இவள் பெயர் பாரதமாதா. வேலைவெட்டி இல்லாத நேரங்களில் இவள் பவனி வருவாள். பாஸிஸ சக்திகள் அரசியல்ரீதியில் தோல்வியடையும் நேரங்களிலும் இவள் வரக்கூடும். மோடி ஆட்சியின் மீதான அதிருப்திகள் பரவிவருவதால் பாரத மாதா இப்போது மீண்டும் பவனி வந்திருக்கிறாள். அவள் வந்துவிட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரே இருப்பாக அவளை இருத்திவைத்துவிட பாஸிஸ சக்திகள் முயற்சிகளை எடுத்துள்ளன; வெறுப்பு அரசியலை நடத்த இன்னும் வசதியாக இருக்கும் அல்லவா?
”பாரத மாதா கி ஜே” என்று அனைவரும் சொல்ல வேண்டும் என்று இப்போது பாஸிஸ்டுகள் புதிய நிபந்தனைகளை விதித்துக்கொண்டிருக்கிறார்கள்; அவ்வாறு சொல்லவில்லையென்றால் அவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட வேண்டும் என்றும் சொல்லிவருகிறார்கள். பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டிய நூறுநூறு வழிகளைச் சிந்திப்பதில் அவர்களின் காலமும் சக்தியும் விரயமாகிக் கொண்டுள்ளன. இந்த சக்தியையும் காலத்தையும் அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தினால் எத்தனையெத்தனையோ பலன்கள் இந்நேரத்திற்குள் கிடைத்திருக்கலாம். பாரத மாதா பலன் பெறுவதை விட, வெறுப்பு அனலில் நாடு சிக்கினால் போதும் என்ற அவர்களின் ஆசையை சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
பாரத் மாதா கி ஜே என்று நான் சொல்லமாட்டேன் என்கிறார் முஸ்லிம் மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி. இதனால் உணர்ச்சிவசப்பட்ட பா.ஜ.க.வின் மத்திய அமைச்சர்கள் முதல்கொண்டு கீழேயுள்ள பாஸிஸவாதிகள் வரை வெறுப்பை உமிழ ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் கூடியிருப்பார்கள். நிகழ்ச்சி முடியும் நேரத்திலோ தொடங்கும் நேரத்திலோ ‘பாரத் மாதா கி ஜே’ என்று முழங்குகிறார்கள். உடனே இந்தியாவே இந்தக் கோஷத்தை முழங்குவதாக நாடுமுழுக்கவும் செய்தி பரப்புகிறார்கள் பாஸிஸ்டுகள். வழக்கம்போலவே பாகிஸ்தான் அணி இந்தியாவில் கிரிக்கெட் விளையாட வரும் சமயங்களிலும் காலகாலமாக இதுபோன்ற கோஷத்தை எழுப்புவதுண்டு. இந்த முறை டி-20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் விளையாடியபோதும் பாஸிஸ்டுகள் அந்த கோஷத்தை எழுப்பியுள்ளார்கள். இதை அருண்ஜெட்லி பெருமைபொங்க்க் கூறி இந்தியாவின் குரலாகச் சித்திரப்படுத்த பெரும் முயற்சிகளை எடுத்துள்ளார்.
பாரத மாதா மீது தேசபக்தர்களுக்கு அபிமானமும் பக்தியும் இருந்தால் அவர்கள் தாராளாமாகவே அதை முழங்கலாம்; அதை யாரும் தடுக்கவில்லை. இதுவரை பாஸிஸ்டுகளை அப்படித் தடுத்த சம்பவங்கள், தடுக்க முயற்சி செய்த சம்பவங்கள் என்று எதையும் சுட்டிக்காட்ட முடியாது. ஆனால், பாரத் மாதா கி ஜே இன்னும் இந்தியாவின் பொது முழக்கமாக மாறவில்லை. பாரதமாதவின் மீதான இந்தப் பாராமுகம் பாஸிஸ்டுகளின் மனத்தில் பெரிய நெருஞ்சிமுள்ளாக்க் குத்துகிறது. மக்களின் மனத்தில் தேசபக்தி இயல்பாகப் பொங்கிவர வேண்டும். அதுவே சரியான தேசப்பற்று ஆகும். இந்திய வாழ்வும் வளமும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நிறைவாக இருக்குமெனில் இத்தகைய கோஷங்கள் தானாகவே எழும்பிவிடும். ஆனால் அம்மாதிரியான கொடுப்பினைகள் இங்கே இன்னும் நிறைவாகவில்லை. அன்றாட வாழ்க்கை இங்கே அனைவருக்கும் நரக வாசலின் வெம்மையை நினைவூட்டுகின்றது. எல்லோருடைய வாழ்க்கையும் அந்தரத்தில் ஊசலாடுகிறது. அவரவர் மாநிலங்களின் எல்கைகளைத் தாண்டினால், தத்தமது வாழ்க்கையைப் பறித்துக்கொள்ள வருகின்ற அந்நியர்கள் என சொந்த மாநிலத்து மக்கள் அவர்களை அடித்துவிரட்டுவது சகஜமாய் இருக்கின்றது. அடுத்தடுத்த மாநிலங்களோடு எல்லைத் தகராறுகள், நதிநீர்ப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இன்னும் தொடர்கின்றன. ஒரே மொழியைப் பேசி,ஒரே பண்பாட்டைப் பின்பற்றினாலும் கூட அங்கேயும் மாநிலங்களைப் பிரித்துத் தரச் சொல்லும் கோரிக்கைகள் எழும்பியவண்ணம் உள்ளன. இத்தனைப் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு ஒரே ஒரு அடையாளத்தை முன்னிறுத்துவது மோசடித்தன்மை வாய்ந்த தேசபக்தி நாடகமாகும். அதற்கான தேவையற்ற முனைப்புகளை பாஸிஸ்டுகள் கிளப்புவது மக்களின் நலனைப் புறக்கணிக்கும் செயலாகும்.
இந்தப் பல்வேறு மொழி, பண்பாட்டுப் பிரச்சினைகளைக் கரைத்துவிட்டு ஒரே ஒரு தேசம்தான் இங்கே இருக்கிறது என்று காட்ட பாஸிஸ்டுகள் கடும் யத்தனங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த தேசத்தைச் செப்பம் செய்ய ஒரே ஒரு பண்பாடுதான் நாட்டில் இருக்கிறது என்றும் நிறுவிவிட ஆர்.எஸ்.எஸ். தாய்ச்சபை முயற்சியை மேற்கொள்கிறது. நிலத்தையும் பண்பாட்டையும் இனைப்பதற்கு ஒரு அடையாளம் அவர்களுக்குத் தேவையாக உள்ளது. அந்த அடையாளமாக பாரத மாதாவை ஸ்தாபிக்க திட்டமிடுகிறார்கள். அந்த பாரத மாதாவை மக்கள் மனத்தில் விதைப்பதற்காகத்தான் எப்போதும் அவசியமில்லாத கருத்தியல் வன்முறையை முன்னிறுத்திப் பிரிவினை, வெறுப்பு அரசியலை வார்க்கிறது. ஆகையால் எல்லோரும் பாரத் மாதா கி ஜே என்று சொல்லவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறது. இந்தச் சக்திகளோடு சிவசேனா போன்ற அதிதீவிரவாத இயக்கங்களும் கைகோத்துள்ளன.
தேசபக்திப் பரவசத்திற்கு பா.ஜ.க.வோடு போட்டிபோடும் சிவசேனா தான் வேர்கொண்டுள்ள மராட்டிய மாநிலத்தில் உ.பி. பிஹார் மாநிலத்தவர்களை வெளியேறச் சொல்வது அதன் அரசியல் நடவடிக்கையாகும். வேற்று மாநிலத்தவர்களைக் கண்டவிடத்தில் அவர்களின் வாழ்க்கை ஆதாரங்களை நாசப்படுத்தி அகதிகளைப் போல அவரவர் சொந்த மாநிலங்களுக்கு விரட்டியடிக்கிறது. இன்று முஸ்லிம் வெறுப்புக்குத் தீனிபோட பாரத் மாதா கி ஜே எனச் சொல்ல வேண்டும் என்கிற சிவசேனாவுக்கு நாம் ஒரு கேள்வியை முன்வைக்கலாம். இனிவரும் நாள்களில் அடுத்தடுத்த மாநிலத்தவர்களை விரட்டியடிக்கும்போது அவர்கள் ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொன்னால் சலுகை வழங்கப்படுவார்களா? தொடர்ந்து மராட்டிய மாநிலத்தில் தொழில்செய்யவும் வாழவும் சிவசேனையினர் அனுமதிப்பார்களா?
ஒவ்வொருவரின் நாட்டுப்பற்றும் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படும். அதற்கென்று தனிப்பட்ட வடிவம் இருக்க முடியாது. ஒருவர் விரும்பும் வடிவத்தில்தான் அடுத்தவரின் நாட்டுப்பற்று இருக்கவேண்டும் என்று எண்ணினால் அவர் எந்தவித்த்தால் இன்னொருவரைவிட தனி அதிகாரம் படைத்தவராக இருக்கிறார்? இப்போது இந்த தேசபக்திக்கு இவ்வளவு மெனக்கிடுகிறவர்கள் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்களல்ல. அந்நியர்கள் போட்ட விலங்கில் கந்தலாடையும் சிக்குப்பிடித்த தலையும் துர்நாற்றமுமாக ஓர் அநாதையாக அழுந்திக்கிடந்த பாரத மாதாவைப் பாசக்கண்கொண்டு பார்க்காதவர்கள் இன்றைய பாஸிஸ்டுகள். அப்போது தங்களின் பாரத மாதாவைப் போராடி விடுவிக்கத் துணியாத கோழைகள் எல்லாம் சுதந்திரம் கிடைத்தபின் தேசபக்தி என்றும் பாரத் மாதா என்றும் புளகிப்பது கடைந்தெடுத்த பித்தலாட்டம் ஆகும்.
மராட்டிய மாநிலச் சட்டசபையில் அந்தக் கோஷத்தை எழுப்ப மறுத்த மஜ்லிஸ் கட்சியின் உறுப்பினர் வரீஸ் பதான் அனைத்துக் கட்சிகளும் வாக்களித்தின்பேரில் வெளியேற்றப்பட்டிருக்கிறார். இது நாட்டையும் வளர்ச்சியையும் பின்னோக்கி இழுக்கும் முயற்சி. இந்தப் பின்னோக்கும் முயற்சிக்கு மராட்டிய மாநில அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒன்றிணைந்துள்ளது அதிர்ச்சியைத் தருகிறது. மாநிலத்தின் பெரிய கட்சியான காங்கிரஸும் சந்தர்ப்பச் சூழல்களுக்கு ஏற்ப இந்தக் கள்ள நாடகத்தின் ஓர் அங்கமாக இடம்பெற்று வ்ருவது கண்டிக்கத்தக்கது. கடந்த காலத்திலும் காங்கிரஸ் எப்படிப் பல வேடங்களோடு நடித்துவந்த்தோ அதே விதமாகத்தான் மராட்டிய மாநிலத்திலும் நடந்துவருகிறது. இப்போது மோடி ஆட்சிப் பீடத்தில் இருக்கும்போதும் அக்கட்சி இந்தப் போக்கைத் தொடருமானால், காங்கிரஸின் விதி மேலும் பலவீனமாகும்.
ஆகையால் காங்கிரஸ் கட்சி உண்மையான சமூக அக்கறையோடு நடந்துகொள்ள வேண்டும். பாஸிஸ்டுகள் நட்த்தும் நாடகங்களுக்கு எதிராக நாட்டின் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட இனத்தினரும் சிறுபான்மையினரும் ஒரே அணியாகத் திரள்வது அவசியம்.