கள் அனைவரும், ஆம்” என்றனர். கடும் வேதனை வரும் முன் நான் உங்களுக்கு அவ்வேதனையைப் பற்றி எச்சரிக்கிறேன்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (நஊதுபில்லாஹ்) நீர் நிரந்தரமாக நாசமடைந்து போவீர்! எங்களை இதற்காகவா அழைத்தீர்?” என்று சபிக்கப்பட்ட அபூலஹப் கூறினான். அச்சமயம் அல்லாஹுதஆலா (تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَّتَبَّ) அபூலஹபின் இரு கைகளும் முறிந்து போகட்டும். நாசமடைந்து போகட்டும்” என்ற சூராவை அல்லாஹுதஆலா இறக்கிவைத்தான்.

நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது மகனாரான அப்துல்லாஹ் சிறு வயதில் மரணமடைந்த போது அபூலஹப் மட்டில்லா மகிழ்ச்சியுடன் தனது தோழர்களிடம் “முஹம்மது சந்ததியற்றவராகி விட்டார்” என்ற சுபச் செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறினான். (தஃப்ஸீர் இப்னு கஸீர்)

ஹஜ்ஜுடைய காலங்களிலும் கடைத்தெருக்களிலும் அபூலஹப் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் சுற்றி வந்து அவர்களைப் “பொய்யர்” என்று கூறுவான். அது மட்டுமல்லாமல் ரத்தம் கொட்டும்வரை அவர்களது பிடரியில் பொடிக்கற்களால் அடித்துக்கொண்டே இருப்பான். (கன்ஜுல் உம்மால்)

அபூ லஹபின் மனைவியும் அபூ ஸுஃப்யானின் சகோதரியுமான உம்மு ஜமீல் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினை கொடுப்பதில் தனது கணவனைவிட குறைந்தவளும் அல்ல! சளைத்தவளும் அல்ல! முட்களை நபி (ஸல்) செல்லும் பாதையிலும் அவர்களது வீட்டின் வாசலிலும் வைத்து விடுவாள். மிகக் கெட்டவளான இவள் எந்நேரமும் நபி (ஸல்) அவர்களை ஏசிப் பேசிக்கொண்டிருந்தாள். பல பொய்களைப் பரப்பிக் கொண்டே இருப்பாள். நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகக் குழப்பம் விளைவித்துக் கொண்டும், பிரச்சினையின் நெருப்பை மூட்டிவிட்டுக் கொண்டும் இருப்பாள். இதனால்தான் அல்குர்ஆன் அவளை “ஹம்மாலதல் ஹத்தப்” விறகை சுமப்பவள் என்று வர்ணிக்கிறது.

தன்னைப் பற்றியும் தனது கணவனைப் பற்றியும் குர்ஆனின் வசனம் இறங்கியதை அறிந்து அவள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது நபி (ஸல்) அவர்களும் அபூபக்ரும் (ரழி) கஅபத்துல்லாஹ்விற்கு அருகில் உட்கார்ந்திருந்தார்கள். அவளது கையில் குழவிக் கல் இருந்தது. இருவருக்கும் அருகில் அவள் வந்தவுடன் அவளது பார்வையை நபி (ஸல்) அவர்களைப் பார்க்க முடியாமல் அல்லாஹ் பறித்து விட்டான்.

அபூபக்ரைப் பார்க்க முடிந்த அவளால் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க முடியவில்லை. “அபூபக்ரே உமது தோழர் எங்கே? அவர் என்னை கவிதைகளில் ஏசுகிறார் என்று எனக்கு தெரிய வந்துள்ளது. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரை நான் பார்த்தால் இக்குழவிக் கல்லால் அவரது வாயிலேயே அடிப்பேன். அறிந்து கொள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கும் நன்றாகக் கவி பாடத்தெரியும்” என்று கூறிய பின் அடுத்து வரும் கவிதையைப் படித்தாள்.

“இழிவுக்குரியவரைத்தான் நாங்கள் ஏற்க மறுத்தோம்; அவரது கட்டளையை புறக்கணித்தோம்; அவருடைய மார்க்கத்தையும் வெறுத்தோம்.”

பிறகு அவள் திரும்பிச் சென்றுவிட்டாள். அப்போது அபூபக்ர் (ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அவள் உங்களைப் பார்த்ததை நீங்கள் பார்க்கவில்லையா?” என வினவ “அவள் என்னைப் பார்க்கவில்லை. அல்லாஹ் என்னை பார்க்க முடியாமல் அவளது பார்வையை மறைத்து விட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

இச்சம்பவம் பற்றி “முஸ்னத் பஜ்ஜார்’ எனும் நூலின் அறிவிப்பில் வருவதாவது: அவள் அபூபக்ரிடம் வந்து “அபூபக்ரே! உங்கள் தோழர் என்னை கவிதையில் திட்டுகிறார்” என்றாள். அதற்கு அபூபக்ர் (ரழி) “இந்த வீட்டின் இறைவனின் மீது சத்தியமாக! அவருக்கு கவிதை பாடத் தெரியாது” என்று கூறினார்கள். “ஆம்! நீங்கள் சரியாகத்தான் கூறினீர்கள்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

நூல் : ரஹீக் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)

 

நபியவர்களை மீட்டிய அபூபக்கர் (ரலி) அவர்கள்

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரழி) கூறுவதாவது:

குறைஷிகள் ஹஜருல் அஸ்வதிற்கு அருகில் குழுமியிருந்தனர். நானும் அங்கு இருந்தேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றி, “இவர் விஷயத்தில் நாம் பொறுமை காத்ததுபோன்று வேறு எதற்கும் நாம் பொறுமை காத்ததில்லை. இவர் விஷயத்தில் நாம் எல்லைமீறி சகித்து விட்டோம்” என்று பேசிக் கொண்டிருந்தனர். இந்நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் அவ்விடத்திற்கு வருகை தந்து ஹஜருல் அஸ்வதைத் தொட்டுவிட்டு தவாஃபை” தொடங்கினார்கள். கஅபாவைச் சுற்றி வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் குறைஷிகளுக்கு அருகில் நடந்தபோது குறைஷிகள் நபி (ஸல்) அவர்களை குத்தலாகப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள் முகத்தில் அதன் மாற்றத்தை நான் பார்த்தேன். இரண்டாவது முறையாக அவர்களுக்கு அருகில் வந்தபோது மீண்டும் அவ்வாறே குத்தலாகப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள் நின்றுவிட்டார்கள். “குறைஷிகளே! நான் சொல்வதை நீங்கள் (கொஞ்சம்) கேட்டுக் கொள்கிறீர்களா? எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! திட்டவட்டமாக நான் உங்களிடத்தில் உங்களைப் பலியிட்டு விடும் முடிவைக் கொண்டு வந்துள்ளேன். (அதிவிரைவில் உங்களது கதை முடிந்து விடும்)” என்று கூறினார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் திடுக்கிட்டனர். தங்களுக்கு மிகப்பெரியஆபத்தொன்று நிச்சயம் நிகழும் என்பதை உணர்ந்தனர். இதனால் நபி (ஸல்) அவர்களிடத்தில் கொடூரமாக நடந்தவர் கூட நபி (ஸல்) அவர்களை மிக அழகிய முறையில் சாந்தப்படுத்தினார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அறிவீனர் அல்லர்! அபுல் காசிமே நீங்கள் திரும்பிச் சென்றுவிடுங்கள்” என்று கூறி, சாமாதானப்படுத்தினர்.

மறுநாளும் அவ்வாறே ஒன்று சேர்ந்து நபி (ஸல்) அவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் அங்கு நபி (ஸல்) அவர்கள் தோன்றினார்கள். அவர்கள் அனைவரும் ஒரே பாய்ச்சலாக நபி (ஸல்) அவர்கள் மீது பாய்ந்தனர். அவர்களில் ஒருவன் நபி (ஸல்) அவர்களின் போர்வையை பிடித்து இழுத்தான். அவனிடமிருந்து நபி (ஸல்) அவர்களைக் காப்பாற்றிய அபூபக்ர் (ரழி) “தனது இறைவன் அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறியதற்காகவா ஒருவரை கொலை செய்கிறீர்கள்?” என்று கண்ணீர் மல்கக் கேட்டார்கள். பிறகு அனைவரையும் அங்கிருந்து விலக்கி விட்டார்கள். இதுதான் நான் பார்த்ததில் குறைஷிகள் நபி (ஸல்) அவர்களைத் தாக்கிய மிகக் கொடூரமான நிகழ்ச்சி என்று இந்த நிகழ்ச்சியை அறிவிக்கும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) கூறுகிறார்கள்.

நூல் : ரஹீக் (முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு)