SDPI தோழர்கள் செய்வார்களா?

SDPI தோழர்கள் செய்வார்களா?

கடைசி நிமிடம் வரை திமுக கூட்டணியில் ஃபுட் போர்டிலாவது இடம் கிடைக்குமா என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து கடைசியில் கமல் வழியாக தினகரனின் ஏ.டபுள் எம்.கே வில் சேர்ந்தவர்கள்தாம் எஸ்.டி.பி.ஐ கட்சியினர்.

இந்த ஏ.டபுள்.எம்.கே அதாவது அமமுக வின் கதை என்ன தெரியுமா?

கடைசி வரை பாஜகவுடன் கூட்டணிக்காக காத்திருந்து ஈ.பி.எஸ்ஸின் பிடிவாதத்தால் தனிக் கூட்டணி அமைத்தவர்கள் தாம் இவர்கள்.

இந்தக் கூட்டணியில் இருக்கிற மற்றவர்களும் சொல்லிக் கொள்கிற லட்சணத்தில் இல்லை.

CAA-NRC-NPR க்கு ஆதரவாக கூட்டம் நடத்திய ஒரே கட்சி எனக் கேவலப்பட்டு நிற்பவர்கள் தேமுதிக.

ஓவைசியின் மஜ்லிஸ் மீதும் பாஜகவின் பீ டீம் என்கிற குற்றச்சாட்டு உண்டு. மத ரீதியான அணி திரட்டலுக்கு வித்திட்டு பாசிஸ்டுகளுக்கு களம் அமைத்து தருகிறார் என்றும் அவர் மீது வலுவான குற்றச்சாட்டு உள்ளது.

இப்படி வெளிப்படையான பாஜக ஆதரவாளர்களுடன் கை கோர்த்து நிற்கின்றார்கள் எஸ்.டி.பி.ஐ கட்சித் தோழர்கள்.

மக்கள் சேவையில் தமுமுக, ஜமாஅத்தே இஸ்லாமி, மமக, வெல்ஃபேர் கட்சி, ஜமாஅத்துல் உலமா, தொண்டு இயக்கம் போன்ற சமுதாய அமைப்புகளுக்கு சற்றும் சளைத்ததல்ல இந்த எஸ்.டி.பி.ஐ.

ஆனால்-

இன்று அவர்கள் கூடா நட்பால் மதிப்பிழந்து மாண்பிழந்து நிற்பதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது…

தமிழகத்தின் வரலாற்றையே புரட்டிப் போடவிருக்கிற தேர்தலில்-

பாசிசத்தை தடுத்து நிறுத்துகிற மகத்தான வரலாற்றுத் திருப்பம் நிகழ்ந்து கொண்டிருக்கிற சிறப்பான தருணத்தில்-

மோடியின் பெயரை, படத்தை ஆளும் கட்சியே தவிர்க்கிற அளவுக்கு மோடி அரசு மீதான அதிருப்தியும் பாஜக மீதான ஒவ்வாமையும் ஓங்கி நிற்கிற இந்த மாறுபட்ட அரசியல் சூழலில்-

இவர்கள் இப்படி பாஜக ஆதரவு சக்திகளுடன் நிற்கிறார்களே என மனம் தவியாய்த் தவிக்கிறது…

வெற்றியாளர்களின் அணி வரிசையில் இணைந்திருக்கிற வாய்ப்பை இழந்து பரிதவித்து நிற்கிறார்களே என்கிற நினைப்பே வேதனை அளிக்கிறது…

பாஜக பீ டீம் என்கிற பழிக்கு ஆளாகி சமுதாயச் சொந்தங்களின் ஆதரவை இழந்து தனிமைப்பட்டு நிற்கிறார்களே என பலரும் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை.

அமமுக அணியிலிருந்து வெளியேறுவதாகவும்,
கட்சி நலனை விட, தனிப்பட்ட ஆதாயங்களை விட நாட்டு நலனும் மக்கள் நலனும் சமுதாய நலனும் தாம் முக்கியம் என்பதால் திமுகக் கூட்டணிக்கே ஆதரவு அளிப்பதாகவும் அதிரடியாக பொது அறிவிப்பு செய்து ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ஈர்க்கலாமே..

எஸ்.டி.பி.ஐ தோழர்கள் செய்வார்களா?

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

பதிவு : Azeez Luthfullah
புகைப்படம் : ஹாரிஸ் ஜமாலி பையாஜி