யோகா அது ஆகா

 

நம்முடைய மார்க்கம் ஓரிரைக் கொள்கையை வழியுறுத்துகின்றது. பல தெய்வ வழிபாடு அங்கு அடிப்படையாக இருக்கின்றது. சிருஷ்டிகள் யாரையும் வணங்கக் கூடாது என்பது நமது கொள்கை. ஆனால் ஈசா நபியை தேவ குமாரர் என போற்றும் ஒரு மதம் இருக்கின்றது. உஜைர் நபியை அல்லாஹ்வின் குமாரர் என்று சொல்லும் யூத மதம் உள்ளது. இதை எப்படி நாம் ஏற்றுக் கொள் முடியும்? பிராணிகளைப் பொருத்து அல்லாஹ் அதனை நமக்கு உணவாகவும் வாகனமாகவும் வழங்கியுள்ளான். ஆனால்! அவர்கள் பசுவை தெய்வமாக வணங்குகிறார்கள். எலியை தெய்வத்தின் வாகனம் என்று பூஜை செய்கின்றனர். சூரியனுக்கு பூஜை நடக்கின்றது. சூரிய பகவான் என்று வழிபடுகின்றனர். நதிகளையும் ஆறுகளையும் வழிபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். நாம் இவைகளை விமர்சனம் செய்யவில்லை. ஆனால்! இவைகளை யெல்லாம் ஷிர்க் என்று சொல்லுகின்ற நம்முடை மார்க்கமும் அதனை தெய்வமென கருதி வழிபடுகின்ற மதமும், சைவம் அசைவம் இரண்டையும் அனுமதித்த ஒரு மார்க்கமும், அசைவம் ஹராம் என்று சொல்லுகின்ற ஒரு மதமும் எப்படி இரண்டும் ஒன்றாக முடியும்?  என்பதை நாம் தெளிவாக சிந்திக்க வேண்டும்.

“நதிகளெல்லாம் கடலைத் தானே போய் சேருகின்றது”  என்ற கவர்ச்சியான ஓர் கூற்றைக் கூறுவார்கள். நதிகள் மட்டுமா கடலைச் சென்றடைகின்றது? சாக்கடையும் கூடத்தான் கடலைப் போய் சேருகின்றது! அது மட்டுமல்ல இவைகள் ஆதாரங்களல்ல. உதாரணங்கள் தான். உதாரணங்கள் ஒரு விஷயத்தை விளக்குவதற்குத்தான் பயன்படுமே தவிர அதைக்கொண்டு ஒரு விஷயத்தை நிரூபிக்க முடியாது. நிரூபிப்பதற்கு ஆதாரம் தேவை.

அந்த உதாரணங்கள் கூட பொருத்தமானதாக இல்லை. நதிகள் ஏன் கடலைப் போய் சேருகின்றது என்றால்? அது அங்கிருந்து தான் உற்பத்தியாகி வந்தன. இதுவும் ஓர் திரவப் பொருள். அதுவும் ஓர் திரவப் பொருள். இரண்டும் ஒன்றானதே! எனவே அசலுடன் அது போய் சேருகின்றது. ஆனால்! அல்லாஹ்வின் ஏகத்துவ மார்க்கமும் அதற்கு விரோதமான இணை வைக்கும் மதமும் எவ்வாறு ஒரே அல்லாஹ் விடமிருந்து வந்திருக்க முடியும்?

“எல்லா பாதைகளும் ரோமை நோக்கித்தான் செல்கிறது” என்று சொல்லுவார்கள்.அது எப்படி ரோமை நோக்கி செல்ல முடியும்? ரோமின் எதிர் திசையின் பாதை எப்படி ரோமை நோக்கிச் செல்லும்? இதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். (அசலில் இந்த சொல் வழக்கு எப்படி வந்தது என்றால்! கி.பி. 4-ம் நூற்றாண்டில் ரோம சாம்ராஜ்யத்தில் 53000 மைல் தூரத்திற்கு சாலைகள் போடப்பட்டது. அதனால் தான் “ஆல் ரோட்ஸ் லீட்ஸ் டூ ரோம்” என்ற சொற்றொடர் பழக்கத்திற்கு வந்தது) ஆக எம்மதமும் சம்மதம் என்ற  தவறான அடிப்படையில் இது(யோகா) அமைந்துள்ளது.

மேலும் அல்லாஹ் என்று சொல்லி யோகாவில் கலந்து கொள்வதும் கூடாது. தேவ்பந்தில் ஒரு பெரிய வயதான முஃப்தி ஸாஹிப் இருந்தார்கள். அவர்கள் “பைஅத்” வாங்குவதற்காக ஒரு ஷைகை தேடிச் சென்றார். அந்த ஷைகு (பைஅத்தின் நிபந்தனையாக) கூறினார் ;  நீங்கள் மத்ரஸாவிற்குச் சென்று மாணவர்களுடன் அமர்ந்து ஹதீஸ் பாடத்தைப் படித்து வர வேண்டும். ஆச்சர்யமான ஓர் உத்தரவு. ஏனெனில் “முஃப்தி” என்ற பட்டம் எப்போது வழங்கப்படும் என்றால்? ஹதீஸ் பாடம் ஓதி முடித்தப் பின்னர் இரண்டு வருஷம் இஃப்தா வகுப்பு பயின்ற பிறகு தான் முஃப்தி பட்டம் வழங்கப் படும்.

 ஏன் இந்த ஷைகு அந்த முஃப்தியைப் பார்த்து இப்படி கூறினார்? ஷைகு அவர்களே அதற்கான காரணத்தைக் கூறினார்கள். நீங்கள் ஆரம்ப காலத்தில் ஹதீஸ் கலையை மத்ஹபை ஏற்காத இமாம்களை மதிக்காத ஒருவரிடம் இருந்து தான் பயின்றீர்கள். எனவே அந்த துர்நாற்றம் உங்கள் உள்ளத்தில் உள்ளது. அது வெளியாக வேண்டும் என்றால்?  ஸுன்னத் வல் ஜமாஅத்தின் உஸ்தாத் முன்னிலையில் நீங்கள் மீண்டும் பயின்று வர வேண்டும் என்றார்கள்.

எனவே ஒரு காஃபிரிடமிருந்து ஒரு கலிமாவை அவர் கூற அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டு அதை நாமும் சொல்ல அல்லது நினைத்துக் கொண்டு யோகாவில் கலந்து கொண்டால் அது ஷிர்க் அல்லது கஃப்ரின் நெடி நம் உள்ளத்திற்கு வந்து விடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

குர்ஆன் தான் ஓதுகின்றோம். ஹதீஸ் தான் ஓதுகின்றோம். ஆனால் அதைக்கூட நாம் யாரிடம் ஓத வேண்டும் என்றால் உண்மையான “ஸுன்னத் வல் ஜமாஅத்தின் ” ஆலிமிடம் ஓத வேண்டும். இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.