தவத்தேன் திருக்குளம்

                                                                           

ண்ணின் வாழிவில் மதிப்பும் மாண்பும்

மார்க்கம் உயர்த்தும் மனவொளி நிமிர்த்தும்

கண்ணின் மணியாய்ப் பொன்னின் தெளிவாய்

கருத்துரு வாக்கும் கரிநிலை போக்கும்

நன்நெறி காட்டும் நாயக வார்த்தை

நன்மை குவிக்கும் நல்லருள் சேர்க்கும்

அண்ணல் நபியாம் ஆண்டவன் தூதாம்

அஹ்மதர் வழிதாம் சொர்க்கம் சேர்க்கும்.

                       ஒன்றாம் இறையை நன்றாய் உணர்ந்தால்

                       உயர்ந்த இடந்தான் உரிமை யாகும்

                       மண்ணாய்க் கல்லாய்ச் சுமைந்திருந் தாலும்

                       மன்னவன் நினைத்தால் மறுவுயிர்ப் பாகும்

                       அன்பால் நிறைந்த அகமே வாய்த்தால்

                       அகிலம் எல்லாம் உறவாய் உயிர்க்கும்

                       பண்பும் அதனுடன் கூடிக் கலந்தால்

                       பயணம் எதிலும் பூக்கள் சொரியும்.

தாழ்நிலை யகற்றும் தனியோன் இறையைத்

தினமும் தொழுதால் தீவினை யகலும்

ஊழ்வினை யறுக்கும் உயர்நெறி காக்கும்

உயரும் உள்ளம் அருட்கனி பறிக்கும்

வாழ்வெனும் வயலில் பசுமை செழிக்கும்

வள்ளல் நபிகள் நேசம் நிலைக்கும்

தாழ்ப்பாள் இல்லா மனமெனும் வீட்டில்

தக்கோன் வரவும் தினமும் நடக்கும்.

                         சுவனம் காட்டும் சுந்தர வேதம்

                         சுகந்த இஸ்லாம் தந்திடும் போதம்

                         சுவனம் காத்து கவின்வழி ஏற்று

                         குலையா திருந்தால் கல்பும் தெளியும்

                         புவனக் கவர்ச்சி புத்தியில் மாயும்

                         பெரியோன் இறையில் மனமது தோயும்

                         தவத்தேன் குளத்தில் மூழ்கிடும் இன்பம்

                         தருவான் தருவான் தருவான் இறைவன்,

 

கவிஞானி, G.S.T. மஹ்பூபு சுப்ஹானி