வஹப் இப்னு முனப்பஹ் (ரலி) கூறுகிறார்கள்:

 

னு இஸ்ராயீல் சமூகத்தில் ஒரு ஆபித் (இறை தியானத்தில் மூழ்கியவர்) வாழ்ந்து வந்தார்.  அவரது காலத்தில் அவரை விட இறைபக்தியில் ஆழ்ந்தவர் வேறு யாருமில்லை எனலாம்.  அந்த அளவுக்கு இறைபக்தியில் திளைத்தவர்.  தனது தியான மண்டபத்தை விட்டு வெளியே கூட வராமல் இறைதியானம் செய்வது அவரது வழக்கம்.

அதே காலத்தில் அதே ஊரில் மூன்று சகோதரர்கள் தங்களின் ஒரே தங்கையுடன் வாழ்ந்து வந்தனர். அவள் கன்னிப் பெண்ணாக பேரழகியாக இருந்தார்.  இந்த மூன்று சகோதரர்களுக்கும் ஒரு போரில் கலந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.  ஆதலால் தங்களின் ஒரே தங்கையை யாரிடம் நம்பிக்கையாக விட்டுச் செல்வது என்ற பிரச்சனை உருவாகியது.  இறுதியில், இந்த இறைவழிப்பாட்டாளரிடம் அவளை விட்டுச் செல்லலாம் என ஏகமானதாக முடிவெடுத்தார்கள்.  தமது முடிவினை அந்த ஆபித் இடம் தெரிவித்தனர்.  இறையச்சம் உடைய பனூஇஸ்ராயில் சமூகத்திலேயே மிக நம்பிக்கைக்குரிய ஒருவர் என அறியப்பட்டிருந்தார் அவர். ஆதலால் அவரிடம் தத்தமது வேண்டுகோளை சகோதரர்கள் சமர்ப்பித்தனர்.

நாம் போர்க் களத்திலிருந்து திரும்பி வரும் வரை உங்களின் பொறுப்பில் இவளை விட்டுச் செல்ல நாடியுள்ளோம் தயைகூர்ந்து ஏற்றுக் கொண்டு இவளுக்கு துணையாக, பாதுகாவலராக இருங்கள் எனக் கூறினர்.  இறைபயம் உள்ள அந்த ஆபித் இவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்தார்.  உங்களிடமிருந்தும், இந்தப் பெண்ணிடமிருந்தும் நான் இறைவனின் பாதுகாப்பைத் தேடுகிறேன் என அவர்களை விரட்டி விட்டார்.  சகோதரர்கள் மேலும் வற்புறுத்தினர்.  இறுதியில் அவர் ஒத்துக் கொண்டார்.  எனது வழிபாட்டுக் கூடத்திற்கு எதிரில் உள்ள ஏதேனும் ஒரு வீட்டில் அவளை விட்டுச் செல்லுங்கள் என்று கூறிவிட்டார்.  அவர்களும் அவ்வாறே செய்து விட்டு போருக்குச் சென்றுவிட்டனர்.

அந்த இளம் பெண் ஆபித் தின் வீட்டுக்கருகில் தங்கி இருந்தாள்.  ஆபித் அவருக்கான உணவைத் தயார் செய்து தன் வழிபாட்டு இடத்தின் கதவுக்கு வெளியே வைத்து விட்டு கதவைச் சாத்தி தாளிட்டுக் கொண்டு அவளை உரக்க அழைத்து உணவை எடுத்துச் செல்லுமாறு கூறிவிடுவார்.  அந்தப் பெண்ணும் தன் வீட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்து உணவை எடுத்துச் சென்று விடுவாள்.  இவ்வாறு சில காலம் கழிந்தது.