இமாமின் செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரித்த அதே வேளையில், குடும்பத்தில் வறுமை தலைகாட்டத் துவங்கியது. விஷம் போல் ஏறும் விலைவாசிக்குத் தகுந்த சம்பளம் தரப்படவில்லை. எனவே, மனைவி, இரண்டு மக்கள், பெற்றோர் என்னும் குடும்ப வட்டத்தை அவரால் கவனிக்க இயலவில்லை. இமாம் குத்புத்தீன் கவலைப்பட்டார். அவரது கவனம் சிதறத் தொடங்கியது.
நிர்வாகத்திற்குத் தனது நிலையை விளக்கி அடிக்கடி மனு எழுதினார். மனுவைப் படித்து விட்டு ஊதியத்தைக் கொஞ்சம் உயர்த்தினார்கள். ஆனாலும் அதுவும் போதவில்லை. எனவே, வருடந்தோறும் மனு எழுத் தவறுவதில்லை. சளைக்காமல் மனு எழுதுவதைக் கவனித்த நிர்வாக வட்டாரம் இமாமுக்கு “அப்ளிகேஷன் ஃபோபியா” வந்திருப்பதாகப் பேசிக்கொண்டது. “கையில் என்ன கவர்?
பள்ளிக்கு வந்த ஒருவர், இமாம் குத்புத்தீனைக் கலைத்தார். பழைய நினைவுகளிலிருந்து மீண்ட இமாம்-
“அலுவலகம் வரைக்கும் போகனும்” –
எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டு அலுவலகம் நோக்கி நடந்தார். பள்ளிவாசல் அலுவலகம் பரபரப்பாக இயங்கக் கொண்டிருந்தது. ஜமாஅத்தில் உள்ள ஒரு கணவன்- மனைவி பிரச்சனை குறித்து விவாதம் நடந்து கொண்டிருந்தது. இமாமைக் கண்டதும் அலுவலகம் அமைதியானது. செயலாளர் மட்டும்
“என்ன?” என்பது போல் பார்த்தார்.
“சம்பள விஷயமா மனு”
-தயங்கித் தயங்கி நீட்ட
“இதே வேலையாப் பேச்சு – பார்க்கலாம்” செயலாளர் இமாமிடம் இருந்து சட்டெனப் பறித்து மேலாளரிடம் கொடுத்தார்.
“அப்புறம் சொல்லுங்க” –
செயலாளர் பேசிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துத் திரும்பினார். இதற்கு மேலும் அங்கிருப்பது அழகல்ல என் எண்ணிய இமாம் தன் அறைக்குத் திரும்பினார். மாலைத் தொழுகை முடித்து விட்டு சோர்வாக அமர்ந்திருந்த இமாமை மஹல்லாவின் பெரியவர் அஹமது அனுகினார்.
“என்ன விஷயம்?”
“ஒண்ணுமில்ல!”
“இல்லே – ஏதோ கவலையா இருக்கீங்க”
பெரியவரின் தொடர் வற்புறுத்தலில் சொல்லத் துவங்கினார் இமாம். “சம்பளம் போதவில்லை – நெறய கடனாயிடிச்சி என்ன செய்யிறதுன்னே தெரியல”