குணங்குடியார் (குறுங்கதை)

குவலயம் போற்றும்

குணங்குடியார்

“பேரரசனும் பரிசுத்தமானவனும் (யாவற்றையும்) மிகைத்தவனும் ஞானமுள்ளவனுமான, அல்லாஹ்வை வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் தஸ்பீஹ் செய்கின்றன.” (அல்குர்ஆன் 62:1) இத்தகு மேன்மை பொருந்திய அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.

“அல்லாஹ் தான் நாடியவரை ஒளியின் பால் செலுத்துகிறான்.” (அல்குர் ஆன் 24:35)

இஸ்லாமிய சூபிக் கோட்பாட்டையும், சூபித்துவ வழியில் தமிழ்நாட்டுச் சூழலுக்கேற்ப விளக்கும் சித்தர் மொழி வழக்கில் சூபி, ஞானி, குணங்குடி மஸ்தான் அவர்களின் ஞானப் பாடல்கள் அமைந்துள்ளன. இவை இத்தமிழ் உலகுக்குக் கிடைத்த அரும் பெரும் ஆன்மிக பொக்கிஷங்கள் ஆகும்.  இவரது பாடலகளின் சொற்றொடர் அமைப்பு,இலக்கிய வடிவங்கள் சொல்லாட்சி ஆகியவை தாயுமானவரைப் பின்பற்றி அமைந்துள்ளன எனலாம்.  இறைவனைப்பற்றி ரகுமான் கண்ணியில்-

“பூரணமே யற்புதமே பொங்குகரு ணைக்கடலே

காரணமே யென்றனருட் கண்ணே ரகுமானே

வெற்றிதரு மெய்ப் பொருளை வேதாந்தத் துட்கருவை

கற்றோர்க் கருள்புரியுங் கண்ணே ரகுமானே

ஈறும் முதலுமற்றே இயங்குகின்ற முச்சுடராய்க

காரணிக்கும் பூரணமே கண்ணே ரகுமானே!”

என்று பாடுகிறார்.

குணங்குடியார் இளமைக்காலம்

குணங்குடி முஸ்தான் அவர்கள் ராமனாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு அருகில் உள்ள குணங்குடி என்ற சிற்றூரில் கி.பி.1792ல் பிறந்தார்கள்.  அவர்களது தந்தையார் பெயர் நைனா முகம்மது. தாயார் பெயர் ஃபாத்திமா.  அவருடைய தந்தையார் அவருக்குச் சூட்டிய பெயர் சுல்தான் அப்துல் காதிர்.  அவர் இளமையிலே குர்ஆன் முழுவதும் ஓதி,தீனின் நெறிமுறைகளைக் கற்றுணர்ந்து ‘ஆலிம்’ பட்டமும் பெற்றவர்.  இளமையிலே இவர் ஆன்மிக ஞானத்தால் ஈர்க்கப்பட்டு உலகத்து சிற்றின்பங்களை ஒதுக்கித் தள்ளி அழியாத பேரின்பத்தை நாடத் துடித்த அவர், இல்லறத்தின் சிற்றின்பத் துன்பங்களை அடைய மறுத்து திருமணம் புரிய மறுத்துவிட்டார்.