பாரபட்சமான சமூக நீதி (மே-16)

சில காரியங்கள் நடப்பது தெரியாமல் நடக்கும்;  வேறுசில அதிரடியாகவே நடக்கும்.  அவ்வாறான இரண்டு விஷயங்கள் இப்போது நடந்துள்ளன.

முதலாவது, இனி மருத்துவராக வேண்டுமானால் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்திரவு பிறப்பித்துள்ளது.  அதிலும் இந்தக் கல்வியாண்டில் இருந்தே இந்த நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்றும் கூறிவிட,  இப்போது நுழைவுத் தேர்வும் நடந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஏற்கெனவே ஒரு மாணவர் மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால், அவரின் சொந்தத் திறமை மற்றும் ஆர்வத்தின் பேரில்தான் அதைத் தேர்வு செய்கிறார்.  இந்த இயல்பான நாட்டம் அவரைப் பள்ளிக் காலத்திலிருந்தே இயக்கிவருகிறது.  எனவே, அவர் அதற்கான குறைந்தபட்சத் தகுதியைப் பெற்றிருப்பார் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.  தன் பரீட்சைகளையும் அவர் அதே ஊக்கத்துடன் உற்சாகத்துடன் எழுதிப் பொதுத் தேர்விலும் வெற்றி பெறுகிறார்.  இந்த அடிப்படையில்தான் இந்தியாவில் ஒவ்வொரு மாணவரும் மருத்துவக் கல்லூரிகளுக்குள் நுழைகின்றனர்.  இந்திய மருத்துவர்கள் இந்த அளவில் உலகளாவிய மதிப்பையும் பெற்றுள்ளனர்.  காலம்காலமாக நடந்துவரும் இத்தகையத் தேர்வுமுறைகளில் எந்தக் கோளாறும் இருக்கவில்லை.

ஒவ்வொரு மாணவரும் அவரவர் மாநிலங்களிலிருந்து அவரவர் மொழிகளில் மருத்துவக் கல்வியின் தகுதிகளை அடைந்துவந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் இது ஆங்கில மொழியிலேயே கிடைக்கிறது.  என்றாலும் இந்தக் காரணத்தை இப்போது ஆராய வேண்டிய தேவையில்லை.  தமிழகம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக இட ஒதுக்கீடு முறையையும் வழங்கிவருவதால் ஏராளமான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களும் மருத்துவர்களாகத் தேர்ச்சிபெற்றுச் சிறந்து விளங்கி வருகின்றனர்.  தமிழகம் ஏற்கெனவே பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து 2007ஆம் ஆண்டிலேயே சட்டம் இயற்றி அதனைக் குடியரசுத் தலைவரின் கையெழுத்துக்காகவும் அனுப்பியிருந்த்து.  குடியரசுத் தலைவரும் அதனை ஏற்று ஒப்புதல் அளித்திருக்கிறார்.  அதாவது இட ஒதுக்கீடு முறை சமூகத்தின் சிறுபான்மையினர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குக் கைகொடுத்து வந்துள்ளது.  இன்னும் ஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள தனித்தனிப் பாட்த் திட்டங்களின் வழியாகவே அவர்கள் மருத்துவக் கல்வியைப் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவிலுள்ள் அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வை உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது;  இது வெவ்வேறு மாநிலத்தின் கல்வித்திட்ட்த்தில் பயின்றுவந்த மாணவர்களுக்குப் பெரும் தடைக்கல்லாக எழுந்து தடுத்துவிடும்.  ஒருவரின் பொதுப்புத்தியில் உச்சநீதி மன்றத்தின் உத்திரவு சரி என்பது போலவே படும்.  ஏனெனில் இந்தியா முழுமைக்குமான மருத்துவம் எனும்போது அவர்கள் பொதுவான நுழைவுத்தேர்வை எழுதித் தங்களின் ஆற்றலை வெளிக்காட்ட வேண்டியதுதானே என்று அப்பாவித் தனமாகக் கேட்கலாம்.  தடை ஏற்படுத்தும் விஷயம் என்னவென்று அவர்கள் அறியாதிருப்பதையே இந்த எண்ணம் வெளிப்படுத்துகிறது.

ஏனெனில், பொது நுழைவுத் தேர்வு என்றவுடன் அதில் ஒவ்வொரு மாநிலத்திற்குமான பாட்த் திட்டங்களின் வழியேயான கேள்விகள் அமைய வாய்ப்பில்லை. இந்தியா பரந்துவிரிந்த நாடு;  பல மொழிகள்;  பல மாநிலங்கள்;  பலவிதமான பாட்த்திட்டங்கள். ஆனால் நுழைவுத் தேர்வோ, மத்திய அரசின் சிபிஎஸ்இ என்கிற பாடத்திட்டத்தின் வழியாகக் கேட்கப்படுவதாக இருக்கும்.  ஆகவே, இந்தப் பாடத் திட்டத்தின் வழியாகப் பயின்றுவரும் மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்குள் உள்ளே நுழைய முடியும்.  சிபிஎஸ்இயில் பயிலும் மாணவர்கள் ஏற்கெனவே வலுவான பொருளாதாரத்தைக் கொண்டவர்கள்.  அதனால்தான் அவர்களால் மத்திய அரசின் சிபிஎஸ்இயின் பள்ளிப்படிப்பைத் தேர்வு செய்ய முடிந்தது.  ஆனால் மாநிலக் கல்வித்திட்ட முறையில், பள்ளிப் பாடத்திலேயே மருத்துவக் கல்விக்கான தங்களின் தகுதியை நிலைநாட்டிவிட்ட மாணவர்கள், இன்னொரு கல்வித்திட்ட்த்தின் வழியாகவும் தங்களின் திறமையை மெய்ப்பித்தாக வேண்டிய நெருக்கடியை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிப்படுத்துகிறது.

இவ்வாறான பொது நுழைவுத் தேர்வு ஒப்புக்கொள்ளப் படுமானால், இதற்கான தனிக் கல்விப் பயிற்சி மையங்கள் உடனடியாக இந்தியா முழுவதும் ஏற்படுத்தப்படும்.  அதில் கல்விக்கட்டணம் என்ற பெயரில் பல லட்சங்கள் வசூலிக்கப்படும்.  அதுவரையிலும் பள்ளிப்படிப்பில் படிப்படியாகத் தங்களின் திறமையை மேம்படுத்தி வெற்றி பெறாதிருந்த மாணவர்கள் பலரும் இந்த ஒரே தகுதியின் மூலம் பொது நுழைவுத் தேர்வைச் சந்திக்க வாய்ப்புண்டு.  ஆர்வத்தினால் ஆகிவந்த திறமை வேறு;  வலுக்கட்டாயமாகத் திடீரென்று உருவாக்கிக்கொண்ட நோக்கம் வேறு; ஆர்வக் கோளாறினால் திறமையின்மையின் வழியே மருத்துவக் கல்வியை நாடுபவர்களைத் திறமையற்ற மருத்துவர்களாகவே அது வெளித் தள்ளும்.  பணம் கொடுத்துப் பயிற்சியைப் பெற முடியாத மாணவர்கள் நாட்டில் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.  அவர்கள் இந்த மாற்றுக் கல்வித்திட்டத்திறகாக மட்டுமே தங்களின் காலத்தையும் பணத்தையும் விரயம் செய்ய வேண்டிய அவசியமென்ன?  ஒரே படிப்பை இரண்டு வழிகளில் கற்றுத்தேர வேண்டிய அளவுக்கு இங்கே என்ன நெருக்கடி?

இதுபோன்ற தேவையற்ற கால விரயம்,  பணச் செலவு என்பன அதுவரை ஒரு மாணவர் படித்துவந்த கல்வியைக் கொஞ்சம்கூட மதிக்கத்தகாததாக மாற்றுகிறது.  மேலும் இந்தியப் பன்மைச் சமூகத்தில் பொருளாதாரத்தில் வலுவையடையாத சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களை மருத்துவக்கல்வியைப் பெறவிடாமல் தடுக்கும்.   தந்திரமான முறையில் வர்ணாஸ்ரமக் கொள்கையைச் செயல்படுத்த உச்ச நீதிமன்றம் ஆர்வம் கொண்டுள்ளதையே இந்த்த் தீர்ப்பு வெளிப்படுத்துகிறது.

  • இதுபோன்ற இன்னொரு வர்ணாஸ்ரம முறையிலான சமூக அமைப்புக்காக குஜராத் அரசும் ஒரு திட்ட்த்தை அறிவித்திருக்கிறது. பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள உயர் சாதியினருக்குப் பத்துசதவீத இட ஒதுக்கீட்டை அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. பொதுவாக, இட ஒதுக்கீடு சாதீய நோயைத் தீர்க்க நமக்குக் கிடைத்திருக்கிற ஓர் அரிய வாய்ப்பு.  இட ஒதுக்கீடு சாதீய அடிப்படையில் அமையும்போதுதான் சாதீய மோகத்தையும் சாதீய மோதலையும் குறைத்துக்கொள்ள வழியேற்படும்.  ஆனால் இந்திய அரசியல்வாதிகளின் கோளாறான அரசியல் ஆர்வங்கள் சில உயர்ஜாதியினரையும் தகாத வழியில் தூண்டிவிட்டு வருகின்றது.  குஜராத்தின் அந்நாளைய முதல்வர் மோடியின் ஆட்சியால் அந்த மாநிலம் மிகுந்த வளர்ச்சியைக் கண்டுள்ளதாக அண்மைக் காலமாகத் தீவிரமாகப் பேசப்பட்டு வந்தது.  இந்த மாயக் கருத்தியலின் வேரிலிருந்து மோடி பிரதமர் பதவிக்கும் முந்திவரக்கூடிய வாய்ப்பை வர்ணாஸ்ரமச் சக்திகள் உருவாக்கின.  ஆனால் ஹர்திக் படேல் என்ற மாணவரின் தலைமையில் குஜராத்தின் ஜாட் சாதியினர், தாங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிக் கடந்த ஆண்டில் ஒரு மாபெரும் போராட்ட்த்தை மாநிலம் தழுவியதாக மேற்கொண்டனர்.  தங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்றும், அவ்வாறு மறுக்கப்பட்டால் தாங்கள் அகில இந்திய அளவில் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்றும் அச்சுறுத்தினர்.  இது மோடிக் காலத்தின் குஜராத் முன்னேற்றம் பற்றிய கேள்வியை எழுப்பியது.  அவர் ஆட்சிக்காலத்தில் மிகுந்த பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்குமெனில் ஜாட் சாதியினர் கொதித்தெழுந்து போராட வேண்டிய அவசியமென்ன என்ற கேள்வியை எழுப்பியது.  இதற்கு மோடியோ அவரின் கட்சிக்காரர்களோ தகுந்த பதிலைச் சொல்லமுடியாமல் தடுமாறினர்.  ஆதலால், அந்தப் போராட்டத்தை நசுக்க முயற்சிகளை மேற்கொண்ட குஜராத் அரசு ஹர்திக் படேலைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது.  எனினும் அந்த எழுச்சியைக் கட்டுப்படுத்த வழிதெரியாத நிலையில், இன்று குஜராத் அரசு கல்விப்பணியின் பத்துசதவீத இட ஒதுக்கீட்டை உயர்சாதியினருக்கு அளித்துள்ளது.
  • இந்த நிலை தொடருமானால் பல மாநிலங்களிலும் இதுபோன்ற கோரிக்கைகள் எழும்.  சமூகத்தின் மேனிலையை எட்ட முடியாமல் தடுக்கப்படுகின்ற பிற்படுத்தப்பட்ட,  தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இனத்தவர்களின் அடிப்படை உரிமைகள் இன்னும் கடுமையாகப் பாதிக்கப்படும்.  சமூக நீதியின் அடிப்படை தகர்க்கப்பட்டுவிடும்.
  • ஆகையால், இந்தியப் பன்மைச் சமூக்த்தின் வாழ்க்கைநிலையையும் சமூக அந்தஸ்தையும் கருதாமல் உச்ச நீதிமன்றமோ, வகுப்புவாதச் சக்திகளின் கைகளில் மாட்டிக்கிடக்கின்ற மாநில அரசுகளோ இதுபோன்ற விவேகமற்ற நிலைபாடுகளுக்கு ஊக்கமளிப்பார்களேயானால், அது இந்தியாவை மேலும் நோய்மையுறச் செய்யும் என்று எச்சரிக்க விரும்புகிறோம்.