அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கைப் பிரகடன மாத இதழாய், இஸ்லாமிய இதழியல் உலகில் புதியதோர் மாற்றத்திற்கான புறப்பாடாய் எழுச்சியின் சின்னமாய், முழு முனைப்போடு “அஹ்லுஸ் சுன்னா” 2011ஆம் ஆண்டு நவம்பர் மதம் முதல் தன்னுடைய இலட்சியப் பயணப் பாதையில் வெளிவரத் துவங்கியது. அல்ஹம்துலில்லாஹ்! (சர்வ புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!) அதன் வெளியீட்டு விழா சென்னை, வேப்பேரியிலுள்ள தந்தைப் பெரியார் திடலில் மணியம்மையார் கூடத்தில் (துல்கஃதா-25, ஹிஜ்ரி-1432) 23/10/2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 3மணி முதல் இரவு 10மணி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மார்க்க அறிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், அரசியல் பிரமுகர்கள், மற்றும் சிறப்பு விருந்தினர்களான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அரசியல், அறிவியல், ஆன்மிகம், இல்லறம், இலக்கியம், கதை, கவிதை, கல்வி, கலாசாரம், கேள்வி-பதில், கொள்கை விளக்கம், சமூகம், சமூக அவலம், மருத்துவம் என பன்முகத்தன்மையோடு “அஹ்லுஸ் சுன்னா”வின் ஆய்வுப் பயணம் விரிவடைந்ததால் மிக நீண்ட காலமாக பெயரளவில் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்த பல இஸ்லாமியப் பத்திரகைகளுக்கு “அஹ்லுஸ் சுன்னா” முன்னோடியாய் அமைந்தது என்று கூறுவதில் மிகையேதும் இல்லை.
இந்த பயணத்தில் “அஹ்லுஸ் சுன்னா” அடைந்த நற்பேரும் புகழும் ஏராளம் என்ற போதிலும், பல முனைகளிலிருந்து கிளம்பியக் குழப்பமும் கூச்சலும் எதிர்ப்பும் மிரட்டலும் குறைந்த பாடில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அவ்வெதிர்வினைகள் தான் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தி வர ஒரு அற்புதக் காரணியாக அமைந்துவிட்டது.