நாட்டிலுள்ள வங்கிகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், திரை அரங்குகள் ஆகியவற்றை இனி 24மணி நேரமும் செயல்பட வைக்கும் யோசனையில் புதிய சட்டம் கொண்டுவர மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த செய்திகள் இப்போது பரபரப்பாக அலசப்படுகின்றன.
இம்மாதிரியான செய்திகள் பலரையும் கிளர்ச்சியூட்டுகின்றன; ஒரு புதிய இந்தியா வண்ணவிளக்குகளில் ஜொலிக்கும் என்ற கற்பனைகள் தோன்றியுள்ளன. ஒருவகையில் அது ரசமான விஷயம்தான். ஆனால் எந்த மாதிரியான சேவைகள், என்ன மாதிரியான சூழலில் கொண்டுவரப்பட வேண்டும் என்கிற அலசலும் தேவை.
இந்தியா மிக வளர்ச்சியடைந்த நாடு என்ற தோற்றத்தை இதுபோன்ற விஷயங்கள் வெளிப்படுத்தும் என மோடி அரசு நம்பியிருக்கலாம். வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக இந்தியாவைக் காட்ட முடியும் என்று கருதியதா அரசு? ஒருவேளை இது அப்படியாகக் கருதப்பட வேண்டுமென்றால் அதற்கு இன்னும் ஐம்பது ஆண்டுகளாவது தேவை. ஏனெனில் இன்னும் அதற்கேற்ற கட்டமைப்புகள், பொருளாதாரப் பகிர்ந்தளிப்பு, அவசரத் தேவைகள், வளங்கள் இங்கே உருவாகவில்லை.
இரவு நேரங்களில் செயல்படப் போவதாக அவர்கள் வரையறுத்துக் கொண்டுள்ள அனைத்துக்கும் முதலில் தேவைப்படுவது தடையற்ற மின்சாரம். இந்தியா இன்னும் மின் உற்பத்தியில் மிகையளவை எட்டவில்லை. அதற்கான திட்டங்கள் நம்மிடம் இல்லை. வெளிநாடுகளில் இருந்துதான் நிலக்கரி இன்னும் இங்கே இறக்குமதி ஆகிறது. அதில் ஏராளமான ஊழல்கள் நடக்கின்றன; இந்நிலையில் தாறுமாறான திட்டங்கள் தேவையில்லை. மக்களின் தொடர்புக்கு உரிய அரசுத் துறைகள் இரவில் இயங்குவதை முறைப்படுத்தலாம். எல்லா அரசுத் துறைகளும் இயங்க வேண்டிய அவசியம் இல்லை. காவல்துறை, தீயணைப்புத் துறை. சுற்றுலா மற்றும் செய்தித் தொடர்புக்குரிய துறைகளாகச் சிலவற்றை மட்டும் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால் இதில் அதிகார வர்க்கம் அடிமட்ட ஊழியர்களைக் கசக்கிப் பிழிந்துவிடக் கூடிய வாய்ப்பும் இல்லாமல் இல்லை.
வணிக வளாகங்கள் ஏற்கெனவே ஏராளமான மின்சாரத்தைக் கண்மூடித் தனமாகப் பயன்படுத்திவருகின்றன. அவர்களின் விளம்பரத்தைக் கவனப் படுத்துவதிலும், கடைகளை அலங்கரிப்பதிலும் விரயமாகும் மின்சாரத்தின் ஒரு சிறு அலகு கூட தொலைதூரக் கிராமங்களுக்குச் செலவாகவில்லை. வணிக வளாகங்களிலுள்ள பெரும்பாலான கடைகளும் அத்தியாவசியத் தேவைகளுக்கானவை அல்ல. ஆடம்பரப் பொருட்களான அந்தக் கடைகள் இரவில் திறந்திருக்க வேண்டும் என்ற அவசியம் நமக்கில்லை.
அதேபோல இன்று திரையரங்குகள் தினசரி நான்கு காட்சிகளாக நடந்துவருகின்றன. ஆனால் அவற்றில் படம் பார்க்கும் ரசிகர்கள் ஒரு காட்சிக்கு இருபதுபேர் கூட தேறுவதில்லை. ஏராளமான மின்சாரத்தை நான்கு காட்சிகளுக்கும் வாரி வழங்கும் நிலையில் ரசிகர்கள் திரளாக இருந்தால்தான் கட்டுப்படியாகும். உள்ளபடியே சொல்லப்போனால் காட்சிகளின் எண்ணிக்கையை வார நாட்களில் மூன்று ஆகவும், வார இறுதியில் நான்காகவுமே நிர்ணயிக்க வேண்டிய நெருக்கடி இருக்க, அவற்றை மேலும் அதிகரிப்பதில் காலம், உடலுழைப்பு, மின்சாரம் ஆகியன விரையம் ஆகும் நிலைதான் உருவாகும்.
- இரவு நேரக் கண்காணிப்பில் காவல்துறை எந்த அளவுக்குச் சுறுசுறுப்பாக இருக்கும்? வாகனப் பயன்பாடுகளிலுள்ள எரிபொருள், அளவை மீறிப் போகும்போது அதற்கேற்ற அளவில் அந்நியச் செலாவணி குறையும். இங்கு இன்னும் வாகனங்களைச் சிக்கனமான முறையில் இயக்கி எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் அவசியம் உள்ளது. இரவு வேலைகள், எரிபொருள் பயன்பாட்டை எகிறச் செய்யும். இளைஞர்கள் இரவில் வாகனங்களை ஓட்டும் வேகத்தில் பல விபத்துகள் நடப்பதும், அதில் அப்பாவிகள் அதிக அளவில் உயிரிழப்பதும் மன வேதனையைத் தருகின்றன. இதற்காக எடுத்துரைக்கப்படும் அறிவுரைகளை இளைஞர்கள் மனம் கொள்ளாத நிலையிருக்க, அவர்களை இரவு நேரப் பணிக்கு அழைப்பது உசிதமானதுமல்ல.
ஆனால் வேறு சில விஷயங்கள் குறித்து அரசு சிந்திப்பது நல்லது. தேசிய நெடுஞ்சாலைகளில் ஊருக்கு வெளியே ஹோட்டல்கள், வங்கிகள், திரையரங்குகள் இயங்குவதைப் பல நிபந்தனைகளோடு அனுமதிக்கலாம். இப்போது நீண்ட தூரப் பயணங்கள், சுற்றுலாக்கள் பெருகிய நிலையில் அவர்கள் தரமான உணவைச் சாப்பிடவும், ஓய்வு எடுக்கவும், பணத் தேவைகளை நிறைவு செய்யவும் அவை ஓரளவு உதவிகரமாக இருக்கும். அங்கு தரமான அரசு மருத்துவமனைகள், அவசர சிகிச்சை மையங்கள் விபத்தில் சிக்கும் மக்களைக் காக்க உதவும் வகையில் அமைக்கப்படவும் வேண்டும்.
வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்குமானால் மேலும் சில வாய்ப்புகளைக் கூட்டலாம். ஆனால் முறையான சம்பளம், பணிப் பாதுகாப்பு இல்லாமல் இப்போதே நாடெங்கும் தொழிலாளர்களும் மகளிரும் வாட்டி வதைக்கப்படுகிறார்கள். இந்திய ஏழ்மைக்கு முடிவு கட்டும் எண்ணம் இல்லாத அரசு இந்தியாவின் பகட்டை மட்டுமே வெளிப்படுத்த விரும்புவது ஏற்புடையதல்ல.
இதற்குமுன் பிரதமராய் இருந்த வாஜ்பேய் அடுத்த தேர்தலைச் சந்திக்க வேண்டிய தருணத்தில், ‘இந்தியா ஒளிர்கிறது’ என்றொரு கோஷத்தை முன்வைத்தார். இருண்டுபோய்க் கிடக்கும் நாட்டை இவ்வாறான கற்பனை அலகோடு அவர் முன்நிறுத்த முயன்றதில் அவரது ஆட்சி தோல்வியடைந்தது கண்கூடு. இப்போது அவருக்கு அடுத்த நிலைப் பிரதமர், அதை நடைமுறைப்படுத்த விரும்புவது தெரிகிறது. சுபிட்சமற்ற ஒரு நாட்டுக்கு இத்தகைய கனவுகள் அனாவசியமானவை. அவற்றை இந்த நிலையிலேயே கைவிட்டுவிட்டுச் சாத்தியமானதை மட்டும் அரசு யோசித்தால் நல்லது.