அரசியல் ஒரு சாக்கடை என்பது வழக்குமொழி. இன்றைய அரசியல்வா(வியா)திகள் நீதி,நேர்மை, நாணயமற்றவர்களாகவும் ஊழல், இலஞ்ச லாவண்யங்களில் ஈடுபடுபவர்களாகவும், கேவலமான குணங்கள்; உடையவர்களாகவும் இருப்பதால் இந்த உவமானம் கூறப்படுகிறது.
இப்படியே இருந்தால் என்னாவது? எப்படி இந்த நாட்டை முன்னேற்றுவது? நான் இந்த சாக்கடையை சுத்தப்படுத்துகிறேன் பேர்வழி எனக் கட்டியம் கூறி அரசியலில் குதிக்கும் பலரும் நாளாவட்டத்தில் மற்ற சாக்கடைப் பன்றிகளோடு சேர்ந்து கலந்து தங்கள் மனமும், உடலும் அழுக்காகி, கடைசியில் “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” என்ற வசனத்தை மொழியும் போது சிரிப்பு வருவதை அடக்க முடிவதில்லை. விதிவிலக்காக சில அரசியல்வாதிகள் இங்கொன்றும்> அங்கொன்றுமாக இருக்கலாம். ஆனால் விதிவிலக்குகள் விதியாக முடியாது.
இவர்களுக்கெல்லாம் மாற்றமாக ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்கவேண்டுமென்று உதாரண புருஷராக திகழ்ந்தவர் அண்ணலெம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். எந்த ஒரு அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவரின் வாழ்க்கையைத் தோண்டிப்பார்த்தாலும், அவர்களின் வாழ்வில் ஏதாவது ஒரு நிலையில்; ஒரு சிறு குறையாவது தென்படும். ஆனால் அப்படிப்பட்ட எந்த விதமான குறையும் இல்லாத> அப்பழுக்கில்லா முழுமதி கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள்.
அவர் ஒரு இறைத்தூதராக மட்டுமல்ல, அரசியல் தலைவராகவும் சாதித்தார்கள். அவர் தம் ஸஹாபாப் பெருமக்களோடு பல ஆலோசனைகளை மேற்கொண்ட மஸ்ஜிதுன் நபவீயின் திண்ணை பற்பல மார்க்கச்சட்டங்கள் மட்டுமல்ல: பல சமுதாய மற்றும் அரசியல் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட சட்டமன்றமாகவும், பாராளுமன்றமாகவும் திகழ்ந்தது என்பது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய உண்மையாகும்.
அவரின் தலைமைத்துவம் சக்தி வாய்ந்ததாகவும், பரந்த கண்ணோட்டம் உடையதாகவும் இருந்தது. இனம், மொழி, செல்வம், குலம், கோத்திரம் போன்ற குறுகிய வட்டத்தில் அது ஒரு போதும் அடைந்திருந்ததில்லை. போர்களுக்கு படைகளை அனுப்பும்போது அப்படைகளுக்கு தளபதிகளை நியமிக்கும் விஷயத்தில், மேற்கண்ட எந்த தன்மையையும் கருத்தில் கொள்ளாமல், தகுதியை மட்டுமே பார்த்தது இதற்கு மிக சிறந்த சான்றாகும். அவர்கள் தாம் மரணிக்கும் தறுவாயில் கூட கடைசியாக (முஅத்தா போருக்கு) அனுப்பிய படைக்கு வயதும், அனுபவமும் மிக்க பல நபித் தோழர்கள் இருந்தபோது, பதினேழே வயதான இளைஞர் உஸாமா இப்னு ஜைத் (ரலி) அவர்களை அப்படைக்கு தலைவராக நியமித்தது நினைவு கூறத்தக்கது. நாயகத்திற்கு நெருக்கமான தோழராக இருந்தவர் நீக்ரோ இனத்தைச் சார்ந்த பிலால் (ரலி) என்பதும், அவர்களுடைய முக்கியமான தளபதிகளாக இருந்தவர்கள் ஈரானியரான ஸல்மான் ஃபார்ஸி (ரலி) மற்றும் ரோமானியரான சுஹைப் அர் ரூமி (ரலி) என்பதும் குறிப்பிடத்தக்தாகும்.
கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு அரசியல் தலைவராக ஒட்டுமொத்த அரேபிய தீபகற்பத்தையே ஒன்று சேர்த்தார்கள். தம்முடைய தலைநகர் மதீனாவை, பல நாட்டுத் தலைவர்கள் தேடி வரும் ஒரு மாபெரும் அரசியல் கேந்திரமாக மாற்றினார்கள். பல அரசியல் ரீதியான படையெடுப்புகளை மேற்கொண்டு, தங்கள் எதிரிகளை முறியடித்து ஒரு மகத்தான சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்கள்.
ஆனால் இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் குறிப்பிடப்படவேண்டியது, வெற்றியின் போது ஆணவம் கொள்ளாமலும், தோல்வியின் போது துவளாமலும் இருந்த அவர்களின் நடுநிலையான நிதானமும், ஒழுக்க நெறியுமாகும். அவர் நபித்துவத்திற்குப் பின் மக்காவில் வாழ்ந்த 10 ஆண்டுகளும் சரி, மதீனாவில் வாழ்ந்த 13 ஆண்டுகளும் சரி, ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு உரைகல்லாக இருந்தது என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தலைவர் நியாயமானவராகவும், நாணயமிக்கவராகவும் இருக்க வேண்டும் என்பதில் முன்மாதிரியாக திகழ்ந்தார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள். இளவயதிலேயே “ஸாதிக்குல் அமீன்” (உண்மையாளர், நம்பிக்கையாளர்) என அழைக்கப்பட்டார்கள். மக்கத்து குறைஷிகள் தங்களுடைய அமானிதங்களை அவர்களிடம் ஒப்படைத்து வைக்குமளவுக்கு நம்பிக்கையாளராக நடந்தார்கள்.
இதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியைக் கூறலாம். பெருமானார் (ஸல்) அவர்களுக்கு 35 வயது இருக்கும்போது, இறை ஆலயமான கஃபா புதுப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு கோத்திரத்தினரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளை கட்டி முடித்த பின் இறுதியாக, ‘ஹஜருல் அஸ்வதின்’ இடம் வந்தபோது, அதை அதற்குரிய இடத்தில் எந்தக் கோத்திரத்தார் வைப்பது என்பதில் பிரச்சனை எழுந்தது. இது குறித்த சர்ச்சை நான்கைந்து நாட்கள் தொடர்ந்து, ஏறத்தாழ போராக மாறக்கூடிய அபாயம் உண்டானது. அப்போது அபு உமய்யா இப்னு முகீரா என்பவர், அம்மக்களிடம் “இப்புனிதப் பள்ளிவாசலில் நாளை முதன்முதலாக நுழைபவரை நடுவராக்கி அவரது ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்” எனக் கூறினார். இக்கருத்தை அனைவரும் மனமார ஏற்றனர். அவர்கள் ஆவலுடன் மறுநாள் காத்திருக்க, முதன்முதலாக பெருமானார் (ஸல்) நுழைந்தார்கள். உடனே அம்மக்கள், “இதோ முஹம்மது வந்துவிட்டார். இவர்தான் நம்பிக்கையாளர், இவரை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என்றனர். பின் அண்ணல் (ஸல்) அவர்களின் யோசனைப்படி ஒரு விரிப்பை வரவழைத்து அதன் ஓரங்களை ஒவ்வொரு கோத்திரத்தாரும் பிடிக்கச் செய்து, அதன் நடுவில் ஹஜருல் அஸ்வது கல்லை வைத்து, அதன் இடத்தில் இடம் பெறச் செய்து தம் சமயோசிதத்தால் ஒரு பெரும் பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்கள்.
கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பித்திலிருந்தே மக்களுக்கு மத்தியில் இணக்கமும், அமைதியும் ஏற்படவேண்டுமென்று பாடுபட்டார்கள். யாரும், யாருடனும் பகைமை காட்டுவதை அவர்கள் விரும்பியதில்லை. அவர்களின் இளவயதில் ‘ஹில்ஃபுல் ஃபுழூல்’ எனும் சிறப்புமிகு ஒப்பந்தம் ஏற்பட்டது. குறைஷி கோத்திரத்தைச் சார்ந்;த ஹாஷிம், முத்தலிப், அஸத் இப்னு அப்துல் உஜ்ஜா, ஜுஹ்ரா இப்னு கிலாப், தைம் இப்னு முர்ரா ஆகிய குடும்பத்தார் இதற்கான ஏற்பாட்டைச் செய்தனர். இவர்களில் மதிப்புமிக்கவராக கருதப்பட்ட அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் அத்தைமீ என்பவரது வீட்டில் அனைவரும் ஒன்று கூடினர். மக்காவாசிகளாயினும், வெளியுர்வாசிகளாயினும் அவர்களில் யாருக்கேனும் அநீதி இழைக்கப்பட்டால், அவருக்கு முழுமையாக உதவி செய்து நீதி கிடைக்கச்செய்வதில் அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும் என உடன்படிக்கை செய்து கொண்டனர். இவ்வுடன்படிக்கையில் பெருமானார் (ஸல்) அவர்களும் கலந்து கொண்டார்கள்;.
பிற்காலத்தில் இவ்வுடன்படிக்கைக் குறித்துக் கூறும்போது, “அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் வீட்டில் நடந்த ஒப்பந்தத்தில் நான் கலந்து கொண்டேன். எனக்கு செந்நிற ஒட்டகைகள் கிடைப்பதை விட அந்த ஒப்பந்தத்தில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இஸ்லாமின் வருகைக்குப் பின்பும் எனக்கு (அதுபோன்ற) ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதை நான் ஒப்புக் கொள்வேன்” என பெருமையாகக் குறிப்பிட்டார்கள். (ஆதாரம்: இப்னு ஹிஷாம்).
“செய்வதை சொல்வோம், சொன்னதை செய்வோம’ என இன்றைய அரசியல் தலைவர்கள் சிலர் வெற்றுக் கோஷங்கள் போடுவதைக் காண்கிறோம். தேர்தல் சமயத்தில் ‘வாக்குகளுக்காக’ பல வாக்குறுதிகளை அள்ளித் தெளிப்பதையும் பார்க்;கிறோம். ஆனால் அவர்கள் ஒருபோதும் தங்கள் சொல்வதை செய்வதில்லை என்பது கண்கூடு. பெருமானார் (ஸல்) அவர்களோ தாங்கள் சொன்னதையே செய்தார்கள், தாம் செய்ததையே மற்றவர்களுக்கும் செய்யச் சொன்னார்கள்.
நீதியையும், நியாயத்தையும் தம் உயிர் முச்சாகக் கருதினார்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள். “என் மகள் ஃபாத்திமா திருடினாலும், அவர் கையை வெட்டுவதற்கு தயங்க மாட்டேன்” என்ற நபிமொழி உலகின் அனைத்து நீதிமன்ற வாயில்களிலும் பொதித்து வைக்கப்பட வேண்டிய பொன்மொழியாகும். எல்லா நிலையிலும் மற்றவர்களின் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார்களே தவிர, தம் சுயநலத்தை எந்த இடத்திலும் அவர்கள் முற்படுத்தியதில்லை.
பொன்னுக்கும், பொருளுக்கும், மன இச்சைகளுக்கும், உலக ஆதாயங்களுக்கும் அவர்கள் ஒருபோதும் அடிபணிந்ததில்லை. இஸ்லாத்தை விட்டுவிடுவதற்குப் பதிலாக பொன் வேண்டுமா? பெண் வேண்டுமா? அரசுப் பதவி வேண்டுமா? என குறைஷிகள் பேரம் பேசியபோது, “வலது கையில் சூரியனையும், இடது கையில் சந்திரனையும்; கொண்டு வந்து கொடுத்த போதிலும், இக்கொள்கையை விடமாட்டேன்” என உறுதியாக நின்றவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். இன்று நாளுக்கு ஒரு கட்சி, வேளைக்கு ஒரு கொள்கை என இருக்கும் அரசியல்வாதிகளை அவரோடு ஒப்பிடுவது, பெருமானாருக்கு செய்யக்கூடிய இழுக்காகும்.
முதன்முதலில் எத்தியோப்பியா (அன்றைய அபிஸீனியா) விற்கு முஸ்லிம்களை ஹிஜ்ரத் செய்ய முஸ்லிம்களை அனுப்பியது, பெருமானாரின் அரசியல் முதிர்ச்சியைக் காட்டக் கூடிய ஒரு அரிய நிகழ்வாகும். மக்காவில் குறைஷிகளின் தொல்லைகளும், நோவினைகளும் தாங்க முடியாக அளவிற்கு சென்று, அங்கு இஸ்லாமியர்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது கிறிஸ்துவர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய எத்தியோப்பியாவிற்கு, கிறிஸ்துவ மன்னன் நஜ்ஜாஷியின் ஆதரவு நாடி தம் தோழர்களை அனுப்பி வைத்தார்கள். அங்கு முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்ந்தது மட்டுமல்லாமல், நஜ்ஜாஷி மன்னருக்கு உறுதுணையாக இருந்தார்கள். முஸ்லிம்களின் நற்குணங்களையும், நற்பண்புகளையும் பார்த்து அவற்றால் கவரப்பட்ட நஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்பது வரலாற்று உண்மை.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆட்சித்தலைமை மட்;டுமன்றி இஸ்லாமியப் பாதைக்கும் தலைவராக இருந்தார்கள். ஒரு வகையில் பார்த்தால் இது ஆட்சித் தலைமையை விட வலிமையானது என்று கூறலாம். ஆட்சித் தலைமைக்குக் கட்டுப்படும் போது பயத்தின் காரணமாகவே மக்கள் கட்டுப்படுவார்கள். முழு ஈடுபாட்டுடன் கட்டுப்பட மாட்டார்கள். மதத் தலைமைக்கு பக்தியுடன் கட்டுப்படுவார்கள். ஆன்மீகத் தலைவருக்கு முன்னால் ஆட்சித் தலைவர்களும், அறிஞர்களும் மண்டியிட்டுக் கிடப்பதையும் நாட்டையே ஆளும் தலைவர்கள் கூட ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிட்டு நிற்கும் இழிவையும் இன்றைக்கும் நாம் பார்க்கிறோம். யாரோ உருவாக்கிய ஒரு மதத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஆன்மீகவாதிகளில் ஒருவராக இருப்பவருக்கே இந்த நிலை என்றால், ஒரு மார்க்கத்தை உருவாக்கிய ஒரே ஆன்மீகத் தலைவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களால் எவ்வளவு மதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதைக் கூறத் தேவையில்லை.
ஆனால் இவ்வளவு மகத்தான அதிகாரமும், செல்வாக்கும் பெற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி பொருள் திரட்டினார்களா? தமது வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டார்களா? சொத்துக்களை வாங்கிக் குவித்தார்களா? அறுசுவை உண்டிகளுடனும், அரண்மனை வாசத்துடனும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்களா? எனப் பார்த்தோமென்றால், நிச்சயமாக அவர்கள் அவ்வாறு வாழவில்லை. அண்ணலாரும், அவர்தம் குடும்பமும் அடிப்படைத் தேவையான உணவைக் கூட முறையாக உண்டு சுகித்ததில்லை என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது.
‘நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிறார உண்டதில்லை’ என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூ ஹுரைரா (ரலி) கூறுகிறார்கள். (ஆதாரம்: புகாரி ஷரீஃப்).
அனைத்து மனிதர்களிடமும் இருக்கக் கூடிய அத்தியாவசியப் பொருட்களில் படுத்துக் கொள்ளும் பாய் முக்கியமானதாகும். யாசகம் எடுத்து உண்பவர்கள் கூட தமது குடும்பத்திற்குத் தேவையான பாய்களை வைத்திருப்பார்கள். ஆனால் மாமன்னராக இருந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் இருந்தது ஒரே ஒரு பாய் தான். அது பாயாக மட்டுமின்றி பல்வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் நிலையில் இருந்துள்ளது என்பதை கீழ்க்காணும் ஹதீஸ் அறிவிக்கிறது.
‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பாய் இருந்தது. அதைப் பகலில் விரித்துக் கொள்வார்கள். இரவில் அதைக் கதவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்’ என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். (ஆதாரம்: புகாரி ஷரீஃப்).
இன்று சாதாரண கவுன்சிலர் கூட கோடிகளில் சொத்துக்கணக்குக் காட்டக் கூடிய சூழ்நிலையில்> அத்தனை பெரிய ராஜாங்கத்திற்கு அரசராக இருந்தும், இறக்கும் தருவாயில் அவர்களிடம் சொத்துக்கள் எதுவும் இல்லை என்பது சரித்திரத்தில் காணக்கிடைக்காத அரிய செய்தி. அவர் அடமானம் வைத்திருந்த கவச ஆடையை மீட்காமலே மரணித்தார்கள் என்பது உலகில் எந்த மன்னரும் வாழ்ந்துக் காட்டாத வாழ்க்கையாகும்.
‘முப்பது படி கோதுமைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடமானம் வைத்திருந்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள்’ என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார். (ஆதாரம்: புகாரி ஷரீஃப்).
மேலும் அண்ணலார் விட்டுச்சென்ற சொத்துக்களின் பட்டியலைப் பார்த்தால், நிச்சயம் வியப்பு ஏற்படும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது தங்கக் காசையோ, வெள்ளிக் காசையோ, அடிமைகளையோ, வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளை கோவேறுக் கழுதை, தமது ஆயுதங்கள், தர்மமாக வழங்கிச் சென்ற நிலம் ஆகியவற்றைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) விட்டுச் சென்றார்கள். (ஆதாரம்: புகாரி ஷரீஃப்).
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு என ஒருபோதும் பாகுபாடு காட்டியதில்லை. அரசியல் வாழ்விலும் ஆன்மீகத்தை நிலைநாட்டினார்கள். சமுதாயத்தை விட்டும், சமுதாயத்திற்கு பலன் தரக்கூடிய காரியங்களை விட்டும் அவர்கள் ஒருபோதும் தன்னைப் பிரித்துப் பார்த்ததில்லை. எந்த ஒரு விஷயத்திலும் தாமே முன்னால் நின்று, தம் தோழர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார்கள்.
பெருமானார் (ஸல்) அவர்கள் யார் மீதும், எந்த நாட்டின் மீதும் அவர்களாக போர் தொடுத்ததில்லை. அவர்கள் கலந்து கொண்ட போர்களும் தற்காப்புப்போர்களேயாகும். எதிரிகள் அவர்களைத் தாக்க முற்படும்போது, போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடாமல் உறுதியாக நிற்பார்கள். போர்களின் போது, அவர்கள் தீரத்தோடும், வீரத்தோடும் போரிட்டார்கள். எதிரிகளால் அவர்களை பயமுறுத்தவோ, வீழ்த்தவோ முடிந்ததில்லை. போர்களுக்கு செல்லும்போது, அவர்களே முன்னால் நின்று தலைமை தாங்கி நடத்திச் சென்ற பாங்கும், பக்குவமும் மற்ற உலகத் தலைவர்களிடம் காணக்கிடைக்காத அரிதான ஒரு சிறப்பாகும்.
மன்னர் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு சென்ற காலகட்டத்தில், ரோமும், பாரசீகமும் உலகின் மிக்க வலிமை மிக்க வல்லரசுகளாக விளங்கின. ஆனால் நபி (ஸல்) அவர்கள் தம் கொள்கைப் பிரச்சாரத்தால் பத்தே ஆண்டுகளில் ஒரு முழுமையான இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை, ஒரு வல்லரசை நிறுவினார்கள். அது அடக்குமுறையால் நிறுவப்பட்டதல்ல. அதன் அடிப்படைத் தத்துவமே, சமத்துவமும் சகோதரத்துவமும் ஆகும். அனைவரும் இறைவனின் முன் சமம், யாரும் யாருக்கும் உயர்ந்தவருமல்ல, தாழ்ந்தவருமல்ல, ஒரு மனிதன் உயர்வதும், தாழ்ச்சியடைவதும் தத்தம் இறையச்சத்தால்தான் என்பதை நிலைநாட்டினார்கள்.
எந்த ஒரு கோத்திரத்திற்கும் ஆதரவாகவோ, எதிராகவோ அவர்கள் இருந்ததில்லை. அவர்கள் ஆட்சியில் எந்த ஒரு முஸ்லிமல்லாதவரும் துன்புறுத்தப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக அவர்களுக்கு அடிப்படை உரிமைகளை பெற்றுத் தந்ததாகவே நமக்கு சான்றுகள் காணக்கிடைக்கின்றன.
அண்ணல் (ஸல்) அவர்கள் பல்தரப்பட்ட குலத்தாருடனும், கோத்திரத்தாருடனும் பல ஒப்பந்தங்களையும், கூட்டணிகளையும் பல்வேறு விதமான சூழ்நிலைகளில் ஏற்படுத்தினார்கள். இவை அனைத்தும் இஸ்லாத்தின் மேன்மையையும், முஸ்லிம்களின் நன்மையையும் மட்டுமே அடிப்படையாக கொண்டிருந்தது. எதிரிகள் கூட பெருமானாரை மிகப் பெரிய ராஜதந்திரி என்று புகழ்ந்துரைத்தார்கள். ஆனால் பெருமானாரின் ராஜதந்திரம் நீதிநெறியையும், நேர்மையையுமே உடையாக தரித்திருந்தது.
பத்ருப் போரில் கைதியாக பிடிக்கப்பட்ட ஒவ்வொருவரும் 10 முஸ்லிம் குழந்தைகளுக்கு கல்விக் கற்றுக் கொடுத்து அதற்குப் பகரமாய் அவர்களை விடுதலை செய்தது, ஹுதைபிய்யா உடன்படிக்கையின் பல அம்சங்கள் முஸ்லிம்களுக்கு பாதகமாக இருந்தும், எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய நன்மைகளை கருத்தில் கொண்டு அதில் கையெழுத்திட்டது என பல சம்பவங்கள் அவரது அரசியல் சமயோசிதத்தை உலகிற்கு பறை சாட்டுகின்றன.
இதன் காரணமாகவே இஸ்லாத்தின் எதிரிகள் கூட பெருமானரைக் குறை கூற முற்படமாட்டார்கள். கிறிஸ்துவரான மைக்கேல் எச் ஹார்ட் தொகுத்த “உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய 100 பேர்” என்ற புத்தகத்தில் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு முதலிடம் கொடுத்தது “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல” ஒரு சிறிய ஆதாரமாகும்.
அண்ணல் நபியின் உம்மத்தில் வரக்கூடிய தலைவர்களும் பெருமானார் (ஸல்) அவர்களின் நற்குணங்களில் சிறிதளவு பின்பற்றினாலும் இஸ்லாமிய சமுதாயம் மென்மேலும் எழுச்சி பெற்று உயர்வு பெறும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை!!!
மௌலவி அல் ஹாஃபிழ், A. M. அலி இப்ராஹிம் ஜமாலி M.A., M.Phil.,