அவுல் ஃபக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் – சுருக்கமாக டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம். இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உச்சரிக்கப்படக்கூடிய பெயர். இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள ஒரு ஊரில் பிறந்து இந்திய தேசம் முழுவதையும் வசீகரித்த உன்னத பெயராக அது மாறியது ஒரு அதிசயமே. இந்தியாவில் மட்டுமல்லாது அகிலம் முழுவதும் அவரை அறியாதோர் இல்லை எனலாம். அப்படிப்பட்டவர் ஒரு தமிழராக, இஸ்லாமியராக இருந்தது தமிழ் பேசும் இஸ்லாமியர்களான நமக்கும் பெருமை என்பதில் இருவேறு கருத்திற்கு இடமேயில்லை.
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கப்பட்ட அற்புதமான பேச்சாளர், இளைஞர்களின் முன்மாதிரி என பல்வேறு பரிணாமங்களை தன்னுள் அடக்கிய அப்துல் கலாம் நம்மை விட்டும் நீங்காத் துயில் கொண்டு விட்டார். கடந்த 27ந்தேதி மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள மேலாண்மைக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உரை நிகழ்த்தும் போது இதயத்துடிப்பை நிறுத்திக்கொண்டது இந்திய இளைஞர்களின் இதயத்துடிப்பு. இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் போதிப்பதையே தம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்ட ஒருவர், தாம் மரணிக்கும்போதும் அப்பணியையே செய்து கொண்டிருந்தார் என்பது வியக்கத்தக்க செய்தி மட்டுமல்ல, இறைவனின் மாபெரும் அருள் என்பதையும் நாம் நினைவு கூரத்தக்கது.
அப்துல் கலாம் அவர்களின் வரலாறும் மிகவும் ஆச்சரியமானது. தமிழ்நாட்டில் உள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இராமேஸ்வரம் நகரில், 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஸியம்மாவுக்கும் மகனாக ஒரு ஏழை இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த அவர் அங்குள்ள துவக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். குடும்ப வறுமையின் காரணமாக பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார்.
பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள ‘செயின்ட் ஜோசப் கல்லூரியில்’ சேர்ந்து 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். 1955 ஆம் ஆண்டு தன்னுடைய ‘விண்வெளி பொறியியல் படிப்பை’ சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV –III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி- I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கத்தக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் பெரிய விருதான ‘பத்ம பூஷன்’ விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு ‘பொக்ரான் அணு ஆயுத சோதனையில்’ முக்கிய பங்காற்றினார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். ஆதலாலேயே, அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான ‘பாரத ரத்னா விருது’ மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் ‘மக்களின் ஜனாதிபதி’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.
பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா, தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது, ராமானுஜன் விருது, அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம், கிங் சார்லஸ் – II பட்டம், சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது, சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது என பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார். மேலும் அக்னி சிறகுகள், இந்தியா 2012, எழுச்சி தீபங்கள் உட்பட பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
இறுதிவரை பிரம்மச்சாரியாக வாழ்ந்த அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் அனைவரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. அவர் முன்மாதிரி இந்தியராக, இன்னும் சொல்லப்போனால் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் என்று கூறலாம். அப்படிப்பட்டவரை, இஸ்லாமியராக இருந்த போதும் இஸ்லாமியர்களுக்கு அவர் பெரிதாக ஒன்றும் செய்ததில்லை, ஒரு தமிழராக இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளுக்கு எதிராக எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லை என்ற காரணங்களை காட்டி விமர்சிப்பதும், இன்னும் சிலர் அதற்கும் மேலே சென்று அவர் சங்கராச்சாரியரிடம் ஆசி பெற்றார், சாமியார்களை சந்திருக்கிறார், எனவே அவர் ஒரு உண்மையான இஸ்லாமியரே அல்ல என்று ஃபத்வா கொடுப்பதும் முறையற்ற செயல் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், அவர் இஸ்லாத்தைக் குறித்தோ அதன் கோட்பாடுகள் குறித்தோ மாற்றுக் கருத்து தெரிவித்ததாக எந்தவொரு பதிவுமில்லை. அவர் பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுவதை வழக்கமாக கொண்டிருந்தார் என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. பள்ளிவாசல்களுக்கு செல்லும் போது ஒரு சாதாரண இறைஅடியானாக மக்களோடு மக்களாக இருந்த படங்களும் உள்ளன. ஒரு தொலைக்காட்சியில் அளித்த பேட்டியின் போது கூட ‘அல்குர்ஆன் என்னை நெறிபடுத்தியது’ என்று கூறினார். எனவே, அவரை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைத்து சிறுமைப்படுத்துவது அறிவிலிகளின் செயல்பாடேயாகும்.
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக்கொடுத்த, தம் வாழ்வில் பின்பற்றிய பல நற்குணங்களை தம் வாழ்வில் வழமையாகக் கொண்டிருந்தார் அப்துல் கலாம். அந்தக் குணங்கள் யாவும் முஸ்லிம்கள் மட்டுமல்ல, அனைத்து மாந்தர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய அரிய குணங்களாகும். எனவே, ‘உங்களில் இறந்தோரின் நற்செயல்களை நினைவு கூருங்கள்’ என்ற அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்கிற்கேற்ப அப்துல் கலாம் அவர்களின் சிறந்த நற்குணங்களை சுருக்கமாக ஆராய்வதே இச்சிறிய ஆக்கத்தின் நோக்கமாகும்.
அப்துல் கலாம் அவர்களிடத்தில் பல நற்குணங்கள் குடியிருந்தபோதிலும், அவற்றுள் சில முக்கியமான நற்குணங்களை மட்டும் இங்கே காணலாம்.
மற்றவர்களை மதித்தல்:
பல மனிதர்கள் உயர்ந்த அந்தஸ்தை அடைந்தவுடன், பிற மனிதர்களை மதிக்க மாட்டார்கள். அவர்களின் பங்களிப்புக்கோ அல்லது பணிக்கோ கிடைக்க வேண்டிய மதிப்பையும் வழங்க மாட்டார்கள். சிலர் அந்தஸ்தை அடையும் முன்னரே அப்படித்தான் உள்ளனர் என்பது வேறு விஷயம்.
ஆனால் அப்துல் கலாம் இந்த விஷயத்தில் அப்படியே மாறுபட்டு இருந்தார். அடுத்தவர்களை மதிப்பதை முக்கிய கடமையாகக் கருதினார். ஒரு சிறிய மாணவனாக இருந்தாலும் அவரை கண்ணியமாக நடத்துவார், மதிப்பார். யாரையும் இழிவுபடுத்துவதையோ, சிறுமைபடுத்துவதையோ தம் வழக்கமாக அவர் கொண்டதில்லை.
குறிப்பாக, தமக்கு கல்வி கற்றுக்கொடுத்த ஆசான்களை இந்த வயதிலும் கண்ணியப்படுத்துவதை தம் தலையாய கடமையாகக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம். அவர் இறப்பதற்கு ஏறத்தாழ ஒரு மாதம் முன்பாக கூட தமிழ்நாட்டிற்கு வந்து தம் ஆசிரியரை சந்தித்து சென்றதை பத்திரிக்கைகளில் நாம் படித்தோம்.
பொது வாழ்வில் நேர்மை மற்றும் தூய்மை:
ஒரு தலைவர் பொது வாழ்வில் எவ்வாறு நேர்மையாக விளங்க வேண்டும் என்பதற்கு இன்றைய தலைவர்களுக்கு சிறந்த உதாரணமாக கலாம் திகழ்ந்தார். அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அங்கே இருந்த வசதிகளை தம் சொந்த உபயோகத்திற்காக அவர் பயன்படுத்தியதில்லை என்பது ஆச்சரியமான செய்தி. குறிப்பாக, ஜனாதிபதி மாளிகையில் ஒரு திரையரங்கம் உண்டு. மற்ற குடியரசுத்தலைவர்களின் காலத்தில் வருடத்தில் 365 நாட்களும் பணிபுரிந்த அதன் ஆப்பரேட்டர், கலாம் குடியரசுத்தலைவராக இருந்த ஐந்து வருடங்களும் திரையரங்கத்தை திறக்கவும் இல்லை, பணியும் புரியவில்லை எனில் அவரது நேர்மையையும், பற்றற்ற தன்மையையும், பொது சொத்தை தம் சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்தாமல் இருந்த நற்குணத்தையும் நாம் புரிந்து கொள்ளலாம். அவர் தம் பதவிக்காலம் முடிந்து குடியரசுத்தலைர் மாளிகையை காலி செய்து செல்லும்போது வெறும் இரண்டு சூட்கேசுகளை மட்டுமே சுமந்து சென்றார் என்பது உலகில் உள்ள அரசியல்வாதிகளுக்கெல்லாம்; ஒரு சிறந்த முன்மாதிரி.
அனைத்திற்கும் உச்சமாக, எந்த ஒரு பொருளையும் அவர் இலவசமாக பெற விரும்பியதில்லை. எதுவாக இருந்தாலும், தம் சொந்தப்பணத்தை கொடுத்தே வாங்கினார். உதாரணமாக, ஈரோடில் நடந்த ஒரு விழாவில் போது சௌபாக்யா கிரைண்டர் நிறுவனம் ஒரு கிரைண்டரை அவருக்கு வழங்கியது. தமக்கு கிரைண்டர் தேவைப்பட்டதால், அதை வாங்கிக்கொண்ட கலாம் அதன் உரிமையாளர்கள் மறுத்தும், அதற்கான விலையை ஒரு காசோலை மூலம் அளித்தார். கலாம் தம் நிறுவனத்திற்கு வழங்கிய அந்த காசோலையை நினைவுச் சின்னமாக பாதுகாக்க நினைத்த அந்த நிறுவனத்தினர் அதை வங்கியில் செலுத்தாமல் இருந்தனர். சில நாட்களுக்கு பிறகு, அந்த காசோலையை ஏன் இன்னும் வங்கியில் செலுத்தவில்லை? அப்படி செலுத்தாவிட்டால் கிரைண்டரை திரும்ப அனுப்பி வைத்து விடுவோம் என்று குடியரசுத்தலைவரின் மாளிகையில் இருந்து தொலைபேசி வந்ததாம். இன்று ஒரு சாதாரண கவுன்சிலர் கூட அருகில் உள்ள கடைகளுக்கு சென்று தாம் விரும்பியதையெல்லாம் இலவசமாக எடுத்து செல்லும் இழிவான காட்சிகளை நாம் கண்டு வெம்பிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும்.
மனிதநேயம் மற்றும் சமய நல்லியணக்கம்:
சமய நல்லிணக்கத்திற்கும் மனித நேயத்திற்கும் பெரும் எடுத்துக்காட்டாக விளங்கினார் டாக்டர் கலாம். அவருடன் சமகாலத்தில் பயின்ற சாம் பாபு கூறுவது போன்று, ‘அவர் மதத்தால் ஒரு முஸ்லிம், அவர் மிகவும் மதித்த கணித ஆசிரியர் இராமகிருஷ்ண ஐயர் ஒரு இந்து பிராமணர், அவருக்கு தன்னம்பிக்கையை அதிகம் ஊட்டிய அவரது ஆசிரியர் அய்யாதுரை சாலமன் ஒரு கிறிஸ்துவர். வேற்றுமையில் ஒற்றுமை, மத மாச்சரியம் காட்டாதிருத்தல், அனைவரையும் சமமாக பார்த்தல் என பலதரப்பட்ட கோட்பாடுகளையும் தன் வாழ்வில் சரியான முறையில் பின்பற்றிய மகத்தான மனிதர் அவர். எல்லாவற்றிற்கும் மேலாக, திருக்குறளை நேசித்த ஒரு உண்மையான தமிழன். இஸ்லாமியக் கோட்பாடுகளையும் பின்பற்றிய ஒரு சிறந்த முஸ்லிம். நாட்டின் முன்னேற்றத்தை மட்டுமே தம் வாழ்வில் இலட்சியமாகக் கொண்டவர்’ என புகழாரம் சூட்டுகிறார்.
எளிமை:
எளிமைக்கு சிறந்த ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் டாக்டர் கலாம். ஆடம்பரத்தை சுத்தமாக வெறுத்தவர். எந்த ஒரு விழாவிற்கு சென்றாலும், அவருக்கு சிறப்பு இருக்கை ஒதுக்கப்பட்டிருப்பதை கண்டால் உடனே அதை அகற்றச் சொல்வார். அதை அகற்றி மற்றவர்களுக்கு போன்றே அவருக்கும் சாதாரண இருக்கையை தயார் செய்த பின்னே மேடையேறுவார் என்பது பல விழாக்களில் நாம் கேள்விப்பட்ட, நம்மில் பலர் கண்ணால் கண்ட நிகழ்வு.
தாம் அணியும் உடைகளில் கூட ஆடம்பரத்தை அவர் விரும்பியதில்லை. அவரிடம் இருந்தது சில செட் ஆடைகள்தான் என்பதை அவரது உதவியாளர்கள் கூறுவதை கேட்கும் போது, பல்லாயிரக்கணக்கான உடைகளும், ஆபரணங்களும் ஏன் பலநூறு செருப்புகளும் வைத்திருக்கும் இன்றைய அரசியல்வாதிகள் ஏனோ நினைவில் வந்து தொலைக்கிறார்கள். அவருக்கு சொந்தமாக ஒரு சிறிய வீடு சென்னையிலுமில்லை, டெல்லியிலுமில்லை என்பது அவரது எளிமைக்கு மேலும் ஒரு சிறு உதாரணம்.
கல்வி ஆர்வம்:
கல்வி கற்பதிலும், கற்பிப்பதிலும் அவரைப்போன்று ஆர்வம் காட்டிய தலைவர் சமீப காலத்தில இருந்ததில்லை என்று அடித்துக் கூறலாம். இந்திய மக்கள் அனைவரும் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதை தம் உயிர் மூச்சாக கொண்டிருந்தார் என்றே சொல்லலாம். அந்தளவிற்கு கல்வித்தாகம் கொண்டவராக திகழ்ந்தார் டாக்டர் கலாம். இன்னும் சொல்லப்போனால், கல்வியே அவரது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டிருந்தார். அந்த இலட்சியத்தை நிறைவேற்றுவதற்காக கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களுக்கும் சென்றார். அங்குள்ள மாணவர்களிடம் தம் உள்ளக்கிடக்கைகளை பகிர்ந்து கொண்டார். அவர்களை கேள்விகள் கேட்கச் சொன்னார், அக்கேள்விகளுக்கு பதிலளித்தார். மாணவர்களது சந்தேகங்களை தீர்த்து வைத்தார். மின்னஞ்சல் மூலமாகவும் மாணவர்களோடும், இளைஞர்களோடும் தொடர்பு கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தாம் ஒரு சிறிய ஊரிலிருந்து வந்து சாதனைகள் புரிந்தது போல், ஒவ்வொரு குக்கிராம சிறுவனாலும் முடியும் என்று ஊக்கமளித்தார். மாணவர்களுக்கும் அறிவுரைகள் கூறுவதும், அவர்களிடமிருந்து உறுதிமொழி எடுப்பதையும் ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார். அதனால்தானோ என்னவோ, இறைவன் அவரை மாணவர்களுக்கு உரையாற்றும் நிலையிலேயே, அந்த மேடையிலேயே மரணிக்கச் செய்தான்.
இளைஞர்களை ஊக்குவித்தல்:
‘எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில்’ என்ற அவர் இளைஞர்களின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டவராகத் திகழ்ந்தார். உறுதிமிக்க கல்வியில் முன்னேற்றம் கொண்ட இளைஞர்களால் மட்டுமே இந்தியாவை வல்லரசாக ஆக்க முடியும் என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். ‘கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்’ என்றும், ‘தூங்கும்போது வருவது கனவல்ல, ஒருவனை தூங்க விடாமல் செய்வதே கனவு’ என்றும் பலவிதமான பொன்மொழிகளை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தார். இவ்வாறு கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் குறிப்பாக இளைஞர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். எனவேதான், அவர் இறந்த பொழுது, இதுவரை இல்லாத அளவிற்கு இளைஞர்கள் கண்ணீர் சிந்தினார்கள். பலர் தம் குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டதாகக் கதறினார்கள். இதுவே, கலாமின் பண்புக்கு மிகப்பெரிய அத்தாட்சி.
ஒயாத உழைப்பு:
2007ம் ஆண்டு குடியரசுத்தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும்போது அவருக்கு ஏறத்தாழ 76 வயது. அந்த வயதில் நம்மில் பெரும்பாலோர் ஓய்வு எடுக்கவே விரும்புவார். நம்மில் பலர் அந்த வயது வரை இருப்போமா என்பது பலத்த சந்தேகத்திற்குரிய விஷயம். ஆனால் அந்த வயதிலும் ஓயாமல் ஓடிக்கொண்டிருந்தார். ‘வாழ்க்கை என்பது ஒரு நீரோடை போன்றது. அது ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நின்றுவிட்டால் குட்டையாகி கலங்கி விடும்’ என்ற பொன்மொழிக்கேற்ப அவர் எப்போதும் ஓய்வெடுக்க விரும்பியதில்லை, உழைத்துக் கொண்டேயிருந்தார்.
மக்களோடு கலந்திருத்தல்:
வாழ்வின் உச்சத்திற்கு செல்லும் பலர், மக்களை விட்டும் தங்களை தூரப்படுத்திக் கொளவதை நாம் காண்கிறோம். இதிலும் மாற்றமாக இருந்தார் டாக்டர் கலாம். மக்களோடு மக்களாக கலந்திருப்பதையே விரும்பினார். ஜனாதிபதி என்ற அடிப்படையிலும், விஞ்ஞானி என்ற அடிப்படையிலும் அவருக்கென்று பிரத்தியேக பாதுகாப்பு வீரர்கள் இருந்தனர். ஆனால் அந்த பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி மக்களை சந்திக்க விரும்பினார். மக்களோடு அளவளாவுவார். பிறரோடு நன்முறையில் பழகுவது வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கும், நீண்ட ஆயுளுக்கும் உத்தரவாதம் அளிப்பதாக இன்றைய ஆய்வுகள் தெரிவிக்கினறன. இது ஒரு நபிமொழியின் சுருக்கம் என்பதும் நினைவுகூரத்தக்கது. அதற்கு ஒரு வாழும் உதாரணமாக திகழ்ந்தார் கலாம்.
மேற்கூறப்பட்ட நற்குணங்கள் அனைத்தும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் வாழ்வில் கடைபிடித்த, மற்றவர்களை பின்பற்றச் சொன்ன நற்குணங்களாகும். இவையனைத்தையும் தமக்கே தெரியாமல், மற்றவர்களுக்கும் சொல்லாமல் தம் வாழ்வில் தெளிவாக பிரதிபலித்தார் டாக்டர் அப்துல் கலாம்.
ஒருவேளை, இந்த குணங்களை எல்லாம் தாம் இஸ்லாத்தின் அடிப்படையிலும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அடிச்சுவட்டிலும் பின்பற்றுகிறேன் என்று அவர் சொல்லியிருந்தால் இன்று சிலரால் ஏற்பட்டிருக்கும் அவமதிப்புகளுக்கும், அவமானங்களுக்கும் அவர் ஆளாகியிருக்க மாட்டார் என்பது திண்ணம். அந்த வகையில், அது ஒரு சொல்ல மறந்த கதை.
ஆக்கம்: மௌலவி, அல் ஹாஃபிழ்
A.M. அலி இப்ராஹீம் ஜமாலி M.A., M.B.A., M.Phil