என்ன நடந்தது இங்கே? (Aug 2015)

 

ஸ்லாத்தின் பெயரால் எந்தவொரு நாட்டிலும் தீவிரவாதம் பரவக்கூடாது;  இதர வன்முறைகளும் இஸ்லாத்துக்கு ஏற்பானது அல்ல. இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்படும் தீவிரவாதச் செயல்கள் பல அடிப்படையில் சந்தேகத்துக்குரியன. சர்வதேச ரீதியாக இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகச் செயல்படுத்தப்படும் சதிவேலைகள் ஏராளம்.  சாந்தியையும் சமாதானத்தையும் முன்நிறுத்தும் இஸ்லாம் அதற்கு எதிரான தீய நடைமுறைகளுக்கு வாய்ப்பளிக்க முடியாது.

1993 மார்ச் மாதம் மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டவர்கள்மீது நமக்கு எவ்வித ஒட்டுதலும் இல்லை.  இஸ்லாத்தைக் கறைப்படுத்த முயலும் வக்கிரமானவர்களின் கோழைத்தனம் அது.  அதே சமயத்தில் இந்தியாவின் ஆளும்வர்க்கம் இந்தக் குண்டுவெடிப்புகளைக் கையாண்ட விதம் ஃபாசிச நடைமுறைகளின் உச்சமாகும்.  1993 மும்பை குண்டுவெடிப்பு, பாபர் மசூதியை இடித்த பயங்கரவாதச் செயலுக்கான எதிர்வினை ஆகும்.  1992 டிசம்பர் ஆறாம் தேதி நடத்தப்பட்ட பாபர்மசூதி இடிப்பு வழக்கு விசாரணைகளும் அதன் போக்குகளும் எப்படியிருக்கின்றன என்பதற்கு நாளதுவரை எவ்விதத் தடயங்களும் இல்லை.  பாபர் மசூதி இடிப்பை முன்நின்று நடத்திய அத்வானி உள்ளிட்ட ஃபாசிஸத் தலைவர்களின் மீது இன்னும் சரியான குற்றப்பத்திரிகைகூடத்  தாக்கல் செய்யப்படவில்லை.   ஆனால் அதற்கு எதிர்வினையாக நடத்தப்பட்டதாகக் கருதப்படும் மும்பை குண்டுவெடிப்பு நிகழ்வுகளுக்கு மரணதண்டனையே நிறைவேற்றப்பட்டு விட்டது.  ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. ஆகியன காங்கிரஸ் கட்சியின் நேர் எதிர் இயக்கங்கள்;  ஆனபோதும் அந்த எதிர் இயக்கங்களின் மீது வழக்கையும் நடத்தாமல், குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யாமல் காங்கிரஸ் இழிவாக நடந்துகொண்டது நம் கவனத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாது.

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் எவரும் நாடு கடந்து வாழவில்லை.  அவர்கள் இன்னமும் இந்தியாவில்தான் உள்ளனர்.  அவர்களை உடனே கைது செய்யவும் வழ்க்கை நடத்தவும் முடியும். ஆனால் 1993 மும்பை குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் அனைவரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.  பிரதானக் குற்றவாளிகள் இல்லாமலே விசாரணை நடந்துள்ளது.  அதில் இந்தியாவுக்கு உதவுவதற்காக வலிந்து சரண்டைந்த யாகூப் மேமனுக்குப் பலவிதமான வாக்குறுதிகளை இந்தியா வழங்கியது.  ஒரு வழக்கில் அப்ரூவர் ஆகின்றவர் நட்த்தப்பட வேண்டிய விதம் வேறு.  குண்டுவெடிப்பின் மூல காரணங்களும் காரணகர்த்தாக்களும் கண்டறியப்பட வேண்டும் என்பதற்காக மேமனுக்குப் பலவிதமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.  அதற்கு விசுவாசமாக இருந்து ஆதியோடு அந்தமாக அனைத்து விவரங்களையும் கூறியதுடன், தன் குடும்பத்தாரையும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வரவழைத்தார்.  ஆனால் வழக்கின் அத்தனை உண்மைகளையும் மறைத்துவிட்டு பொய்யான காரணங்கலைக் கூறி இந்தியா வழக்கை நடத்தி தூக்குத் தண்டனையையும் உறுதி செய்தது.

இந்திய அரசின் ஃபாசிசப் போக்குகளுக்கு சுப்ரீம் கோர்ட் எப்போதும் உறுதுணையாக இருந்துவருவது ரகசியமானதல்ல.  முஸ்லிம்களுக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் சுப்ரீம் கோர்ட் கண்டுபிடித்த ’ இந்திய மனசாட்சி ‘ என்கிற ரத்தப்பலி கேட்கிற ராட்சசன் ஒருவன் இந்திய கோர்ட் வளாகங்களில் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறான்.  அந்த ராட்சசனின் ரத்தப்பலி கோரிக்கைக்கு இணங்கி அதன்படி கோர்ட்டுகள்  தீர்ப்பு வழங்கும் என்பதை உலகம் கண்டறிந்திருக்கிறது. இத்தகைய பித்தலாட்டமான வகையில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளையும் நடத்திக் கொடிய தண்டனைகளை வழங்குவது இங்கே இயல்பான நடைமுறையுமாக ஆகியிருக்கிறது.

இந்த ரத்தப்பலிகள் இந்தியாவின் கௌரவச் சிதைவுக்குக் காரணமாவதை ஆளும் வர்க்கம் உணரவில்லை.  இப்போது யாகூப் மேமனுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டதையும் அதில் மோடி அரசு நடந்துகொண்ட அராஜக நடைமுறைகளையும் உலகம் அதிர்ச்சியுடன் கவனித்திருக்கிறது. ஏனெனில் மேமனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யும்படி இந்தியாவின் முன்னாளைய நீதிபதிகளும் அரசியல் தலைவர்களும் அறிவுஜீவிகளும் சமூக ஆர்வலர்களும் குடியரசுத் தலைவருக்கு மனு அளித்தபோதும் அது குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளது.  மரண தண்டனைக்கு எதிராக உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை நாமறிவோம். இந்தியாவை விடவும் பின்னணியில் இருக்கிற பல நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்துள்ளன.  ஆனால் இந்தியா இத்தண்டனையை ரத்து செய்ய மறுத்து வருகிறது.  இதற்குக் காரணம் இந்திய அரச நிர்வாகத்தில் ஊடுருவியுள்ள சமயக் காழ்ப்புணர்வுதான். இந்தியாவில் 93 விழுக்காடு மரண தண்டனைகள் தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் மட்டுமே இதுவரையிலும் வழங்கப்பட்டுள்ளன.  இவர்களின்மீது வர்ணாஸ்ரம வழிகாட்டலின்படி தண்டனைகள் கொடுக்கப்படுவது இந்திய மனுநீதி அரசுக்கு இனிக்கிறது.  ஆகவே மரண தண்டனையை ரத்து செய்ய அது மறுக்கிறது.

யாகூப் மேமனுக்கு முன்னதாகத் தூக்குத்தண்டனை வழங்கப்பட்ட கைதிகள் சுமார் நாற்பதுபேர் வரை இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.  தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது எனில் வரிசைக் கிரமமாகவே நிறைவேற்ற வேண்டும்.  இந்தியாவில் அதுதான் நடைமுறையில் உள்ளது. ஆனால் யாகூப் மேமனுக்காகச் சட்டவிதிகள் காட்டும் அனைத்துச் சலுகைகளும் ஓரங்கட்டப்பட்டன. நாற்பது கைதிகளையும் விடுத்து 41வது கைதியத் தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று ஃபாசிஸ்டுகள் காட்டிய வேகம் அசாதாரணமானது. பொதுநலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் காட்ட முடியாத ஆர்வத்தை, வேகத்தை இந்த தூக்குத் தண்டனையில் காட்டியிருப்பது அவர்களுக்குள் உறைந்துள்ள ரத்த தாகத்தை அம்பலப்படுத்துவதாக உள்ளது.

தூக்குத் தண்டனையை நிறைவேற்றிய பின்னர் அவரது சடலத்தை அடக்கம் செய்யும்போது ஊடகங்கள் அதனை ஒளிபரப்பக்கூடாது என்றும், படங்களை எடுக்கக்கூடாது என்றும், செய்திகளைப் பிரசுரிக்கக் கூடாது என்றும் காவல்துறை எச்சரித்தது இந்தியாவின் ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட சவால் ஆகும்.  ஊடகங்களும் அரசின் நிர்ப்பந்த்த்துக்கு அஞ்சி அந்தச் செய்திகளை இருட்டடிப்பு செய்தன.  இந்த அச்சத்தை ஒப்புக்கொள்ள அவமானப்பட்டு,  ஒரு குற்றவாளியைத் தாங்கள் நாயகராகக் காட்ட விரும்பவில்லை என்று சவடால அடித்தன. இந்த ஊடகங்கள் சில மாதங்களுக்கு முன் நேபாள நிலநடுக்கத்தின்போது நடந்துகொண்ட அருவருப்பான மனிதத் தன்மைக்கு மாறான இழிசெயல்களால் ஓடஓட விரட்டியடிக்கப்பட்ட கதையை நாம் அறிவோம்.  ஆனால் இன்று மாறுவேடம் பூண்டு நாடகமாடின.

நாட்டின் முன்னுள்ள எல்லா சவால்களையும் சந்திக்க அரசு தயாராக உள்ளது என்று சொன்னவர்கள்தான் யாகூப் மேமனின் ஜனாஸாவில் கூட்டம் கூடிவிடக் கூடாது என்று அஞ்சினர்.  அவர்கள் ஆயிரம் திரைகளை இழுத்துப் போட்ட பின்னரும் யாகூப் மேமனின் இறுதிச் சடங்கு பல்லாயிரவர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. தன் நீதி விசாரணை முறைகளில் நேர்மையும் பொறுமையும் கொண்டு இந்தியா நடந்திருக்குமேயானால் மேமனின் இறுதிச் சடங்குக்கு முஸ்லிம்கள் கூடுவதைக் கண்டு அஞ்சியிருக்கத் தேவையில்லை.

மேமன் தூக்கில் தொங்கியிருக்கலாம்.  ஆனால் மேமனின் மரண தண்டனையை விலக்கிக் கொள்ளும்படிக் கேட்டுக்கொண்ட அத்துணை பேரும் இந்தியாவின் ஆன்மாவைச் சுடரச் செய்தவர்கள்.  அவர்களின் அறிக்கைகள் இனி மறையாது.  யாகூப்ன் மேமனை இந்த வழக்கில் தக்க முறையில் உட்செலுத்தி அவருக்கு உற்ற துணையாகவும் இருந்து பல உண்மைகளைப் பதிவு செய்தவர் முன்னாளைய உளவுத் துறையின் அதிகாரி மறைந்த ராமன். அவர் ஏற்கெனவே எழுதியிருந்த மனுவும் இதில் அடக்கம்.  மேமன் இல்லையென்றால் வெளியுலகுக்கு இந்தியத் தரப்பை உரத்துச் சொல்லும் எவ்வித வாய்ப்பும் கிடைத்திருக்காது.  ஆனால் அவரின் கருத்துக்களும் சேர்த்தே நிராகரிக்கப் பட்டுள்ளன.

**  மோடி உலக நாடுகளில் பயணம் செய்யும்போது இந்திய ஃபாசிஸத்தின் உண்மையான முகத்தைக் கண்டறியும் வாய்ப்பு உலக நாடுகளுக்குக் கிட்டியுள்ளது.  மேமன் தூக்கிலிடப் பட்டதுடன் இந்தியாவின் அஹிம்சையும் சேர்த்தே தூக்கிலிடப் பட்டுள்ளது. வெட்கப்பட வேண்டியவர்கள் இனி வெட்கப்பட்டுக் கொள்ளட்டும்.