ஜனவரி 19ஆம் தேதி இரவில் பேருந்துக் கட்டண உயர்வை அறிவித்தது தமிழக அரசு. அடுத்த நான்கைந்து மணி நேரத்தில் அனைத்துப் பேருந்துகளிலும் கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது.
அவ்வளவு அவசரம் ஏன்? குறிப்பிட்ட கால இடைவெளியில்தான் கட்டண உயர்வு அமல் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் உடனடியாகக் கட்டண உயர்வு அமலாக்கம் என்பது ஒருவகையான உளவியல் தாக்குதலாகும்.
கட்டண உயர்வுக்கான தேதியைச் சற்றுப் பொறுமையாகக் குறித்திருந்தால் மக்களின் ஆவேசத்துக்கும் கட்சிகளின் போராட்டத்துக்கும் இடமளித்தது போலாகிவிடும் என்று அரசு அஞ்சியிருக்கிறது. அதனால்தான் வழிப்பறித் தன்மையைக் கட்டண உயர்வு விவகாரத்தில் அரசு செயல்படுத்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வுக்கு உடனே மக்களை வழிப்படுத்திவிட்டால் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறிவிடும் என்று அரசு கருதியிருக்கின்றது.
மக்களின் போராட்டம் வெடித்துக்கிளம்புவதை அரசு ஒருவகையில் ஊகித்திருக்க முடியும். ஏனெனில் கட்டண உயர்வு சற்று எழும்பி நிற்கும் தன்மையில் இல்லை; அது ஏவுகணை செலுத்தப்படுவதைப் போல செங்குத்தாக உயர்த்தப்பட்டது. குறைந்தபட்ச உயர்வு 55%. அதிக பட்ச உயர்வு 60%. நகரப் பேருந்துகளில்கூட அடாவடித்தனமான உயர்வு ஏற்பட்டது.
கட்டண உயர்வு ரூ. 10 க்குள் இருந்திருந்தால் மக்கள் அதைத் தடங்கலில்லாமல் ஏற்றிருக்கக் கூடும். பழைய பேருந்துக்கட்டணத்தை மனத்திற்கொண்டு அவசர வேலையாக வெளியூர் சென்றவர்கள், அடுத்த சிலமணி நேரங்களில் கட்டணத் தாக்குதலுக்கு ஆட்பட்டார்கள். இதன்விளைவாக அவர்கள் ஊருக்குத் திரும்புவதற்கு இயலாமல் நடுவழியில் சிக்கிக்கொண்டார்கள். கோயில் திருவிழாக்கள், வீட்டு விசேஷ நிகழ்வுகளுக்குக் குடும்பத்தோடு சென்றவர்களின் கதி அதோகதியானது. அவர்கள் திடீரென்று தம் சொந்த மண்ணில் அகதிகளாக்கப்பட்டார்கள்.
இந்தக் கட்டண உயர்வு மேல்மட்ட நடுத்தரக் குடும்பங்களுக்கே பெரும் சோதனையாக விடிந்ததெனில், அதற்குக் கீழ்மட்டத்திலுள்ளோரின் அவலத்தை எண்ணிப்பார்ப்பது சுலபமானது. போக்குவரத்துக் கழகங்களில் கடுமையான இழப்பு ஏற்பட்டிருப்பதாக அரசு சொல்கிறது. இதுமாதிரியான சேவைகளில் லாப-நட்டக் கணக்குகள் பார்ப்பது கூடாது. அரசின் இழப்பை ஈடுகட்ட உத்தரவு பிறப்பிக்கிற அதே அரசும் அமைச்சர்களும் அனைத்து வகைகளிலும் ஊழல் விவகாரங்களில் ஈடுபடுகின்றனர். இவர்களே அரசின் அனைத்துத் துறைகளின் இழப்புக்கும் காரணமானவர்கள். முதல்வர், இதர அமைச்சர்கள் அலுவலகப் பயணங்கள் மேற்கொள்ளும்போது அவற்றிற்கான நியாயமான செலவுகளை மீறி ஆடம்பரமான செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தேவையான உதிரிப் பொருட்கள் வாங்கும்போது அவை தரமற்றவையாகவும் கொள்முதல் செய்யப்படுகின்றன. இவைதாம் வருமானத்தை ஒழுக்கிக்கொண்டு செல்பவை. மாநிலத்தின் சாலைகளைச் சீராகப் பராமரித்தாலே பல கோடி மதிப்புள்ள எரிபொருள்களை மிச்சப்படுத்த முடியும். இத்துறை சார்ந்த வல்லுநர்கள் தொடர்ந்து இதுசம்பந்தமான ஆலோசனைகளைக் கூறிவருகிறார்கள். ஆனால் எவற்றையும் அரசு செவிமடுப்பதில்லை. பொறுப்பின்மையில் உச்சத்தில்இ கிடைத்த பதவியின் அதிகாரத்தைக் கடைசிநாள்வரை செலுத்தித் தம்மைப் பேரசர்களாகக் கருதி ஆளவே விரும்புகிறார்கள். இதனால் மக்களின் அவலங்கள் இவர்களுக்கு ஒருபொருட்டாக இருப்பதில்லை.
இப்போது மக்களின் வாழ்க்கைமுறை வெகுவாக மாறியிருக்கின்றது. ஏனெனில் இன்று தாம் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே பணிபுரியும் நிலை நம்மில் இல்லை. ஒவ்வொருவரும் பலமைல் தூரம் கடந்துசெல்ல வேண்டியிருக்கின்றது. முன்புபோல விவசாய, சிறுதொழில் வேலைவாய்ப்புகள் இல்லை; அவை அருகிவிட்டன. வேலைநிரந்தரமற்றவர்கள் தம் ஊரைக் கடந்துசென்றால்தான் அன்றாடச் சாப்பாட்டிற்கான வருமானத்தைப் பெற முடிகின்றது.
இந்நிலையில் அவர்கள் தம் வருமானத்தின் பெரும்பகுதியைப் பேருந்துக் கட்டணமாகச் செலுத்தினால் அவர்களின் வாழ்க்கையே தடம்புரண்டுவிடும். மாநில அரசுகளோ மத்திய அரசோ ஒவ்வொரு தொழிலுக்குமான குறைந்தபட்சக் கூலியை நிர்ணயம் செய்ய முடிவதில்லை. அவ்வாறு செய்திருந்தால் அது அமலாக்கம் செய்யப்படுவதுமில்லை. சட்டத்தில் ஒரு வாழ்க்கையும் சமூகத்தில் பிறிதொரு வாழ்க்கையுமாக மொத்த இந்தியாவுமே தடுமாறித் தவிக்கிறது.
இந்நிலையில் அரசின் அனைத்துச் செலவுகளையும் குடிமக்கள்தான் தாங்க வேண்டும் என்பது அநீதி. அரசுக்கு வருமானம் வரும் வழிகள் பல உள்ளன. பெரும் தொழிலதிபர்கள், பன்னாட்டு நிறுவனங்களெல்லாம் மொத்த வளத்தையும் மக்களின் குருதியையும் சுரண்டித் தம் நலன்களைக் காத்துக்கொள்கிறார்கள். அவர்களின் அடாவடி நீசச் செயல்களுக்கு எல்லா அரசுகளும் இணங்கிக்கொள்கின்றன. இன்று அவரவர் வருமானத்தை முறையாகக் கணக்கிட்டு அவற்றிற்குரிய வரிசெலுத்துதலையும் கணக்கிட்டால் வாழ வழியற்ற மக்கள்தான் அனைத்து வரிகளையும் முறைப்படிச் செலுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள். பெரும் தொழில்நிறுவனங்கள் ஏழைகளின் அளவுக்கோ மாதாந்திர வருமானத்தைக் கொண்ட அலுவலர்களின் அளவுக்கோ கூட வரிகள் செலுத்துவதில்லை; மாறாக தம் சிறு இழப்புகளுக்கும் அரசை நிர்ப்பந்தித்து நிதியுதவி பெறுகின்றனர். பின்னர் அவை வாராக்கடன்களாகி அழிகின்றன.
நாட்டின் வளர்ச்சிக்காகவும் நிமிர்தலுக்காகவும் காலம்தோறும் ஏழைகளும் அடித்தட்டு மக்களுமே தியாகத் திருவுருக்களாக வாழ முடியாது. இப்போக்கு மாற்றப்பட வேண்டும். அரசு தன் நிதியை மக்களின் நலன்களுக்குச் செலவிட்டால்தான் மக்களின் உழைப்புச் சக்தியும் கல்வித்திறனும் கூடிப் புத்தம் புதிய ஆற்றலாளர்களாக வெளிவருவார்கள். இன்று நாம் முன்னோடி நாடுகளாகக் கருதும் பல நாடுகள் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுகின்றன.
அவ்வாறு செய்ய முடியாத நாடுகள்தான் பொருளாதாரத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் வீழ்ந்துகிடக்கின்றன. இந்தியாவைக் கணக்கிட்டாலே இதர பல மாநிலங்களைவிடவும் தமிழகம் பல அம்சங்களில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதற்கான காரணக்களில் ஒன்று, இங்கு பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டதும் அவற்றில் குறைவான கட்டணம் வசூலிக்கப்படுவதும் ஆகும்.
மாநில அரசு இவ்வுண்மையைப் பார்க்க மறுத்தால் அது மாநிலத்தின் வீழ்ச்சியாகவும் ஆகிவிடக் கூடும். உடனே மக்களின் கோரிக்கைக்குச் செவிமடுத்துஇ அரசு கட்டண உயர்வைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.