وَالْفَجْرِ وَلَيَالٍ عَشْرٍ وَالشَّفْعِ وَالْوَتْرِ
விடியற்காலையின் மீது சத்தியமாக! பத்து இரவுகளின் மீது சத்தியமாக! ஒற்றை இரட்டையின் மீதும் சத்தியமாக! திருக்குர்ஆன் 89:1,2,3
துல்ஹஜ் மாதம், இஸ்லாமிய மாதங்களில் இறுதி மாதமாகும்.
இம்மாதத்தின் முதல் பத்து நாட்களில் ஆற்றப்படும் நற்செயல்களுக்கு சிறப்பான பயன்கள் உள்ளன என்று திருக்குர்ஆனும், நபிமொழிகளும் தெளிவாக விவரிக்கின்றன.
அந்த முத்தான பத்து நாட்களில் செய்யப்படும் நற்காரியங்களுக்கு பன்மடங்கு நற்கூலி உண்டு. அதன் கண்ணியம் பேணாமல் தவறிழைத்துவிட்டாலும் கடுமையான தண்டனை உண்டு. எனவே, அந்த நாட்களில் மிகுந்த கவனம் தேவை.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்.
( إِنَّ الْعَشْر عَشْر الْأَضْحَى وَالْوَتْر يَوْم عَرَفَة وَالشَّفْع يَوْم النَّحْر ) (தலைப்பில் காணும் திருவசனத்தில் உள்ள) பத்து (இரவுகள்) என்பது துல்ஹஜ் மாதத்தின் (முதல்) பத்து நாட்களாகும். ஒற்றைப்படை என்பது (துல்ஹஜ் பிறை ஒன்பதாவது) அரபா நாளாகும். இரட்டைப்படை என்பது அறுக்கும் (துல்ஹஜ் பத்தாம்) நாளாகும். அறிவிப்பாளர்:- ஜாபிர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மது, தஃப்சீர் இப்னு கஸீர்
வேதம் வழங்கப்பட்டது
(சினாய் மலைக்கு வந்து ‘தவ்ராத்’ வேதத்தைப் பெற்றுச் செல்வதற்காக) மூசாவுக்கு நாம் முப்பது இரவுகளையை வாக்களித்தோம். பின்னர் பத்தைச் சேர்த்து அவற்றை (நாற்பதாக) நிறைவு செய்தோம்.
திருக்குர்ஆன்:- 7:142
அந்த முப்பது நாட்களும் நபி மூசா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் உண்ணா நோன்பு இருந்தார்கள். அந்தக் கால அளவு நிறைவடைந்ததும் ஒரு மரத்தின் பட்டையால் பல் துலக்கினார்கள். ஆனால், மேற்கொண்டு பத்து நாட்கள் நோன்பு நோற்று நாற்பது நாட்களாக நிறைவு செய்யுமாறு அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிட்டான்.
திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலியல்லாஹ்) அவர்கள் உட்பட பெரும்பான்மையோர் இந்தப் பத்து நாட்கள் துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் தான் அவை என்றும், வாக்களிக்கப்பட்ட முப்பது நாட்கள் துல்கஃதா மாதம் முப்பது நாட்கள் என்றும் கூறியுள்ளார்கள்.
இதன்படி (மூசா -அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு) அல்லாஹ் நிர்ணயித்த கால அளவு துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளன்று (யவ்முந் நஹ்ர்) நிறைவடைந்தது. அன்றைய நாளில் தான் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு அல்லாஹ்வுடன் உரையாடும் பெரும் பாக்கியம் கிடைத்தது.
நூல்:- தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர்
அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவை
அருமை நாயகம் (ஸல்லல்லஹ்) அவர்கள், ( مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الأَيَّامِ الْعَشْرِ ) “இந்த (துல்ஹஜ் மாதம் முதல் பத்து) நாட்களில் செய்யும் நற்செயல்கள் ஏனைய நாட்களில் செய்யும் நற்செயல்களை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவை ஆகும்” என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “நாயகமே! அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதைவிடவுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அண்ணலார், ( وَلاَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ إِلاَّ رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ ) “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது விடவும் தான். ஆயினும், உயிரோடும் பொருளோடும் அறப்போருக்குப் புறப்பட்டுச் சென்று இரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வரா(மல் இரண்டையும் அர்ப்பணித்)த மனிதரைத் தவிர!” என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலியல்லாஹ்) அவர்கள் நூல்:- புகாரீ-969, அபூதாவூத்-2082, திர்மிதீ-688, இப்னுமாஜா-1717
அருமை நாயகம் (ஸல்லல்லாஹ்) அவர்கள் கூறினார்கள். துல்ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களில் நிறைவேற்றப்படும் வழிபாடுகள், மற்ற நாட்களில் நிறைவேற்றப்படும் வழிபாடுகளை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவை ஆகும். அவற்றில் நோற்கப்படும் ஒவ்வொரு நாளின் நோன்பும் ஓராண்டு நோன்புக்கு நிகரானதாகும். அவற்றில் ஒவ்வொரு இரவில் நின்று தொழுவதும் லைலத்துல் கத்ர் இரவில் நின்று தொழுவதற்கு நிகராகும். அறிவிப்பாளர்:- அபூஹூரைரா (ரலியல்லாஹ்) அவர்கள் நூல்:- திர்மிதீ-689
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِن اَیَّامٍ عِندَ اللّٰهِ اَفضَلُ مِن عَشرِ ذِی الحِجَّةِ ) துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களை விட அல்லாஹ்விடம் மிகச் சிறப்பு வாய்ந்த நாட்கள் வேறு எதுவும் இல்லை. அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலியல்லாஹ்) அவர்கள் நூல்:- பஸ்ஸார், முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-381
அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹ்) அவர்கள், “அண்ணல் நபி (ஸல்லல்லாஹ்) அவர்கள் காலத்தில் நாங்கள் (துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப) பத்து நாட்களையும் பத்தாயிரம் நாட்களுக்கு சமமாக கருதி வந்தோம்” என கூறியுள்ளார்கள்.
நூல்:- பைஹகீ
சயீது பின் ஜுபைர் (ரலியல்லாஹ்) அவர்கள் துல்ஹஜ் மாதத்தின் (ஆரம்ப) பத்து நாட்களில் நற்செயல்கள் செய்வதில் தனது சக்திக்கு மீறி மிகக் கடினமாக முயற்சி செய்வார்கள்.
நூல்:- பைஹகீ, முக்தசர் அத்தர்ஙீபு அத்தர்ஹீபு-380
மார்க்கச் சட்ட நிபுணர்கள் இமாம்கள், “அந்த நாட்களில் நோன்பு நோற்பதை முஸ்தஹப்பு எனும் விரும்பத்தக்கவை என்றும் அவ்விரவில் விழித்திருந்து வணக்கம் புரிவதை போற்றத்தக்க காரியம் என்றும் கூறியுள்ளார்கள். நூல்:- நூருல் ஈளாஹ்
அரஃபாவின் அருமை
கண்மணி பெருமானார் (ஸல்லல்லாஹ்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللَّهُ فِيهِ عَبْدًا مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ ) அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் பிறை ஒன்பதாவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலை அளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அறிவிப்பவர்:- ஆயிஷா (ரலியல்லாஹ்) அவர்கள்
நூல்:- முஸ்லிம்-2623, பஸ்ஸார், இப்னுஹிப்பான்
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ்) அவர்கள் கூறினார்கள். ( أفضلُ الأيام يومُ عرفة ) “நாட்களில் சிறந்தது அரஃபா நாளாகும்”. அறிவிப்பாளர்:- தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலியல்லாஹ்) அவர்கள்
நூல்:- இப்னு ஹிப்பான்
அண்ணல் நபி (ஸல்லல்லாஹ்) அவர்கள் கூறினார்கள். ( مَا رُئِيَ الشَّيْطَانُ يَوْمًا هُوَ فِيهِ أَصْغَرُ وَلَا أَدْحَرُ وَلَا أَحْقَرُ وَلَا أَغْيَظُ مِنْهُ فِي يَوْمِ عَرَفَةَ؛ وَمَا ذَاكَ إِلَّا لِمَا رَأَى مِنْ تَنَزُّلِ الرَّحْمَةِ وَتَجَاوُزِ اللَّهِ عَنْ الذُّنُوبِ الْعِظَامِ إِلَّا مَا أُرِيَ يَوْمَ بَدْرٍ ) அரஃபா நாளில் அல்லாஹ்வின் அருள் இறங்குவதையும் பெரும் பாவங்கள் மன்னிக்கப்படுவதையும் காணும் ஷைத்தான் அதிகம் சிறுமையடைந்தவனாகவும், கேவலமடைந்தவனாகவும், கோபம் கொண்டவனாகவும் காணப்படுவான். இதேநிலை ஷைத்தானுக்கு பத்ருப் போர் அன்று ஏற்பட்டது. நபித்தோழர்கள் ( وَمَا رَأَى يَوْمَ بَدْرٍ يَا رَسُولَ اللَّهِ؟ ) “நாயகமே! ஷைத்தான் பத்ருப் போர் அன்று என்ன கண்டான்?” என்று வினவினர். அண்ணலார், ( أَمَا إِنَّهُ قَدْ رَأَى جِبْرِيلَ يَزَعُ الْمَلَائِكَةَ ) “வானவர் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் (அன்று) வானவர்களின் படையை அணிவகுத்து அழைத்து வந்ததை கண்டான்” என்றார்கள். அறிவிப்பாளர்:- தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலியல்லாஹ்) அவர்கள்
நூல்:- முஅத்தா மாலிக், பைஹகீ, ஷரஸ்ஸுன்னாஹ்
ஷைத்தானுக்கு, பத்ரு போரில் முஸ்லிம்கள் பெற்ற மாபெரும் வெற்றியைப் பார்த்து பொறுக்கமுடியவில்லை. அதன் பிறகு, அவனால் பொறுக்கமுடியாத அளவுக்கு அவனை மிகவும் வெருப்படையச் செய்யும் நாள் அருள்மழை பொழியும் அரஃபா நாள் தான் என்கிறது இந்த நபிமொழி.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலியல்லாஹ்) அவர்கள் கூறியதாவது. அரஃபா நாளன்று (வாலிபர்) ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ்) அவர்களுக்கு பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அந்த வாலிபர் பெண்களைக் கவனிக்கவும், பார்க்கவும் ஆரம்பித்தார். இதைக்கண்ட அண்ணலார், “என் சகோதரரின் மகனே! நிச்சயமாக இந்த நாள் (எத்தகையதென்றால்) யார் இந்த நாளில் நம் செவியையும், பார்வைகளையும், நாவையும் கட்டுப்படுத்திக் கொள்கிறாரோ அவருக்கு பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள்.
நூல்:- முஸ்னது அஹ்மது, தப்ரானீ , பைஹகீ இப்னுகுஸைமா, முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-383
கண்மணி பெருமானார் (ஸல்லல்லாஹ்) அவர்கள் கூறினார்கள். ( مَن حَفِظَ لِسَانَهُ وَسَمعَهُ وَبَصَرَهُ یَومَ عَرَفَةَ غُفِرَلَهُ مِن عَرَفَةَ اِلَی عَرَفَة ) அரபா நாளில் யார் தன் நாவையும், செவியையும், பார்வைகளையும் (தீய செயல்களை விட்டும்) பாதுகாப்பு பாதுகாத்து கொள்கிறாரோ அவரின் பாவங்கள் அந்த அரபா நாளிலிருந்து அடுத்த ஆண்டு அரபா நாள் வரை (ஓராண்டு வரை) மன்னிக்கப்படும்
நூல்:- பைஹகீ, முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-383
புனித அரஃபா நாளில் அல்லாஹ், ஆதி மனிதர் நபி ஆதம் (அலை) அவர்களின் துஆவை ஏற்று அவர்களை மன்னித்தான். அன்றுதான் அல்லாஹ், நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்லல்லாஹ்) அவர்களுக்கும், அவர்களை பின்பற்றுபவர்களுக்கும் தீனுல் இஸ்லாமை பரிபூரணமாக்கினான்.
உறுதிமொழி பெற்றோம்
(நபியே) உம்முடைய இறைவன் ஆதமுடைய மக்களின் (மனிதர்களின்) முதுகுகளிலிருந்து அவர்களின் வழித் தோன்றல்களை வெளியாக்கி, அவர்கள் மீது அவர்களையே சாட்சிகளாக்கி, “நான் உங்கள் இறைவன் அல்லவா?” என்று கேட்டதை (எண்ணிப் பார்ப்பீராக). அதற்கு அவர்கள், “ஆம்; நாங்கள் சாட்சியமளிக்கிறோம்” என்றனர். இதில் நாங்கள் அலட்சியமாக இருந்துவிட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் சொல்லிவிடக் கூடாது என்பதற்காகவே (இந்த உறுதிமொழியை அவன் பெற்றான்). திருக்குர்ஆன்:- 7:172
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலியல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ் ஆதிமனிதர் நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் முதுகுத் தண்டைத் தடவினான் அதிலிருந்து இறுதிநாள் வரை அவன் படைக்கவிருக்கும் எல்லா உயிர்களையும் வெளியாக்கினான். “அவனையே வழிபட வேண்டும். அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது” என்று அவர்களிடம் உறுதிமொழி பெற்றான். (இதையே இந்த மேற்கண்ட வசனம் எடுத்துரைக்கிறது)
நூல்:- முஸ்னது அஹ்மது, தஃப்சீர் இப்னு கஸீர்
அல்லாஹ்வுக்கும் மனித குலத்திற்கும் நடைபெற்ற இந்த உரையாடல் நடைபெற்றது, அரஃபா பெருவெளியில் என்று திருக்குர்ஆன் விரிவுரையாளர் அல்லாமா இப்னு கஸீர் (ரஹ்மத்துல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
மார்க்கம் முழுமையாக்கப்பட்டது
தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்மத்துல்லாஹ்) அவர்கள் கூறியதாவது. ஒரு யூதர் உமர் (ரலியல்லாஹ்) அவர்களிடம் வந்து, “ஜனாதிபதி அவர்களே! “நீங்கள் உங்கள் வேதத்தில் ஒரு வசனத்தை ஓதிவருகிறீர்கள். அந்த வசனம் மட்டும் எங்களுக்கிடையே அருளைப் பெற்றிருந்தால் (அருளப்பெற்ற) அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்” என்று கூறினர். அதற்கு உமர் (ரலியல்லாஹ்) அவர்கள், அது என்ன வசனம் என்று கேட்டார்கள் உடனே அந்த யூதர், “இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நாம் முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையை உங்கள் மீது நிறைவாக்கி விட்டேன்” (5:3) எனும் வசனம் தான் அது என்றார்.
உடனே உமர் (ரலியல்லாஹ்) அவர்கள், “இந்த வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹ்) அவர்களுக்கு அருளப்பட்டது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு வெள்ளிக்கிழமை மாலை நேரம் (துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள்) ‘அரஃபா’ பெருவெளியில் அண்ணலார் நின்று கொண்டிருக்கும்போதுதான் (இவ்வசனம் அருளப்பட்டது; அந்த நாள் எங்களுக்கு பண்டிகை நாள் தான்)” என்றார்கள்.
நூல்:- புகாரீ-45, முஸ்னது அஹ்மது
பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தோன்றிய இஸ்லாம் எனும் இறை மார்க்கம் எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து முழுமையை அடைந்து விட்டதாக இறைவனே அறிவித்த நாள் அரஃபா உடைய நாள். எனவே அது முஸ்லிம்களுக்கு பெருநாளாக இருக்கும் என்பதில் மறுப்பதற்கில்லை.
ஆம்! ஹஜ் பயணிகளுக்கு துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பதாம் நாள் பெருநாளாகும். எனவே அது இறங்கிய தினத்தை பெருநாளாகக் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. அது இறங்கியதே பெருநாள் தினத்தில் தான். அந்த வசனம் அண்ணல் நபி (ஸல்லல்லாஹ்) அவர்களுக்கு எந்த நாளில்; எந்த இடத்தில்; எந்த நேரத்தில் அருளப்பட்டது என்பதை நாங்கள் அறிவோம். அதைப்பற்றி பிறர் எங்களுக்கு எடுத்துரைக்க தேவையில்லை என்ற இந்தக் கருத்தை உமர் (ரலியல்லாஹ்) அவர்கள் அந்த யூதருக்கு எடுத்துரைத்தார்கள்.
நோன்பின் மாண்பு
அண்ணல் நபி (ஸல்லல்லாஹ்) அவர்கள் கூறினார்கள். ( صِيَامُ يَوْمِ عَرَفَةَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ ) அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாளில் நோற்கப்படும் நோன்பை, அதற்கு முன் ஓராண்டுக்கும் அதற்குப் பின் ஓராண்டுக்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன். அறிவிப்பாளர்:- அபூ கத்தாதா (ரலியல்லாஹ்) அவர்கள் நூல்:- முஸ்லிம்-2151, திர்மிதீ-680
வரக்கூடிய ஆண்டின் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்பதின் விளக்கம் என்னவென்றால் இதற்கு இரண்டு கருத்துக்கள் கூறப்படுகிறது.
- வரக்கூடிய ஆண்டில் அவர் பாவம் செய்ய மாட்டார்.
- வரக்கூடிய ஆண்டில் பாவம் செய்தாலும் அரஃபா நோன்பின் பரக்கத்தால் அல்லாஹ் அவரை மன்னிப்பான்.
அருமை நாயகம் (ஸல்லல்லாஹ்) அவர்கள் கூறினார்கள். ( فَاِن صِیَامَ یَومٍ مَنهَا یَعدِلُ صَیَام سَنَةٍ وَالعَمَلُ فِیهَا یُضَاعَفُ بِسَبعِ مِاءَةِ ضِعفٍ ) நிச்சயமாக அந்த (துல்ஹஜ் பத்து) நாட்களில் நோன்பு வைப்பது ஓர் ஆண்டு நோன்பு வைப்பதற்குச் சமமாக இருக்கும். அந்த நாட்களில் செய்யப்படும் நற்செயல்கள் ஏழு நூறு மடங்காக இரட்டிப்பாக்கப்படும் நூல்:- பைஹகீ, முக்தசர் அத்தர்ஙீபு அத்தர்ஹீபு-380
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ்) அவர்களின் மனைவியர் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ்) அவர்கள் (துல்ஹஜ்) பத்து நாட்கள் (பெருநாள் நீங்கலாக) நோன்பு, ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாள் நோன்பு, ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு, ஆகிய நோன்புகளை கைவிட்டதே இல்லை. நூல்:- அபூதாவூது-2437, நஸாயீ-, முஸ்னது அஹ்மது
அன்னை ஆயிஷா (ரலியல்லாஹ்) அவர்கள் ஒரு நாள் அரஃபா நோன்பு வைத்திருந்தார்கள். அது கடுமையான வெயில் காலம் புழுக்கம் தாங்கமுடியவில்லை. எனவே தலையின் மீது தண்ணீரைத் தெளித்து கொண்டார்கள். மிகவும் சிரமமாக இருந்ததால் நோன்பை விட்டுவிடுங்கள் என்று ஒருவர் ஆலோசனை கூறினார். அரஃபா தினத்தில் நோன்பு நோற்றால் ஆண்டு முழுக்க செய்த சிறு பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடும் என்று அண்ணல் நபி (ஸல்லல்லாஹ்) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன் அப்படியிருக்கும்போது எப்படி நோன்பை முறிக்க முடியும்? என்று கூறி அன்னையவர்கள் மறுத்துவிட்டார்கள்.
நூல்:- முஸ்னது அஹ்மது
அருமை நாயகம் (ஸல்லல்லாஹ்) அவர்கள் சொர்க்கத்தில் முத்து, மாணிக்கம், மரகதம், பவளம் போன்றவைகளால் தயாரிக்கப்பட்ட ஒரு மாளிகை உண்டு” என்று கூறினார்கள். அப்போது ஆயிஷா (ரலியல்லாஹ்) அவர்கள், நாயகமே! அதற்குரியவர் யார்? என்று கேட்டார்கள். அண்ணலார், ” அது அரஃபா நாளில் நோன்பு நோற்றவருக்குரியதாகும். மேலும் அரஃபா நாளில் நோன்பு வைத்தவருக்கு அன்று காலையில் அல்லாஹ் நன்மையின் முப்பது வாசல்களில் திறந்து விடுகிறான். தீமையின் முப்பது வாசல்களை அடைத்துவிடுகிறான்.
நூல்:- நுஸ்ஹத்துல் மஜாலிஸ்
அனஸ் (ரலியல்லாஹ்) அவர்கள் கூறினார்கள். (துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் நோற்கப்படும் ஒவ்வொரு நோன்பும் ஆயிரம் நாட்களின் நோன்பை போன்றதாகும். அஃரபா தினத்தில் நோற்கப்படும் நோன்பு, பத்தாயிரம் நாட்களின் நோன்பை போன்றதாகும்.
நூல்:- பைஹகீ
பேரொளி வீசியது
சுஃப்யான் அஸ்ஸவ்ரி (ரஹ்மத்துல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். துல்ஹஜ் மாதத்தின் ஒரு நாள் இரவில் பசரா நகரத்தில் உள்ள முஸ்லிம்கள் அடங்கப்பட்டிருக்கும் மண்ணறைக்குச் சென்று ஸியாரத் செய்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மண்ணறையில் பேரொளி ஒன்று வீசியது. அதைப் பார்த்த நான் திகைத்து நின்றேன். இந்த ஒரு மண்ணறையில் மட்டும் என்ன விசேஷம் அமைந்திருக்கிறது? இப்படி பேரொளியில் திகழ்கின்றதே என்று எண்ணினேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதை சிந்தனை செய்து கொண்டே நெடு நேரம் அப்படியே நின்று விட்டேன்.
அப்பொழுது பேரொளி ஒன்று என்னை உலுக்கியது. திடுக்கிட்டு சுய நினைவுக்கு வந்தேன். அப்பேரொளியில் இருந்து எழுந்த அசரீரி மிகத் தெளிவாக எனக்கு கேட்டது. சுஃப்யான்! என்ன திகைத்து நின்று விட்டீர்கள்? துல்ஹஜ் மாதம் நோன்பு நோற்றவரின் மண்ணறை இதுவாகும். தாங்களும் இம்மாதத்தில் நோன்பு நோற்று வந்தால் இப்பேற்றினை பெறலாம் என்று சப்தம் வந்தது.
அதிகப்படுத்துங்கள்
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலியல்லாஹ்) அவர்கள் கூறினார்கள். “குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவார்கள்” (22:28) எனும் இறை வசனத்தில் இடம்பெற்றுள்ள ‘குறிப்பிட்ட நாட்கள்’ என்பது, (துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்களைக் குறிக்கும். நூல் புகாரீ-969
அருமை நாயகம் (ஸல்லல்லாஹ்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِن أيَّامٍ أَعظَمُ عِندَ اللهِ وَلَا أحَبُّ إِلَيهِ مِن العَمَلِ فيهنَّ مِن هٰذِهِ الأيَّامِ العَشرِ، فَأَكثِرُوا فِيهنَّ مِن التَّهلِيلِ وَالتَّكبِيرِ وَالتَّحمِيدِ ) அமல்கள் செய்யப்படும் நாட்களில் துல்ஹஜ் 10 நாட்களை விட அல்லாஹ்விடம் மிகப் பெரியதும் மிகப் பெரியதுமான வேறு நாட்கள் இல்லை ஆகவே அந்த நாட்களில் தஹ்லீலையும் (லா இலாஹ இல்லல்லாஹு என்று கூறுவது), தக்பீரையும் (அல்லாஹ் அக்பர் என்று கூறுவது), தஹ்மீதையும் (அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுவது ) ஆகிய திக்ருகளை அதிகமாக ஓதி வாருங்கள்.
நூல்:- தப்ரானீ, முக்தசர் அத்தர்ஙீபு அத்தர்ஹீபு-380
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ்) அவர்கள், “இந்த (துல்ஹஜ் பத்து) நாட்களில் ‘சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்’ என்ற திக்ரை அதிகமாக ஓதி வாருங்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹ்) அவர்கள்
நூல்:- தப்ரானீ
தப்ரானீயின் மற்றொரு அறிவிப்பில் அந்த நாட்களில் தஸ்பீஹையும் (சுப்ஹானல்லாஹ் என்று கூறுவது), தஹ்மீதையும் (அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுவது), தஹ்லீலையும் (லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவது), தக்பீரையும் (அல்லாஹு அக்பர் என்று கூறுவது) அதிகப்படுத்துங்கள். என்று அருமை நாயகம் (ஸல்லல்லாஹ்) அவர்கள் கூறியதாக வருகிறது.
நூல்:- முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-380
குறைவின்றிக் கொடுக்கப்படும்
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ்) அவர்கள் கூறினார்கள். ( خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ ) பிரார்த்தனைகளில் சிறந்தது அரஃபா நாளன்று கேட்கும் பிரார்த்தனையாகும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலியல்லாஹ்) அவர்கள் நூல்:- திர்மிதீ-3499
அருமை நாயகம் (ஸல்லல்லாஹ்) அவர்கள் அரஃபா தினத்தன்று அக்குள் தெரியுமளவுக்கு கையை உயர்த்தி பிரார்த்தித்தார்கள். நூல்:- அல்மதாலிபுல் ஆலியா
அருமை நாயகம் (ஸல்லல்லாஹ்) அவர்கள் அஃரபா தினத்தில் மன ஓர்மையோடு அஸர் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு நாய் அண்ணலாரின் தொழுகைக்கு இடையூறாக குறுக்கே செல்ல முயற்சித்தது. என்ன ஆச்சரியம்! உடனே அந்த நாய் இறந்து விழுந்து விட்டது. அண்ணலார், தொழுகையை முடித்தவுடன் தனது தோழர்களை நோக்கி, ( اَیُّکم دُعَا عَلَی کَلبِ ) “இந்த நாய்க்கு எதிராக பிரார்த்தித்தது யார்?” என்று வினவினார்கள். அப்போது ஒருவர், “நான்தான்” என்று கூறினார். அண்ணலார், ( دَعَوتَ فِی السَّاعَةِ مَا سَأَلَ اللّٰهُ عَزَّوَجَلَّ فِیهَامُٶمِنُ شَیءًا اِلَّا اِستَجَابَ لَهُ ) “ஒரு இறைநம்பிக்கையாளன் எது கேட்டாலும் அல்லாஹ் மறுக்காமல் தருகின்ற ஓர் நேரத்தில் நீர் பிரார்த்தனை செய்துள்ளீர்” என்று கூறினார்கள்.
நூல்:- அக்பாரே மக்கா லில் ஃபாக்கிஹீ
நபிகள் நாயகம் (ஸல்லலாஹ்) அவர்கள் கூறினார்கள். அரஃபா நாளில் இவ்வுலக மறுவுலக தேவைகளைக் கேட்பவருக்கு குறைவின்றிக் கொடுக்கப்படும்.
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் ஒவ்வொரு நற்செயல்களும் அல்லாஹ்விற்கு எல்லையில்லா சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது. எனவே நாம் அந்நாட்களில் உபரியான தொழுகைகள், நோன்புகள், தானம் தர்மங்கள், குர்ஆன் ஓதுதல், திக்ர் தஸ்பீஹ்கள்,ஸலாவாத்துகள் பிரார்த்தனை புரிதல் ஆகியவற்றை நிரப்பமாக செய்ய முயற்சிக்க வேண்டும். அதற்கு அல்லாஹுதஆலா அருள்புரிவானாக! ஆமீன்
ஃகைருல் பரிய்யா மகளிர் கல்லூரி