தண்ணீர்த் தேசம் (December 15)

சென்னை நகரமும் கடலூரும் தூத்துக்குடியும் உள்ளிட்ட தமிழகம் இன்று மறுவாழ்வு பெற்றுள்ளது.  பலப்பல நாட்களாக எங்கும் மரண ஓலங்கள், பேரழிவுகள், பெருந்துயரங்கள்.  எழுதிஎழுதிப் பார்த்தாலும் இன்னும் எழுத அனந்தகோடித் துயரங்கள் உள்ளன என்பதுபோல சென்னையும் தமிழகமும் கடும் மழை, புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.  லட்சக்கணக்கானோர் மறுபிறவி எடுத்துள்ளனர். அவர்களின் முகங்களிலிருந்து இன்னும் மரண பயம் நீங்கவில்லை.

ஆனால் இவ்வாறான ஒரு பேரிடர் நிகழும் என அரசு கொஞ்சம்கூடக் கவனத்தில் கொள்ளவில்லை.  மழையைப் பற்றிய அறிவிப்பு பூதாகரமானதாக இருந்தது. அதற்கு அரசு செவிமடுத்ததா என்பதே கேள்வி.  பல பத்தாண்டுகளாகவே தமிழகத்தின் அரசியல் போக்குகள் நிரந்தரமான கொண்டாட்ட மனநிலையில் இருந்துவருகின்றன.  வரைமுறையற்ற புகழ்மாலைகள், நெடுஞ்சாண் கிடையாகப் படுத்துக்கிடத்தல், பாலபிஷேகங்கள், சுயநல வேட்டைகள், அமைச்சர் பதவி என்பதே சொந்தத் தொழில் நிறுவனங்களை நிறுவி லாபம் சம்பாதித்தல்,  தம் எதிரிகளை வேட்டையாடி அழித்தல்….எனப் பலவாறாகவும் தமிழ் அரசியல் பண்பாடு அநாகரிகர்களின் பண்பாடாக மாறிவிட்டது.  இவையெல்லாம் போலித்தனமான வழிபாட்டுமுறைகள் என்பதை நன்றாக அறிந்திருந்தாலும் ஒவ்வொருவரும் இதற்குத் தம் மனங்களைச் சாயவைத்துப் பலியாகி வருவது விந்தையிலும் விந்தையாகும்.  இரண்டு கழகங்களின் பெருந்தலைவர்களும் இந்த்த் தீராத மனநோய்க்கு ஆளானதின் விளைவு அரசு நிர்வாகத்தின் முடக்கத்தில் முடிந்துள்ளது.

தம் அரசியல் திட்டமிடல்களுக்கு வெளியே சமூகத்தின் இன்னல்கள அரசையும் முதல்வர்களையும் பாதிப்பதில்லை.  இதைத்தான் இம்முறை தமிழகம் எதிர்கொண்ட வடகிழக்குப் பருவமழை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. தீராத மந்தத்தில் வீழ்ந்துவிட்ட அரசுக்கு இந்தப் பருவமழை கொண்டுபோன செய்தியைவிடவும் அது மக்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் பாடமும் இழப்பும்தான் மிகப் பெரியது.  மாநில அரசின் கையாலாகாத் தன்மை குறித்து அரசுக்கு எவ்விதக் கவலையும் இப்போதும் இல்லை.  மழையோடு சேர்ந்துவந்த புயல் பற்றி நம் மாநில அரசின் கவனம் இருந்ததா என்ற கேள்வியை முன்வைத்தால், ஒரு நூலிழைக்குத் தகுமான பதில்கூடக் கிடைக்கப்பெறாது.  தமிழக மந்திரிகள் அத்தனைபேரும் முதல்வரின் கால்களைப் பார்த்துக்கொண்டிருக்கவும், அதன் அசைவுகளுக்கேற்றபடித் தம் கனத்த உடல்களையும் கூழைக்கும்பிடுகளையும் நகர்த்திக்கொண்டு போகவும் நேர்ந்து விடப்பட்டிருக்கிறார்கள்.  இத்தகையச் செயல்படத் தெரியாத கும்பலை மாண்புமிகுக்களாகக் கொண்ட ஒரு மாநிலத்தில் மக்களின் துயரம் எப்படிக் கவனம்கொள்ளப்படும்?  முதல்வரின் சொந்தத் தொகுதியில் வெள்ளச் சேதங்களைப் பார்வையிடச் சென்ற மந்திரிமார்கள் கடும் அவமானத்திற்கு உள்ளானதாக வரும் சேதிகளில் பொய்யிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அது கற்பனையான செய்திகளாகவே இருந்தாலும் மக்களின் மனப்போக்கு இன்று அதுதான் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

இந்த மழைநாள்களிலிருந்து இன்னும் அரசியல் ஆதாயம் தேடவே ஆளும் கட்சி விரும்புவதையும், மிக மலிவான உத்திகளில் அது இறங்கியிருப்பதையும் இணைய நேயர்கள் அம்பலப்படுத்தினர்.  தம் பாவக் கறையைக் கழுவ அரசு இனியாவது என்ன செய்யப்போகிறது என்று மக்கள் ஆங்காங்கே கேள்விகளை எழுப்பிவருகிறார்கள்.

சென்னை நகர வளர்ச்சியை நாம் விரும்புவதில் தவறில்லை.   ஆனால் எல்லா வசதிவாய்ப்புகளும் வேலைவாய்ப்புகளும் சென்னையைச் சுற்றி மட்டுமே இருக்க்க்கூடாது என்பதை இந்த மழை பறைசாற்றியுள்ளது. குடிமக்கள் சென்னையில்தான் வேலைவாய்ப்புகள பெற வேண்டும் என்கிற இக்கட்டான நிலையை அரசும் தனியார் நிறுவனங்களும் சேர்ந்தே உருவாக்கின.  தலைநகரையொட்டித் தம் நிறுவனங்களை அமைத்தால் அதனால் அந்த நிறுவனங்கள் பெறும் ஆதாயங்கள் இம்மையுலகச் சுகபோகங்களையும் தாண்டிச் செல்லக்கூடியதாகும்.  நோகாமல் பணம் சம்பாதிக்கலாம்;  அதை வெளிநாடுகளுக்கும் கொண்டுசெல்லலாம்.  ஏதேனும் சட்டங்கள் இத்தகையப் பணவேட்டைக்குத் தடைபோடுமாயின் உடனடியாக மந்திரிமார்களைச் சந்தித்து சல்லிசான லஞ்சப் பேரங்களில் முடித்துவிடுவதும் இதில் அடங்கியுள்ள வசதி.

இந்நிறுவனங்களின் பெருக்கம் ஏழை  மக்களின் வாழ்விடங்களையும் நீர்ப்பெருக்கங்களையும் முதலில் வேட்டையாடுகின்றன. நமக்கான உணவுதானிய உற்பத்தியைச் சீர்குலைக்கின்றன;  விவசாயிகளை அவர்தம் நிலங்களிலிருந்தும் உழைப்பிலிருந்தும் வெளியேற்றி அந்நிய நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்குக் கூலித் தொழிலாளிகளாக்குகின்றன.  ரியல் எஸ்டேட் துறையில் செலுத்தப்படும் அந்நியர்களின் முதலீடுகள் இந்தியாவை வளர்ச்சியைக் காட்டியே ஏமாற்றத் துணிந்துள்ளன.  அந்நிய முதலீடுகள் இன்று இருக்கும்;  நாளை போய்விடும். ஆனால் மக்கள் வாழ்வதற்கும் வேளாண்மை புரிவதற்கும் நீரைச் சேமிப்பதற்குமான வளமான நிலங்கள் எப்படி நமக்கு மீண்டும் கிடைக்கும்? ஒரு வளர்ச்சித் திட்டம் என்பது அங்கு வாழும் மக்களின் வாழ்நிலைகள், இயற்கைக் கொடைகள், நீண்ட நெடிய காலத்திற்குமான பயன்பாடுகள் போன்ற பலவிதமான அம்சங்களில் உள்ளன.  ஆனால் உலக மயமாக்கல் இந்த மக்கள் நலச் சிந்தனைகளையும் இயற்கைப் பராமரிப்பையும் தொடர்ந்து வேட்டையாடி வருவதை ஏற்கெனவே நாம் பல தலையங்கங்கள் மூலமாக மீண்டும்மீண்டும் சொல்லிவருகிறோம்.  அதெல்லாம் எவ்வளவு பெரிய உண்மைகள் என்பதை நடப்புப் பேரழிவுகள் நமக்கு உணர்த்தியுள்ளன.  மக்களுக்கு வேலைவாய்ப்புகளைக் கொடுக்கவே அந்நிய நிறுவனங்களின் வருகையும் முதலீடும் தேவைப்படுவதாக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பொய் சொல்லிவந்தன. அவை நம் மக்களையும் இயற்கை வளக்களையும் வேட்டையாடிவிட்டன.  நாம் நம் பூர்வீகச் சொத்துக்கு உரிமை கொண்டாடுவதைப்போல நேற்று பெய்த மழையும் வெள்ளமும் த்த்தமது சொத்துக்கு உரிமை கோரி அனைத்து வீடுகளையும் மாடிக் குடியிருப்புகளையும் நிறுவனங்களையும் சூழ்ந்தன. சென்னையைச் சுற்றிலுமுள்ள பல்கலைக் கழகங்கள், ஐ.டி. நிறுவனங்கள், பெரிய தொழிற்சாலைகள் அனைத்தும் நம் நிலவளங்களை உண்டு செரிமானம் செய்திருப்பதற்கு இன்றைய வெள்ளக்காடுகள் சாட்சியாகும்.

எனவே வளர்ச்சியோ முன்னேற்றமோ அவை மக்களின் வாழ்க்கையை நோக்கியதாகவே இருக்க வேண்டும்.  புதிய பொருளாதாரக் கொள்கை என்கிற உலகமயக் கொள்கை அமலுக்கு வந்தபின் வெளிநாட்டு நிறுவனங்களின் கொள்ளை லாபம் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டுக் காரியங்கள் நடந்தன.  இன்று அவற்றுக்கு ஆப்பு அடிக்கப்பட்டுள்ளது.  அரசியல் தலைவர்கள் சொகுசான மாளிகைக்குள் இருந்து வெளிநாட்டுப் பானங்கள், உணவுகளை அருந்தி உயிர்வாழ்வதால் அவர்கள் தமக்கே உரித்தான பொருளாதார வளர்ச்சி குறித்த சிந்தனைகளிலும் நுகர்வு வேட்டைகளிலும் இறங்கிச் செயல்படுகின்றனர்.  ஆனால் நாமோ வாழ்ந்தாலும் மறைந்தாலும் இங்கேயே பிறந்து இங்கேயே வாழ்ந்து இங்கேயே மரணிக்கிறவர்கள்.  நமக்கு நம் உணவும் நம் தண்ணீருமே தேவை.  நாம் வாழ்வது இந்நாட்டுக்காகவும் நம் சகோதரத்துவத்துக்காகவும்.

ஆகையால் மாநில அரசு தன் மலிவான மெத்தனமான போக்குகளிலிருந்து விலகி சென்னையை மீண்டும் எப்படிப் புனரமைப்பது என்பதைச் சிந்திக்க வேண்டும்.  அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டிப் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்க வேண்டும். சென்னையின் பேரழிவு கண்ணுக்குத் தெரிகிறது.  அதற்கு மத்திய அரசு கொடுத்த நிவாரணத் தொகை மிகக் குறைவானதாகும்.  இதனை இன்னும் அதிகப்படுத்திக் கேட்க அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் முதல்வர் கோரிப் பெறவேண்டும்.  தன்னுடைய சொந்த ஹோதாவில் அவர் இதை அணுக முற்படக் கூடாது.  இங்கே நிற்க வேண்டியது மக்களின் துயர் துடைப்புத்தானே தவிர தன் ஆளுகையை நிலைநாட்டுவதல்ல என்பதை முதல்வர் கவனத்தில் கொண்டாக வேண்டும்.  தன் ஆளுமையையும் அதிகாரத் தருக்கையும் நிலைநாட்டக் கிடைத்த வாய்ப்பை அவர் தவற விட்டுவிட்டார். இனி அதை நொந்து ஆவதென்ன?

முதல்வர் என்ன செய்யப்போகிறார் என்பதை எல்லோரும் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.  அவர் முதலில் தன் நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தட்டும்.  அமைச்சர்களை நியமிக்கட்டும்.  எல்லோரும் எப்போதும் மக்கள் அக்கறையோடு செயல்படட்டும்.  இனியும் அந்நிய முதலீடுகளே நமக்கு ஔடதம் என்கிற மாயையைக் களைந்து மனம் திருந்தி வெளிவரட்டும்.  நம் நிலம், நம் நீர், நம் உணவுக்கான உழைப்புக்கு நாம் திரும்புவோம்.