ஸ்டெர்லைட் ஆலையின் வேறொரு வடிவம்.

 

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலை தமிழர்களின் சாபத்திற்கு இன்று ஆளாகியுள்ளது.   அந்த ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை ஒட்டுமொத்த தமிழகமும் எழுப்பியிருக்கிறது.

அது தோன்றிய 1994ஆம ஆண்டு முதல் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.  அது 40000 டன் தாமிரத்தை ஓர் ஆண்டுக்கு உற்பத்தி செய்ய வேண்டும்.  ஆனால் 70,000 டன்னுக்குத் தமிழக அரசு அனுமதியளித்தது.  இந்த முறைப்படியான அனுமதியையும் மீறி அது உற்பத்தி செய்வது1,70,000 டன்.  அதாவது ஒரு லட்சம் டன் கூடுதலாக உற்பத்தி செய்கிறது.  இதன் அர்த்தம் என்னவெனில், வரி ஏய்ப்பும் முறைகேடுகளும். இது அரசுக்கு ஏற்படக்கூடிய இழப்பு.  ஆனால் மக்களின் இழப்பு அவர்களின் உடல்நலமும் உயிரும்!
தூத்துக்குடியின் மன்னார் வளைகுடா உயிர்ச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. அதன் 25கிமீ தூரத்திற்கு அதன் உயிர்ச்சூழலைப் பாதிக்கும் எந்த ஆலையும் அமைக்கப்படக்கூடாது.  ஆனால் ஸ்டெர்லைட் ஆலை அரசின் செல்லப்பிள்ளைபோல உயிர்ச்சூழல் பகுதியின் 14வது கிமீட்டரிலேயே தன்னைப் பிரம்மாண்டமாக நிறுவிக்கொண்டது.  இந்த ஆலை முதன்முதலாக மகாராஷ்டிராவில் அமைக்கப்படுவதாக இருந்தது. அதன் பணிகள் தொடங்கிய நேரத்தில் அம்மாநில விவசாயிகள் அதன் ஆபத்தைக் கருதிப் போராடி விரட்டியடித்தார்கள்.  ஏதோ வேலைவாய்ப்புகள் உருவானால் போதுமென்று அப்போதைய தமிழக ஆட்சியாளர்கள் இந்த ஆலையைத் தூத்துக்குடியில் நிறுவ அனுமதி அளித்தார்கள். இவ்வாறு வேலைவாய்ப்புகள் என்று மக்களிடம் படம்காட்டித் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட ஆலைகள் சொந்த ஊர் மக்களுக்கும் வேலைவாய்ப்புகள் கொடுப்பதில்லை;  வெளிமாநிலம், வெளிநாட்டு நிபுணர்கள் ஆலையின் உயர்பதவிகளில் அமர, தமிழர்கள் கூலித்தொழிலாளர்களாகவும் எடுபிடிகளாகவும் மாத்திரமே வேலை பெற்றார்கள்.
இத்தகைய ஆலைகள் அமையும் இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் உடனடியாகவே மக்கள் வாழ முடியாத பாலைவனங்களாக மாறுகின்றன.  ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களின் நீர்நிலைகள் மாசுபட்டன.  அவர்களின் குடிநீரில் தாமிரம், ஈயம், ஆர்செனிக், லுமினியம் உள்ளிட்ட தாதுக்கள் கலந்துவிட்டன.  இந்த நீரைப் பயன்படுத்தும் மக்களும் விலங்குகளும் பல கொடிய நோய்களுக்கு ஆளாகிப் பெரும் துயரங்களை அனுபவிக்கிறார்கள்.  உயிரிழப்பும் பெருகுகிறது.  ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப்புகை மொத்த தூத்துக்குடி நகரையும் மூச்சுத் திணற வைக்கின்றது.
இவ்வளவு இன்னல்களும் துயரங்களும் இருப்பதனால் இந்த ஆலையின் அனுமதியை விலக்கச் சொல்லி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.  ஏழை எளிய மக்களின் துயரங்களைவிட ஆலையின் செல்வாக்கு நீதிமன்றங்களிடம் செல்லுபடியாகின்றன.  ஒரு வழக்கில் ஆலைக்கு ரூபாய் நூறுகோடி அபராதம் விதிக்கப்பட்டது;  அபராதம் செலுத்திவிட்டால் ஆலையைத் தொடர்ந்து நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட் சொன்னது. ஆலை மூடப்பட்டால் வேலைவாய்ப்புகள் பறிபோய்விடுமாம்;  கோர்ட்டின் கருணை இப்படிப்பட்டதாக இருந்தது.  ஒரு புள்ளிவிவரத்தின்படி 2011-12 ஆம் ஆண்டில் ஆலை ஈட்டிய வருமானம் 19,051 கோடி;  இதில் ஆலை ஊழியர்களின் சம்பளமாக வழங்கப்பட்ட தொகை வெறுமனே 92 கோடி ரூபாய்.  இவ்வளவு இழிவான சம்பளத்திற்காக மக்கள் தம் உயிரையும் உடல் நலத்தையும் இழப்பதை அரசும் நீதிமன்றங்களும் பொருட்படுத்துவதில்லை.  ஆலைக்கு விதிக்கப்பட்ட நூறு கோடி அபராதமும் சிறிய மயிர்க்கற்றையே.  அது நிர்வாகம் பொருட்படுத்த முடியாத தொகை.  இப்படியான காரணங்கள், வக்காலத்துகளின் விளைவாக இன்று தூத்துக்குடி வட்டாரமே உயிருக்குப் போராடுகின்றது.  மேலும் இதுபோன்ற ஆலைகளின் தண்ணீர்த் தேவையை அரசு கருதுவதால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வேளாண்மைத் தொழிலுக்குரிய தண்ணீர் கிடைப்பதில்லை.  இதனால் இருபோகம் விளைந்த பாசனப் பகுதிகளில் இன்று ஒருபோகம் விளைவதும் அபூர்வமாகியிருக்கிறது.  சுற்றுச்சூழல் கேட்டுடன் உருவாக்கப்பட்ட சிறுபகுதி வேலைவாய்ப்பு மொத்த வேளாண்மையையும் சூறையாடுகிறது.  ஒரு பக்கம் குறைவான வேலைவாய்ப்பு – மறுபக்கம் கூடுதலான வேலையிழப்பு.  இப்படித்தான் நம் மாநிலம் மட்டுமல்ல, இந்தியா மொத்தமும் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களையும் நிலத்தையும் பாதிக்கும் இதுபோன்ற ஆலைகள் வளர்ந்த நாடுகளில் அமையா!   ஆனால் நம்மீதான பேரழிவினால் உருவாக்கப்படும் இந்த தாமிரம் போன்ற உலோகங்கள் அந்நாடுகளுக்குத் தேவைப்படுகின்றன.  அவை தம் தேவைக்காக இந்த ஆலைகளை மூன்றாம் உலக நாடுகளில் அமைக்கவே விரும்புகின்றன.  தம் நலனுக்காக உலகையும் ஏழை எளிய மக்களையும் பலிகொடுக்க அவை தடுமாறுவதில்லை.  சாதாரண ஆப்ரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள் தம் இருப்புக்காக இந்த வளர்ந்த நாடுகளை யாசித்து வாழ வேண்டிய நிலையிலுள்ளன.  ஆதலால் அவை தம் நாட்டில் இத்தகைய நாசகாரத் தொழிற்சாலைகளை அமைப்பதில் தயக்கம் காட்டுவதில்லை.  இந்தச் சிறிய, வளர்ச்சியடையாத நாடுகளைப்போலத்தான் நம் இந்தியாவும் இருக்கின்றதா, என்ன?
இந்தியாவின் மக்கள் தொகையும் அதன் வளங்களும் அதன் நீராதாரமும் அதன் திறமையும் உலக நாடுகளைச் சவாலுக்கு அழைப்பவை.  ஆனால் ஆட்சியாளர்களின் குற்றேவல் மனப்பான்மையும் எழுச்சியற்ற சிந்தனைகளும் வறுமைசூழ் நாடுகளைப் போலவே இந்தியாவையும் இருப்பில் வைத்துவிட்டன.  வல்லரசாகப் போவதாக இந்நாட்டுக் குடிமக்களை ஏமாற்றி வளர்ந்த நாடுகளின் காலனியாகப் பணிபுரிகின்றது இந்தியா.  மத விவகாரங்களில் உணர்ச்சியலைகளைக் கிளப்பிவிட்டு இந்தியாவின் சுய கௌரவத்தை நிலைநிறுத்தப் பாடுபடுவதாகக் கபடம் பேசுகின்றனர் இந்திய ஆட்சியாளர்கள்.  ஆனால் செயலில் கைகட்டி, வளர்ந்த நாடுகளின் தேவைகளுக்காக இந்தியர்களின் தன்மானத்தை அடகுவைப்பதில் கொஞ்சமும் வெட்கமுறுவதில்லை. இதில்  இந்திய அதிகார வர்க்கமும் குற்ற உணர்ச்சியைக் கொள்வதில்லை.  ஆட்சியாளர்களின் கையில் மதம் ஒரு பகடைக்காய் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
இன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோருகின்ற தமிழகத்தின் உணர்ச்சிகளோடு நாமும் சங்கமிப்போம்.  அதே உத்தியில் ஆட்சியாளர்களின் கபடங்களையும் பாதிக்கப்பட்டோரிடம் எடுத்துரைப்பது நமது கடமை ஆகும்.  ஸ்டெர்லைட் ஆலையின் வேறொரு வடிவமே நம் மத்திய, மாநில அரசுகள்!  இரண்டுமே நச்சுப்புகையும் நச்சு சால்ஜாப்புகளும்தான்;  இதை மனத்தில் கொள்வோம்!