வஹப் இப்னு முனப்பஹ் (ரலி) கூறுகிறார்கள்:

நாள்கள் மாதங்களாயின.  போருக்குச் சென்ற மூவரும் திரும்பி வருகின்றனர்.  ஆபிதிடம் சென்று தம் சகோதரியைப் பற்றி வினவுகிறார்கள்.  ஆபித் அவள் அகால மரணம் அடைந்துவிட்டதாகக் கூறி, அவள் மிகச் சிறந்த நல்ல பெண்ணாக இருந்தாள்.  இதோ இதுதான் அவளது அடக்கவிடம் பாருங்கள் என அழுது அரற்றி அவர்களை நம்ப வைத்தான்.  அவர்களும் தமது சகோதரியின் சமாதியைப் பார்த்து சிறிது நாட்கள் அங்கு இருந்துவிட்டு தமது இல்லங்களுக்குத் திரும்பினர்.

பகல் கழித்து இரவு வந்தது.  சகோதரர்கள் படுக்கைக்குச் சென்றார்கள். ஷைத்தான் அவர்களின் கனவில் ஒரு வழிப் போக்கனைப் போல் தோன்றி மூத்தவனிடம் சென்றான்.  அவனது தங்கையைப் பற்றி விசாரித்தான்.  அவனும் அவளது மரணத்தைப் பற்றி கூறிவிட்டு, துக்கத்தை வெளிப்படுத்தி அவளது கப்ரை (மண்ணறை) பார்த்து வந்ததாகவும் கூறினான்.  அதற்கு ஷைத்தான், இதெல்லாம் பச்சைப் பொய், அந்த போலி இறைதியானி உங்களை நன்றாகவே ஏமாற்றியுள்ளான்.  அவன் உங்கள் சகோதரியைக் கற்பழித்து, கர்ப்பவதியாக்கி, குழந்தையையும் பெற வைத்து அதையும், அவளையும் கொன்று புதைத்துவிட்டான். இது யாருக்கும் தெரியாது.  பரம ரகசியமாகவே இதை அவன் செய்தான்.

நீங்கள் மீண்டும் அந்த வீட்டிற்குச் சென்று வலது பக்கத்து மூலையில் தோண்டிப் பாருங்கள்.  தாயும் சேயும் மரணமுற்ற நிலையில் எலும்புக் கூடாய் கிடைப்பார்கள் என்று தூபம் போட்டான்.  இதே போல் மற்ற இரு சகோதாரர்களின் கனவிலும் சென்று பற்ற வைத்தான்.  குhலையில் மூவரும் இரவில் நான் அதிசய கனவொன்று கண்டேன் என பரஸ்பரம் விவரிக்கத் தொடங்கினார்கள்.  அவர்களில் மூத்தவன், இதெல்லாம் மனப் பிரமை, விட்டுத் தள்ளுங்கள்.  உங்களின் வேலையைப் பாருங்கள் என்றான். இளையவன், நான் குறிப்பிட்ட அந்த இடத்தை தோண்டிப் பார்க்காதவரை நிம்மதியடைய மாட்டேன் என்கிறான்.  மூவரும் திரும்பச் சென்று அந்த இடத்தைத் தோண்டுகின்றனர்.  கனவில் கூறியவாறே தாயும் குழந்தையும் காணப்படுகிறார்கள். அவர்கள் வெகுண்டெழுந்து ஆபிதிடம் விசாரிக்கின்றனர்.

அவரும் ஷைத்தானின் கூற்றையும் தனது தீய செயலையும் விவரிக்கின்றார். சகோதரர்கள் இந்த கொலைபாதகம், நம்பிக்கை துரோகத்தை அரசனிடம் சென்று முறையிடுகின்றனர். தியான மண்டபத்தில் இருந்து போலி கபடதாரி இறைப்பற்றாளர் இழுத்துச் செல்லப்படுகிறார்.  அவரது குற்றத்திற்கு அவருக்கு தூக்கு தண்டனை எனத் தீர்ப்பாகிறது.  தூக்கு மேடையில் ஆபித் நிறுத்தப்படுகிறார்.

ஷைத்தான் அவர் முன் தோன்றி என்னைத் தெரியுமா? நான் தான் உன் பழைய கூட்டாளி! நண்பேண்டா..! உன்னை வழிகெடுக்கச் செய்து மாது போதையில் ஆழ்த்தி, காமக் கொடூரனாக்கி, கற்பழிக்க வைத்து, அப்பாவிப் பெண்ணை கர்ப்பவதியாக்கி, குழந்தை பெற்று அதைக் கொல்ல வைத்துää அந்தப் பெண்ணையும் கொலை செய்ய வைத்து இந்த நிலைக்கு ஆளாக்கியவன்.  இன்னும் நேரம் உண்டு நீ என்னை தெய்வமாக ஏற்று எனக்கு ஸஜ்தா செய்தால் நான் உன்னைத் தூக்கிலிருந்து விடுவிப்பேன் என்கிறான்.  சாகப் போகிறவன் என்ன செய்வான்.  அவர் ஷைத்தானுக்கு முன் மண்டியிடுகிறார்.  இறைவனுக்கு மாறு செய்துவிடுகிறார்.  பின்னர் ஷைத்தான் அவரை அவனது கூட்டாளிகளிடம் விட்டுச் சென்று விடுகிறான்.  அவர்கள் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்று விடுகிறார்கள்.

இத்தகைய இறைபக்தியாளரைக் குறிப்பிட்டுத்தான் இந்த திருவசனம் இறங்குகிறது.

அந்த ஷைத்தானைப் போன்று அவன் மனிதனை நெருங்கி இறைவனுக்கு மாறு செய் என்கிறான். அவன் காஃபிராகி விடும் போது, நான் உன்னை விட்டு நீங்குகிறேன்.  நான் ரப்புல் ஆலமீனை அஞ்சுகிறேன் என்கிறான்.  இந்த ஷைத்தான் மற்றும் அவனைப் பின்பற்றும் காஃபிரின் நிலையும் ஒன்றேதான்.  இவர்கள் நரகத்தில் நிரந்தரமாக இருக்க தள்ளப்படுவார்கள்.  கொடுமையாளர்களுக்கு இந்த தண்டனைதான் உண்டு.

ஜஃரூல்லாஹ் ரஹ்மானி

  நன்றி: சிந்தனை