மார்ச்-2018

மார்ச்-2018
ஹ்லுஸ் சுன்னா  ஜனவரி 2018 ‘இணைய மாத இதழ்’ கண்டேன். கால மாற்றத்திற்கேற்பவும் வாசகர்களின் எண்ண ஓட்டத்திற்கேற்பவும் புதிய முயற்சியாக இந்த இதழைக் காண்கிறேன். இணைய இதழில் முஸ்லிம் சமுதாயத்திற்கான ஒரு முன்னோடியாக ஓர் ஆலிம் திகழ்வது சாலப் பொருத்தமாகும். இன்றைய இளைஞர்கள் நேரடியாக உள்ள மனிதர்களிடம் பேசுவதைவிட அலைபேசியில் அழைப்பவரின் பேச்சுக்கே முன்னுரிமை கொடுக்கின்றார்கள். அதுபோலவே காகித எழுத்துகளை வாசிப்பதைவிட கணினித் திரையில் காணப்படுகின்ற எழுத்துகளைத்தான் கண்கொட்டாமல் வாசிக்கின்றார்கள். அவர்களின் எண்ண ஓட்டத்திற்கேற்ப, கால மாற்றத்தை உணர்ந்து ‘இணைய இதழ்’ தொடங்கியுள்ள ஆசிரியரின் துணிவைப் பாராட்டுகிறேன்.
மேலும் ஆழமான கருத்துகளை உட்கொண்டுள்ள சிறந்த ஆக்கங்களைத் தேர்வுசெய்து வெளியிடுவது இதழுக்குப் பெருமை சேர்க்கிறது. வாசகர்களின் சிந்தனை ஓட்டத்தை மடைமாற்றிச் சீரிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டுகிற விதத்திலான ஆக்கங்களை வெளியிடுவதையே ஆசிரியர் தம் நோக்கமாகக் கொண்டு எழுத்துப் பணியைத் தொடர வேண்டுமாய் அன்புடன் விழைகிறேன்.
                                                                                                                  -முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி,
இமாம்- மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார்,
மணலி,சென்னை-68

பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள்,  கல்வியாளர்கள்,  அரபி மொழி புலமைப் பெற்றவர்கள், குர்ஆன் விளக்கவுரையாளர்கள், ஹதீஸ் கலா வல்லுனர்கள், வரலாற்றாசிரியர்கள். ஃபிக்ஹுகலையில் புலமைப் பெற்றவர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் என்பன போன்றவர்களின் தனித்துவங்கள் யாவையும் ஒருங்கிணைத்து அவற்றை வெளிச்சமிட்டுக்காட்டும் பணியை அஹ்லுஸ் சுன்னா பத்திரிகை செவ்வனே செய்துவருகிறது.

சீர்திருத்தம், மறுமலர்ச்சி போன்றவற்றை ஏற்படுத்தும் விதத்தில் தனது சிந்தனையையும் எழுத்தையும் அமைத்துக் கொண்டதால் சமுதாயத்தில் தனக்கென ஓர் அங்கத்தை இப்பத்திரிகை வகிக்கிறது.  சென்ற ஆண்டுகளில் அச்சுப்பிரதியாக வெளிவந்து வாசகர்களின் உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்து தடம் பதித்த அஹ்லுஸ் சுன்னா இஸ்லாமிற்கான தனது பங்களிப்பை முற்றாக நிறுத்திவிடக்கூடாது என்ற உயர் எண்ணத்தில் இணையப் பத்திரிகையாக தொடர்ந்து வெளிவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

-எம். எஸ். ஃபஜ்லுர் ரஹ்மான் ரப்பானி,     அரபித்துறை தலைவர் ரஹ்மத்பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முத்துப்பேட்டை.

டந்த ரபீவுல் அவ்வல் மாதம் முதல் இணையப் பத்திரிகையாக அஹ்லுஸ் சுன்னா மீண்டும் தொடர்ந்து வெளிவரப்போகிறது என்ற நற்செய்தியை ஆசிரியர் அவர்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் அறிவித்திருந்ததை கேட்டவுடன் மட்டில்லா மகிழ்ச்சியடைந்தேன்.

ரபீவுல் அவ்வல் மாதம் மீலாது சிறப்பிதழாகவே முதல் இணையப் பத்திரிகை வெளிவரும் என்று பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்.  ஆனால் அவ்வாறு வெளிவராது போனதும் திட்டம் கைவிடப்பட்டுவிட்டதோ என்று எண்ணத்தோன்றியது.

பிறகு இவ்வாண்டு ஜனவரி முதல் இதழ் வெளிவர துவங்கியிருப்பது ஆசிரியர் தமது வார்த்தையை நிரூபித்துள்ளார் என்பதற்கான சான்றாகும்.

பத்திரிகையின் முதல் பக்கம் முதல் கடைசிப் பக்கம் வரை வாசித்தேன்.  வழக்கம் போல் எல்லாம் பயனுள்ள தகவல்களாக தரப்பட்டுள்ளன.

இணையப் பத்திரிகையாக வெளிவருவதால் செலவு மட்டுமே குறைந்திருக்கும் அன்றி பணிச்சுமை எதுவும் குறைந்திருக்க வாய்ப்பில்லை என்பதை பத்திரிகையின் அட்டைப்படம் முதல் கடைசிவரை அமைந்துள்ள வடிவமைப்பு படம் பிடித்துக் காட்டியுள்ளது.

ஆசிரியருடைய உழைப்புக்கேற்ற நன்மையை அல்லாஹ் வழங்குவது உறுதி என்றிருந்தாலும் நம்மால் முடிந்த ஆதரவை அனைத்து வகையிலும் குறிப்பாக பொருளாதார வகையில் ஆண்டு/ஆயுள் சந்தா/நன்கொடைகள் போன்றவற்றை நாமாக முன்வந்து மனமுவந்து வழங்குவதோடு நமக்குத் தெரிந்தவர்களையும் அதன்பால் ஊக்குவித்து இப்பணி எக்காரணம் கொண்டும் நின்று விடாமலிருக்க ஆதரவு வழங்கிட வேண்டும்.

ஏனெனில் இக்காலத்தில் இதுபோன்ற பணிகள் நடைபெறுவது அவசியம் என்பதை நாம் அறிவோம்.  நாம் வாழும் காலத்தில் இப்படியொரு பணி நடக்கும் வேலையில் அதற்கான பங்களிப்பை நாம் தராமல் இருப்பது அவமானம் என்று தான் கூறவேண்டும்.  சொல்வது யார்க்கும் உளிய அறியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்ற குறலுக்கு ஏற்ப வெறும் வார்த்தைகளோடு நின்று விடாமல்  மூன்றாண்டிற்கான சந்தாவை செலுத்தியபின் தான் இக்கடிதத்தை எழுதியுள்ளேன். அப்படியே நீங்களும் செய்யலாமே!

-முனவ்வர் ஹுஸைன், அனகாபுத்தூர்.

குஜராத் தேர்தலின் வெற்றியையும் மோடி அரசின் மிக கீழ்த்தரமான ஆட்சியையும் மிகத் தெளிவாக தலையங்கம் அலசுகிறது!

மோடியின் ‘முத்தலாக்’ மசோதா குறித்து கோவை அப்துல் அஜீஸ் பாகவி தெளிவாக அலசி தீர்வைச் சொல்லி முடிப்பதோடு மோசமான இந்த ஆட்சியை கொடுங்கோலன் ஃபிர்அவ்னுடைய ஆட்சிக்கு ஒப்பிட்டிருப்பதும் மிகச்சரியே! நம்மை பலவீனப்படுத்த முயற்சிக்கும் எதிரிகளையும் அவர்களின் முயற்சியையும் பலவீனப்படுத்த வேண்டும், அதற்கு இது போன்ற ஆக்கங்கள் துணைபுரிய வேண்டும்.

-பு. முஹம்மது ஹனீஃப், இளையான்குடி.

 

கையில் கிடைத்துக் கொண்டிருந்த ‘அஹ்லுஸ் சுன்னா’ தற்போது கைப்பேசியில் கிடைக்கிறது! அல்ஹம்துலில்லாஹ்!

திரையில் பார்த்தாலும் திகட்டாத அளவுக்கு வழக்கமான கட்டமைப்புகளுடன் இதழ் மலர்ந்துள்ளது.

‘எங்கே மறைந்து போன அந்த வான சாஸ்திரம்’ ரஹ்மத் ராஜகுமாரனுக்கே உரிய நடையில் அறிவியலை அலசியுள்ளார்.  இதுபோன்ற தொடர்கள் மிகவும் அவசியமே!

விவாதத் தொடர்களின் பதிவுகளுக்கு அவசியமே! தங்கு தடையின்றி இதழ் வெளிவர வேண்டுகிறேன்.

ஐ.மிஸ்பாஹ், உறையூர்.