وَشَاوِرْهُمْ فِي الأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ (القرآن 3:159
(முக்கியமான) பிரச்சினைகளில் அவர்களுடன் கலந்தாலோசிப்பீராக! (அதன்பின் ஒன்றை) நீர் முடிவு செய்துவிட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக. (தன்னையே) சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:159)
عن ابن عباس : أن النبي صلى الله عليه و سلم قال الأشج عبد القيس إن فيك خصلتين يحبهما الله الحلم والأناة. (ترمذى-1934
இப்னு அப்பாஸ் (ரளி) அறிவிக்கிறார்கள்: அப்துல் கைஸ் குலத்தின் (தலைவர்) அஷஜ்;ஜு (ரளி) அவர்களிடம் “உம்மிடம் இரு குணங்கள் உள்ளன. அவற்றை அல்லாஹ் நேசிக்கிறான். 1. சகிப்புத் தன்மையும் 2. நிதானமுமே அவை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி-1934)
செயல்படும்முன் வேண்டிய கவனமே; நிதானம் (Pause) எனப்படுகிறது. புரபரப்போ அவசரமோ இல்லாத நிலையில் காரியமாற்றவதும் கட்டுப்பாடு மற்றும் சுயஉணர்வோடு செயல்படும் இயல்புதான் நிதானம் ஆகும். (Hurry) என்பது ஒன்றைச் செய்வதில் தேவை இல்லாமல் வேகம் காட்டுவதும் பரபரப்புடன் நடந்துகொள்வதாகும். குறுகிய காலத்தில் காரியங்களை முடித்துவிட முயலும் வேகமும் பரபரப்பும்தான் அவசரம் எனப்படுகிறது.
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ حَاسِبُوا أَنْفُسَكُمْ قَبْلَ أَنْ تُحَاسَبُوا (ترمذى-2647
உமர் பின் கத்தாப் (ரளி) (பிரசங்கத்தில்) நீங்கள் விசாரணை செய்யப்படுவதற்க முன்பாக உங்களை நீங்களே சுய விசாரணை செய்து கொள்ளுங்கள் என கூறுவார்கள். (திர்மிதி-2647)
திட்டமிடுதல் என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை எட்டுவதற்கான வழிகளை யோசித்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதே ஆகும். உங்கள் இலக்கு அல்லது குறிக்கோளில் நீங்கள் தெளிவாக இல்லையெனில், உங்களால் சரிவர திட்டமிட இயலாது. எனவே, திட்டமிடுதலுக்கு அதி முக்கியமானது முதலில் நீங்கள் விரும்பும் இலக்கு என்ன என்பதைப் பற்றிய தெளிவு தான்!!!. ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு’ “ஆழம் தெரியாமல் ஆற்றில் கால் வைக்காதே
குறித்த இலக்கை அடைவதற்கு நான்கு வழிமுறை
- திட்டமிடுதல்: (வீட்டின் வரவு செலவுத் திட்டம், ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பதற்கான திட்டம், ஒரு வீட்டை வாங்குவதர்க்கான திட்டம், ஒரு புதிய தொழிலைத் தொடங்குவதற்கான திட்டம்)
- செயல்படுதல்: (“செயல்படுதல்” திட்டமிடுதலுக்கும் செயல்படுத்தலுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. திட்டமிடுதலும் ஒரு செயல் தான் என்றாலும் அது மனம் சார்ந்தது. ஆனால் செயல் என்று வரும்போது அது உடல் உழைப்பையும் பிறரோடு உறவாடும் திறமைகளையும் சார்ந்து இருக்கிறது.
- சரிபார்த்தல்: (“சரிபார்க்கும்” நிலையாகும். சரி பார்ப்பதற்கென நேரம் ஒதுக்க வேண்டும். திட்டமும் செயலும் ஒத்துப்போகிறதா எனப் பார்க்க வேண்டும். வாரம் ஒரு முறையோ, மாதம் ஒரு முறையோ சரிபார்க்க வேண்டும். தினமும் கூட அதைச் செய்யலாம்.)
- சரிசெய்தல்:t (திட்டத்திற்கும் – செயலுக்கும் இடையில் உள்ள இடைவெளிகளை, நிறைகுறைகளைக் கண்டறிந்துவிட்டால் அவற்றைப் பட்டியலிட்டு, ஒவ்வொன்றாகச் சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.)
சுயமாக திட்டமிடுதல் (Self Planning)
அண்ணலார் (ஸல்) வகுத்த தற்காப்புத் திட்டம்
நபி (ஸல்) தங்களது படையைக் கட்டமைத்தார்கள். பல அணிகளாக அவர்களை நியமித்த பின்பு திறமையாக அம்பெய்வதில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த 50 வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தலைவராக பத்ர் போரில் கலந்து கொண்ட அவ்ஸ் கிளையைச் சேர்ந்த அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் இப்னு நுஃமான் அல் அன்ஸாயை (ரழி) நியமித்தார்கள். பின்பு அவர்களை ‘கனாத்’ என்ற பள்ளத்தாக்கின் வடக்குப் பக்கம் அமைந்துள்ள மலையில் நிலையாக தங்கி, முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டுமென்று பணித்தார்கள். இம்மலை முஸ்லிம்களின் ராணுவ முகாம்களிலிருந்து தென் கிழக்கில் சுமார் 150 மீட்டர் தொலைவில் இருந்தது.
நபி (ஸல்) இந்த அம்பு எறியும் வீரர்களுக்குக் கூறிய அறிவுரைகளிலிருந்து இப்படையினரை அங்கு நியமித்ததின் காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம். நபியவர்கள் தளபதிக்குக் கூறிய உபதேசம் வருமாறு: “எதிரிகளின் குதிரைப் படை எங்களை நெருங்கவிடாமல் அம்பெய்து அவர்களை நீர் தடுக்க வேண்டும். எதிரிகள் எங்களுக்குப் பின்புறத்திலிருந்து வந்துவிடக் கூடாது. போர் நமக்கு சாதகமாக அல்லது பாதகமாக அமைந்தாலும் நீர் உனது இடத்தில் நிலையாக இருக்க வேண்டும். உமது வழியாக எதிரிகள் எங்களை தாக்கிவிடக் கூடாது.” (இப்னு ஹிஷாம்)
இவ்வாறு தளபதிக்கு உபதேசம் செய்த பிறகு, மற்ற வீரர்களுக்கு நபி (ஸல்) பின்வருமாறு அறிவுரை கூறினார்கள்: “நீங்கள் எங்களின் முதுகுப் பக்கங்களை (பிற்பகுதியை) பாதுகாத்து கொள்ளுங்கள், நாங்கள் போரில் கொல்லப்படுவதைப் பார்த்தாலும் நீங்கள் எங்களுக்கு உதவ வராதீர்கள் நாங்கள் வெற்றி பெற்று பொருட்களைச் சேகரிப்பதைப் பார்த்தாலும் அதிலும் நீங்கள் எங்களுடன் இணைந்து விடாதீர்கள்.” (முஸ்னது அஹ்மது, முஃஜமுத் தப்ரானி)
இதே அறிவுரை ஸஹீஹுல் புகாரியில் இவ்வாறு இடம் பெற்றுள்ளது: “எங்களைப் பறவைகள் கொத்தித் தின்பதைப் நீங்கள் பார்த்தாலும், நான் உங்களுக்கு கூறியனுப்பும் வரை உங்களது இடத்தை விட்டு நீங்கள் அகன்றிட வேண்டாம். நாங்கள் எதிரிகளைத் தோற்கடித்து அவர்களின் சடலங்களை மிதித்து செல்வதைப் பார்த்தாலும் நான் கூறியனுப்பும் வரை நீங்கள் அகன்றிட வேண்டாம்.”
நபியவர்கள் இவ்வாறு கடுமையான ராணுவச் சட்டங்களைக் கூறி இந்த சிறிய குழுவை மலையில் நிறுத்தியதின் மூலம், முஸ்லிம்களின் பின்புறமாக எதிரிகள் ஊடுருவி அவர்களைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள ஒரு முக்கிய வழியை அடைத்து விட்டார்கள்.
படையின் வலப்பக்கத்தில் முன்திர் இப்னு அம்ர் (ரழி) அவர்களையும், இடப்பக்கத்தில் ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களையும், ஜுபைருக்கு உதவியாக மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) அவர்களையும் நியமித்தார்கள். காலித் இப்னு வலீதின் தலைமையிலுள்ள எதிரிகளின் குதிரைப் படைகளை எதிர்க்கும் பொறுப்பை இடப்பக்கத்தில் நிறுத்தியிருந்த ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள். மேலும், முஸ்லிம்களுடைய அணிகளின் முன் பகுதியில் வீரத்திலும் துணிவிலும் பிரபல்யமான, மேலும் ஒருவரே ஆயிரம் நபருக்கு சமமானவர் என்று புகழ்பெற்ற சிறந்த வீரர்களின் ஒரு குழுவை தேர்வு செய்து நிறுத்தினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் இத்திட்டமும் ராணுவ அமைப்பும் மிக்க நுட்பமானதாகவும் ஞானமிக்கதாகவும் இருந்தது. இதன் மூலம் நபியவர்களின் போர் நிபுணத்துவத்தின் தனிச்சிறப்பு தெளிவாகிறது. மேலும், ஒரு தளபதி அவர் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும் நபியவர்கள் வகுத்த இத்திட்டத்தை விட சிறந்ததை நுணுக்கமானதை அவரால் ஏற்படுத்திட இயலாது. எதிரிகளின் போர்க்களம் வந்த பின்புதான் நபியவர்கள் தனது படையுடன் வந்தார்கள்.
இருப்பினும், மிகச் சிறந்த இடத்தை அங்கு தேர்வு செய்தார்கள். படையின் பின் பக்கத்தையும் வலப்பக்கத்தையும் உயரமான மலைகளைக் கொண்டு பாதுகாத்துக் கொண்டார்கள். போர் கடுமையாக மூழும்போது இஸ்லாமியப் படையை எதிரிகள் வந்து தாக்குவ தற்குக் காரணமாக இருக்கும் ஒரே வழியையும் அடைத்து விட்டதால் படையின் பின்பக்கத்தையும் இடப்பக்கத்தையும் நபியவர்கள் பாதுகாத்தார்கள். முஸ்லிம்களுக்கு தோல்வி ஏற்பட்டால் பின்வாங்கும் போது விரட்டி வரும் எதிரிகளின் கைகளில் சிக்காமல் இருப்பதற்காக தங்களது படைக்கு உயரமான இடத்தை நபியவர்கள் தேர்வு செய்தார்கள்.
மூஃதா போர் வெற்றிக்கு (ஸல்) அருமையான திட்டம்
படைத் தளபதிகள்: நபி (ஸல்) அவர்கள் இப்படைக்கு முதலாவதாக ஜைது இப்னு ஹாஸாவை (ரழி) தளபதியாக ஆக்கிவிட்டு “ஜைது கொல்லப்பட்டால் ஜஅஃபர் தளபதியாக இருப்பார் ஜாஃபரும் கொல்லப் பட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தளபதியாக இருப்பார்” என்று கூறி வெள்ளை நிறக் கொடியை ஜைது இப்னு ஹாஸா (ரழி) கையில் கொடுத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)
قال رسول الله صلى الله عليه وسلم يوم مؤتة ـ مخبراً بالوحي، قبل أن يأتي إلى الناس الخبر من ساحة القتال : أخذ الراية زيد فأصيب، ثم أخذ جعفر فأصيب، ثم أخذ ابن رواحة فأصيب ـ وعيناه تذرفان حتى أخذ الراية سيف من سيوف الله، حتى فتح الله عليهم (بخارى-3063
முஃதா போர்க்களச் செய்திகளை அல்லாஹ் வஹியின் மூலமாக நபியவர்களுக்கு உடனுக்குடன் தெரிவித்தான். போரின் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முதலில் கொடியை ஜைது ஏந்தினார் அவர் கொல்லப்பட்டார் இரண்டாவதாக ஜஅஃபர் ஏந்தினார் அவரும் கொல்லப்பட்டார் மூன்றாவதாக அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ஏந்தினார் அவரும் கொல்லப்பட்டார் -இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போது நபியவர்களின் கண்களிலிருந்து நீர் வழிந்தோடியது- இதற்குப் பின் கொடியை அல்லாஹ்வின் வாள்களில் ஒரு வாள் ஏந்தியது அல்லாஹ் அவர் மூலமாக முஸ்லிம்களுக்கு வெற்றியளித்தான்.” (ஸஹீஹுல் புகாரி-3063)
மூஃதா போரில் காலிது பின் வலீதின் வெற்றித் திட்டம்.
சண்டை ஓய்கிறது: முஸ்லிம் வீரர்கள் தங்களது முழு வீரத்தையும், திறமையையும், துணிவையும் வெளிக் கொணர்ந்தாலும் கடல் போன்ற மிகப் பயங்கரமான எதிரிப் படைகளைச் சமாளிப்பது மிகச் சிரமமாகவே இருந்தது. இதையறிந்த காலித் இப்னு அல்வலீது (ரழி) முஸ்லிம்களை ஆபத்திலிருந்து தந்திரமாகப் பாதுகாக்க சரியான திட்டம் ஒன்றைத் தீட்டினார்.
போரின் முடிவைப் பற்றி பலவிதமான கருத்துகள் கூறப்படுகின்றன. அந்த அனைத்து அறிவிப்புகளையும் ஒன்று திரட்டி நாம் ஆய்வு செய்யும்போது நமக்குப் புலப்படுவதாவது: கொடியை ஏந்திய அன்றைய தினம் மாலை வரை ரோம் நாட்டுப் படைக்கு முன்பாக மிகத் துணிச்சலாக காலித் (ரழி) எதிர்த்து நின்றார். முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கு ஒரு போர் தந்திரத்தைக் கையாண்டார். அது ரோமர்களின் உள்ளங்களில் கடுமையான பயத்தை உண்டு பண்ணியது. அதாவது, முஸ்லிம்கள் பின்னோக்கிச் செல்லும்பொழுது ரோமர்கள் விரட்ட ஆரம்பித்தால் அவர்களிடமிருந்து தப்பிப்பதென்பது மிகக் கடினமே என காலித் (ரழி) நன்கு விளங்கியிருந்தார்.
எனவே, மறுநாள் படைக்கு முற்றிலும் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கினார். படையின் முற்பகுதியை பிற்பகுதியாகவும், வலப்பக்கத்தில் உள்ளவர்களை இடப்பக்கத்திலும் மாற்றி அமைத்தார். மறுநாள் காலை போர் தொடங்கியபோது முஸ்லிம்களின் புதிய அமைப்பைப் பார்த்த எதிரிகள் தங்களுக்கு முன் நேற்று இல்லாத புதிய படை இருப்பதைப் பார்த்தவுடன் இவர்களுக்கு உதவிப்படை வந்திருக்கின்றது என்று கூற ஆரம்பித்தனர். சிறுகச் சிறுக அவர்களது உள்ளத்தை அச்சம் ஆட்கொண்டது.
சிறிது நேரம் இரு தரப்பினரும் சண்டையிட்டு கொண்டிருக்கும் போதே தனது படையில் எவ்வித மாற்றமும் ஏற்படாத அளவிற்கு முற்றிலும் பாதுகாப்புடன் படையை பின்னோக்கி அழைத்துச் சென்றார். முஸ்லிம்கள் ஏதோ சதி செய்ய நாடுகின்றனர் என்று எண்ணிய ரோம் வீரர்கள் முஸ்லிம்களைப் பின்தொடர்வதை விட்டுவிட்டு அவர்களும் பின்வாங்கினர். இவ்வாறு முஸ்லிம்களை விரட்டும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு தங்களது நாடுகளுக்கு எதிரிகள் திரும்பி விட்டனர். இவ்வாறு முஸ்லிம்கள் எவ்வித ஆபத்துமின்றி மதீனா வந்து சேர்ந்தனர். (ஃபத்ஹுல் பாரி, ஜாதுல் மஆது)
குழுவினர்கள் திட்டமிடுதல்; (Group Planning)
وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلاةَ وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ (القرآن 42:38
இன்னும் அவர்கள் எத்தகையோர் என்றால் தங்களுடைய ரப்புக்கு வழிபட்டு தொழுகையை நிலைநிறுத்தி அவர்களுடைய காரியம் அவர்களுக்கு மத்தியில் ஆலோசிக்கப்பட்டு அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றிலிருந்து செலவும் செய்வார்கள். (அல்குர்ஆன் 42:38)
குர்ஆனில் வழக்கமாக தொழுகைக்கு அடுத்து ஜகாத்தை பற்றிவரும். ஆனால் இங்கு ‘கலந்தாலோசித்து காரியங்கள் செய்தல்’ பற்றி குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் வணக்க வழிபாடுடையவர்களிடம் கலந்தாலோசித்து சிக்கலான பிரச்சனைகள் பற்றி முடிவெடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே தொழுகைக்குப் பள்ளியில் கூடுவோர்களில் தக்கவர்களிடம் கலந்தாலோசனை செய்து முடிவெடுப்பின் சிறப்பை இது சூசகமாக சுட்டிக் காட்டுகிறது என அல்லாம மஹ்மூது பின் அப்துல்லாஹ் ஆலூஸி (ரஹ்) தங்களது ரூஹுல் மஆனீயில் கூறியுள்ளார்கள்.. (ரூஹுல் மஆனீ)
மூத்த சஹாபிகளோடு (ஸல்) அவர்கள் ஆலோசனை
பத்ருப் போரின்போது குறைஷியரன் வணிகக் குழுவினரை வழிமறிக்கச் செல்வது குறித்து தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஆலோசனை செய்தார்கள்.
அந்தபோரில் எந்த இடத்தில் முகாமிடுவது என்பது குறித்தும் தோழர்களுடன் ஆலோசனை கலந்தார்கள். இறுதியாக ‘முன்திர் பின் அம்ர் (ரளி) எதிரிகளின் முன்பகுதிக்கு முன்னேறிச் செல்லலாம் என யோசனை தெரிவித்ததை ஏற்றல்.
கைதிகளின் விவகாரம்: நபி (ஸல்) தங்களது தோழர்களுடன் கைதிகளைப் பற்றி ஆலோசித்தார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! இவர்கள் நமது தந்தை வழி உறவினர்கள். நமது சகோதரர்கள் மற்றும் நெருக்கமான குடும்பத்தார்கள். எனவே, (இவர்களை கொலை செய்யாமல்) இவர்களிடம் (ஃபித்யா) ஈட்டுத்தொகை பெற்றுக் கொண்டு இவர்களை விடுதலை செய்வோம். நாம் வாங்கும் ஈட்டுத்தொகை இறைநிராகரிப்பாளர்களை எதிர்ப்பதற்கு நமக்கு உதவியாக இருக்கும். அதிவிரைவில் அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டக் கூடும். அப்போது இவர்களும் நமக்கு உதவியாளர்களாக மாறுவர்” என்று கூறினார்கள்.
பின்பு நபி (ஸல்) உமர் (ரழி) அவர்களிடம் “கத்தாபின் மகனே! நீங்கள் என்ன யோசனை கூறுகிறீர்கள்?” எனக் கேட்டார்கள். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்கர் (ரழி) அவர்கள் கூறிய ஆலோசனையை நான் விரும்பவில்லை. மாறாக, இவர்களைக் கொலை செய்வதே எனது யோசனை. எனது இன்ன உறவினரை என்னிடம் கொடுங்கள். அவர் கழுத்தை நான் வெட்டுகிறேன். அக்கீல் இப்னு அபூதாலிபை அலீ (ரழி) அவர்களிடம் கொடுங்கள். அலீ (ரழி) அவர் கழுத்தை வெட்டட்டும். ஹம்ஜா (ரழி) அவர்களிடம் அவரது இன்ன சகோதரரை கொடுங்கள். ஹம்ஜா (ரழி) அவரது கழுத்தை வெட்டட்டும். இதன்மூலம் இணைவைப்பவர்கள் மீது எங்களது உள்ளத்தில் எந்தப் பிரியமும் இல்லை என்று அல்லாஹ் தெரிந்து கொள்வான். அது மட்டுமா! இப்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் குறைஷிகளின் தலைவர்களும் அவர்களை வழி நடத்தும் கொடுங்கோலர்களும் ஆவார்கள்” என்று உமர் (ரழி) கூறினார்கள்.
அபூபக்ர் (ரழி) கூறியதையே நபி (ஸல்) ஏற்று கைதிகளிடம் ஈட்டுத்தொகைப் பெற்று உரிமையிட்டார்கள். ஈட்டுத் தொகை ஆயிரம் வெள்ளி நாணயங்களிருந்து நான்காயிரம் வெள்ளி நாணயங்கள் வரை நிர்ணயிக்கப்பட்டது. மக்காவாசிகள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். மதீனாவாசிகளுக்கு எழுத, படிக்கத் தெரியாது. எனவே, ஈட்டுத் தொகை கொடுக்க இயலாத மக்கா கைதிகள் மதீனாவை சேர்ந்த பத்து சிறுவர்களுக்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டனர். அவ்வாறு சிறுவர்களுக்கு நன்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுத்தவுடன் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். (அர்ரஹீக் அல்மக்தூம்)
உஹது போரின்போது மதீனாவிலேயே இருந்துகொண்டு எதிரிகளை முறியடிப்பதா? அல்லது மதீனாவிற்கு வெளியே சென்று அவர்களுடன் போரிடுவதா? பெரும்பாலோர் மனீதாவிற்கு வெளியே சென்று தாக்குதல் தொடுக்குமாறு ஆலோசனை கூறவே இறுதியாக மதீனாவிற்கு வெளியே சென்று போரிட்டார்கள்.
ஆகழ் (கன்தக்) போரின்போது காஃபிர்-அஹ்லுல் கிதாப் ஆகிய கூட்டுப்படையினரிடம் நடப்பு ஆண்டின் மதீனா விளைச்சலில் மூன்றிலொரு பகுதியைச் செலுத்தி சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளலாமா? என்பது தொடர்ப்பான ஆலோசனை. சஅது பின் முஆத்- சஅத் பின் உபாதா (ரளி) இருவரும் எதிர்ப்பு தெரிக்க அந்த யோசனையே நபி (ஸல்) அவர்கள் கைவிட்டார்கள்.
ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது முஷ்ரிகுகள்மீது தாக்குதல் நடத்துவது குறித்து தோழர்களுடன் ஆலோசனை கலந்தார்கள். சண்டை வேண்டாம் என அபூபக்கர் (ரளி) ஆலோசனை கூற அதற்கு நபியவர்கள் உடன்பட்டார்கள்.
பத்ருக்கு தளபதிகள் நியமிக்கப்படுவதும்
இம்முறை மதீனாவிற்கும் அங்கு தொழுகை நடத்துவதற்கும் பிரதிநிதியாக அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் (ரழி) அவர்களை நபி (ஸல்) நியமித்தார்கள். நபி (ஸல்) மதீனாவிலிருந்து வெளியேறி ‘ரவ்ஹா’ என்ற இடத்தை அடைந்த போது அபூலுபாபா இப்னு அப்துல் முன்திர் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்து மதீனா அனுப்பி வைத்தார்கள்.
இப்போருக்கான பொதுவான தலைமைத்துவத்தின் வெள்ளைக் கொடியை ‘முஸ்அப் இப்னு உமைர் அல்குறைஷி அல்அப்த’ (ரழி) அவர்களிடம் வழங்கினார்கள்.
படையை இரண்டு பிரிவாக ஆக்கினார்கள்.
1) முஹாஜிர்களின் படை: இதற்குரிய கொடியை அலீ இப்னு அபூ தாலிப் (ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள். இக்கொடிக்கு ‘உகாப்’ என்று சொல்லப்பட்டது.
2) அன்ஸாரிகளின் படை: இதற்குரிய கொடியை ஸஅது இப்னு முஆத் (ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள். இந்த இரு படைகளின் கொடி கருப்பு நிறமுடையதாக இருந்தது.
படையின் வலப் பக்கப் பிரிவிற்கு ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். இடப் பக்கப் பிரிவிற்கு மிக்தாது இப்னு அம்ர் (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். நாம் முன்பு கூறியது போன்று இவ்விருவர்தான் குதிரை வீரர்களாக இருந்தார்கள். போரின் கடைசி பிரிவிற்கு கைஸ் இப்னு அபூ ஸஃஸஆ (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். மற்றபடி பொது தளபதியாகவும், படையை வழி நடத்துபவராவும் நபி (ஸல்) அவர்களே விளங்கினார்கள்.
இபாதத்தின் முன்னேற்றத்திலும் திட்டமிடுங்கள்
عَنْ أَبِي يَعْلَى شَدَّادِ بْنِ أَوْسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ : الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ ، وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ ، وَالْعَاجِزُ ، مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا ، ثُمَّ تَمَنَّى عَلَى اللَّهِ. (ابن ماجه-4260
அபூ யஃலா ஷத்தாது பின் அவ்ஸ் (ரளி) அறிவிக்கிறார்கள்: அறிவாளி தனது மனதை விசாரணை செய்து (வென்று) மரணத்திற்கு பிறகு உள்ளவற்றிர்க்காக அமல் செய்தவனாவான். முட்டாள் தனது மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு (நிராசயாகி) பிறகு அல்லாஹ்வை ஆதரவு வைப்பவனாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா-4260)
நமது மறுமைக்கான சேகரித்தலிலும் திட்டமிடுதல் மிக அவசியம். காரணம் முஃமின்களுக்கு இந்த உலகம் நிரந்தரமானது அல்ல. எனவே, நமது ஈமானிய நிலை குறித்தும் திட்டமிட்டால்தான் நாளை மறுமையில் வெற்றியாளர்களின் இலக்கை நாம் அடைய முடியும். எனவே, கடந்த வருடம் நமது இபாதத்தின் அளவு எவ்வளவு? (உதாரணமாக: என்ன அமல்கள் செய்தோம்) இந்த வருடம் அதைவிட உபரியான வணக்கங்கள் செய்தோமா? நமது ஈமான் அதிகரித்திருக்குமா? என்பன போன்ற விஷயத்த்pல் ஒவ்வொரு முஃமினும் கவனம் செலுத்தி மறுமையை நோக்கிய ஒரு சரியான திட்டமிடுதலை மேற்கொண்டு மறுமையில் ஈடேற்றம் பெற்றவர்களோடு நாம் இணைய முயற்ச்சிகள் செய்யவேண்டும். அத்தைகைய நல்லோர்களில் நம்மையும் வல்ல ரப்புல் ஆலமின் சேர்த்தருள் புறிவானாக! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்.
ஆக்கம்: மவ்லவி, A . முஹம்மது ஹனீஃப் ஜமாலி M.A., M.Phil.