மாட்டிறைச்சியில் தொடங்கும் பரிசோதனை!

 

காராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டுள்ளது பலரின் புருவங்களையும் உயர்த்தி இருக்கிறது.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதிலுள்ள அரசியலைப் புரிந்துகொள்ள முடிகிறது.  திடீரென்றும் இது வரவில்லை.  ஆற அமர நத்தை வேகத்தில் வந்திருக்கிறது. 1976-ஆம் ஆண்டில் பசுக்களைக் கொல்வதற்குத் தடைவிதிக்கும் சட்டத்தை மகாராஷ்டிர மாநில அரசு நிறைவேற்றியது. 40 ஆண்டுகளாகக் கிடப்பிலுள்ள ஒரு சட்டம் இது. அதிலும் இந்தச் சட்டம் வெள்ளைநிறப் பசுக்களை மட்டும் கொல்லக்கூடாது என்கிற விதியை உள்ளடக்கி இருந்தது.  கருப்புநிற எருதுகளுக்கும் பசுக்களுக்கும் அது பொருந்தாது.  பசுவும் நிறத்தின் அடிப்படையில் தேர்வானது ஏன்? இதன்பின் 1995-இல் பா.ஜ.க.வும் சிவசேனையும் சேர்ந்து ஆட்சியமைத்தபோது இன்னொரு மசோதாவை நிறைவேற்றிவைத்தது. அதன்மூலம் வெள்ளைநிற எருதுகளும் காளைகளும் கொல்லப்படக் கூடாது என்ற விதியும் இணைந்தது. பசுக்களைக் கொல்லக்கூடாது என்பதிலும் அவர்கள் முதலில் தெளிவு கொண்டவர்களாக இல்லை. பசுவதை குறித்த அவர்களின் மதம் சார்ந்த கொள்கைகள் இருந்தால் அல்லவா அவர்களால் ஆரம்பத்திலேயே ஒரு உறுதியைப் பெற்றிருக்க முடியும். மெல்ல மெல்ல அவர்களின் துவேஷ மனம் விரிவுபெற்று வந்திருக்கிறது ஏன் என இதன்மூலம் நாம் புரிந்துகொள்ளலாம்.

பசுக்களைக் கொல்வது ஏன் தடை செய்யப்படவேண்டும்?  இதை பாசிசவாதிகள் மத அடிப்படையில் மாத்திரம் நோக்குகிறார்கள்.  மாடுகளை அறுப்பதும் அதனை உண்பதும் முஸ்லிம்களும் தலித்துகளும்தான் என்கிற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது.  இதைத்தவிர பசுவுக்கும் இந்துத்வக் கொள்கைகளுக்கும் தொடர்புகள் இருந்தது கிடையாது.  புராணகாலம் தொட்டு மாடுகளை அறுத்தும் உண்டதும் அவர்கள்தான். இன்றளவும் வங்கத்து பிராமணர்கள் இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களின் பிராமணர்களிடமிருந்து விலகி அசைவ உணவாளர்களாக இருக்கிறார்கள்.  மகாபாரதத்தில் பசுக்கள் கொல்லப்பட்டு யாகங்களில் இடப்பட்டுள்ளன. பசு இறைச்சியை பிராமணர்கள் உண்டுவந்துள்ளனர். பவுத்த மதம் தோன்றி விவசாயிகளின் பக்கமாக இணைந்து அவர்களின் உழவுப்பணிகளுக்கு மாடுகள் அவசியத் தேவை என்பதால் பசுக்களைக் கொல்லக்கூடாது என பிரச்சாரம் செய்தது;  இதன் காரணமாக ஏராளமானோர் பவுத்த மதத்தின்பால் கவனம் கொண்டு இணைந்தனர். பவுத்தத்தின் வேகமான வளர்ச்சியைத் தடுக்க பிராமணர்களும் பசுக்களைக் கொல்லவேண்டாம் என்கிற முடிவுக்கு வந்தனர். பசுவதைத் தடுப்பு இவ்வாறாக அவர்களின் பாதுகாப்பு கருதி உருவானது. தவிர அது தெய்வீக நிலையில் அன்று இருத்தப்படவில்லை.  இதை அவர்கள் வியந்துபோற்றும் சுவாமி விவேகாநந்தரும் தன்னுடைய உரைகளில் குறிப்பிட்டு வந்துள்ளார்.  அந்த நூல்கள் இன்றளவும் சென்னை ராமகிருஷ்ணா மட்த்தின் சார்பில் வெளியிடப்பட்டு வருகின்றன.

தங்களின் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதுடன், சிறுபான்மையினரையும் தங்கள் மதத்திலுள்ள தலித் சமூகத்தையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எண்ணி இந்தத் தடையை உருவாக்கியுள்ளனர்.  இதைப் பரிசோதனைமுறையில் வெற்றிகரமாகச் செயல்படுத்தினால் அடுத்தடுத்த அடக்குமுறைகளில் இறங்கிவிடலாமென பாசிசவாதிகள் எண்ணியுள்ளனர்.

ஆனால் மாட்டிறைச்சி ஒரு பொது உணவாக மாறியுள்ளது. பாசிசவாதிகள் தங்களின் மன விருப்பங்களுக்கேற்ப மொத்த சமூகத்தையும் மாற்றுவதில் பிறரின் அடிப்படை உரிமையில் அவர்கள் கைவைத்துள்ளார்கள்.  அதற்கேற்ற ஆட்சி மத்தியில் இருப்பதால் தங்களின் வேலைத் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக நாம் கருதவேண்டியுள்ளது.

மாட்டிறைச்சிக்குத் தடை விதித்திருப்பதன்மூலம் அவர்கள் பசுவதைத் தடையைத்தான் நிறைவேற்றியுள்ளனர். இது ஒரு மதம், சாதியம் சார்ந்த அம்சமல்ல.  மாட்டிறைச்சி ஒரு புரதச் சத்து. அது இந்துத்துவத்தைச் செயல்படுத்த வெறிகொண்டுள்ள மேல்தட்டு மூளை உழைப்பாளிகளுக்கு வேண்டுமானால் தேவைப்படாமல் இருக்கலாம். கடும் உடல் உழைப்பாளிகளுக்கு அது அவசியமானது.  பாசிசவாதிகள் உழைப்பாளர்களின்மீதான தங்களின் அதிகாரத்தை இதன்மூலம் செலுத்தியுள்ளனர்.  இந்தத் தடை போகப்போகப் பொருளாதார விளைவையும் உருவாக்கும்.

இன்று வேளாண்மை ஆட்சியாளர்களால் நசுக்கப்படுகிறது.  மகாராஷ்டிராவில் இது கடுமையான வேதனைகளை விவசாயிகளின்மீது திணித்தது. விதர்பா பகுதி விவசாயிகளின் தற்கொலை இன்று உலகப் பிரசித்திபெற்ற செய்தி. வேளாண்மையைக் கைவிடும் விவசாயிகள் தங்களின் மாடுகளை விற்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.  மாடுகளை வளர்ப்பது பராமரிப்பதும் முன்னரிருந்த காலம் மாதிரி இல்லை.  மாடுகளை விற்க முடியாதநிலையில் அவற்றை விவசாயிகள் பராமரிப்பதற்கான செலவுகள் கூடும். தங்களின் வாழ்வுக்காகவே அலைமோதும் நேரத்தில் மாடுகளைப் பராமரிப்பது அவர்களுக்குக் கூடுதலான சுமையாகும்.  இளங்கன்றுகளுக்கும் காளைகளுக்குமான தீவனமும் இங்கே கிடைப்பதில்லை.  மாட்டுத் தீவனத்தில் 60% பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில் வயதான மாடுகளுக்கான தீவனத்தை எப்படித் தேடுவது?

மாட்டிறைச்சி விலை குறைவானது. அதனால் ஏழைகளின் விருப்ப உணவாகவும் ஆட்டிறைச்சிக்கு மாற்றாகவும் இருக்கிறது.  இத் தடையானது ஏழைகளின்மீதான தாக்குதல். இத்தடையை மீறும்போது ஐந்து ஆண்டு சிறையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் என்று தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் அவர்களுக்குள்ள அக்கறையைவிட முஸ்லிம்களையும் வேத நாகரிகத்திறகு எதிரானவர்களையும் தண்டிக்கும் வேகம் அதிகப்பட்டிருப்பதை அறியமுடிகிறது.  பசுவின் மீதான போலித்தன பக்தியை நீட்டியிழுத்துத் தங்களின் ஒடுக்குமுறைக்கான அடிப்படையை விரிவாக்கி வைத்திருக்கிறார்கள் பாசிசவாதிகள்.

மானுடகுலத்தின்மீது எப்போதும் கடும் துவேஷத்தை முதலீடு செய்திருப்பவர்கள்தான் பாசிசவாதிகள்.  மனிதர்களை நேசிக்கத்தெரியாத பாசிஸ்டுகள் அஃறிணைகள் மீது காட்டும் நேசம் நேர்மையானதாக இருக்க வாய்ப்பு ஏது?

இந்த்த் தடையை காங்கிரஸ் கட்சியும் ஆதரிக்கிறது;  இதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.  தன்னுடைய வீழ்ச்சியைக் காணும்போது காங்கிரஸும் வகுப்புவாதத் தன்மையோடு செயல்பட்டதை நாடு கண்டிருக்கிறது.  தனது கடைசிக் கட்டத்தை நெருங்கிவிட்ட காங்கிரஸ் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.க.வின் கொள்முதலில் தனக்கும் ஒரு பங்கு கோருகிறது.

அதே சமயம் நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவேண்டிய அவசியம் என்ன?  அவருக்கும் நெருக்கடிகள உண்டா?  நெருக்கடிகள் இருக்கும்பட்சத்தில் மாநில அரசுக்கு அவர் அறிவுரை கூறியிருக்க வேண்டாமா?  பாசிசக்திகளின் விருப்பங்களுக்குத் தலைசாய்ப்பது வகுப்புவாத அரசுக்குக் கை கொடுப்பதாகும் என நம் குடியரசுத் தலைவர் யோசிக்காதது நல்லதல்ல.  இது மேலும் பாசிசசக்திகளின் கை ஓங்க வாய்ப்பு கொடுத்ததாகும்.

ஏழைகளின் நலமும் நாட்டின் வளர்ச்சியும் குறித்து பாசிச சக்திகளுக்குத் தெளிவான பார்வை, திட்டங்கள் இல்லை.  அதனால் மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும் வகுப்புவாத உணர்வுகள் மங்கிவிடாமல் காத்துவரவுமான பலமுனை ஏற்பாடுகளோடு அவர்கள் செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.  மாட்டிறைச்சி மதம் சார்ந்த நிலையில் இல்லை.  அது பெரிய அளவில் விரிந்து வேளாண்மை, ஆரோக்கியம், பொருளாதாரம், சமத்துவ இருப்பு ஆகியவற்றோடு தொடர்பு கொண்டது.  இதை விரைவில் அந்தச் சக்திகள் உணரக்கூடும்.  உணராவிட்டால் இழப்புகளைச் சந்திக்கும் நாடு. வீண் வமபை விலைக்கு வாங்கினோம் என்பதைத் தவிர இதில் அடையும் ஆதாயத்தை பாசிசவாதிகள் ஒருநாளும் கணக்கு பார்க்கமுடியாது.