பத்ருப் போர் – ஒரு வரலாற்றுப் பேழை

மௌலவி அல் ஹாஃபிழ் A.M. அலி இப்ராஹீம் ஜமாலி M.A., M.B.A., M.Phil

த்ருப் போர் – இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான, இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த அற்புதமான ஒரு தியாக நிகழ்வு. நாமெல்லாம் இன்று இஸ்லாமியர்களாக வியாபித்திருப்பதற்கு காரணமான ஒரு நிகழ்ச்சி. தேவையான அளவு முன்னேற்பாடுகள் இல்லாத சுமார் 313 நபர்கள், ஏறத்தாழ 1000 பேர்கள் கொண்ட ஒரு பெரும் படையை போர்க்களத்தில் எதிர் கொண்டு ஈமானிய பலத்தாலும், தியாக குணத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று சிதறடித்த உன்னத வரலாறு அதுவாகும். ஆனால் நம்மில் பெரும்பாலோர் இந்த அரிய சரித்திரம் குறித்து பாராமுகமாகவே உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கும் அந்த வெற்றி சரித்திரம் புரியவைக்கப்பட வேண்டும் என்பதே இவ்வாக்கத்தின் நோக்கம்.

மக்கத்து காஃபிர்களின் தொல்லைகள் பொறுக்காமல், மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்ற பின், பெருமானார் (ஸல்) அவர்களும் ஏனைய முஹாஜிரீன்களும் தம்முடைய வாழ்க்கையை எளிமையான முறையில் அங்கு வாழ ஆரம்பித்தனர். இருந்தபோதிலும், மக்காவில்; செல்வந்தர்களாக இருந்தவர்கள் கூட மதீனாவில் அகதிகளாக வசதி வாய்ப்புக்களை இழந்து, குடும்பத்தினரைப் பிரிந்து வாழ்வது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களுக்கு கவலையளிக்கக் கூடிய ஒரு விஷயமாகவே இருந்தது. அப்போது அந்தக் கவலைக்கு தீர்வளிக்கும் விதமாக, அதுவரை திருப்பித்தாக்குவதற்கு தடை செய்யப் பட்டிருந்த முஸ்லிம்கள் இனி தங்களது தாக்குதலை தொடங்கலாம் என்று அல்லாஹ் அனுமதியளித்தான்.

இந்தக் கட்டளைக்;குப் பிறகு பெருமானார் (ஸல்) அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. நமது பொருட்களை அபகரித்தவர்களுக்கு நாம் ஒரு பாடம் புகட்ட வேண்டும் என நினைத்தார்கள். இந்நிலையில்தான்; அபூ சுஃப்யான் தலைமையில் மக்காவிலிருந்து 43 வியாபாரிகளைக் கொண்ட பெரும் வியாபாரக் கூட்டமொன்று சிரியாவுக்கு புறப்படுகிறது என்ற செய்தி அவர்களுக்குக் கிடைத்தது. அந்த வியாபாரத்தில் மக்காவில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கிருந்தது.

மக்காவிலிருந்து சிரியாவுக்கு செல்வதானால் மதீனாவை கடந்து தான் செல்ல வேண்டும். செங்கடலை ஒட்டி ஒரு பாதை இருந்தது. ஆனால் அதன் தொலைவு அதிகம், ஆகவே மதீனா வழியாக கடந்து செல்லும் மக்காவின் வியாபாரக் கூட்டத்தை கைப்பற்றி அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்க பெருமானார் (ஸல்) அவர்கள் திட்டமிட்டார்கள்.

ஆனால் சிரியாவிற்கு செல்கின்றபோது அவர்களை தாக்க முடியவில்லை. எனவே திரும்ப வரும்போது அவர்களை அச்சமுறுத்த பெருமானார் (ஸல்) அவர்கள் முடிவெடுத்தார்கள். மதீனாவிற்கு அருகே அந்த வியாபாரக்கூட்டம் திரும்ப வருவதாக செய்தி கிடைக்கின்றது. இந்த வியாபாரக் கூட்டம் மிகப்பெரிய அளவில் குறைஷித் தலைவர்களுக்குரிய செல்வங்களுடன் வந்து கொண்டிருந்தது. இவர்களிடம் 50,000 தங்க நாணயங்களுக்குக் குறையாத அளவு வியாபாரப் பொருட்கள் 1,000 ஒட்டகங்களில் வந்து கொண்டிருந்தன. அந்த வியாபாரக் குழுவை மடக்கிப் பிடித்து, மக்கத்து குறைஷிகளுக்கு அச்சம் ஏற்படுத்துவதற்காக, நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தை அழைத்துக்கொண்டு செல்கின்றார்கள்.

இப்போரில் கலந்துகொள்ள வேண்டுமென நபி (ஸல்) எவரையும் வலியுறுத்தவில்லை. இருந்தபோதிலும் 310ற்கும் மேற்பட்டவர்கள் (313 அல்லது 314 அல்லது 317) வீரர்கள் வெளியேறினார்கள். அதாவது 82 அல்லது 83 அல்லது 84 முஹாஜிர்களும், அவ்ஸ் கிளையைச் சேர்ந்த 61 அன்ஸாரிகளும், கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்த 170 அன்ஸாரிகளும் நபி (ஸல்) அவர்களுடன் சென்றார்கள். அவர்களிடம்; இரண்டு குதிரைகளும், எழுபது ஒட்டகங்களும் மட்டும் இருந்தன. (நூல்: ரஹீகுல் மக்தூம்).

கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் தன்னைப் பிடிக்கக் கூடும் என்று செய்தியை அறிந்த அபு சுஃப்யான் மக்காவுக்கு செய்தி அனுப்புகின்றார். இதுதான் சரியான சமயம் என நினைத்த மக்கத்து குறைஷிகள் முஸ்லிம்களைப் பூண்டோடு அழிப்பதற்காகப் படைதிரட்டி வந்தனர். மக்கா படை புறப்படும் போது அதில் 1300 வீரர்கள் இருந்தனர். இவர்களிடம் 100 குதிரைகளும் 600 கவச ஆடைகளும் இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவிற்கு அதிகமான ஒட்டகங்களும் இருந்தன. இந்தப் படையின் பொதுத் தலைவனாக அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம் இருந்தான்.

பின்னர் புத்திசாலித்தனமாக அபு சுஃப்யான் வேறு ஒரு பாதை வழியாக மக்காவிற்கு செல்ல முடிவெடுத்து, தாம் நல்ல விதமாக மக்கா வந்து சேர்ந்து விடுவதாகவும் உதவிக்கு படை தேவையில்லை என்றும் கடிதம் அனுப்பினார். ஆனால் அபூ ஜஹ்ல் மட்டும், தாம் போருக்கு சென்றே ஆக வேண்டும் என்றும், அதன் மூலமாகவே தம்மை அரபிகள் அஞ்சுவார்கள், அரபிக் கோத்திரங்களுக்கு இடையே தமக்கு இன்னும் மரியாதை அதிகமாகும் என்று எகத்தாளமாகவும், ஆணவமாகவும் கொக்கரித்தான். இதை விரும்பாத 300 பேர் மக்காவிற்கு திரும்பிவிட, மீதமுள்ள 1000 பேர் கொண்ட படை பத்ரை நோக்கிக் கிளம்பியது. இவர்கள் தொடர்ந்து சென்று பத்ர் பள்ளத்தாக்கில் ஷஅல் உத்வதுல் குஸ்வா| என்ற மேட்டுப் பகுதிக்குப் பின்னால் தங்கினார்கள்.

வியாபாரக் கூட்டத்தை நாடி வந்த முஸ்லிம்களோ, இப்போது போர் புரிய வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டனர். எனவே போரை தவிர்க்க வேறு வழியில்லாத சூழ்நிலையில், முழுமையான வீரத்துடனும் துணிவுடனும் நிராகரிப்பாளர்களை எதிர்த்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு நபி (ஸல்) வந்தார்கள். ஸஹாபாப் பெருமக்களும் அதற்கு முழுமையான தங்கள் ஆதரவை வழங்கினார்கள். இதன்பின் இஸ்லாமியப்படையினரும் தங்கள் பயணத்தை தொடர்ந்து பத்ருக்கு சமீபமாக வந்திறங்கினார்கள்.

ஒரு ஆட்டிடையன் கொடுத்த தகவலின் படி, மக்கத்து குறைஷிகள் ஏறத்தாழ 1000 பேர் வந்திருப்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் அறிந்து கொண்டார்கள். அதன் பிறகு போருக்கு தயாரான தம் தோழர்களை வரிசைப் படுத்தினார்கள். அது ஒரு வியாழக் கிழமையின் மாலை நேரம். இரு தரப்பாரும் ஒருவர் மற்றவர் வருகைப் பற்றி அறிந்து சண்டைக்கு தயாராக இருந்த சூழலில் மறுநாள் வெள்ளிக்கிழமை பொழுது புலர்ந்தது.

மக்காவில் சந்தித்த இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு முஹம்மது (ஸல்) அவரகள் தன்னுடன் மக்காவிலிருந்து வந்த சுமார் 100 பேருடனும் மதீனாவின் தோழர்கள் சுமார் 200 பேர்களுடனும் அபூஜஹ்லின் தலைமையிலான எதிரணியினரைச் நேருக்கு நேர் சந்தித்தார்கள், முஸ்லிம்களின் அணியில் ஒருங்கிணைப்பும், ஒழுங்கும், கட்டுப்பாடும் இருந்தது, எதிரணியில் அது இல்லை,

யுத்தம் தொடங்கியது. முதலில் தனி நபர்கள் மோதினார்கள். பின்பு அணி அணியாக மோதினார்கள். காலையில் தொடங்கிய யுத்தம் லுஹர் நேரத்திற்குள்ளாக முடிந்து போனது.

முஸ்லிம்கள் பெரும் வெற்றியடைந்தனர். எதிரிகள் தோற்றனர். முஸ்லிம்களது தரப்பில் 14 பேரும், எதிரிகளின் தரப்பில் 70 பேரும் கொல்லப்பட்டிருந்தனர். எதிரிகளில் 74 பேர் சிறை பிடிக்கப்பட்டவரகள் போக மற்றவர்கள் யுத்தக் களத்திலிருந்து விரண்டோடினர். எதிரிகளின் முக்கியமான தலைவர்கள் அத்தனை பேரும் கொல்லப்பட்டிருந்தனர்.

ஏறத்தாழ 313 நபர்களை மட்டுமே கொண்ட முன் அனுபவமும், ஆயுதங்களும் அற்ற சிறு படையினர் இறை விசுவாசம், தலைமைக்கு கட்டுப்படுதல் என்ற இரு அம்சத்தை மட்டுமே கொண்டு அவர்களை விட வலிமையான, போர்த்திறன் மிக்க அதிக எண்ணிக்கையினரை வெற்றி கொண்டது ஒரு வரலாற்று அதிசயம்.

ஹிஜ்ரீ 2 ம் ஆண்டு (கி.பி. 624 மார்ச் 14 ம் தேதி) ரமலான் மாதத்தின் 17 ம் நாள் வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கி மதியத்;திற்கு முன்பே முடிந்து போன அந்த யுத்தத்தின் நிகழ்வுகளையும், அதன் நாயகர்களையும், அதில் களப்பலியானவர்களையும் ஒவ்வொரு ஆண்டும் உலக முஸ்லிம்கள் நினைவு கூறுகிறார்கள். இன்றும் கூட அந்தப் பொட்டல் வெளியில் அதே தினத்தன்று திரளாக கூடுகிற முஸ்லிம்கள் கிட்டத்தட்ட 1430 வருடங்களுக்கு முந்தைய அந்த நிகழ்வை உணர்வுப் பூர்வமாக நினைவு கூர்ந்து பத்ரு யுத்தத்தில் நபிகள் நாயகத்தோடு கலந்து கொண்ட நபித்தோழர்களுக்கு நன்றி செலுத்தி வருகிறார்கள். மலேஷியா நாட்;டிலோ அன்றைய தினம் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நம் நாட்டில் பத்ருப்போரை நினைவுகூறும் விதமாக இரவு சொற்பொழிவுகள் வைத்தால் கூட, அதை தேவையில்லை என்று மறுப்பதற்கும், அதை உதாசீனப்படுத்துவதற்கும் ஒரு கூட்டம் நம்மில் தயாராக உள்ளது. இன்னும் சிலர் அது தேவையற்ற ஒரு ‘பித்அத்’ என ஃபத்வாவும் கொடுக்கின்றனர். இன்னும் ஒரு கூட்டமோ, அதை நினைவு கூறுவதால் என்ன பலன் ஏற்படப்போகிறது என விதண்டாவாதம் பேசுகிறது.

யதார்த்தத்தில் பத்ருப்போர் அப்படிப்பட்டதல்ல! ஒரு பாலை வனப் பிரதேசத்தில் இரண்டு இனத்தவருக்கும்; இடையே ஏற்பட்ட மோதல் அல்லது ஒரு சகோதர யுத்தம் என்பதையும் தாண்டி வரலாற்றை கவர்ந்திழுக்கிற சிறப்பம்சங்கள் எதுவுமற்றதாக இருந்தாலும், உலக வரலாற்றை மாற்றிப்போட்ட போர் அது. மத்தியக் கிழக்குப் பகுதியின் அரசியல் மட்டுமல்ல உலக அரசியலின் போக்கிலும், ஒரு பெரிய திருப்பத்தை ஏற்பட்ட போர் அது. அதற்குப் பின்னால் ஏற்பட்ட எழுச்சியில் அன்றைய இரு பெரும் வல்லரசுகளான பாரசீகப் பேரரசும், ரோமப் பேரரசும் வீழ்ந்தன. இஸ்லாமிய மார்க்கம் அகிலம் முழுவதும் பரவ ஆரம்பித்தது.

பானிபட் யுத்தம் இந்தியாவில் முகலாயர் ஆட்சிக்கு வழி வகுத்தது. பிளாசிப் போர் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவை கைப்பற்ற காரணமாக இருந்தது. முத்துத் துறைமுகத்தின் மீது ஜப்பான் தொடுத்த தாக்குதல் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் அழிவுக்கு வழிவகுத்தது. இந்த யுத்தங்களும், இது போன்ற இன்னும் சில யுத்தங்களும் உலக வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என்ற போதிலும் அவற்றின் தாக்கம் அதிகபட்சமாக இருநூறு ஆண்டுகளை தாண்டவில்லை. ஜப்பான் 50 ஆண்டுகளில் மீண்டெழுந்து விட்டதை இன்றைய தலைமுறை பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் பத்ருப் போரின் தாக்கம் மகத்தானது. பத்ரு யுத்தத்தின் புறத் தாக்கம் 15 ஆண்டுகள் தங்களிடையே இருந்தது என்று நபித்தோழர்கள் கூறுகிறார்கள். அதன் அகத்தாக்கமோ கால வரையறைக்கு அப்பாற்பட்டு இன்றும் நிலையாக நிற்கிறது.

யுத்தம் தொடங்குவதற்கு சற்று முன்னதாக யுத்தத்திற்கான தயாரிப்புகளை செய்து விட்டு தனது கூடாரத்திற்கு திரும்பிய கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் செய்த பிரார்த்தனையின் வாசகத்தை கவனித்துப் பார்த்தால், அன்றைய சூழ்நிலையின் கையறு நிலையையும், அந்த யுத்தத்தில் கிடைத்த வெற்றியின் தாக்கத்தையும் அறிந்து கொள்ளலாம்.

‘இறைவா! இந்தச் சிறு கூட்டத்தை இப்போது நீ அழித்து விட்டால், இனி இந்த பூமியில் உன்னை வணங்க யாரும் மிஞ்சமாட்டார்கள்’ என்று பெருமானார் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள். தனது வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு தங்களது உயிரைப் பணயம் வைத்திருக்கிற 313 தோழர்களைப் பாதுகாக்கிற ஒரு தலைவரின் பொறுப்புணர்வும், கவலையும், அக்கறையும் அந்த இறைஞ்சுதலில் வெளிப்படுகிறது. அது மட்டுமல்ல அந்த யுத்தத்தில் கிடைக்கிற வெற்றி இந்தப் பூமியில் ஏற்படுத்தப் போகும் மாற்றத்தையும் அது பிரதிபலித்தது.

இன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, ரஷ்யா, ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் என உலகில் மூலை முடுக்கெல்லாம், அல்லாஹு அக்பர் என்ற பாங்கு சப்தம் ஒலிக்கிறது என்றால் அதற்கு பத்ரின் வெற்றி தான் காரணம். அப்படிப்பட்ட பத்ருப்போரையும், அதன் நிகழ்வுகளையும் நினைவுகூர்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்பதில் சந்தேகமில்லை. மேலும் இதில் நாம் பெற வேண்டிய சில படிப்பினைகளும் உள்ளன. அவற்றில் சில முக்கியமானவைகளை மட்டும் பார்க்கலாம்.

1. அல்லாஹ்வின் கழாவை ஏற்றுக்கொள்ளல்:

பத்ரு யுத்தம் அல்லாஹ்வின் வல்லமையை மிகத்தெளிவாக உணர்த்தும் ஒரு நிகழ்ச்சியாகும். முஸ்லிம்கள் வியாபாரக் குழுவை தாக்குவதை இலக்காக கொண்டனர். ஆனால் அல்லாஹ் அவர்கள் யுத்தக் குழுவுடன் மோத முடிவுசெய்துவிட்டான். எனவே, இவர்கள் எத்தனை திட்டங்கள் போட்டாலும் அவர்களால் அல்லாஹ்வின் நாட்டத்தை மீறி வியாபாரக் குழுவைப் பிடிக்க முடியவில்லை. இது குறித்து அல்லாஹ் தன் அருமறையில் கூறுகிறான்.

‘(அபூ சுப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம், அபூ ஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள். (ஆனால்,) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும், காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்’.

‘மேலும், பாவிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து (ஹக்கை) உண்மையை நிலை நாட்டவே (நாடுகிறான்)’ (அல்குர்ஆன் 8:7,8).

இங்கே அல்லாஹ்வின் நாட்டம் தான் நடைபெற்றது. மேலும் இது குறித்து அல்லாஹ் குறிப்பிடும்போது,

‘(பத்ர் போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப் புறத்திலும் இருந்தார்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம், இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும், அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாக கருத்து வேற்றுமை கொண்டிருப்பீர்கள். ஆனால், செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப்பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்). நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.’ (8:42).

அருகருகில் இருந்தும் நீங்கள் வியாபாரக்குழுவை சந்திக்கவில்லை. முன்னரே முறைப்படி யுத்தம் செய்வதாக முடிவுசெய்து திட்டமிட்டிருந்தால் கூட குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு வருவதில் உங்களுக்கிடையில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். எனினும், அல்லாஹ்வின் விதி அதற்கான சூழலை ஏற்படுத்தி உங்களை ஒன்றுசேர்த்தது என்ற கருத்தை இந்த வசனம் தருகின்றது.

எனவே, வாழ்வில் ஏற்படும் இன்பமோ, துன்பமோ இரண்டுமே அல்லாஹ்வின் விதி என்பதை ஏற்று இன்பத்தில் தலைகால் தெரியாது ஆட்டம் போடாது, துன்பத்தில் துவண்டு போகாது இரண்டையும் சமமாக ஏற்று வாழும் பக்குவத்தைப் பெறவேண்டும். அதே நேரத்தில், விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை போகும் என்று முயற்சி செய்யாமல் முடங்கிக் கிடக்கவும் கூடாது!

2. கலந்தாலோசித்தலின் அவசியம்:

மார்க்க விவகாரங்களில் அறிஞர்களுடனும், உலக விவகாரங்களில் குறிப்பிட்ட துறையில் திறமை உள்ளவர்களிடமும் ஆலோசனை செய்வது அல்லாஹ்வின் உதவியும், முஸ்லிம்களின் உலகியல் விவகாரங்களில் நன்மை நடப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் முக்கிய அம்சமாகும்.

பெருமானார் (ஸல்) அவர்கள் போருக்கு முன்னர் தம் தோழர்களிடம் ஆலோசனை கேட்டார்கள். தாம் விரும்பும் முடிவை சில தோழர்கள் முன் வைத்தனர். அப்போது கூட அவர்கள் திடீர் முடிவு செய்யாது மதீனத்து தோழர்களின் முடிவை அறியும் ஆர்வத்தில் தொடர்ந்தும் ஆலோசனை செய்தார்கள். அவர்களின் ஆலோசனையும் சாதகமாக அமைந்த பின்னரே போர் செய்யும் முடிவை எடுத்தார்கள். இது ஆலோசனை செய்வதின் அவசியத்தை உணர்த்துகின்றது.

மற்றுமொரு நிகழ்ச்சியையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

பெருமானார் (ஸல்) அவர்கள் பத்ருக் களம் சென்று மதீனா பகுதிக்கு நேராக இருக்கும் முதலாவது கிணற்றுக்கருகில் தமது கூடாரங்களை அமைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள். அப்போது ஹுபாப் இப்னுல் முன்தீர் (ரலி) என்ற நபித்தோழர் ‘அல்லாஹ்வின் தூதரே! இந்த இடத்தில் நாம் கூடாரமிடவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையா? அப்படியாயின் நாம் இதை விட்டும் ஒரு அடி முன்னாலோ, பின்னாலோ நகர மாட்டோம்! அல்லது உங்களது சொந்த அபிப்பிராயப்படி நீங்கள் தீர்மானித்த இடம் என்றால், என்னிடம் மாற்று அபிப்பிராயம் உள்ளது!’ என்றார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தனது சொந்த முடிவு என்றதும், ‘அல்லாஹ்வின் தூதரே! இதற்கு பின்னரும் தொட்டிகள் உள்ளன. நாம் முன்னேறிச் சென்று அவற்றையும் நம் வசப்படுத்திக்கொள்ள வேண்டும். அதைத் தாண்டியிருக்கும் சிறிய நீர் தொட்டிகளிலிருந்து தண்ணீரை நாம் எடுத்துக் கொள்வோம். அப்போது நாம் தண்ணீர் குடிக்க அவர்கள் தாகத்தோடு போராடுவார்கள்’ என்று தனது அபிப்பிராயத்தைக் கூற அது போர்த்தந்திரத்திற்கும், எதிரிகளைப் பலவீனப்படுத்தவும் ஏற்ற யுக்தியாகத் திகழ்ந்ததால் பெருமானார் (ஸல்) அவர்கள் தனது முடிவை மாற்றி அவர் கருத்துப்படி செயற்பட்டார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள் சுய கௌரவம் பாராது அடுத்தவர் கருத்தையும் மதித்து நடந்ததால், முஸ்லிம்களுக்கு நன்மை விளைந்தது. இது கலந்தாலோசனை செய்வதின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது.

3. எதிரிகள் குறித்த விழிப்புணர்வு:

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் இருக்கும் போதும் எதிரிகளின் நடமாட்டம் குறித்து புலனாய்வு செய்தார்கள். பத்ரு களம் வந்த போதும் பலரை அனுப்பி புலனாய்வுத் தகவல்களைத் திரட்டினார்கள். ஒரு முறை அவர்களும் அபூபக்கர்(ரலி) அவர்களும் சேர்ந்து, களத்தில் தகவல் அறியச் சென்றனர். மற்றொரு முறை அலி, சுபைர் இப்னுல் அவ்வாம், ஸஃத் இப்னு அபீவக்காஸ் (ரலி) ஆகிய நபித் தோழர்களை அனுப்பி அவர்கள் மூலம் குறைஷிகளுக்கு தண்ணீர் இறைக்கும் இளைஞர்களைக் கைது செய்து அவர்கள் மூலம் எதிரிகளின் எண்ணிக்கை, படைபலம், முக்கிய தளபதிகள் குறித்த தகவல்கள் என்பவற்றை அறிந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சி எதிரிகளின் செயல்திட்டங்கள், பலம், பலவீனம் பற்றிய அறிவின் அவசியத்தைத் உணர்த்துகின்றது. இந்த விழிப்புணர்வு முஸ்லிம்களிடம், அதிலும் குறிப்பாக சமூகத் தலைவர்களிடம் அவசியம் இருந்தாக வேண்டும்.

4. அல்லாஹ்வின் உதவியில் நம்பிக்கை வைத்தல்:

உலகியல் ரீதியில் முடிந்த வரை முயற்சி செய்யும் அதேவேளை ஆயுதத்திலோ, ஆட்பலத்திலோ நம்பிக்கை கொள்ளாமல் அல்லாஹ்வின் மூலமே உதவி கிடைக்கும் என்ற ஈமானிய பலத்தில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.

ஸஹாபாப் பெருமக்களிடம் போதிய யுத்த சாதனங்கள் இருக்கவில்லை. உலகக் காரணிகளை வைத்து ஆராய்ந்தால் முஸ்லிம்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால், இந்த சிறுகூட்டம் அந்தப் பெரும் கூட்டத்தை தோற்கடித்தது. எனவே, நம்முடைய முழுமையான நம்பிக்கை அல்லாஹ்வின் மீது மட்டுமே இருக்க வேண்டும்.

5. தூய பிரார்த்தனை உதவியைப் பெற்றுத்தரும்:

போர் நிகழும் முன்னரே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அதிகமதிகம் அழுதழுது அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அவர்கள் அழுததால் ஏற்பட்ட உடல் அசைவினால் அவர்களது தோளில் போட்டிருந்த போர்வை கீழே விழ, அபூபக்ர் (ரலி) அவர்கள் அதை எடுத்து அவர்களின் தோளில் போட்டவாறு ஆறுதல் கூறுவார்கள் என்ற செய்தியை ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.

இவ்வாறே நபித்தோழர்களும் அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். இதையே பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

‘(நினைவு கூறுங்கள்) உங்களை இரட்சிக்குமாறு உங்களிறைவனின் உதவியை நாடியபோது (அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்’ என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான். (8:9).

பிரார்த்தனை முஃமீனின் பலமான ஆயுதமாகும். நாம் மனத்தூய்மையுடன் கேட்கக்கூடிய துஆவை அல்லாஹ் வீணாக்கமாட்டான் என்ற திண்ணமான படிப்பினையை இது தெளிவுப்படுத்துகிறது!

6. இஸ்லாத்தின் எதிரிகளுடன் நேச உறவு கூடாது:

பத்ரு யுத்தம், கொள்கை உறவு தொப்புள் கொடி உறவை விட பலம் வாய்ந்தது என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய ஒரு நிகழ்வாகும். தந்தை, பிள்ளை, சகோதரன், உறவினன் என்ற பாசம் இன்றி சத்தியக் கொள்கைக்கும், அசத்திய கோட்பாடுகளுக்குமிடையில் நடந்த போர் இது. தந்தை சத்தியத்தில்-தனயன் அசத்தியத்தில், தனயன் சத்தியத்தில்-தந்தை அசத்தியத்தில் என்ற நிலையில் இடம்பெற்ற இப்போரில் கொள்கையை இலட்சியமாகக் கொண்டு உறவுகள் எடுத்தெறியப்பட்டன. இஸ்லாத்தை எதிர்ப்போர் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும் அவர்களிடம் நேச உறவு இருக்கக்கூடாது என்ற கோட்பாட்டை இது முஸ்லிம் உலகுக்கு வழங்கியது.

7. அறிவின் முக்கியத்துவம்:

பத்ருப் போரில் கைதிகளாக 70 காஃபிர்கள் பிடிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் 3 அல்லது 4 ஆயிரம் திர்ஹங்களை ஈட்டுத் தொகையாகக் கொடுத்து அல்லது 10 முஸ்லிம் சிறுவர்களுக்கு எழுத வாசிக்கக் கற்றுக்கொடுத்து விட்டு விடுதலை பெறலாம் என்று பெருமானார்(ஸல்) அறிவித்தார்கள். இவ்வாறு எழுத வாசிக்கக் கற்றுக்கொண்டவர்களில் ஒருவர் தான் ஸைத் பின் தாபித்(ரலி) அவர்களாவார்கள். இது அறிவுக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை இயம்புகிறது.

8. நபியவர்களே அழகிய முன்மாதிரி:

எல்லாவற்றிற்கும் மேலாக நம் அனைவருக்கும், கண்மணி நாயகம் (ஸல்) அவர்களே முன்மாதிரியாவார்கள். அவர்களின் அழகிய முன்மாதிரியை வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் நாம் காணமுடியும். இது குறித்து அல்லாஹ் அருமறையில் கூறுகிறான். ‘அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன் மாதிரி உங்களுக்கு இருக்கிறது’ (33:21).

இது போன்ற முன்மாதிரியை பத்ருப்போரின் போது நம்மால் காண முடிகின்றது. உதாரணமாக, பத்ருப்போரின் போது மூவருக்கு ஒரு ஒட்டகம் என்ற அடிப்படையில் பங்கு செய்யப் பட்டது. இதன்படி அபூலுபாபா, அலி, நபி(ஸல்) ஆகிய மூவருக்கும் ஒரு ஒட்டகம் கொடுக்கப்பட்டது. ஒருவர் ஏறிவர, இருவர் நடந்து வர வேண்டும் என்று சுழற்சி முறையில் பெருமானார் (ஸல்) அவர்கள் நடந்துவர நேரிட்டபோது, இவ்விருவரும், ‘அல்லாஹ்வின் தூதரே நாங்கள் நடந்தே வருகின்றோம். நீங்கள் ஒட்டகத்தில் ஏறி வாருங்கள்’ என்று கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நீங்கள் இருவரும் என்னை விடப் பலமிக்கவர்களுமல்லர்;, உங்களைவிட நன்மையைத் தேடிக்கொள்ளும் விஷயத்தில் நான் தேவையற்றவனுமல்ல’ எனக் கூறினார்கள்’ (அஹ்மத்).

குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து கொண்டு தொண்டர்களுக்கு கட்டளையிட்டும், பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தும் அரசியல் நடத்தும் தலைவராக அவர்கள் இருந்ததில்லை. மாறாக தோழர்களுடன் தோழனாக அவர்களைப் போன்றே சிரமங்களைத் தாங்கிக்கொண்டு களத்தில் உழைத்த தலைவர் அவர்கள். இதைப் போன்று ‘பத்ர்’ களத்தில் நபி(ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரிகளுக்கான பல்வேறு உதாரணங்களையும் காணலாம்.

இவ்வாறு நோக்கும்போது, பத்ரு யுத்தமும், அதில் முஸ்லிம்கள் பெற்ற வெற்றியும் நமக்குப் பல்வேறு படிப்பினைகளைத் தருகின்றன. அவற்றையெல்லாம் சிந்தித்துணர்ந்து, நமது நிகழ்காலத்தையும், எதிர் காலத்தையும் எழுச்சி மிக்கதாக மாற்றிக் கொள்ள முயல்வோமாக!