கவலய விடுங்க – நான் ஒரு கைத்தொழில் சொல்லித் தர்றேன். ஓரளவிற்கு வருமானம் வரும். சமாளிச்சுடலாம்.”
“என்ன கைத்தொழில்?”
“சைக்கிள் சக்கரத்துல – நடுவுல பூ பார்த்திருக்கீங்களா?”
“ஆமா!”
அந்தப் பூ செய்யிற வேலைத்தான்”
“அது எனக்கு வருமா?”
“நான் கத்துத் தர்றேன்”
“எப்படிச் செய்யணும்?”
“பாவுர் சத்திரம் போயி கத்தாழை நார் வாங்கி வரணும், அதைக் காயப் போடணும் – அப்புறம் சாயம் அடிக்கணும், பிறகு சின்ன ராட்டுல வச்சி இடையில பொடி கம்பி போட்டுச் சுத்தணும் – அவ்வளவுதான் பூ ரெடி”
“அப்படியா?”
“ராட்டு நான் தர்றேன். எனக்குப் பழக்கமான நாலு கடைகளை அறிமுகப் படுத்துறேன்.”
“ரொம்ப நன்றி.”
“ஒரு நாளைக்கு எவ்வளவு பூ போடலாம்”
“நூறு பூ போடலாம் – உங்களுக்கு ஐம்பது ரூபாய் கிடைக்கும். மாசத்துக்கு ஆயிரத்தி ஐந்நூறு கிடைக்கும்.”
“ரொம்ப நன்றி – இப்பவே கத்துத் தாங்க”
இரண்டு நாட்களில் பூப் போட கற்றுக் கொண்டார். ஒரு வாரத்தில் கடைகளில் சரக்குப்போட அறிமுகமானார். மளமளவென ஒரு நாளில் நூறு பூக்கள் போடத் துவங்கி விட்டார். மதரஸாவுக்கும், பள்ளிவாசலுக்கும் பூவை எடுத்துவரத் துவங்கினார். பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து முடித்த நேரத்தில், முன் சுன்னத்திற்கும் பர்ளுக்கும் இடைப்பட்ட நேரத்தில் பூப் போடத் துவங்கினார். மக்கள் விமர்சனம் செய்தனர். சிலர் உதவியும் செய்தனர். பள்ளிக்கு உள்யேயே வைத்து பூப் போடுவதை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், சம்பளம் மட்டும் கூட்டிக் கேட்கக் கூடாது என்ற அளவில் நிர்வாகம் இருந்தது.
ஓரு நாள் அஸர் தொழுகையில் மறதியாக மூன்று ரகஅத் தொழவைத்தார், மக்கள் உணர்த்த மீண்டும் தொழுகை நடத்தினார். தொழுகை முடிந்ததும் ஒருவர் சொன்னார்.
“என்ன இமாம் சாப் – நீங்க பூப் போடுகிற நாலு கடைகளை ஞாபகம் வச்சிருக்கலாமே?- ஒரு ரக்அத் விடுபட்டுப் போயிருக்காதே?”
இமாம் குத்புத்தீனுக்கு இதயம் வலித்தது. ஆனால், கோபம் வரவில்லை. இப்போதெல்லாம் அவருக்குக் கோபமே வருவதில்லை. அவரது ஒரே எண்ணம் கடன் தொல்லையில் இருந்து தப்பிப்பது மட்டும்தான். முன்னர் செய்த சேவையெல்லாம் பின்னுக்குப் போனது. மதரஸாவில் பிள்ளைகள் குர்ஆன் படித்தனர். வேறு போதனைகளைத் தர முடியாது போய் விட்டது அவரது வெள்ளி மேடை சுரத்திழந்து போனது. வழக்கமான வரலாறுகளே இடம் பிடித்தன. அவரது சொற்பொழிவைக் கேட்கும் கூட்டம் குறைந்து போனது. வழமைபோல் இமாம் அதிகாலைத் தொழுகைக்காக வீட்டிலிருந்து இறங்கி நடந்தார். எப்போதும் கண்ணில் படும் காலிக் குடங்கள் தென்பட்டன. ஏனோ தெரியவில்லை இன்றைக்கு அக்குடங்கள் தன்னையே பிரதிபலிப்பதாய் உணர்ந்தார். இதயத்தில் வலியுடன் பள்ளி நோக்கி நடந்தார்.
M.A. ஷாஹுல் ஹமீத் ஜலாலி