மௌலவி அல் ஹாஃபிழ் A.M. அலி இப்ராஹீம் ஜமாலி M.A., M.B.A., M.Phil
கடந்த 16.12.2012 அன்று இந்தியத்தலைநகர் தில்லியில் 23 வயது ‘நிர்பயா‘ (என்று ஊடகங்களால் பெயர் சூட்டப்பட்ட) இளம் பெண் பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த போது, ஆறுபேர் கொண்ட ஒரு கும்பல் அவளை பாலியல் வன்முறை செய்து நாசப்படுத்திவிட்டனர். பிறகு அரசு சார்பாக சிங்கப்புருக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டும் பலனின்றி அப்பெண் இறந்து விட்டாள். உடனே இந்தியா முழுவதும் பல இடங்கள் போர்க்களம் ஆயின. நீதிகேட்டு வீதிக்கு வந்தனர் பொதுமக்கள். இவர்களில் இளம் ஆண்களும், இளம் பெண்களும் அதிகம்.
தில்லிப் போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்த அதே நேரத்தில், 20.12.2012 அன்று தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், கிளாக்குளம் கிராமத்திலிருந்து பள்ளி செல்ல நடந்து வந்த 13 வயது கூட நிரம்பாத, பருவமடையாத சிறுமியைச் சீரழித்துக் கொலை செய்தான் ஒரு காமக் கொடூரன். புனிதா என்ற இச்சிறுமியின் கொடூரக் கொலை குலைநடுங்க வைத்தது அடங்குவதற்குள் விழுப்புரம் அருகே ஒரு பாலியல் வன்முறை, அதற்கு முன் காரைக்கால் அருகே பாலியல் வன்முறை. செய்தித்தாளைத் திறந்தால் பாலியல் வன்முறை குறித்த செய்தி இல்லாமல் இருப்பதில்லை.
பேத்தியை வல்லுறவு கொண்ட தாத்தா, பெற்ற மகளை வன்புணர்வு செய்த தகப்பன், மாணவியை சீரழித்த ஆசிரியர் என காமக் கொடூரன்களின் கண்மண் தெரியாத வெறியாட்டங்கள் நீள்கின்றன, தொடர்கின்றன.
இது மட்டுமன்றி, விருப்பமில்லாத பெண் மீது அமிலம் வீசும் ஒரு ‘புதிய கலாச்சாரம்‘ தற்போது பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த ஜனவரி 9 ஆம் தேதி கேரளாவைச் சேர்ந்த அஞ்சலி என்ற பெண்ணின் சிலர் ஆசிட் வீசினர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் காதலை மறுத்த இரண்டு மாணவிகள் மீது இளைஞர்கள் ஆசிட் வீசியதால் அப்பெண்கள் பலியான சம்பவத்தை செய்தியில் பார்த்திருப்போம். சமீபத்தில் அதே போன்று அமிலம் வீசப்பட்டு இறந்து போன வினோதினி, வித்யா என்ற பெண்களின் கதைகளையும் சுடச்சுட பார்த்திருப்போம், படித்திருப்போம்.
கல்வி வளர்ச்சி அதிகரித்து வரும் இக்காலத்தில் காமக் கொடூரங்களும் அதிகரித்து வருவது ஏன்? பொருளியல் வளர்ச்சி முன்பிருந்ததைவிட அதிகரித்து வரும் நிலையில் திருட்டும், கொள்ளையும், கள்ளக்கடத்தலும்; அதிகரித்துவருவது ஏன்? ஒழுக்கத்தை விதைக்காத கல்விப் பெருக்கமும், அறத்தைச் சாராத பொருள்வளர்ச்சியும் காட்டு மிராண்டிக் காலத்தைவிடக் கொடுமைகளைக் கூடுதலாக்கும். அப்படிப்பட்ட காண்டுமிராண்டிக் காலத்தில் நாம் வாழ தலைப்பட்டு விட்டோமா? இதற்கெல்லாம் தீர்வுகள்தான் என்ன?
உலகில் அதிக விகிதத்தில் பாலியல் வன்முறைகள் நடக்கும் நாடு அமெரிக்காதான். இந்தியாவில் இருப்பதைவிடப் பெண்ணுரிமை அதிகமுள்ள நாடு அமெரிக்கா. அதே போல் திருட்டும் கொள்ளையும் அதிக விகிதத்தில் நடக்கும் நாடு அதே அமெரிக்காதான். உலகில் மிகப்பெரிய பணக்கார நாடும் அதுதான்.
2011 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த பாலியல் வல்லுறவுகளுக்காகப் பதியப்பட்ட வழக்குகள் 83,425. குத்து, வெட்டு, துப்பாக்கிச்சூடு போன்ற வன்முறைக் குற்றங்களுக்காகப் பதியப்பட்ட வழக்குகள் 12,03,564. கொலை வழக்குகள் 14,612. கொள்ளை வழக்குகள் 3,54,396. மோட்டார் வாகனத் திருட்டு வழக்குகள் 7,15,373. இப்படி இன்னும் நீள்கிறது பட்டியல்.
2011 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் சிறைக்கைதிகள் எண்ணிக்கை 20,19,234. அமெரிக்க நாட்டின் மக்கள் தொகை 2011 இல் 31,15,91,917.இந்தியாவின் மக்கள் தொகை 121,01,43,422. இந்திய நாடெங்கும் 2011 இல் சிறைக்கைதிகள் எண்ணிக்கை 3,13,635. அமெரிக்கா கிட்டத்தட்ட 100விழுக்காடு கல்வி வளர்ச்சி பெற்ற நாடு. பொருளியல் வளர்ச்சியில் இந்தியாவை விட எத்தனையோ மடங்கு உயரத்தில் இருக்கிறது. அவை போலவே பெண்ணுரிமையும் இந்தியாவை விட மிக அதிகமாக அங்குள்ளது. பிறகு அங்கு ஏன் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் அதிகமாக உள்ளன?
அறிவு வளர்ச்சி இருக்கிறது. உரிமைகள் பல இருக்கின்றன. பொருள் வளர்ச்சி இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் ஒழுங்குப்படுத்தும்,நெறிப்படுத்தும் ஒரு சட்ட வரைமுறை அங்கு நடைமுறையில் இல்லை என்பதே உள்ளங்கை நெல்லிக்கனி. எனவேதான் அங்கு ஒழுக்கமும் வளரவில்லை. அறமும் வளரவில்லை.
மனிதனை நெறிப்படுத்தும், ஒழுக்க மாண்பினை ஏற்படுத்தும் சட்டங்களே சிறந்த சட்டங்கள் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமேயில்லை. அப்படிப்பட்ட சிறந்த சட்டங்களும், மேற்கண்ட குற்றங்களை வேரோடு களையத் தீர்வுகளும் இஸ்லாமிய மார்க்கத்தில் மட்டுமே உள்ளது.
மனிதன் மனிதனாக வாழ்வதற்கு நெறிகள் அமைத்துத் தந்துள்ளது இஸ்லாம். இறைத்திருப்தியை அடைய வேண்டுமெனில் மனிதன் தன் சக மனிதனை அவன் உரிமையை, மானத்தை மதிக்க வேண்டுமென்று சொல்லித் தருகிறது இஸ்லாம்.
கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் தன்னுடைய இறுதி ஹஜ்ஜின் போது தனது தோழர்களுக்கு ஆற்றிய உரையில் பின் வருமாறு குறிப்பிட்டார்கள்: ‘இந்த மாதமும் இந்த புனிதமிக்க மக்கமா நகரமும் இந்;த நாளும் எப்படி புனிதமானதோ அவ்வாறே ஒரு முஸ்லிமின் கண்ணியம், உயிர், உடமைகள் புனிதமானவை. ஒரு முஸ்லிமுடைய கண்ணியம் அவனுடய இரத்தம் அவனுடைய சொத்து, செல்வங்கள் மற்ற முஸ்லிம்களுக்கு ஹராமாகும்‘. ஆதாரம் : புகாரி
மனிதனின் கண்ணியத்தை பெருமானார் (ஸல்) மக்கா நகரத்தின் புனிதத்தன்மைக்கு இணையாக குறிப்பிட்டிருப்பது மனிதனின் மானம் எவ்வளவு பெருமானம் மிக்கது என்பதையே காட்டுகின்றது.
பாலியல் வேட்கை என்பது உடல் சார்ந்தது மட்டுமன்று. மனம் சார்ந்ததும் ஆகும். அது வேண்டாமென்று ஒரு போதும் இஸ்லாம் சொல்லவில்லை. ஆனால் அதை முறைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறது, வழி காட்டுகிறது.
இன்று பாலியல் உணர்வுகளைத் தூண்டுவதிலும், அதற்கு தீனி போடுவதிலும் ஊடகங்கள் முன்னிலை வகிக்கின்றன. திரைப்படங்களிலோ,விளம்பரப்படங்களிலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ, கதைகளிலோ, ஏடுகளிலோ பாலியல் உணர்வுகளைத் தூண்டும் படங்களோ,காட்சிகளோ இல்லாமல் இருப்பது அரிது. விளம்பரப் படங்கள் கூடப் பாலியல் உணர்வைத் தூண்டி விட்டுத்தான் தமது பொருளை விளம்பரம் செய்கின்றன. ஒரு ஆண் அணியும் உள்ளாடை முதல் அவன் போடும் வாசனைத் திரவியம் வரை அனைத்து விளம்பரங்களுக்கும் பெண்களே காட்சிப்படுத்தப்படுகின்றனர். தெருக்களில், சாலைகளில் திரும்பிய பக்கமெல்லாம் பாலுணர்வைத் தூண்டும் படங்கள், விளம்பரங்கள்! இதன் மூலமே வயிறு வளர்க்கிறது ஒரு கூட்டம்.
பெண்ணை நுகர்பொருளாக, உடமையாகக் கற்றுக்கொடுக்கும் ஊடகங்களும், சினிமாவும் அவளை அடைந்தே தீரவேண்டிய பொருளாகவே பார்க்கிறது. இந்தக் காதலை வியாபாரமாக்கிக் கொள்ளும் முதலாளித்துவமோ இன்றைய இளைஞர்களிடம் காதலைக் கூவிக் கூவி விற்றுக் காசாக்கிக் கொள்கிறது. நவீன வியாபாரத் தந்திரமோ பெண்களை அரைகுறையாக சீயர் லீடர்ஸ் என்ற பெயரில் கவர்ச்சிக்கு உபயோகப்படுத்துகிறது.
இத்தாக்கத்தின் காரணமாக மேலை நாட்டு ஆண்களையும் பெண்களையும் பின்பற்றி நம் நாட்டு இளைஞர்களும் அரை குறையாக பரமுடாஸ்‘என்று முழங்காலுக்கு மேல் கால்சட்டை அணிந்து கொண்டு வீதிகளில் நாகரிகக் குறைவாக அலைகின்றனர். பெண்களோ இன்னும் ஒரு படி மேலே போய் பெண்கள் அதை விட குறைவாக ஆடை அணிந்து பாதி உடல் தெரிவது போல் ஆபாசமாய் உலா வருகின்றனர். கேட்டால் பெண் சுதந்திரம் என்று கூக்குரலிடுகின்றனர்.
ஆனால் இப்படிப்பட்ட ஆபாசத்தை, பாலியல் ரீதியான கலாச்சார சீர்கேட்டை அடியோடு மறுக்கிறது இஸ்லாம். அடுத்தப் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பிப்பதுதான் பாலியல் வன்முறைக்கான ஆரம்ப விதை. எனவே அந்த விதையையே விதைக்கக்கூடாது என அறுதியிட்டு சொல்கிறது இஸ்லாம். ஆண்களையும், பெண்களையும் தங்கள் பார்வைகளை தாழ்த்த சொல்கிறது அருள்மறை.
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும், நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். இன்னும், முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக, அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும், தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது, இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். (அல் குர்ஆன் 24: 30-31).
அதே நேரத்தில் அவசியமான நேரங்களில் ஆண், பெண் இரு பாலாரும் கலக்க வேண்டிய தருணங்களில் (குறிப்பாக கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள்), பெண்கள் தங்கள் உடலை ஷரீஅத்தின் அடிப்படையில் மறைத்திருக்க வேண்டும் என்றும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. தங்கள் அவயங்களை சரியான முறையில் மறைத்து ஆண்களின் பார்வைகளை விட்டும் பாதுகாக்க வேண்டும் தேவையற்ற சூழ்நிலையில் ஒரு ஆணும்,பெண்ணும் சந்தித்தால் மூன்றாவதாக ஷைத்தான் உடனிருக்கிறான் என்று எச்சரித்துள்ளார்கள் கண்மணி நாயகம் (ஸல்);.
இதன் மூலம் குற்றம் நடந்த பின் அது ஏன் நடந்தது என்பதை ஆராய்வதை விட, அக்குற்றத்திற்கான காரணிகளை களையச் சொல்கிறது இஸ்லாமிய மார்க்கம்.
அடுத்து ஒருவன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் அவனுக்குரிய தண்டனை என்ன என்பதில் பல்வேறு விதமான வாதங்களும்,விவாதங்களும் ஊடகங்களில் நாள்தோறும் நடைபெறுகின்றன. தமிழக முதல்வர் கூட 13 அம்ச திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறார்.
ஆணாதிக்கம், ஊடகங்களால் தூண்டிவிடப்படும் பாலியல் வெறி, மதுப்பழக்கம் போன்றவை பாலியல் குற்றங்களின் தூண்டுவிசைகளாக சுட்டிக்காட்டப்படுகின்றன. குற்றவாளி எவ்வாறு குற்றமிழைத்தானோ, அதே போன்று அவனுக்கு தண்டனை அளிக்கப்படவேண்டும் என்று பலர் வற்புறுத்துகின்றனர். சமீபத்தில் இறந்த வினோதினி என்ற பெண்ணின் தந்தை கூட என் மகள் எவ்வாறு அமில வீச்சின் காரணமாக துடித்தாளோ,அந்தத் துடிப்பை குற்றவாளியும் உணர்வதற்கு ஏதுவாக அவன் முகத்தில அமிலம் வீசப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்.
இன்னும் சிலர் பாலியல் வன்முறை புரியும் ஆண்களைத் தண்டிக்க வேண்டும். அதற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோருகின்றனர். பாலியல் குற்றம் புரிந்த ஆண்களின் ஆண்மையை அகற்றுதல் அதாவது காயடித்தல் – அதற்கான ஊசி போடுதல் போன்ற தண்டனைகளையும் சிலர் முன் மொழிகின்றனர்.
தண்டனையை கடுமையாக்குவது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உடனடி வழக்கை முடித்து தீர்ப்பு தருவது ஆகியவை ஓரளவுக்கு பயன் தரும் என்றாலும் அது தும்பை விட்டு வாலை பிடிப்பது போலாகும். குற்றங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதே அறிவுடைமையாகும்.
திருவள்ளுவர் இது குறித்து ஒரு குறளில் சொல்கிறார்,
”நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்‘
நோயை உண்டாக்கும் காரணிகளை அழிப்பதே நோய் வராமல் தடுக்கும் உத்தியாகும். Prevention is better than cure என்று ஆங்கிலத்தில் கூட ஒரு பொன்மொழி உண்டு. இன்று பரவி வரும் பாலுறவு பலாத்காரங்கள் ஒரு சமூக நோயாக பரவி வருகின்றன. இதற்கான காரணங்களை ஆராயாமல், அதன் தண்டனையை அதிகரிப்பதன் மூலம் மட்டும் இதனை தீர்த்துவிடலாம் என்று கருதுவது பேதமை.
இஸ்லாத்தைப் பொறுத்தமட்டில், நோய் வந்தபின் கொடுக்கப்படும் சிகிச்சையை விட நோய் வராமல் தடுப்பதில்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இருந்த போதும் ஒருவன் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, அப்பெண் மரணமடைந்து விடுவாளெனில் அவனைக் கொலை செய்வது தவறில்லை. அதே போல் அமில வீச்சின் காரணமாக அப்பெண் இறந்தாள் எனில், குற்றவாளியும் அமில வீச்சின் மூலம் கொல்லப்படுவதும் தவறில்லை என்பதே இஸ்லாமிய சட்டமாகும். இந்திய நாட்டுக் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து,இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தை அமல்படுத்தினால் குற்றங்கள் குறையும் என்பது கண்கூடு.
இறுதியாக ஒரு பெண்ணின் மானத்தை, அவளின் கண்ணியத்தை எவ்வாறு மதிக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லிக்கொடுக்கக்கூடிய ஒரு அழகிய வழிமுறையைக் குறிப்பிட்டு இவ்வாக்கத்தை நிறைவு செய்வது சிறப்பாக இருக்கும். பருவ வயதை அடையாக ஒரு சிறுவன் தன் தாயாக இருந்தாலும் சரி, மூன்று வேளைகளில் அனுமதி பெற்று வீட்டுக்குள் செல்ல வேண்டும் என்று அருள்மறை அறிவுறுத்துகிறது.
ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்(அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும், ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான) உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் ‘ளுஹர்‘ நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும் – ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் – (அல்குர்ஆன் 24: 58).
அதே நேரத்தில் பருவவயதை அடைந்தவர்களாக இருந்தால் அவர்கள் எல்லா நேரத்திலும் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு சிறுவயதில் இருந்தே பெண்களைப் பற்றிய கண்ணியத்தையும், ஒரு பெண்ணின் மானத்தைப் பாதுகாப்பதற்கு உரிய வழியையும் சொல்லிக்காட்டுகிறது உயரிய இஸ்லாமிய மார்க்கம். சத்திய இஸ்லாத்தின் சட்டங்களை முழுமையாக அமல்படுத்தினால் பாலியல் வன்முறைக் கொடுமைகள் குறையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.