குஜராத்தில் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்ட மசூதிகள்

குஜராத்:
கொரோனா சிகிச்சைக்காக 50 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக குஜராத்தின் வதோதராவின் மசூதி மாற்றப்பட்டுள்ளது. இங்கு தொழுகை நடத்துவதை விட உயிர்களைக் காப்பது முக்கியம் என அதன் நிர்வாகிகள் கருத்து கூறியுள்ளனர்.கொரோனாவின் இரண்டாது அலையால் நாடு முழுவதிலுமான மாநிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இதில் மகாராஷ்டிரா, குஜராத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால், அம்மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைஅளிக்க மருத்துவமனையில் இடமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு சூழலில் உதவ பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் தம் வழிபாட்டுத் தலங்களை அளிக்க முன்வந்துள்ளனர்.

இந்தவகையில், குஜராத்தின் வதோதராவிலுள்ள ஜஹாங்கீர்புராவின் முஸ்லிம்கள் மசூதியினுள் 50 படுக்கைகளுடன் கொரோனா நோயாளிகளுக்கான தற்காலிக மருத்துவமனையாக மாற்றிவிட்டனர்.

இதனுள், இந்து, முஸ்லில், கிறித்தவர் என சாதி, மத பேதமின்றி அனைவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

கோத்ரா மசூதி

குஜராத்தின் மற்றொரு முக்கியநகரமான கோத்ராவின் மசூதியிலும் ஒரு பகுதி கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஷேக் மஹாவர் சாலையிலுள்ள ஆதம் எனும் மசூதியின் தரைத்தளமும் மருத்துவமனையாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தகவல் தீக்கதிர்