சமீபத்தில் இந்தியாவில் பலரின் கவனத்திற்குள்ளும் புகுந்த சொற்றொடர் ‘மாநகர நக்ஸல்கள்’ என்பதாகும். இவ்வாறு வர்ணிக்கப்பட்டவர்கள் நாட்டின் பெருமைமிகு இடதுசாரி சிந்தனையாளர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் ஆவர். இவர்கள் சமூகத்தின் கருத்தியல்களை உருவாக்குபவர்கள். கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களான வரவர ராவ், வெர்னான் கோன்சால்வ்ஸ், சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, வழக்குரைஞர் அருண் பெரைரா ஆகியோர்.
இவர்கள் அனைவரையும் ஒரே நாள் இரவில் புனே நகரக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடியைக் கொலைசெய்ய இவர்கள் அனைவரும் உத்தேசித்துள்ளார்களாம். இதற்காக வேண்டி ஆயிரக்கணக்கான கடிதங்களை இவர்கள் தங்களுக்குள் எழுதி விவாதித்திருக்கிறார்களாம். மாவோயிஸ்டுகள் எனப்படும் தீவிர இடதுசாரிகளுடன் இவர்கள் ஐக்கியமாகி இருக்கிறார்கள் என்றும் புனே காவல்துறை குற்றம் சாட்டுகிறது. பீமா – கோரேகான் என்ற மகாராஷ்டிர மாநில ஊரில் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு நிகழ்வைக் கொண்டாடிய மேடையில் இவர்கள் கலவரத்தைத் தூண்டியிருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இதைவிடவும் மலிவான குற்றச்சாட்டுகளும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இது ஜனநாயக நாடு. இங்கு எவரையும் கைது செய்வதாக இருந்தால் அதற்கான சரியான முகாந்திரங்கள் இருக்க வேண்டும். ஆனால் அப்படியான யாதொரு முகாந்திரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட குற்றப்பத்திரிகையும் மராட்டிய மொழியில்தான் இருந்தது. ஆனால் கைது செய்யப்பட்டவர்களோ வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும், வெவ்வேறு மொழிபேசுவோர்களிலிருந்தும் கோர்ட்டிற்குக் கொண்டுவரப்பட்டவர்கள். நீதி மன்றத்தில் கைது நடவடிக்கைகளுக்கான காரணம் என்ன என்று கேட்கப்பட்டபோது புனே காவல்துறை விழி பிதுங்கி நின்றது. அவர்களிடம் சரியான காரணங்கள் இல்லை.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படும்போது பெரிய நகரத்தின் பொறுப்புவாய்ந்த காவல்துறை அதற்கான காரணங்களைச் சரியான முறையில் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். நீதிபதியின் கேள்வி முடிவதற்கு முன்பாகவே அதற்குரிய பதில்கள் தெட்டத் தெளிவாக வந்து விழுந்திருக்க வேண்டும். ஆனால் எல்லாமே இயல்புக்கு மாறாக நடந்தன. அதற்கும் முக்கியமான காரணங்கள் பல இருந்தன.
2016 நவம்பர் எட்டாம் நாள் மோடி வானொலி மூலம் நாட்டின் மீது பேரிடியைச் செலுத்தினார். ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்த நடவடிக்கை நாட்டின் கறுப்புப் பணத்தை ஒழிக்கவும் பொருளாதாரத்தை நேர்வழிப்படுத்தவும் தேவைப்பட்டதாகச் சொன்னார். இதனால் ஏழை எளியவர்களும் சிறு-குறு வணிகர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் பட்ட துயர், நேரிட்ட உயிரிழப்புகள் ஆகியன சொல்லும் தரமன்று. இந்நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடியபோது மோடி, “எண்ணி ஐம்பது நாள்களுக்குள் நிலைமை சீர்திருந்திப் பெரிய உத்வேகம் ஏற்படும்; அவ்வாறு ஏற்படவில்லையானால் என்னை முச்சந்தியில் நிறுத்திச் சவுக்கால் அடியுங்கள்,” என்றார். அப்படி உலகறிய கூவிய கூவல் அன்றைக்குச் சந்திக்கு வந்துவிட்டது. மோடி செய்த இந்தப் பணமதிப்பிழப்பு முழுத் தோல்வி, இதனால் நாட்டிற்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை,” என்று அறிக்கை வெளியிட்டிருந்தது ரிசர்வ் வங்கி.
இதனால் தனக்குக் கடுமையிலும் கடுமையான, இழிவான சோதனைகள் வந்து சேரும் என்று அஞ்சிய மோடியைக் கைதூக்கிக் காப்பாற்றவே இந்தக் கைது நடவடிக்கைகள். மக்களின் கவனத்திலிருந்து பண மதிப்பிழப்பின் தோல்வியைத் திசை மாற்றிச் செல்வதற்கான தந்திரமாகவே ஐந்து ஆளுமைகளும் கைது செய்யப்பட்டனர். ஓர் அவலத்தை மறைக்க இன்னோர் அவலத்தைப் புனே நகரக் காவல்துறையின் பங்களிப்புடன் அரங்கேற்றினார் மோடி. ஆகவே அவசரம் அவசரமாக மோடியைத் தப்பியோடச் செய்ய வேண்டிய நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் புனே காவல்துறை வழுக்கி விழுந்தது. மோடியும் தான் எட்ட வேண்டிய பலனை எட்ட முடியாமல் மக்களின் கடும் கேள்விகளை எதிர்கொண்டிருக்கிறார். நாளதுவரை மக்களைத் தேற்றும் வழிவகை தெரியாமல் திணறவும் செய்கிறார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடுக்கப்பட்ட வழக்கில் நல்ல வேளையாக அது துணிந்து செயல்பட்டுள்ளது. புனே காவல்துறை சுப்ரீம் கோர்ட்டிலும் பேச மொழியில்லாமலும் நீதிபதிகளை ஏறிட்டு நோக்கும் விழிகள் இல்லாமலும் கைபிசைந்து நின்றது. இதனால் கைது செய்யப்பட்டவர்களை அவரவர் வீடுகளிலேயே வைத்திருக்க வேண்டும் என்று அது உத்தரவிட்டது. புனே காவல்துறை பொய்யான வழக்குகளைப் புனைந்திருப்பது நாடு முழுவதற்கும் தெரிந்துவிட்டது. இதனால் குற்றம் சாட்டப்பட்ட ஐவருக்கும் எதிரான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகச் சொல்லி அதைப் பகிரங்கமாக வெளியிட்டது.
ஒரு வழக்கு கோர்ட்டின் கைகளுக்குப் போய்விட்ட பின்னர் அதற்கான எல்லா நடவடிக்கைகளும் கோர்ட்டின் மூலமே நடந்திருக்க வேண்டும். இது பெரிய நகரத்தின் பெரிய காவல்துறைக்குத் தெரியாதா? சுப்ரீம் கோர்ட்டில் பேச முடியாமல் போன அவமானத்தைச் சமாளிக்க அது மேற்கொண்ட செயல் இன்னும் இந்த ஜனநாயகத்திற்குப் பெரும் சோதனையாக அமைந்தது. இதையும் கையும் களவுமாகப் பிடித்த சுப்ரீம் கோர்ட் ஆதாரங்கள் எனச் சொல்லப்படுபவற்றைப் பகிரங்கப்படுத்திய புனே காவல்துறையை வன்மையாகக் கண்டனம் செய்திருக்கிறது.
மோடி ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே ஜனநாயக விழுமியங்களின் மீது பாஸிஸத் தாக்குதல்கள் நடைபெறக் கூடும் என்று பலரும் தம் அச்சத்தை வெளியிட்டிருந்தார்கள். அந்த அச்சம் பொய்யாகவில்லை. மோடி ஏன் திடீரென்று இத்தகைய இழிவான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்? தன்னைக் கொல்ல சதி என்று ஏன் அலற வேண்டும்? அவர் தன்னைத் தானே மிகப்பெரும் ஆகிருதியாகச் சொல்லிக்கொள்கிறார். அப்படிப்பட்டவர் இந்தக் கற்பனையான மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சலாமா? 56 அங்குல அகல மார்பைக் கொண்டவர் இத்தகைய மலிவான விளம்பரங்களிலிருந்து ஆதாயம் திரட்ட முயல்வது அவரின் அச்சத்தையே வெளிப்படுத்துகிறது.
2014ஆம் ஆண்டுத் தேர்தலில் தான் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அவர் மக்களிடம் அளித்த வாக்குறுதிகள் இன்னமும் அப்படியே கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. கறுப்புப்பணம் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, விலைவாசிக் குறைப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிப்பு என்று சொல்லப்பட்ட எல்லா ஒழிப்புகளும் இன்று ஓரணியில் அவரையே ஒழித்துக்கட்ட முயன்றுள்ளன. 2019ஆம் ஆண்டு தேர்தலில் மக்களை எந்த முகத்தோடு சந்தித்து வாக்குகள் கேட்பது என்கிற பீதியில் அவர் உறைந்துபோயிருக்கிறார். இதனால் நாடு முழுவதும் பேரபாயத்தைச் சந்திக்க வேண்டியதான நிலைமை.
இந்தச் சமயத்தில் அனைத்து ஜனநாயக அம்சங்களையும் சேதத்திற்கு உள்ளாக்கியேனும் தான் வெற்றிபெற முயலுவார். அந்தத் தீய முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டிய சவாலைச் சமூகம் எதிர்கொள்ள வேண்டும்; அவரை வென்றாக வேண்டும்.