யோகா அது ஆகா

 

ஏற்கனவே கூறியது போல நாம் ஏன் அங்கே செல்ல வேண்டும்? நம்மில் அதற்கு வழி இல்லையா?  இஸ்லாம் பிறரிடம் யாசிக்கும் மார்க்கமா?  இல்லை, இல்லை. இஸ்லாம் கொடை கொடுக்கக் கூடிய தானம் வழங்கும் மார்க்கம். எல்லா மக்களுக்கும் சத்தியத்தைச் சொல்லக் கூடிய மார்க்கம் இஸ்லாம். எல்லா விஷயங்களையும் தெளிவு படுத்துகின்ற மார்க்கம். யோகாவில் மூச்சுப் பயிற்சி என்று சொல்கிறார்கள். இது நமக்கு சொல்லித் தரப்பட வில்லையா? “தரீகாகளில் “சூஃபியாக்கள், ஆன்மீக குருமார்கள் ‘ஃபாஸ்ரூஃபாஸ் ‘ என்ற திக்ரை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள். ‘ஃபாஸ்ரூஃபாஸ் ‘ என்றால்?  நாம் விடுகின்ற மூச்சு சாதாரணமாக போய் விடாமல் அது ஒரு தியானமாக ஆக வேண்டும் என்பதற்காக ஓர் வழிமுறையை சொல்லித் தந்தார்கள். அதை நாம் பின்பற்றுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

மூச்சை நாம் உள்ளே இழுக்கிற பொழுது அது நமக்கு ஹயாத். அதை வெளியே விடுகிற பொழுது அது நமக்கு மவ்த். எனவே மனிதன் ஒவ்வொரு வினாடியும் ஹயாத்தாகி இறந்து கொண்டு இருக்கின்றான். மரணத்தையும் அல்லாஹ் படைத்தான். வாழ்வையும் அல்லாஹ் படைத்தான் எதற்காக?  உங்களை சோதிப்பதற்காக வேண்டி (67 ; 2) என்று சொன்னால்,  நாம் கடைசி தருணத்தில் மரணமாகுவோமே அந்த மரணம் மட்டுமல்ல. ஒவ்வொரு நிமிடமும் நாம் பிறந்து மரணித்துக் கொண்டு இருக்கின்றோம். மூச்சை உள்ளே இழுப்பது ஹயாத்தாகும். வெளியே விடுவது மவ்த் ஆகும். பிறக்கின்ற குழந்தை முதலில் மூச்சை உள்ளே இழுக்கின்றது.அது ஹயாத். ஒரு மனிதன் இந்த உலகத்தை விட்டும் இறக்கிற பொழுது தன் மூச்சை அப்படியே வெளியே விட்டு விடுகின்றான். விட்ட மூச்சு மீண்டும் உள்ளே வரவில்லை என்றால் அவனுக்கு அப்படியே மவ்த் வந்து விடுகின்றது. ஆக மூச்சை மேலே இழுக்கிற போது “அல்லா…..” என்று தியானித்து கீழே வருகிற போது “ஹு” என்று அது பிரிகிறது. இதற்கான பயிற்சி ஆன்மீகத்தில் இருக்கிறது.

இந்த மூச்சை எப்படி பயன்படுத்த வேண்டும்?  எண்ணப்பட்ட மூச்சுகள் இருக்கின்றது. ஞான மேதை தக்கலை பீரப்பா வலியுல்லாஹ் அவர்களின் பாடலை எடுத்துப்பார்த்தால் அந்த மூச்சு சம்மந்தமான ரகசியங்களை யெல்லாம் பாடியிருக்கின்றார்கள். நம்மிடத்தில் என்ன பஞ்சம் இருக்கின்றது?  எல்லாம் சொல்லப்பட்டு இருக்கின்றது. அந்த மூச்சை அடக்கி ஆளக்கூடிய பக்குவங்களும் முறைகளும் சொல்லப்பட்டு இருக்கின்றது. திக்ருடைய வகைகள் சொல்லப்பட்டு இருக்கின்றது. ஆரோக்கியமான அந்த வழிகளை நாம் பின்பற்றினால் அந்த வெற்றி இங்கேயும் கிடைக்கும்.அந்த சுகம் இங்கேயும் கிடைக்கும். ஆகுமான வழியில் அதை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கின்ற பொழுது நாம் ஆகாத வழிகளை தேர்ந்தெடுக்கக் கூடாது. இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால்?

இஸ்லாமியர்களை இஸ்லாமை விட்டு வெளியேற்ற முடிய வில்லை. அதனால் இஸ்லாமியர்களை இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்தில் இல்லாத நல்லதைப் போன்று தெரியக்கூடிய சில காரியங்களின் மூலம் அவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் நடக்கிறது. மேலும் சியோனிசம் ஒரு சிந்தனையை விதைத்தது .உலகத்தில் கடவுள் இல்லாத ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும். மதம் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு கொள்கை தான் “எம்மதமும் சம்மதம் ” என்பது. நம்மைப் பொருத்தவரை எல்லா மதத்தவர்களுடனும் ஒற்றுமையாக  வாழ வேண்டும். அனைத்து மதத்தவர்களுடனும் நாம் அன்பாக பாசமாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. அதே சமயத்தில் நமது கொள்கையைப் பொறுத்து நமது மார்க்கத்தில் சொல்லப்படுகின்றவை அது தான் உண்மையானது! மற்றவைகள் உண்மைக்குப் புரம்பானது என்பதில் அழுத்தமான நம்பிக்கையும் விசுவாசமும் நமக்கு இருக்கின்றது. இவ்வாறு தான் ஒவ்வொரு மதத்தவர்களும் அவர்களது மதத்தில் அவர்கள் பிடிப்புடன் இருக்க வேண்டுமென்றால் தங்கள் மதத்தைப் பற்றி உயர்வாகத்தான் கருத வேண்டும்.

அது எப்படி எம்மதமும் சம்மதமாக ஆகும்?  நாம் யோசித்துப்பார்த்தால் அது சாதாரணமாகவே புரிந்து விடும். மதுரை பேருந்து நிலையத்திற்கு ஒருவர் வருகின்றார். அவர் திருச்சி செல்ல வேண்டும். எந்தப் பேரூந்தில் செல்ல வேண்டும் என்று அவருக்கு தெரிய வில்லை! அறிவிப்பாளரிடம் கேட்டால் அவர், நீங்கள் எந்தப் பேரூந்தில் சென்றாலும் திருச்சி செல்லலாம் என்றார். அது எப்படி செல்ல முடியும்? அங்கு பல ஊர் பேரூந்துகளும் நிற்கின்றனவே. அதில் நெல்லை செல்லும் பேரூந்தும் நிற்கிறது. இதில் ஒருவர் ஏறினால் எப்படி அவர் திருச்சி போக முடியும்? எதிரும் புதிருமான திசைகளில் செல்லக்கூடிய பேரூந்துகள் நிற்கிற போது நாம் கிழக்கு நோக்கி செல்ல வேண்டியது இருக்க மேற்கு நோக்கி செல்லும் பேரூந்தில் ஏறினால் நாம் இலக்கை அடைய முடியுமா ?   இது எப்படி புத்திசாலித் தனமான பதிலாக இல்லையோ! பைத்தியக்காரத் தனமான பதிலோ! அதைப் போல தான் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் நீங்கள் போய் சேர வேண்டிய இடத்தைப் போய் சேர்ந்து விடலாம் என்று சொல்வதும் கிட்டத்தட்ட இதற்கு ஒப்பானது தான்.

நமது கொள்கை மறுமை, மஹ்ஷர், நீதி விசாரனை, சொர்க்கம் நரகம். அவர்களது கொள்கை மறு ஜென்மம். நமது கொள்கை ஏகத்துவம். அவர்களது கொள்கை பல தெய்வம். நாம் உருவமில்லாத இறைவனை வழிபடுகிறோம். அவர்கள் உருவத்தை உண்டாக்கி அதை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி அடிப்படையில் மாற்றமான கொள்கை      களைக் கொண்ட மதங்கள் எப்படி ஒன்றாகும்?.