படைப்பினங்களிலேயே ஆக உயர்ந்த படைப்பாக அல்லாஹ் மனிதனைப் படைத்திருக்கின்றான். அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மனிதனுக்கு அளவில் மிகச்சிறியதாக இருக்கும் நாவை வழங்கி பேசும் ஆற்றலை தந்திருக்கின்றான்.
அளவில் சிறிதாக இருக்கும் நாவினால் மனிதன் சில நேரங்களில் மேன்மையடைகின்றான். ஆனால் பல நேரங்களில் சிறுமையடைந்தும் விடுகின்றான்.
உலகில் நிகழும் பல பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருப்பது என்னவோ இந்த நாவு தான் என்றால் அது மிகையாகாது. இந்த நாவின் மூலம் பல குடும்பங்களுக்கிடையே பிரிவுகளும், பல சமூகங்களுக்கிடையே பெரும் போர்களும் அழிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. அதே போல் மிகப் பெரிய சமுதாய எழுச்சிகளும், புரட்சிகளும் ஏற்பட்டிருக்கின்றன.
எனவே நாம் இந்த நாவைப் பயன்படுத்துவதைப் பொறுத்து அதன் விளைவு ஆக்கப் பூர்வமானதாகவோ அல்லது அழிவைத் தரக்கூடியதாகவோ அமைகிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “ஒரு அடியான் அல்லாஹ் திருப்தியுறும் வார்த்தையைக் கூறுகிறார். (ஆனால்) அதனுடைய சக்தியைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. இதன் காரணமாக அல்லாஹ் அவனுடைய அந்தஸ்த்தை உயர்த்துகிறான். இன்னொரு மனிதன் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய வார்த்தையை பேசுகிறான். (ஆனால்) அவன் அதனுடைய சக்தியை எண்ணிப் பார்ப்பதில்லை. இதன் காரணமாக அல்லாஹ் அவனை நரகத்தில் எறிகிறான்”. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )
நம் வாயிலிருந்து வெளியாகும் அனைத்து வார்த்தைகளும் பதிவு செய்யப்படுகின்றது:
அல்லாஹ் கூறுகிறான்: “(மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகின்றது.) ( அல்குர்ஆன்: 50:18 )
இறைவனால் நியமிக்கப்பட்டிருக்கும் வானவர்கள் கன நேரம் கூட தவறாமல் நம்மைக் கண்கானித்துக் கொண்டு இருக்கின்றார்கள். மேலும், நம்முடைய அனைத்துச் செயல்களையும் பதிவு செய்து கொண்டும் இருக்கின்றனர்.
மேலும் நம் வாயிலிருந்து உதிரும் அனைத்து வார்த்தைகளையும் ஒன்று கூட விடாமல் பதிவு செய்கின்றனர்.
எனவே,அல்லாஹ் மறுமையில் இவை குறித்து நிச்சயமாக நம்மிடம் கேள்வி கேட்பான் என்பதை முஸ்லிமான ஒவ்வொருவரும் நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய ஜும்ஆவில் நாம் இன்று மக்களிடையே புறையோடியிருக்கிற ஒரு தீய குணம் குறித்துப் பேசவும் கேட்கவும் இருக்கின்றோம்.
நாம் வாழ்கிற இக்காலக் கட்டத்தில் பிறர் பற்றி புறம் பேசுவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.
புறம் பேசுதல் (Gossip). ஒரு போதையாக மாறிவிட்ட காலம் இது. போதைப் பழக்கம், போதைக்கு அடிமையாகி இருப்பவரை மட்டுமின்றி அவரைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிப்பதைப் போல, புறம் பேசுதலும் பேசுபவரை மட்டுமில்லாமல் அவரைச் சுற்றி இருப்போரையும் பாதிக்கிறது.
உலக அளவில் 60 சதவீதம் மக்கள் ஒருவரைப் பற்றி மற்றவர் ஏதேனும் ஒன்றைப் பேசுகிறார்கள் என்கிறது மேலை நாட்டு ஆய்வு ஒன்று. மேலும், சிலர் மற்றவர்களைப் பற்றி தாழ்வாக பேசுவது தங்களை உயர்வாக நினைக்கச் செய்யும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் புறம் பேசுபவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளவே செய்கிறார்கள். இவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல என்ற எண்ணத் தைத்தான் பிறர் மனதில் விதைக்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வின் முடிவு.
ஒருவர் இன்னொருவர் பற்றி புறம் பேசுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றது, மிக முக்கியமாகக் கருதப்படும் இரு காரணங்களை நாம் அறிவது அவசியமாகும்.
பொறாமை, முக்கியத்துவ உணர்வு என்ற இரு காரணங்களே அவையாகும்.
நொடிப் பொழுதில் நிகழ்ந்துவிடும் தன்மைகொண்டது பொறாமை. தன்னிடம் இல்லாத ஒன்று பிறரிடம் இருக்கும்போது, அவர்மீது பொறாமை ஏற்படுகிறது. அவரிடத்தில் இருக்கும் அந்த ஒன்றோ அதைபோல் வேறு ஒன்றோ கிடைத்தால் அன்றி, பொறாமை போகாது. அல்லது அவர்களிடத்தில் அதைப் பற்றிய மதிப்பு குறைய வேண்டும் என்ற நோக்கில் அவரைப் பற்றி பிறரிடம் நாம் புறம் பேசுவோம்.
நாம் இருக்கும் இடத்தில் எப்போதுமே ஓர் முக்கியத்துவ உணர்வைப் பெற விரும்புகிறோம். நாம் குடும்பத்தில், பணிபுரியும் இடத்தில், நண்பர்கள் மத்தியில், சுற்றி இருப்பவர்கள் மத்தியில், ‘சிறந்தவர்’ என்ற உணர்வைப் பெற விரும்புகிறோம். இந்த உணர்வை எல்லா இடத்திலும் நாம் எதிர்பார்ப்பதில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மட்டுமே எதிர்பார்கிறோம். அப்படி நாம் பெற்றிருக்கும் இந்தச் சிறப்பை நாம் இழந்து அந்த இடத்திற்கு இன்னொருவர் வந்து விடுவார் என்று அஞ்சுகிற பொழுதோ அல்லது இன்னொருவர் வந்து விட்டாலோ அவர் குறித்து நாம் குறை கூறுவோம், புறம் பேசுவோம்
பொறாமையாலும், முக்கியத்துவ உணர்வாலும் ஈமானை இழந்த அப்துல்லாஹ் இப்னு உபை..
وزيد بن أرقم ونفر من الأنصار عند عبد الله بن أبي-فلما سمعها قال: قد ثاورُونا في بلادنا. والله ما مثلُنا وجلابيب قريش هذه إلا كما قال القائل: “سَمن كلبك يأكلك”. والله لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل. ثم أقبل على من عنده من قومه وقال: هذا ما صنعتم بأنفسكم، أحللتموهم بلادكم، وقاسمتموهم أموالكم، أما والله لو كففتم عنهم لتحولوا عنكم في بلادكم إلى غيرها. فسمعها زيد ابن أرقم، فذهب بها إلى رسول الله صلى الله عليه وسلم وهو غُلَيّمٌ -وعنده عمر بن الخطاب رضي الله عنه-فأخبره الخبر، فقال عمر رضي الله عنه: يا رسول الله مر عَبّاد بن بشرْ فليضرب عنقه. فقال صلى الله عليه وسلم: “فكيف إذا تحدث الناس -يا عمر-أن محمدا يقتل أصحابه؟ لا ولكن ناد يا عمر في الرحيل”.
فلما بلغ عبد الله بن أبي أن ذلك قد بلغ رسولَ الله صلى الله عليه وسلم، أتاه فاعتذر إليه، وحلف بالله ما قال ما قال عليه زيد بن أرقم -وكان عند قومه بمكان-فقالوا: يا رسول الله، عسى أن يكون هذا الغلام أوهم ولم يثبت ما قال الرجل.
وراح رسول الله صلى الله عليه وسلم مُهجرًا في ساعة كان لا يروح فيها، فلقيه أسيد بن الحضير فسلم عليه بتحية النبوة، ثم قال: والله لقد رُحتَ في ساعة مُنكَرَة ما كنت تروح فيها. فقال رسول الله صلى الله عليه وسلم: “أما بلغك ما قال صاحبك ابن أبي؟. زعم أنه إذا قدم المدينة سيخرج الأعز منها الأذل”. قال: فأنت -يا رسول الله-العزيزُ وهو الذليل. ثم قال: يا رسول الله ارفق به فوالله لقد جاء الله بك وإنا لننظم له الخَرزَ لِنُتَوّجه، فإنه ليرى أن قد استلبتَه ملكا.
فسار رسول الله صلى الله عليه وسلم بالناس حتى أمسوا، ليلته حتى أصبحوا، وصَدرَ يومه حتى اشتد الضحى. ثم نزل بالناس ليشغلهم عما كان من الحديث، فلم يأمن الناس أن وجدوا مَس الأرض فناموا، ونزلت سورة المنافقين
அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் என்பவனுக்கு நபி (ஸல்) அவர்கள் மீது விரோதம் இருந்தது. காரணம் மதீனாவின் மக்கள் அவனைத் தங்களின் தலைவராக ஏற்க இருந்த நிலையில்தான் நபி {ஸல்} மதீனாவிற்குக் குடிபெயர்ந்தார்கள். சூழல் மாறியது. மக்கள் அவனைத் தலைவராக ஏற்கவில்லை.
இதனை மனதில் வைத்திருந்த அப்துல்லாஹ் இப்னு உபை சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்திக் கொண்டிருந்தான். மதீனாவாசிகளிடம், “நமது ஊருக்கு வந்த வந்தேறிகள் நம்மையே மிகைத்து விட்டார்கள். நாயை நல்ல கொழுக்க வளர்த்தால், அது இறுதியில் நம்மையே தின்றுவிடும். இழிவானவர்களை மதீனாவிலிருந்து வெளியேற்ற வேண்டும். நீங்கள் அவர்களுக்குக் கொடுப்பதை நிறுத்திக் கொண்டால் அவர்கள் உங்களை விட்டுவிட்டு வேறு ஊருக்குச் சென்று விடுவார்கள்” என்று நபிகளாரைப் பற்றி அவதூறு கூறினான் அப்துல்லாஹ் இப்னு உபை.
அக்கூட்டத்தில் இருந்த ஜைது இப்னு அர்கம் (ரலி) இதைக் கேட்டு நபி (ஸல்} அவர்களிடம் அதைச் சொல்லிவிட்டார். உஸைது (ரலி) என்பவர், அப்துல்லாஹ் இப்னு உபை ஏன் நபிகளார் மீது வெறுப்புக் கொண்டார் என்று விளக்கி நபிகளாரைச் சாந்தப்படுத்தினார். இருப்பினும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபைக்கு ஆளனுப்பினார்கள்.
அவனிடம் அது குறித்துக் கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு உபை நபியவர்களைச் சந்தித்து, தான் அப்படி எதுவும் பேசவில்லை என்று சத்தியம் செய்து கூறினான். “ஜைது இப்னு அர்கம் பொய்யர், சரியாக விளங்கி இருக்கமாட்டார் அல்லது சரியாக நினைவில் வைக்கத் தெரியாதவர்” என்றெல்லாம் அப்துல்லாஹ் இப்னு உபைக்குச் சாதகமாகச் சிலரும் பேசினர்.
நபிகளாரும் அப்துல்லாஹ் இப்னு உபையை நம்பினார்கள், ஜைது இப்னு அர்கம் பொய் சொல்வதாக எண்ணினார்கள். அப்போது அல்லாஹ் இறை வசனங்களை அனுப்பினான்.
அதில், “நாங்கள் மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்’ என்று அவர்கள் கூறுகின்றனர்; ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களுக்குமே உரியது; எனினும், இந்நயவஞ்சகர்கள் அதை அறிந்து கொள்ளமாட்டார்கள்” என்ற வசனத்தின் மூலம் ஸைது இப்னு அர்கம் சொன்னதை உண்மை என்று இறைவன் தெளிவுபடுத்தினான். அதனை நபி முஹம்மது(ஸல்) ஸைது இப்னு அர்கத்தை அழைத்து ஓதிக் காட்டினார்கள். ( இப்னு கஸீர் )
رواه الإمام البخاري رحمه الله تعالى في صحيحه عن أسامة بن زيد أن نبي الله ﷺ ركب على حمار على قطيفة فدكية، وأردف أسامة بن زيد وراءه؛ يعود سعد بن عبادة في بني الحارث بن الخزرج قبل وقعت بدر حتى مر بمجلس فيه عبد الله بن أبي بن سلول قبل أن يسلم عبد الله بن أبي أي يتظاهر بالإسلام، فإذا في المجلس أخلاط من المسلمين ومن المشركين عبدة الأوثان، واليهودن والمسلمين، وفي المجلس عبد الله بن رواحة فلما غشيت المجلس عجاجة الدابة، لما غشيت المجلس عجاجة الدابة خمر عبد الله بن أبي أنفه بردائه ثم قال: لا تغبروا علينا، فسلم رسول الله ﷺ، ثم وقف فنزل فدعاهم إلى الله، وقرأ عليهم القرآن، فقال عبد الله بن أبي بن سلول: أيها المرء إنه لا أحسن مما تقول إن كان حقا فلا تؤذنا به في مجلسنا، إرجع إلى رحلك إنه لا أحسن مما تقول إن كان حقا فلا تؤذنا به في مجلسنا، فلا تؤذنا به في مجلسنا، إرجع إلى رحلك، فمن جاءك فاقصص عليه، فقال عبد الله بن رواحة: “بلى يا رسول الله فاغشنا به في مجالسنا فإنا نحب ذلك” فاستب المسلمون، والمشركون، واليهود حتى كادوا يتثاورون، فلم يزل النبي ﷺ يخفضهم، حتى سكنوا، ثم ركب النبي ﷺ دابته حتى دخل على سعد بن عبادة، فقال له النبي ﷺ: يا سعد ألم تسمع ما قال أبو حباب، يريد عبد الله بن أبي قال كذا وكذا. قال سعد بن عبادة: “اعف عنه واصفح عنه فوالذي أنزل عليك الكتاب لقد جاء الله بالحق الذي أنزل عليك لقد اصطلح أهل هذه البحيرة أي البلدة وهي يثرب التي صارت المدينة وطيبة على أن يتوجوه فيعصبوه بالعصابة أي يتوجوا عبد الله بن أبي ملكا عليهم فلما أبى الله ذلك فاتت الفرصة على عبد الله بن أبي وفاته الملك للإسلام الذي جاء فلما أبى الله ذلك بالحق الذي أعطاك الله شرق بذلك غص به وكرهه فذلك فعل به ما رأيت” فعفى عنه رسول الله ﷺ
நபி (ஸல்) அவர்கள் கழுதையொன்றில் சேணம் விரித்து, அதில் ‘ஃபதக்’ நகர் முரட்டுத் துணி விரித்து, அதில் அமர்ந்தவாறு பயணமானார்கள். என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டார்கள். இப்னு கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். – இது பத்ருப் போர் நிகழ்ச்சிக்கு முன்னால் நடந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ஓர் அவையைக் கடந்து சென்றார்கள்.
அந்த அவையில் முஸ்லிம்களும் சிலை வணங்கிகளான இணைவைப்போரும் யூதர்களும் கலந்து இருந்தார்கள். அவர்களிடையே (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூலும் இருந்தார். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள்) வாகனப் பிராணியின் (காலடிப்) புழுதி அந்த அவையைச் சூழ்ந்தபோது அப்துல்லாஹ் இப்னு உபை தம் மேல் துண்டால் தம் மூக்கைப் பொத்திக்கொண்டு, ‘எங்களின் மீது புழுதியைக் கிளப்பாதீர்கள்” என்றார்.
நபி (ஸல்) அவர்கள் அந்த அவையோருக்கு சலாம் சொன்னார்கள். பிறகு, தம் வாகனத்தை நிறுத்தி இறங்கி, அவர்களை அல்லாஹ்வின் (மார்க்கத்தின்) பால் அழைத்தார்கள். அவர்களுக்குக் குர்ஆன் (வசனங்களை) ஓதியும் காட்டினார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல், ‘மனிதரே! நீர் கூறுகிற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை.
(ஆனாலும்,) அதை எங்களுடைய (இது போன்ற) அவைகளில் கூறி எங்களுக்குத் தொல்லை கொடுக்காதீர். உம்முடைய இருப்பிடத்திற்குச் செல்லும். எங்களில் யார் உம்மிடம் வருகிறார்களோ அவர்களுக்கு (இதை) எடுத்துச் சொல்லும்” என்றார். (இதைக் கேட்ட) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள், ‘(ஆம். இறைத்தூதர் அவர்களே! இதை) எங்கள் அவைகளில் வெளிப்படுத்துங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகிறோம்” என்றார்கள்.
இதையடுத்து முஸ்லிம்களும் இணைவைப்போரும் யூதர்களும் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டே ஒருவர் மீதொருவர் பாய்ந்து (தாக்கிக்) கொள்ள முனைந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்கள் அனைவரும் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். (அமைதி ஏற்பட்ட) பிறகு தம் வாகனத்திலேறி (உடல் நலமில்லாமல் இருந்த) ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, ‘சஅதே! அபூ ஹுபாப் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?’ என்று கூறி, ‘அப்துல்லாஹ் இப்னு உபை இப்படி இப்படிக் கூறினார்” என்று தெரிவித்தார்கள்.
அதற்கு ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்கள், ‘அவரை மன்னித்துவிட்டு விடுங்கள், இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (மதீனா) நகர வாசிகள் அவருக்குக் கீரிடம் அணிவித்து அவருக்கு முடி சூட்டிட முடிவு செய்திருந்த நிலையில் தான் அல்லாஹ் தங்களுக்கு இ(ந்த மார்க்கத்)தை வழங்கினான். அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்தியத்தின் மூலம் அவர்களின் முடிவை அவன் நிராகரித்தபோது அதனால் அவர் பொருமினார். அதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்து கொண்டதற்குக் காரணம்” என்று கூறினார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்தார்கள். ( நூல்: புகாரி )
திருவள்ளுவர் கூட புறங்கூறாமை என்ற தலைப்பில் புறம் கூறுதலின் தீமை குறித்து பல்வேறு விஷயங்களைக் கூறுகின்றார்.
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், யாரையும் புறம் கூற மாட்டான் என உலகத்தாரால் சொல்லப்படுதல் மிக்க நன்று.
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.
புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.
ஒரு முஸ்லிம் புறம் பேசுவதை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டுமெனில், முதலில் அவர், புறம் பேசுதல் என்றால் என்ன? அதனால் ஏற்படும் தீமைகள் என்ன? புறம் பேசும் ஒருவனுக்கு இம்மை மற்றும் மறுமையில் கிடைக்கும் தண்டனைகள் யாவை? என்பதை அறிந்துக் கொள்ள முன் வர வேண்டும்.
புறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். உலகில் வாழும் காலங்களிலும் மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீயப் பண்பான புறம் பேசுவதை விட்டும் நிச்சயம் ஒரு இறைநம்பிக்கையாளர் தவிர்ந்திருக்க வேண்டும்.
புறம் பேசுதல் என்றால் என்ன?
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ (12)
அல்லாஹ் கூறுகிறான்:- “முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.” ( அல்குர்ஆன்: 49:12 )
அல்லாஹ் கூறுகிறான்:- “குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். ( அல்குர்ஆன்: 104:1 )
رواه أبو داود: حدثنا القَعْنَبِي، حدثنا عبد العزيز بن محمد، عن العلاء، عن أبيه، عن أبي هريرة (5) قال: قيل: يا رسول الله، ما الغيبة؟ قال: “ذكرك أخاك بما يكره”. قيل: أفرأيت إن كان في أخي ما أقول؟ قال: “إن كان فيه ما تقول فقد اغتبته، وإن لم يكن فيه ما تقول فقد بهته”.
அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்” என்று பதிலளித்தார்கள். அப்போது, “நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ, நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்” என்று கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் 5048 )
ஒரு மனிதர் இன்னொருவரைப் பற்றி அவர் அங்கில்லாத போது குறை கூறுகின்றபோது குறை கூறப்படுகின்ற மனிதனால் நிச்சயமாக அதைத் தடுக்க முடியாது. இதே போன்று தான் மரணித்த ஒருவரின் மாமிசத்தை வெட்டும் போதும் மரணித்தவனால் அதனை தடுக்கமுடியாது! புறம் பேசுவதும் இதே போன்று ஒரு கொடுமையான செயல் என்பதை நாம் விளங்க முடியும். மேலும் வசனத்தின் இறுதியில் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் என அல்லாஹ் கூறுகின்றான். இதன் மூலம், பிறரின் குறைகளை கூறி புறம்பேசுவதை விட்டும் அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ள வேண்டும். இவ்வாறு குறை கூறி இருந்தால் இத்தகைய பெரும்பாவத்திலிருந்து மீண்டு வந்து தவ்பா செய்ய வேண்டும் என்பதை இவ்வசனம் போதிக்கின்றது.
ஒரு முஸ்லிம், பிற முஸ்லிமின் கண்ணியத்தைக் குழைக்கும் வகையில் புறம் பேசக் கூடாது:-
حدثنا واصل بن عبد الأعلى، حدثنا أسباط بن محمد، عن هشام بن سعد، عن زيد بن أسلم، عن أبي صالح، عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: “كل المسلم على المسلم حرام: ماله وعرضه ودمه، حسب امرىء من الشر أن يحقر أخاه المسلم”.
“ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் )
புறம் பேசுவதால் இம்மையில் ஏற்படும் தீமைகள்:-
وحدثنا عثمان بن أبي شيبة ، حدثنا الأسود بن عامر، حدثنا أبو بكر بن عياش، عن الأعمش، عن سعيد بن عبد الله بن جريج، عن أبي برزة الأسلمي قال: قال رسول الله صلى الله عليه وسلم: “يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه، لا تغتابوا المسلمين، ولا تتبعوا عوراتهم، فإنه من يتبع عوراتهم يتبع الله عورته ومن يتبع الله عورته يفضحه في بيته”.
ஒரு முறை நபி {ஸல்} அவர்கள் தமது உரையின் போது, “உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே! முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள்; அவர்களது குறைகளை ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: அஹ்மத்)
1) புறம் பேசுவதன் மூலம் குடும்பங்களுக்கிடையே, உறவினர்களுக்கிடையே, நண்பர்களுக்கிடையே சண்டை, சச்சரவுகள், தகராறுகள் ஏற்படுகிறது.
2) அதன் மூலம் அழகிய உறவுகள் அறுபட்டு முறிந்து போகின்றது.
3) ஒரு சபையில் பிறரைப் பற்றிப் புறம் பேசப்படும் போது, அவர் சமுதாயத்தின் முக்கியஸ்தராக, மார்க்க அறிஞராக இருந்தால் அது சமுதாய மக்களுக்கிடையே பிளவை உண்டாக்குகிறது.
4) சமுதாயம் பிளவு படுவதன் மூலம் முஸ்லிம்களிடையே பலபிரிவுகள் ஏற்பட்டு, முஸ்லிம் சமுதாயம் பலவீன மடைகிறது.
5) முஸ்லிம் சமுதாயம் பலவீணமடைவதால் எதிரிகளால் ஆக்ரமிக்கப்பட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் பாதிப்படைகிறது.
புறம் பேசுவதால் மரணததிற்குப்பிறகு கப்ரிலும், மறுமையிலும் கிடைக்கும் தண்டனைகள்: –
கப்ரில் கிடைக்கும் தண்டனைகள்: –
عن ابن عباس قال : مرَّ رسول الله صلَّى الله عليه وسلم على قبرين فقال : أما إنَّهما ليُعذَّبان وما يعذبان في كبير ، أما أحدهما فكان يمشي بالنميمة ، وأما الآخر فكان لا يستتر من بوله ، قال : فدعا بعسيبٍ رطْبٍ فشقه باثنين ثم غرس على هذا واحداً وعلى هذا واحداً ثم قال لعله أن يخفف عنهما ما لم ييبسا . رواه البخاري ومسلم
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: நபி {ஸல்} அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, ‘இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை” என்று சொல்லிவிட்டு, ‘இருப்பினும் (அது பெரிய விஷயம்தான்) அவ்விருவரில் ஒருவர், தாம் சிறு நீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்’ என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி {ஸல்} அவர்களிடம் ‘நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என்று கேட்கப்பட்டதற்கு, ‘அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்’ என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: புஹாரி 216, 218 )
மறுமையில் கிடைக்கும் தண்டனைகள்: –
1) மனித மாமிசத்தை சாப்பிடுவார்கள்: –
حدثنا ابن مصفى، حدثنا بقية وأبو المغيرة قالا حدثنا صفوان، حدثني راشد بن سعد وعبد الرحمن بن جبير، عن أنس بن مالك قال: قال رسول الله صلى الله عليه وسلم: “لما عُرِج بي مررت بقوم لهم أظفار من نحاس، يخمشون وجوههم وصدورهم، قلت: من هؤلاء يا جبرائيل ؟ قال: هؤلاء الذين يأكلون لحوم الناس، ويقعون في أعراضهم”.
அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது “ஜிப்ரீலே, அவர்கள் யார்?” என்று கேட்டேன். “இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள்” என்று விளக்கமளித்தார்கள்.” ( நூல்;: அஹ்மது, அபூதாவூத் )
2) புறம் பேசுபவன் சுவனம் நுழையமாட்டான்: –
“புறம் பேசுபவன் சுவனம் நுழைய மாட்டான்” என நபி {ஸல்} அவர்கள் நவின்றார்கள். ( நூல்: முஸ்லிம் )
3) மறுமையில் ஒன்றுமே ஈடாகாது
.قال صلى الله عليه وسلم : (( أتدرون من المفلس؟ قالوا: المفلس فينا من لا درهم له ولا متاع ، قال : المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وزكاة وصيام ، وقد شتم هذا وضرب هذا وأكل مال هذا ، فيأخذ هذا من حسناته ، وهذا من حسناته ، فإن فنيت حسناتهم أخذ من سيئاتهم فطرحت عليه ثم طرح في النار)) .
நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) ‘எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதிவாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
புறம் பேசுவதைத் தவிர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்: –
ஒருவர் புறம் பேசுவதன் தீமைகளை அறிந்து அதைத் தவிர்ந்தவர்களாக, யாரைப் பற்றிப் புறம் பேசினார்களோ அவரிடம் மன்னிப்புக் கோரவேண்டும். பின்னர் மனந்திருந்தியவராக அழுது மன்றாடி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரவேண்டும்.
قُلْ يَاعِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ (53) وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُونَ (54)
அல்லாஹ் கூறுகிறான்:- “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம்; நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான்; நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்”. ( அல்குர்ஆன்: 39:53-54 )
ஆகவே, நாவைப் பேணுவதோடு புறம் பேசுவதால் ஏற்படும் தண்டனைகளின் கனம் உணர்ந்து, பொறுப்புணர்வோடும் பொதுவெளியில் பேசுவோம்! புறம் பேசுவதை புறந்தள்ளுவோம்!!!
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் புறம் பேசுதல் எனும் தீய பண்பிலிருந்து நம் அனைவரையும் காத்தருள்வானாக!!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!
ஆக்கம்: மௌலவி, பஷீர் அஹ்மத் உஸ்மானி