இமாம் குத்புத்தீன் அதிகாலைத் தொழுகைக்காக வீட்டிலிருந்து இறங்கினார். நகராட்சிக் குழாயடியில் காலிக் குடங்கள் தண்ணீருக்காக வரிசையாய் நின்றன. “பாவம், இந்த மக்கள். தண்ணீருக்காக எவ்வளவு சிரமப் படுகிறார்கள்” என்ற கவலையோடு நடந்தார். ஐந்து நிமிடக் கரைசலில் பள்ளிவாசல் வந்தது. மக்களுக்கு அதிகாலைத் தொழுகை நடத்தினார். இரத்தினச் சுருக்கமாய்த் திருக்குர்ஆன் விரிவுரை நிகழ்த்தினார். முடிந்ததும் மக்கள் கலைந்தனர்.
ஏழு மணி வாக்கில் சிறுவர்கள் மதரஸா வந்தார்கள். வலது கையில் காபியும், இடது கையில் காலை நாளிதழுமாய் உட்கார்ந்தார். ஐந்து நிமிடம் செலவழித்து முக்கியச் செய்திகளை மேய்ந்தார். காபிக் குடித்து முடித்தார். பிள்ளைகள் ஓதுவதற்காக வரத் தொடங்கினர். வகுப்பு வாரியாக குழந்தைகளுக்குப் பாடம் நடத்தினார். சின்னஞ்சிறு பிரார்த்தனைகளைக் கற்றுக் கொடுத்தார். பிள்ளைகளின் தமிழ், ஆங்கில, அரபி, மும்மொழி கையெழுத்துப் பிரதிகளைப் பார்வையிட்டுக் கையெழுத்திட்டார். சற்று நேரத்தில் அரபிப் பாடலும், ஸலவாத்தும் இசைந்துவிட்டு பிள்ளைகள் கலைந்தனர்.
இமாம் குத்புத்தீன் மேஜை டிராயரைத் திறந்து வெள்ளைப் பேப்பர் உருவி மனு எழுதத் துவங்கினார்.
அன்புள்ள நிர்வாகிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.
தங்களது பள்ளியில் கடந்த ஏழு ஆண்டுகளாக இமாமாகப் பணியாற்றி வருகிறேன். தற்போதுள்ள விலைவாசி உயர்வின் காரணமாக தாங்கள் வழங்கும் ஊதியம் போதவில்லை. எனவே, ஊதியத்தை உயர்த்தித் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
எழுதிக் கையெழுத்திட்டு நான்காக மடித்து கவருக்குள் இட்டு மூடி வைக்கையில் அவரது எண்ணங்கள் திறந்து கொண்டன.
இமாம் குத்புத்தீனுக்கு அரபிக் கல்லூரியில் பாடங்கள் பயிற்றுவித்தவர் ஹாஜா முயீனுத்தீன் என்னும் பேராசிரியர். சொந்தப் பிள்ளையைப் போல பார்த்துக் கொண்டார். மார்க்கக் கல்வியோடு உலகமும் கற்றுத் தந்தார். சொற்பொழிவில் வடிவமைத்தார். திருமறை ஓதுவதில் சர்வதேச முறைகளை அறிமுகப் படுத்தினார். குத்புத்தீனை ‘ஹைடெக்’ இமாமாக உயர்த்தி அரசரடி ஜமாஅத் பள்ளியில் இமாமாகச் சேர்த்துவிட்டார்.
குத்புத்தீன் தனது ஆசானை அச்சு மாறாமல் பின்பற்றினார். வெள்ளிமேடையைத் திறம்பட அலங்கரித்தார். வழக்கமான சரித்திரங்களைச் சொல்லாமல் அவ்வப்போதுள்ள நிகழ்வுகளைப் பதிவு செய்தார்.
ஐ.நா. சபை செயல்படவில்லை, எனவே, அதற்கு மாற்று வேண்டும் என்றார். அமெரிக்கா இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட போது தீவிரவாதத்திற்கு எதிராக முழங்கினார். செய்தித்தாள் வாசிப்பது எப்படி? பள்ளியைப் பயன்படுத்துவது எப்படி? பயணம் செய்வது எப்படி? தீவரவாத்தை முறியடிக்கும் வழி என்ன? கருத்து வேறுபாடுகளைக் களைவது எப்படி? தேர்தலில் பங்கேற்பது எப்படி? ஓட்டு போடுவது எப்படி? அரசு அலுவலகங்களை அணுகுவது எப்படி? கலாச்சாரச் சீரழிவிலிருந்து நம் குழந்தைகளைக் காப்பது எப்படி? பன்மைச் சமூகமாய் வாழும் இந்தியாவில் முஸ்லிமகளின் பங்களிப்பு என்ன? வயசுக்கு மீறின, சிந்தனையும், பேச்சும், சமூகக் கவலையும் இமாம் குத்புத்தீனிடம் வெளிப்பட்டது. விளைவு, மக்கள் கூட்டம் கூட்டமாய் அவரது உரைகளைக் கேட்கத் திரண்டனர்.