இந்தியத் தேசபக்தி, அதன் இயல்பான தன்மையில் வெளிவருவதில்லை. அத்ற்கென்று சில விநோதமான அரசியல் இயக்கங்கள் உள்ளன; அந்த இயக்கங்களின் தேசபக்தக் குரல்களும் வெறுப்புணர்வின் அடிப்படையில் அமைந்தவையாகும்.இந்தியத் தேசபக்தி வெற்றுத்தனமான திரைப்பட வசனங்களிலும், பாகிஸ்தானுடனான கிரிக்கெட் விளையாட்டின்போதும் வெளிப்பட்டு ஒரு கோழிக்கூடு போன்ற குறுகிய தன்மை படைத்ததாகும். இதற்குமேல் அரசின் செயல்பாடுகளிலோ, இந்தியர்களின் மீதான நலம் நாடும் திட்டங்களிலோ அமைந்ததில்லை. இதுபோன்ற காரணங்களால் இவர்களின் தேசபக்திக் குரல்களை எவரும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.
பிப். 9ஆம் நாள், புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்காக அஃசல்குரு தூக்குத் தண்டனை பெற்றதை ஒரு நிகழ்ச்சியின் மூலம் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள். அது பொதுவான மரணதண்டனை எதிர்ப்புக் குரல் ஆகும். அப்பல்கலையின் மாணவர்கள் எப்போதும் இதுபோன்ற சமநீதிக்கான குரல்களைத் தொடர்ந்து எழுப்பிவருபவர்கள். மானவர் தலைவரான கண்ணையாகுமார்க்கும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கும் சம்பந்தம் கிடையாது. அங்கு நேரிட்ட குழப்பத்தைக் கண்டறியச் சென்ற கண்ணையாகுமார், தேசபக்திக்கு எதிராகக் குரலெழுப்பியதாக கற்பனைக் குற்றச்சாட்டை உருவாக்கியது பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பு. தனது அபாண்ட்த்துக்கு நாட்டையும் துணைசேர்க்க வேண்டுமென்றே பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்களும் எழுந்தன என்று மேலும் பொய்யுரைத்தது மத்திய அரசு. இந்த நிகழ்ச்சிக்கு லஷ்கர் இ தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சையது பின்னணியில் இருந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பகிரங்கமாய்க் குற்றம் சாட்டினார்.
தேசபக்தியை பா.ஜ.க. வரையறுக்கும்போது முழுக்கவும் முஸ்லிம்களின் மீதான் வெறுப்புணர்வால் மட்டுமே வரையறுக்கும். இந்த வெறுப்புணர்வை பாகிஸ்தானுடன் இணைத்துப் பேசுவதும் அக்கட்சியின் இயல்பு. இதன்மூலம் பாகிஸ்தானின் மீதான வெறுப்பை அப்படியே முஸ்லிம்களின் மீதான வெறுப்புணர்வாகவும் மாற்றிவிடலாம் என்பது அதன் மலிவான அரசியல் வாக்குவங்கித் தந்திரமாகும். இந்த அடிப்படையில்தான் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள்மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்த்து மோடி அரசு. ஏனெனில் டெல்லியின் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது மத்திய அரசின் கையில் உள்ளது. ஆதலால் தம் விருப்பத்திற்கேற்ப வழக்கைக் கையாள்வது அதன் இயல்பாகும். வேண்டுமென்றே தவறான தகவலை நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் வண்ணம் மாணவர் தலைவரும் இதர மாணவர்களும் தேசத்துரோக முழக்கங்களை எழுப்பியது வீடியோவில் பதிவாகியிருப்பதாகச் சொல்லியது டெல்லி காவல்துறை. இச்செய்தி எந்த அளவுக்கு வேகவேகமாக இந்தியா முழுவதும் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று மோடி அரசு விரும்பியதோ அந்த அளவுக்கு அது கொண்டுசெல்லப்பட்ட்து. மோடி அரசுக்கு ஆதரவான ஊடகங்கள் இதை மாபெரும் தந்திரமாகப் பயன்படுத்தி நாடெங்கும் செய்திகளை தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பின.
ஆனால் பதற்றத்துடன் செயல்பட்ட மோடி அரசின் அனைத்துப் பித்தலாட்டங்களும் இரண்டு நாள்களிலேயே அம்பலமாயின. ஊடகங்கள் வெளிக்கொணர்ந்த வீடியோ முழுக்கமுழுக்கப் பொய்மையாக வடிவமைக்கப்பட்டது என உறுதியானது. உடன் மாணவர்களும் மோடி அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். அப்பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களும் மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர்.
இந்தியா முழுக்கவும் மோசடி விளையாட்டை விளையாட ஆரம்பித்து அதன் பலனை மோடி அரசு அறுவடை செய்யவிருந்த தருணத்தில் உலக அளவிலும் இந்தப் பிரச்சினை பரவியது. நூற்றுக்கும் மேற்பட்ட உலக மனித உரிமைப் போராளிகளும் பேரறிஞர்களும் அமெரிக்க அறிவுஜீவி நோம்சோஸ்கியும் ஒன்றாக இணைந்து கையெழுத்திட்ட அறிக்கை வெளியானது. அதில் தேசபக்தி என்பது பொருட்படுத்தப் படவேண்டிய அவசியம் இல்லாதது என்றும், மோடி அரசு இந்தப் பிரச்சினையைக் குறுகிய கண்ணோட்ட்த்தில் கையாளுகிறது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. ஆனால் இந்த அறிக்கையை இந்திய ஊடகங்கள் அப்படியே மூடிமறைக்கப் பார்த்தன. எனினும் இணையதளப் பங்கேற்பாளர்கள் அந்த அறிக்கையைத் த்த்தமது பதிவுகளில் வெளியிட்டு, இந்திய ஊடகங்களின் மோசடியை அம்பலப்படுத்தினர். சகிப்புத்தன்மையற்ற மோடி அரசுக்கு இதெல்லாம் கெட்ட கனவுகளாயின. இப்போது அந்தப் பிரச்சினையிலிருந்து வெளியே வரும் வழி தெரியாமல் மோடியும் அவரின் சகாக்களும் தவிக்கின்றனர்.
இதன் மறுபகுதி வன்முறைக் களமானது. நீதிமன்றத்துக்கு கண்ணையா குமாரும் ஏனையோரும் அழைத்துவரப்பட்டபோது நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தபோதும் கைது செய்யப்பட்டிருந்த மாணவர்கள் மீது கடுமையான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டது. காவல்நின்ற போலீஸார் இந்த வன்முறைய அனுமதித்து ஒதுங்கிக்கொண்டனர். வன்முறை வெறியாட்டம் ஆட, வழக்கறிஞர்கள் போர்வையில் பலநூறு ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் தந்திரமாக வரவழைக்கப்பட்டிருந்தனர். இவையெல்லாமே இந்தச் சம்பவம் எப்படிக் கையாளப்படுகிறது என்பதற்கான உதாரணங்கள்.
தேசபக்தி என்பது ஃபாசிஸ்டுகளின் போலிக் கூச்சல். அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்தான் தேசபக்தி. ஜனநாயக் கருத்துகளில் ஆழம் கண்ட அறிஞர்கள், உல்களாவிய மானுட நெறியை வலியுறுத்துபவர்கள் தேசபக்தி என்கிற கருத்தியலை ஒப்புக்கொள்வதே இல்லை. இந்திய மகாகவி இரவீந்திரநாத் தாகூர் கூட இந்தப் போலிகளின் தேசபக்திமீது காறி உமிழ்ந்தவர்.
ஏனெனில் தேசபக்தி என்று கூச்சல் போடும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின் தேச விடுதலைப் போராட்டத்துக்கான பங்களிப்பை இங்கே எவராலும் சொல்லிவிட முடியாது. விடுதலைப் போராட்டக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸும் அன்றைய இந்துத்வா இயக்கங்களும் செய்த விடுதலைப்போராட்ட நடவடிக்கைகள் என்னவென்று எவரிடமாவது கேட்டுப்பார்த்தால் நாம் எந்த விடையையும் பெற வழியில்லாமல் போவோம். அவர்களுக்கு அப்படியான வரலாறு இல்லை. தேச விடுதலைப்போராட்டப் போராளிகள் எண்பது வயதுக்கு மேற்பட்ட நிலையில் இன்னும் பலர் இருக்கின்றனர். பா.ஜ..க.விலும் ஆர்.எஸ்.எஸ்ஸிலும் அதே எண்பது வயது தலைவர்கள் இப்போதும் உயிர் வாழ்கின்றனர். ஆனால் அவர்களின் வாழ்க்கை சுவடுகளில் தேசபக்த இழை ஒன்றையும் நாம் தொட்டுணர முடியாது. நாட்டு விடுதலைக்காகப் போராடிய இயக்கங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம்லீக் கட்சிகள் மட்டுமே பங்கேற்றன. இந்த மூன்று கட்சிகளின் கொடிகள் பறந்த இடங்களில்தான் போராட்டக் களங்கள் அனலை விசிறியடித்தன; தன்னையும் தன் குருதியையும் இந்த மண்ணில் சிந்தி மாண்டவர்களின் கைகளில் பட்டொளி வீசிப் பறந்தவையும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம்லீக் கொடிகளே. அந்தப் போர்க்களங்களில் காவிக் கொடிகளுக்கு இடமிருந்ததில்லை. அவர்கள் ஒரு குழுவாகவோ கூட்டத்தோடு கூட்டமாகவோ கொடி ஏந்தி வந்ததுமில்லை. தேச விடுதலைப் போராட்டக் களங்களிலிருந்து எழுதிக்கொடுத்து வெளியேறிய கருப்பாடு காவிகள்தான் உண்டே தவிர, குண்டாந்தடியும் சிறைவாசமும் அனுபவித்து அறிந்த்தில்லை. பந்தி விரித்தபின்னே பசியாற வந்த கும்பல் முழுப்பந்தியையும் ஆக்கிரமித்து நடத்தும் இன்றைய நாடகங்கள் அனைத்தும் கேலிக்கூத்தானவை; கூடவே விபரீதமானவையுமாகும். ஃபாஸிஸ நாடகதாரிகள் நடத்தும் நாடகத்தின் முடிவு அவர்களுக்கே இறுதியில் பேரிடியாய் அமையப்போகின்றன; சம்பவத்தின்போது அங்கே நின்ற நேரடிப் பார்வையாளர்கள் இன்று அளிக்கும் சாட்சியங்கள் அதைக் கட்டியம் கூறுகின்றன.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் ஜனநாயக நீரூற்று போன்றது. இட்துசாரிச் சிந்தனைகளின் விளைநிலம். அங்கிருந்து நாட்டின் எண்ணற்ற அறிஞர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், சமூகப் பற்றாளர்கள் தோன்றியவண்ணம் இருக்கிறார்கள். அவர்கள் சமூக, அரசியல், பொருளாதார ரீதியான அறிவை இந்தியா முழுக்கவும் விதைக்கிறார்கள். அரச வன்முறைகளைத் தயவுதாட்சண்யமில்லாமல் தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள். ரொம்பவும் குறிப்பாகச் சொல்வதென்றால் அங்கிருந்து வரும் கல்வியாளர்களாலும் அறிஞர்களாலும் மட்டுமே நாட்டில் மதச்சார்பின்மை இவ்வளவு வலுவாகக் காலூன்றி நிற்கிறது. அங்கு பயின்று வரும் மாணவர்கள் இடதுசாரி இயக்கங்களின் சிந்தனையாளர்களாய் இருப்பதும் மதச்சார்பின்மையைப் பேசிவருவதும் ஃபாசிஸ்டுகளின் கண்க்ளைக் கனகாலமாக உறுத்தி வருகிறது. அந்த மாபெரும் ஜனநாயக மதச்சார்பின்மை வெள்ளத்தை அணைகட்டித் தடுத்துவிட வேண்டும் என்பது ஃபாஸிஸ்டுகளின் தீரா நாட்டமாக இருக்கிறது. ஆனால் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் எப்போதும் இட்துசாரிகளின் கோட்டையாகவே இருந்து வருவதால் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் கனவுகளை அது தகர்த்துக்கொண்டே இருக்கிறது. அதனால்தான் இன்று பா.ஜ.க. அரசு தேசத்துரோக வழக்கினைப் பதிவு செய்து அந்த மாணவர்களை வேட்டையாடிவிடக் கருதி நாடு முழுவதும் அந்தப் பல்கலைக் கழகத்திற்கு எதிரான கருத்துக்களைப் பரப்பி வருகிறது.
அற்பர்களின் பொய்ச்செய்திகளுக்கு நம் செவிகளையும் கண்களையும் திறந்துவிடலாகாது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முடக்கப்பட்டாலும், பழி சுமந்தாலும் அதனால் நாட்டில் பேரழிவு நிச்சயம். ஏன் மோடி அரசு இத்தனை மூர்க்கமாக இந்த விஷயத்தில் வன்முறைத் தாண்டவமாடுகிறது என்பதைச் சிந்திக்க வேண்டும். இதற்கு எதிராக அணிதிரள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாக இருக்க வேண்டும்.