மாலை சூடும் மணமகன்

 

ஆக்கம்

செய்யிது அப்துல் ஜப்பார் ஹளரத் காதிரி (ரஹ்) 

முன்னாள் முதல்வர், அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத். வேலூர்.

 

மொழியாக்கம்:

மௌலவி ஹயாதுத்தீன் யூசுபி பாஜில் காஷிபி

பேராசிரியர், மன்பவுஸ் ஸலாஹ் அரபிக்கல்லூரி, தூத்துக்குடி.

ன்று சில ஹளரத்மார்கள், மணமகன் கழுத்தில் மாலை போடுவதை காண விரும்புவதில்லை. பார்த்தால் கோபப்படுகிறார்கள். ஆனால் ஹஜ்ஜிலிருந்து திரும்பும் ஹாஜிகள் மந்திரிகள் மற்றும் தலைவர்களுக்கு தங்களது புனித கரத்தினால் பூ மாலை போட்டு வரவேற்பார்கள். ஆயினும் மணமகன் கழுத்தில் காணுவதை மட்டும் அவர்களால் சகித்து கொள்ள முடிவதில்லை. இது ஏனென்று தெரியவில்லை.

ஏதாவது நிக்காஹ் மேடையில் மணமகன் கழுத்தில் மாலை இருப்பதை பார்த்தால் அது ஒரு பெரும் பாவம் என்பதை போல் முதலில் அதை கழற்ற முயல்வார்கள். முடியாத போது மேடையை விட்டு வெளியேறிவிடுவார்கள்.

இந்த மஸ்அலாவை – சட்டப்பிரச்சனையை பொறுத்த வரை முதலில், பொதுவாக பூ மாலை அணிவிப்பது அணிவது கூடும் என்பதற்கு செயல்வடிவ ஆதாரம் இருக்கிறதா என்று பார்த்தால் தென்னிந்தியாவின் மிகப்பெரிய மதரஸாவான பாகியாதுஸ்ஸாலிஹாத் நாஜிரும் தலைமை முஃப்தியுமான ஹளரத் மௌலானா ஷைகு ஆதம் சாஹிப் (ரஹ்) அவர்கள் வட இந்தியாவின் மிகப்பெரிய மதரஸாவான தாருல் உலூம் தேவ்பந்தின் ஷைகுல் ஹதீஸ் ஹளரத் மௌலானா செய்யது அஹமது ஹுஸைன் மதனி (ரஹ்) அவர்கள் பாகியாத் வந்திருந்த போது அவர்களை வரவேற்கும் முகமாக அவர்களுக்கு பூ மாலை அணிவித்தார்கள். ஹளரத் அவர்களும் அதை அணிந்து கொண்டார்கள்.

பூ மாலை போடுவது குறைந்த பட்சம் மக்ரூஹாக இருந்தால் கூட பாகியாதுஸ் ஸாலிஹாத்தின் குறைந்த பட்ச 200 மாணவர்கள் 25 உஸ்தாதுமார்களுக்கு முன்னிலையில் இப்படியொரு காட்சி அரங்கேறியிருக்க முடியாது என்பது வெளிப்படை.

இனி இந்த மஸ்அலா குறித்து பல்வேறு முப்திகளுடைய பத்வாக்களை பார்வையிடுங்கள். இந்த வகையில் முதலில் கிஃபாயத்துல் முஃப்தியின் கேள்வி பதிலை படியுங்கள்.

கேள்வி: திருமணத்தின் போது மணமகன் கழுத்தில் சேரா போடுவது கூடுமா..? கூடாதா..? கழுத்தில் சேரா போடலாமா கூடாதா..?

பதில்: சேரா தலையில் போடப்படுவது அதை கழுத்தில் போட்டால் அது சேராவின் சட்டத்தில் சேராது. தலையில் சேரா போடுவது ஜாயிஸ் இல்லை. கூடாது. ஏனெனில் அது இந்துக்களின் வழக்கம் கழுத்தில் மாலை போடுவது கூடும்.   ( கிஃபாயத்துல் முஃப்தி 9 – 77.)

மணமகன் கழுத்தில் மாலை போடுவது சம்பந்தமாக ஹளரத் மௌலானா முஃப்தி கிபாயத்துல்லாஹ் சாஹிப் (ரஹ்) அவர்களின் இந்த பதிலை படித்த பின் இனிமேல் இது கூடுமா…? கூடாதா..?  என்ற சர்ச்சையில் உலமாயே ரப்பானிகள் இறங்கி முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில் மோதிக் கொள்வதற்கு வழிவகுக்க மாட்டார்கள் என்று நாம் நம்பலாம். மேற்படி மௌலானாவின் பத்வா உண்மையில் தாருல் உலூம் தேவ்பந்தின் பத்வாவாகவே கருதப்படும். இதில் யாருக்காவது ஐயம் இருந்தால் அவர்கள் தேவ்பந்த் தாருல் உலூம் மதரஸாவின் பத்வாக்களை முன்னுரையை படிக்கட்டும். பத்வா தொகுப்பாளர் அதில் எழுதுகிறார்.

இவ்வாறே பகீஹுல் உம்மத் மௌலானா முப்தி கிபாயத்துல்லாஹ் (ரஹ்) அவர்களும் தாருல் உலூமின் நல்ல மாணவராவார். இன்னும் மஜ்லிஸ் சூராவின் விசேச உறுப்பினராக பன்னெடுங்காலமாக தொடர்ந்து இருந்து வந்திருக்கிறார்கள். எனவே அவர்களின் பத்வா சேவையும் இந்த தாருல் உலூமின் ஒரு கிளை தான்.  (- பதாவா தாருல் உலூமின் முன்னுரை. பக்கம் 108.)

ஹளரத் மௌலானா முப்தி கிபாயத்துல்லாஹ் ஷா அவர்கள் கழுத்தில் மாலை போடுவது கூடும் என்கிறார்கள். சேரா போடுவதைத்தான் அது இந்துக்களின் வழக்கம் என்பதால் கூடாது என்கிறார்கள். எனினும் வேறு சில உலமா பெருமக்கள் சேரா போடுவதை ஹராம் கூடாது என்று சொல்லவில்லை.

இந்த வகையில் தஜல்லி எடிட்டர் ஹளரத் மௌலானா ஆமிர் உஸ்மானி சாஹிப் பாஜில் தேவ்பந்தி (ரஹ்) அவர்கள் எழுதுகிறார்கள். சேரா போடுவது அந்நிய வழக்கம். முஸ்லிம்கள் இதை தவிர்ப்பது நல்லது. எனினும் இதை ஹராம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.  தஜல்லி தேவ்பந்த். ஜுலை 1971 பக்கம் 28.

சேராவுக்கே ( அது கூடாது என்பதற்கு ) ஆதாரமில்லாத போது கழுத்தில் பூமாலை போடுவதற்கு ஆதாரம் எங்கிருக்கப் போகிறது..?

சேரா போடுவது கூடாது என்பதற்கு இந்துக்களின் வழக்கம் என்பதை ஆதாரமாக சொல்லப்பட்டது. ஆனால் இதைக்கூட சில ஆலிம்கள் ஏற்க மறுக்கிறனர். இந்த நிலையில் சேரா போடுவது கருத்து வேறுபாடுள்ள ஒரு மஸ்அலாவாக இருக்கிறது. ஆகவே அதை தவிர்ப்பது நல்லது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மணமகன் மாலை போடுவது சம்பந்தமாக இருபெரும் மதரஸாக்களான வேலூர் பாகியாதுஸ்ஸாலிஹாத் வேலூர் லத்தீபிய்யாவின் பத்வா என்ன என்பதை யாரும் தெரிய விரும்பலாம். நாம் அவர்களுக்கு ஹளரத் குத்பே வேலூரி (ரஹ்) அவர்களும் மருமகனும் தங்கையின் மகனுமாகிய ஹளரத் மௌலானா மௌலவி முப்தி செய்யது முஹம்மது ஷா காதிரி (ரஹ்) அவர்கள் அளித்த பத்வாவை அவர்கள் முன் வைக்கிறோம்.

கேள்வி : மணமகன் பூமாலை போடுவது கூடுமா…? கூடாதா.?மணமகன் பூமாலை போடுவார் என்பதை அறிந்து – அது காபிர்களுக்கு ஒப்பானதாக இருப்பதால் – அழைப்பை ஏற்காமல் இருப்பது அல்லது அழைப்பை ஏற்று அங்கு சென்று கழற்ற முயல்வது அல்லது கல்யாண மணவிழாவை விட்டும் வெளிநடப்பு செய்வது இதுவெல்லாம் முறையான செயலா… அல்லது முறையற்றதா..? விளக்கமளியுங்கள். இறை வெகுமதி பெறுங்கள்.

பதில் : அல்லாஹ்வை புகழ்ந்து அவனது தூதர் அவர் தம் கிளையோர் தோழர்கள் மீது நற்கிருபையும் சாந்தியையும் சாற்றியவனாக, பூமாலை கழுத்தில் போடுவது கூடும். ஏனெனில் பூ மாலையில் இரண்டு கண்ணோட்டம் இருக்கிறது. .1 ) அது ஒரு பூ. அது அலங்கார நறுமண வகையைச் சார்ந்ததும், பலனளிக்கும் ஒரு பொருளாகவும் இருக்கிறது. மேலும் அலங்காரம் ஆகுமான பயன்பாடு. நறுமணம் இதுவெல்லாம் அகிலத்தின் இரட்சகனாம் அல்லாஹ்விற்கும் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் பிடித்தமானவையாகும்.

قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ اللَّهِ الَّتِي أَخْرَجَ لِعِبَادِهِ وَالطَّيِّبَاتِ مِنَ الرِّزْقِ ۚ قُلْ هِيَ لِلَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا خَالِصَةً يَوْمَ الْقِيَامَةِ ۗ كَذَٰلِكَ نُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ

7:32. (நபியே!) நீர் கேட்பீராக: “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?” இன்னும் கூறும்: “அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு(அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்” இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். துன்யாவில் உள்ள மூன்று எனக்கு பிரியமானதாக ஆக்கப்பட்டுள்ளது.

  1. பெண்கள்.
  2. நறுமணம்.
  3. எனது கண் குளிர்ச்சி தொழுகையில்.

பூமாலையின்  ( 2 ) இன்னொரு கண்ணோட்டம் அது காபிர்களுக்கு ஒப்பானது என்பது. இது இங்கு இருக்கவில்லை. ஏனெனில் கூடா ஒப்பு எதிலென்றால் இழிவான காரியத்தில் தான். மேலும் அவர்களுக்கு ஒப்பாவது நோக்கமாகவும் இருக்க வேண்டும். இங்கு இந்த இரண்டும் இல்லை. இழிவான காரியம் என்பது அந்த சமூகத்தை அடையாளப்படுத்தும். – அவர்களை இனம் பிரித்து காட்டும் அடையாளச் சின்னங்களே தானே தவிர பல்வேறு சமூகங்களுக்கு மத்தியில் இருந்து வரும் கூட்டு பழக்க வழக்கங்கள் அல்ல.

ஒரு நாட்டின் அல்லது ஒரு ஊரில் வசிக்கும் அதிகமானோர் தங்களுக்கிடையில் பல கூட்டு வழக்கங்களை பழக்கப்படுத்தி கொண்டிருப்பர். அது அவர்கள் உண்ணும் உணவிலும் உடுத்தும் உடையிலும் அவர்கல் வசிக்குமிடத்தில் கூட இருக்கலாம். (இதுவெல்லாம் அந்த நாட்டு அல்லது ஊர் கலாச்சாரம் என்று சொல்லலாமே ஒழிய ஒரு குறிப்பிட்ட இனத்தின் கலாச்சாரம் என்று சொல்ல முடியாது. )

இந்த வகையில் பூமாலை போடுவது காபிர்களை அடையாளப்படுத்தும் இந்துத்துவ சின்னங்களல்ல. இந்தியர்களின் பொதுவான கூட்டுக் கலாச்சாரமாகும். இஸ்லாமியர்களும் காபிர்களும் தங்களது திருமணங்கள் விருந்து உபச்சார விழாக்கள் போன்றதில் காலங்காலமாக பயன்படுத்துகிறார்கள்.

ஒருவேளை யாராவது இது அசலில் அந்த காபிர்களிடமிருந்து வந்தவழக்கமாக இருக்கிறது என்று வாதிட்டாலும் கூட இதில் தப்பில்லை. ஏனெனில் இந்திய முஸ்லிம்கள் அசலில் ஆகுமானதாக இருந்த ஒரு நடைமுறையைத் தான் அவர்களைப் பார்த்து பழகி இறுதியில் இதுவே அவ்ரகளுக்கு மத்தியிலும் பரவலாக பழக்கத்தில் வந்து விட்டது.  (தவிர ஆரம்ப முதலே ஆகாத அவர்களின் தனிகலாச்சாரத்தை அவர்கள் கையில் எடுக்கவில்லை.)  இப்போது அவர்களுக்கு மட்டுமே உரிய நாகரீகமாக அது இருக்கவில்லை. மேலும் காபிர்களுக்கு ஒப்பாக வேண்டும் என்ற நோக்கமும் இங்கு மாலை போடும் யாருக்கும் இருக்க முடியாது. ஏனெனில் ஒரு விசுவாசி தனது சமூக மக்களின் பழக்கமாகவும் இருந்து வருகிற இந்த மாலை போடுதலை ஷரீஅத்தில் சுன்னத்தான தனது நிக்காஹில் சுயமாக செய்கிற போது அதில் அவர்களை போல் இருக்க வேண்டும் என்று எப்படி நாடுவார்.

இந்த மாலை போடுவது மார்க்கத்திற்கு முரணானதன்று. ஆகவே இது திருமண அழைப்பை ஏற்க மறுக்கும் காரணங்களில் உள்ளதல்ல. எனவே இதன் காரணமாக சுன்னத்தான அல்லது முஸ்தஹப்பான விருந்தழைப்பை ஏற்பதை விட்டு விடுவதோ அல்லது அங்கு அழைப்பை ஏற்று சென்ற பின் மாலையை அகற்ற முயன்று முடியாவிட்டால் மணவிழாவை விட்டும் வெளியேறிவிடுவதோ முறையான காரியமன்று. முறையற்றதாகும்.

இதற்கு சான்று எதுவென்றால் மௌலானா அப்துல் அஜீஸ் திஹ்லவி (ரஹ்) அவர்கள் தங்களது பத்வாவில் எழுதுகிறார்கள்.

சிறப்பான ஷரீஅத் சட்டத்தில் இசைவான விசயம் என்னவென்றால் காபிர்களுக்கு மட்டுமே சொந்தமான ஆடை கலாச்சாரமோ உணவு பழக்க வழக்கமோ எதுவானாலும் முஸ்லிம்கள் அதை கையாள்வது உபயோகிப்பது கூடாது. எனினும் சில நடைமுறைகள் காபிர்களுக்கு மட்டும் குறிப்பானதல்ல. ஆனால் அதிகமாக அவர்கள் தான் அவ்வாறு செய்கிறார்கள். முஸ்லிம்களும் செய்கிறார்கள் என்றாலும் அது குறைவு தான் என்றால் எவ்வித குற்றமும் இல்லை.

ஹளரத் மௌலானா முப்தி செய்யது முஹம்மது சாஹிப் காதிரி அவர்களின் மேற்படி பத்வாவின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால் அந்த காலத்தில் உள்ள ஒப்புக் கொள்ளப்பட்ட மார்க்க அறிஞர்களெல்லாம் இதை சரிபார்த்து உறுதிபடுத்தி பத்வாவில் கையெப்பமிட்டுள்ளனர். இரண்டாவது விசயம் ஹளரத் முப்தி ஷா அவர்கள் தநது பத்வாவிற்கு சான்று கூறுமிடத்தில் ஹளரத் மௌலானா அப்துல் அஜீஸ் திஹ்லவி (ரஹ்) அவர்களின் விளக்கத்தை காட்டியிருப்பதோடு இடத்துக்கு இடம் துர்ருல் முஹ்தார், மிர்காத், லம்ஆத், பத்ஹுல் கதீர். ஆகிய கிரதங்களை காட்டியுள்ளார்கள். இந்த கட்டுரை இன்னும் விரிவாகிவிடும் என்று அஞ்சி அவைகளை விட்டு விட்டோம். விரிவாக காண விரும்புபவர்கள் “அல்லதீப்” பார்க்கவும்.

இந்த பத்வாவில் இன்னொரு முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் வேலூர் அல்பாகியாதுஸ்ஸாலிஹாத் ஸ்தாபகர் ஹளரத் ஷம்சுல் உலமா அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களும் இந்த பத்வாவை சரி பார்த்து நற்சான்றிதழ் அளிக்கும் வகையில் கையெழுத்திட்டிருப்பது தான். இதைவிட அவர்கள் இறுதியில் எழுதியுள்ள வாசகம் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

( இவ்வாறு ) பதில் அளித்தவர் சரியாக சொல்லி விட்டார். இதில் தகராறு செய்பவர் தான் சந்தேகமே இல்லாமல் தவறிழைத்தவர் ஆவார். ( பானி பாக்கியாத்தின் பொன்னெழுத்தான இது படித்துணரத்தக்கதாகும்.)

இப்போது எந்த முஸ்லிம்கள்தான் அறியாமலிருப்பார். அத்தர், பூ, நறுமணம் பயன்படுத்துவது பரிசுத்த ஷரீஅத்தில் சுன்னத் என்று மேற்படி பத்வாவில் கூறப்பட்ட நபி மொழியும் இதற்கு தெளிவான ஆதாரமாகும். இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் பூமாலை விசயத்தில் இன்னும் யாராவது புரியாமலிருந்தால் நாம் அந்த சகோதரர்களின் நன்மைக்காக துஆ செய்வோம். அவ்வளவுதான்.