படேல் சிலையும் மோ(ச)டி அரசியலும் ( கடைசிப் பக்கம் )

லகிலேயே மிகப்பெரிய சிலை இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேலுக்கு ஒற்றுமையின் சிலை எனப்பெயரிடப்பட்டு ரூ.3000/= கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிலை செய்யாமல் சீனாவில் செய்யப்பட்டு நிறுவப் பட்டுள்ளது.
படேல் நல்ல தலைவர்தான். சிறுவயதில் (34 வயது) மனைவியை இழந்த பிறகும் திருமணம் செய்யாமல் நாட்டுக்கு பாடுபட்டவர்தான். நகைச்சுவை குணம் கொண்டவர்தான். அதற்காக நர்மதை ஆற்றங்கரையில் இத்தனை பெரிய சிலை அவருக்கு மட்டும் அமைப்பதற்கு இப்போது என்ன அவசியம் வந்திருக்கிறது.?
படேல் இந்திய நாட்டின் உள்துறை அமைச்சராக, முதல் துணைப்பிரதமராக இருந்தவர்.  அவரைப்போலவே அல்லது அவரைவிடவும், நாட்டில் முக்கியமான தலைவர்கள் இல்லையா என்பது தான் இன்றைய கேள்வி.
“எதற்காக இன்றைய பிரதமர் மோடி இத்தனை பெரிய படேல் சிலையை நிறுவ வேண்டும், அதற்கான அவசியம் என்ன” என்ற கேள்விக்கு பின்னே ஒளிந்திருக்கிறது  ஒரு பெரிய அரசியல், அதுவும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான மனநிலையை மேலும் வளர்த்தெடுக்க, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற, சிறுபான்மையினரை அழித்தொழிக்க நிறுவப்பட்டுள்ளது.
காந்திதான் விடுதலைக்கான வித்து. அவரது தலைமை ஏற்றுக் கொண்டவர்களுள் ஒருவர்தான் படேல். அவர் தனிப்பட்ட முறையில் பெரிய சாகசம் எதுவும் நிகழ்த்தவில்லை. மாறாக இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும், மதச்சார்பின்மை மற்றும் ஒற்றுமைக்கும் எதிரான நிலையிலேயே செயல்பட்டு வந்தார். குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிர்நிலையில் செயல்பட்டு வந்தார்.
காங்கிரசில் ஆர்.எஸ்.எஸ் இணைய வேண்டும் என்றார். இந்துத்துவ ஆதரவாளரான லால்ஜி  டாண்டனை ஆதரித்தார். காந்தி வேட்பாளர் கிருபளானியைத் தோற்கடிக்க பாடுபட்டார். காந்தியை இந்துத்துவ வழிக்கு கொண்டு வர எண்ணினார். காந்தி கொலையால் தடை செய்த ஆர்.எஸ்.எஸ் 6 மாதத்திலேயே ஒரு உப்பு சப்பில்லாத சமாதானத்தை தன்னளவில் வாங்கிக்கொண்டு தடையை நீக்கினார். எப்போதும் இந்துத்துவ வாதிகளுடன் கூடிக் குலாவினார். காஷ்மீருக்கு இந்துத்துவ வாதிகளை சமாதானத்திற்கு அனுப்பி வைத்தார் என பல முனைகளிலும் அவர் வேறு ஒரு முகம் கொண்டவராக விளங்கினார். அவரைப் போன்று மதிக்கப்பட்ட நேருவுடனும், ஆசாத்துடனும், அம்பேத்கருடனும் பிணங்கியே செயல்பட்டார். இந்தியாவைப் பிரித்து முஸ்லிம்களை தனித்துவிட வேண்டும் என்று பிரிவினையை ஆதரித்து காந்திக்கு எதிர்நின்றார்.
இப்படி எல்லா நிலைகளிலும் எதிர்நின்று செயல்பட்ட படேலுக்கு நர்மதை ஆற்றங்கரையில் இத்தனை பெரிய சிலை வைக்கக் காரணம் இந்தியாவை இரு கூறாக்கி, முஸ்லிம்களை தனிமைப்படுத்துவன் மூலம் இரண்டாம்தர குடிமக்களாக்கிட மோடி.செய்யும் பித்தலாட்டம் என்பது தவிர வேறு என்ன,?
உண்மையில் இந்தியாவின் மேன்மைக்கு சிலை வைக்க வேண்டுமெனில் உலகம் முழுவதும் சிலை வைக்கப்பட்டுள்ள காந்திக்குத்தான் வைத்திருக்க வேண்டும். அவரும் மோடியின் குஜராத்தில் பிறந்தவர்தான். அப்படியில்லாமல் படேலுக்கு வைக்கக் காரணம் இருக்கிறது.
மீண்டும் ஆட்சிக் கட்டிலை தக்க வைக்க இந்த சிலையை இந்திய மக்கள்  கண்முன் வைக்கிறார். இப்போதே நாட்டினை கார்பரேட்டுகளின் கையில் கொடுத்தாயிற்று. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் ஏமாற்றியதை மறைக்கப் போடும் வேசம் இது.
இது இந்தியாவுக்கு பெருமையில்லை. பல கோடி மக்கள் உணவின்றி வாடும் நாட்டில் கண்ணைப் பொத்திக் கொண்டு கற்பனை உலகில் வலம் வரும் ஒரு ஏமாற்று பிரதமரின் மோசடித் திட்டம்.
விலைவாசியை தினமும் ஏற்றி விட்டு. எல்லா நாடுகளிலும் கையேந்திவிட்டு நாம் எல்லா நாடுகளையும் விட பெரிதாகிவிட்டோம் என்று பேசும் கிணற்றுதவளை எண்ணம். விவசாயிகளைக் கொன்று விட்டு, சிறு தொழிலை நசுக்கிவிட்டு, கார்பரேட்டிடம் நாட்டை அடகு வைத்து சீரழித்துவிட்டு, சிலை வைத்து சரிக்கட்டிவிடலாம் என்பது கேவலமான செயல்.
படேலுக்கு சிலை வைத்ததைப் போல நம் நாட்டின் அனைத்து தலைவர்களுக்கும் சிலை வைக்க ஆரம்பித்தால் மக்கள் வாழ இடமற்று போய்விடும்.
மோடியின் உச்ச பட்ச ஏமாற்று சிலையென விசுவரூபம் எடுத்திருக்கிறது உலகின் உயரமான சிலை வடிவத்திலே. இந்த சிலைக்குப் பின்னே கோல்வால்கருக்கு, மூஞ்சேக்கு, கோட்சேக்கு பெரும்சிலைகள் வைத்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை.
மோடியால் நாட்டினை அழிப்பதைத் தவிர வேறு என்ன செய்துவிட முடியும்!. தேர்தல் வருகிறது. பொய் வாக்குறுதிகளால் இனி அழுவார், தொழுவார். ஆட்சியைக் கோருவார் அப்போது சிறுபான்மையினர் கண்களுக்கு இந்த சிலை “ஜின்”னாகவோ,  பூதமாகவோ தெரியவேண்டும்.
இன்னொரு ஐந்து வருடம் இந்தியாவை முழுமையாக அழித்து விட விடாமல் நாம் தெளிவடைய வேண்டும். இயக்கங்களை நம்பி ஏமாந்துப் போகாமல் ஓட்டுக்கள் சிதறாமல் வாக்களிக்க வேண்டும்.
-வழக்குரைஞர், எம்.எம்.தீன்.