நாடு மிக முக்கியமான கட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறது. மிகவும் நம்பிக்கையுடன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர்கள் இப்போது முச்சந்தியில் அதிகாரமற்றவர்களாக நிற்கிறார்கள். மதவாதமும் சாதீயவாதமும் பெருந்தீயாக நாட்டைப் பற்றிப்படரும் சூழலில் கூடவே விலைவாசி உயர்வும் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியிருக்கிறது.
இந்தியா தன்னுடைய பண்டிகைக் காலத்தில் நுழையும் தருணத்தில் இந்தியர்கள் விலைவாசி உயர்வால் த்த்தளிக்கிறார்கள். துவரம் பருப்பு விலை ஒரு கிலோ இருநூறு ரூபாய்க்கும் மேல் பறக்கலாயிற்று. ஏற்கெனவே பருப்பு உற்பத்தி குறைந்துவிட்டதான தகவல் மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்துத்துவா ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டின் மிக முக்கியப் பண்டிகையான் தீபாவளி நெருங்கும் சமயத்தில் அது குறித்து விழிப்புணர்வுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் மொத்த நிர்வாகமும் மோடியின் வெளிநாட்டுப் பயண ஏற்பாடுகளில் மட்டுமே மூழ்கியிருப்பதை நாடு தொடர்ந்து கண்டுவருகிறது. அதைத் தவிர்த்தால் மதரீதியான வெறுப்புணர்வைத் திரட்டுவதில் விதவிதமான யுக்திகளோடு செயல்படுபவர்களாய் மாறிவிடுகிறார்கள்.
இதனால் அரசு மக்களின் நல்ன் நோக்கி என்ன செய்ய வேண்டும் என்கிற அக்கறையைக் கொள்வதில்லை. பருவ மழையும் தவறி, பருப்பு உற்பத்தியும் குறைந்துவரும் நிலையில் மத்திய அரசு மாநில அரசுகளைத் தக்கவிதமாக எச்சரித்திருக்க வேண்டும்; தானும் பருப்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செயவதை நிறுத்தியிருக்க வேண்டும். கையிருப்பும் பண்டிகைக் காலத் தேவையும் ஒன்றையொன்று ஈடு செய்கின்றனவா என்கிற எச்சரிக்கை உணர்வும் மத்திய அரசுக்கு இருந்திருந்தால் அது நல்லதாக இருந்திருக்கும். ஆனால் எது குறித்தும் அக்கறையோ எச்சரிக்கை உணர்வோ அரசுக்கு இருக்கவில்லை. மாநிலங்களை ஆளும் பெரும்பாலான அரசுகளும் அதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை. த்த்தம் மாநிலங்களிலுள்ள பதுக்கல் வியாபாரிகளைக் கண்காணித்து உடனடியாக அவற்றைக் கைப்பற்றியிருக்க வேண்டும்.
மக்கள் நல அரசுகளாய் இருந்திருந்தால் இந்தக் கடமையை அவை செய்திருக்கும். ஆனால் எந்த நாட்டின் அரசும் மக்களின் நலனிலும் அதுசார்ந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டிய தேவையில்லை என்று உலகமயமாக்கல் கொள்கை நிர்ப்பந்திக்கிறது. பதுக்கலோ விலைஉயர்வோ அதை மக்கள் நேர்நின்று எதிர்கொண்டு சமாளித்துக்கொள்ள வேண்டியதுதான் என உலகமயக் கொள்கையும் தாராள மயமாக்கலும் உலகிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் கைவிட்டுவிட்டது. மக்களின் மனநிலையில் உலகமயம் என்கிற கொள்கை படிந்துவிட்டதாகக் கருதும் மத்திய, மாநில அரசுகள் அதை மக்கள் எதிர்கொண்டு வாழவோ சாகவோ அனுமதிக்கின்றன. ஆனால் கடைசிகட்ட நிர்ப்பந்தங்கள் எப்படியோ மத்திய, மாநில அரசுகளைச் செயல்படும் கட்டாயத்துக்குத் தள்ளிவிடுவதுதான் இதில் நாம் கண்டுவரும் அதிசயம். இந்த வகையில் துவரம் பருப்பு, வெங்காயம் உள்ளிட்ட பல்வேறுபட்ட உணவுப்பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் தவித்தாலும் ஏதாவது செய்ய நினைக்கின்றன. ஆனால் வணிகச் சூதாடிகளைக் கண்டறிவதில் மிகப்பெரும் பாரபட்சங்கள் நிலவிவருகின்றன.
அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்ய இணைய வர்த்தக நடைமுறைகளுக்கு அரசுகள் ஊக்கம் அளிக்கின்றன. அதனால் வணிகச் சூதாடிகள் முதலில் விவசாயிகளை நெருங்கி மிகக் குறைவான விலையில் அவர்களின் உற்பத்திப் பொருள்களைக் கொள்ளையடிக்கின்றனர். விவசாயி பட்ட கஷ்டங்களுக்கும் அவன் போட்ட முதலுக்குமே ஆபத்து உண்டாகிறது. மேலும் வட்டி போன்ற கொடுங்கரங்களிலிருந்து தப்பிக்கக் கிடைத்தவரைக்கும் ஆதாயம் என்று தன் உற்பத்திப் பொருள்களை வந்த விலைக்கு விற்கிறான் விவசாயி: இதனால் வாழ்க்கையை நடத்துவதில் பெரும் சிரமத்தைச் சந்திக்கிறான். அரசும் அவர்களின் உற்பத்திப் பொருளுக்கு ஒரு நியாயமான கொள்முதல் விலையை நிர்ணயிப்பதில்லை.
மலிவான விலைக்குப் பொருளைக் கொள்முதல் செய்த வணிகர்கள் அதனைத் தம் கிட்டங்கியில் பத்திரமாகச் சேமித்துவைத்து விலையை நிர்ணயிக்கும் வகையில் தனக்குக் கீழேயுள்ள வியாபாரிகளிடம் பேரம் பேசுகிறார்கள். உற்பத்திப் பொருள்கள் இப்போது பெரும் வணிகர்களின் கையிருப்பாக வைக்கப்பட்டுள்ளனவா அல்லது பதுக்கப்பட்டு இருக்கின்றனவா? இதை நாம் உணர முடியாத அளவுக்கு இந்த இணையதள வணிகம் கோடிக்கணக்கில் பணம் புரளும் சூதாட்டமாக உள்ளது. யாரோ உற்பத்திசெய்த இந்தப் பொருட்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருவது பெருவணிகர்களின் கருணைசார்ந்த விஷயமாகும். தன் உற்பத்திக்குத் தானும் நிவாரணம் பெறமுடியாமல், பொதுமக்களுக்கும் நியாய விலைக்கு விற்கப்படாமல் இடையே நுழைகிற வணிகப் பெருச்சாளிகள் மட்டுமே பெரும் இலாபத்தைச் சம்பாதிக்கின்றனர். ஆக, அரசு மக்களின் வயிற்றுப்பாடு குறித்து அக்கறை கொள்ளாமல் வணிகச் சூதாடிகள் கொடுக்கும் நன்கொடையை ஏற்றுக்கொள்கின்றது. இதனால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் பதுக்கப்படுவதும் அநியாய விலைக்கு விற்கப்படுவதுமாய் கொடுங்கோன்மை நிலவி வருகிறது.
இப்போது துவரம் பருப்புக்கும் வெங்காயத்திற்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி இதுதான். மக்களின் ஆவேசம் பொங்கிவரும் சூழ்நிலையில்தான் மாநில அரசுகள் பதுக்கல் பொருட்களைக் கைப்பற்ற முனைந்தன. இப்படி மக்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பு வராதவரைக்கும் அரசு எந்தப் பதுக்கல் வணிகர்களின் கிட்டங்கிகளையும் நெருங்காது.
மக்களின் கவனத்திலிருந்து இந்த விலை உயர்வை மறைக்கவே மதவெறியைக் கிளப்பி ஆதாயம் தேட மோடி – அமித்ஷாவின் தலைமை முயன்றது. ஆனால் நாட்டின் கலைஞர்களும் எழுத்தாளர்களும் விஞ்ஞானிகளும் சமூகநல ஆர்வலர்களும் தொடர்ந்து எழுப்பிய கண்டன முழக்கங்களால், மோடியும் அவரது கட்சியும் சங்கடங்களைச் சந்தித்தது. மதவெறிக் குற்றத்திலிருந்து தப்பிக்க மோடி அரசு விலை உயர்வைக் கட்டுப்படுத்தலாம் என்றுஒப்புக்குச் செயல்படுகிறது. இத்தகைய எதிர்ப்புணர்வுகள் வராதிருந்திருக்குமானால் விலைவாசிகள் மொத்த நாட்டையும் வேட்டையாடி இருக்கும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் வேண்டாம்.
பொதுவாகவே இணையதள வணிக நடைமுறைகள் வேண்டாம் என்பதுதான் பல கட்சிகளின் கோரிக்கையாகவும் இருக்கிறது. இந்த நடைமுறைய முன்னால் அரசுகள்தான் கொண்டுவந்தன. ஆனால் முந்தைய அரசின் அனைத்து நடைமுறைகளையும் குறைசொல்லி ஆட்சியைக் கைப்பற்றிய மோடியும் அந்த இணையதள வணிகத்திற்குத் தடைபோட விருப்பமில்லாமல் மதிமயங்கி நிற்கிறது.
இன்னும் வருங்காலத்தில் விலைவாசிகள் றெக்கை கட்டிப் பறக்க வாய்ப்புகள் இருப்பதாகவே பலரும் கருதுகின்றனர். நாட்டு மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் பற்றி அக்கறையில்லாமல், நெருக்கடியான காலச்சூழல்கள் குறித்த சிந்தனையும் இல்லாமல் அரசு செயல்படும்போது ஏழைகள் வாழ வழியில்லாமலேயே போய்விடலாம். இதன் கோரம் கொலை, கொள்ளை, வழிப்பறி என மாறி மொத்த நடப்புகளையும் தலைகீழாக மாற்றிப் போட்டுவிடலாம்.
நாடு இவ்வளவு சிக்கலான அபாயத்தில் இருக்கும்போது பா.ஜ.க.வும் அதன் அரசும் மதவெறி. சாதிவெறி நடவடிக்கைகளுக்குத் துணைபோவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வளர்ச்சி என்ற சொல்தான் பிரதமரின் தாரக மந்திரம் என்றால் அது செல்லவேண்டிய தூரம் அதிக அளவுக்கு உள்ளது. ஆனால் முதலில் கண் திறந்தாவது பார்க்க வேண்டுமல்லவா?