முத்தலாக் தடைச் சட்ட மசோதா கடந்து வந்த பாதை.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதான ஷாயரா பானு தனது தாய் வீட்டிற்குச் சென்றிருந்த போது அவரது கணவர் ரிஸ்வான் அஹமது 2015ஆம் ஆண்டு அக்டோபர் 15 –ஆம் தேதி ஒரு கடிதத்தில் மூன்று முறை தலாக் எனக் குறிப்பிட்டு அவரை விவாகரத்துச் செய்தார்.
கடந்த 2016, பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி முஸ்லிம் தனி நபர் சட்டத்துக்கு எதிராக ஷாயரா பானு என்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
2016, டிசம்பர் 9 ம் தேதி முத்தலாக் சட்டவிரோதம், அரசியலமைப்புக்கு எதிரானது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டது.
2017, ஆகஸ்ட் 22 ல் முத்தலாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் முத்தலாக் சட்டவிரோதமானது என்றும் காஜிகள் முத்தலாக்கிற்கு சார்பான சான்றிதழ்களை வழங்கக்கூடாது என்றும் தீர்ப்பளித்தது.
அப்போது, நீதிமன்றத்தில் உச்சநீதிமன்றம் சட்ட விரோதம் என்று கருதுமானால் அதற்கு எதிரான ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் என்று பா.ஜ.க. அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது.
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கிற்கான தீர்ப்பை ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்புவழங்கியது.
ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில், தலைமை நீதிபதி ஜே. எஸ். கெஹரும், நீதிபதி நஜீரும், முத்தலாக் முஸ்லிம் மதத்தினரின் அடிப்படை உரிமை என்று கூறினர். ஆனால், நீதிபதிகள் குரியன் ஜோசஃப், ஆர். எஃப். நாரிமன், யு. யு. லலித் ஆகியோர், முத்தலாக் வழக்கத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என்று தீர்ப்பளித்தனர். இந்த மூவரும் கூட அரசாங்கத்திடம் சேர்ந்து சொன்னது; முஸ்லிம்களிடம் கலந்தாலோசித்து ஒரு மாற்று சட்டத்தை கொண்டு வருமாறு கூறினர்.
ஆனால், மத்திய பா.ஜ.க. அரசு உச்ச நீதிமன்றத்தின் ஒரு தரப்பு நீதிபதிகளின் கருத்தை மட்டும் பயன்படுத்திக் கொண்டு முஸ்லிம்களின் ஷரீஆவில் கை வைக்க துணிந்து, சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட ஐவர் குழு ஒன்றை அமைத்து முத்தலாக் தடை சட்ட மசோதா ஒன்றை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டது.
இதன் பேரில் அந்த குழு முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைப் பாதுகாப்பு) மசோதா என்ற பெயரில் முத்தலாக்கை தடை செய்யவும், அதை பயன்படுத்தும் நபருக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது அபராதத்துடன் கூடிய சிறை மற்றும் தலாக் விடப்பட்ட பெண்ணுக்கும் குழந்தைக்கும் ஜீவனாம்சம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட சில அம்சங்களை குறிப்பிட்டு பாராளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்தது.
மேலும் மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், அந்த நாளை வரலாற்றில் ஒரு முக்கிய நாள் என்று கூறியிருக்கிறார். உண்மையில் அந்த நாள் இந்திய ஜனநாயக தேசத்தின் இரண்டாவது கருப்பு நாளாகும்.
ஆம்! 06/12/1992 பாபர் மஸ்ஜிதை உடைத்து இந்திய ஜனநாயகத்திற்கு கருப்பு நாளைத் தந்தவர்கள் இப்போது, மீண்டும் ஒரு கருப்பு நாளை 28/12/2017 நாடாளுமன்றத்திற்குள் முத்தலாக் தடை சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் தந்திருக்கின்றார்கள்.