வஹப் இப்னு முனப்பஹ் (ரலி) கூறுகிறார்கள்:

சாத்தானின் ஊசலாட்ட முயற்சி:

பின்னர் ஷைத்தான் அந்த ஆபிதை மென்மைப்படுத்தத் துவங்கினான்.  பாவம் அவள் கன்னிப் பெண்.  வீட்டை விட்டு வெளியே வந்து உணவை எடுத்துச் செல்வது அவளுக்கு கஷ்டத்தைத் தருகிறது.  யாராவது இந்தச் சமயத்தில் பார்த்து அவளை பலாத்காரம் செய்ய வாய்ப்பு இருக்கிறதே, ஆதலால் அவளது வீட்டுக் கதவுக்கு முன் உணவை வைத்து வருவதால் இன்னும் அதிக நன்மை கிடைக்குமே! அவளுக்கும் பெரும் பாதுகாப்பாக இருக்குமே என ஆபிதின் உள்ளத்தில் எண்ண அதிர்வலைகளை உருவாக்கினான்.  ஆக, ஆபித் உணவை எடுத்துக் கொண்டு அவளது வீடு வரை செல்ல ஆரம்பித்தார்.

நாள்கள் நகர்ந்தன.  சில நாட்களுக்குப் பின் ஷைத்தான் அவரிடம்,  நீ அந்தப் பெண்ணுடன் பேசிப் பழகு.  தனிமை அவளை வாட்டுகிறது என்றான். ஆபித் மறுத்தார். ஷைத்தானின் தீவிர வற்புறுத்தலுக்குப் பின் ஒத்துக் கொண்டு அவளுடன் இரண்டொரு வார்த்தைகளைப் பேசத் துவங்கினார்.  இதற்காக தன் வழிப்பாட்டு இடத்தை விட்டு இறங்கி வர ஆரம்பித்தார்.  பின்னர் ஷைத்தான் நீ உனது வழிபாட்டுதலத்தின் கதவிற்கு வந்துவிடு. அவளும் வீட்டுக் கதவில் வந்து நின்று கொள்வாள்.  இவவாறாக, ஆபித் தனது வழிபாட்டறையிலிருந்து தெருக் கதவுக்கு வந்து அழகியுடன் பேசினார்.  இவளும் தனது அறைக் கதவுக்கு முன் அமர்ந்து அவருடன் கதைத்தாள்.  இப்படியே சில நாள்கள் தொடர்ந்தன.  பின்னர் ஷைத்தான் நீ அவள் வீட்டுக்கு அருகில் சென்று பேசு.  அதனால் அவளது உள்ளத்திற்கு மேலும் அமைதி கிட்டும் என்றும் இதனால் அதிக நன்மையும் கிடைக்கும் என்றும் கூறினான்.

அதன்படியே ஆபித் தன் இறைதியானத்தை விட்டு விட்டு அவளது வீட்டருகில் சென்று பேசினார்.  பின்னர் ஷைத்தானின் தூண்டுதலால் அவளது வீட்டுக் கதவுக்கு அருகிலேயே சென்று பேசிக் கொண்டிருந்தார்.  இப்படியே மேலும் சில நாட்கள் கடந்தன.  ஷைத்தான் மேலும் ஆபிதைத் தூண்டினான்.  கதவுக்கு அருகில் ஏன்?  வீட்டிற்குள் சென்றே பேசலாமே.  அந்தப் பெண்ணுக்கும் கதவு வரை வரும் சங்கடம் குறையுமே என ஆலோசனை கூறினான்.  ஆபிதுக்கும் இது நன்றாகவே பட்டது.  பகல் முழுவதும் அவளுடன் பேசுவதும், இரவில் தன் வழிபாட்டு மண்டபத்திற்குத் திரும்பி வழிபாட்டில் ஈடுபடுவதும் என் தொடர்ந்தது.  இதன் பின் ஷைத்தானின் பித்தலாட்டத்தில் மயங்கிய ஆபித் அவளை அணைக்கவும் முத்தமிடவும் செய்தார்.  ஷைத்தான் அவரது உள்ளத்தில் மேலும் கிளர்ச்சியூட்டி இறுதியில் இருவரையும் மேலும் கெடுத்து விட்டான்.  இதன் விளைவாக அந்தக் கன்னிப் பெண் கருவுற்றாள்.  ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தாள்.

இப்போது ஷைத்தான், இறைதியானத்தில் மூழ்கி மிகச் சிறந்த இறைப் பற்றாளனாக இருந்த அந்த ஆபிதிடம் வந்து, இப்போது அந்தப் பெண்ணின் சகோதரர்கள் வந்து இந்தக் குழந்தையைப் பற்றிக் கேட்டால் நீ என்ன பதில் தருவாய்?  நீ குற்றவாளியாகி விடுவாயே.  எல்லோரும் உன்னை இழித்துரைப்பார்களே! இழிநிலையை அடைந்து விடுவாயே! இதுவரை எடுத்த நற்பெயருக்குக் களங்கம் உண்டாகுமே. ஆதலால் யாருக்கும் தெரியாமல் இந்தக் குழந்தையைக் கொன்று புதைத்து விடு.  அந்தப் பெண்ணும் தன் சகோதரர்களிடம் நீ எப்படி நடந்து கொண்டாய் எனத் தெரிவிக்காமல் நிச்சயமாக மறைத்து விடுவாள் எனத் தூண்டினான்.

ஆபித் பிறந்த குழந்தையைக் கொன்று வீட்டிலேயே புதைத்தும் விடுகிறார். பின்னர் ஷைத்தான், என்னப்பா விவரம் தெரியாதவனாக இருக்கிறே… உன்னுடைய இந்தத் தீய செயல்களை அந்தப் பெண் தனது சகோதரர்களிடம் விவரிக்க மாட்டாள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?  கண்டிப்பாக மறைக்க மாட்டாள்! அவள் வாய் திறந்து சொல்லிவிட்டால் உன் நிலைமை என்னவாகும்? சாட்சிகளை வைத்துக் கொண்டு குற்றம் செய்யலாமா?  என கேள்விகளை எழுப்பி அவளையும் கொன்று அந்தக் குழந்தைக்குப் பக்கத்திலேயே அடக்கம் செய்து விடு எனத் தூண்டினான்.

ஆக இறைபக்தியாளன் அவளையும் கொன்று விட்டு குழந்தைக்கு அருகில் குழி தோண்டி புதைத்து பெரிய கல்லையும் மேலே வைத்து விடுகிறார்.  தனது தியான மண்டபத்திற்கு சென்று தியானத்தில் மூழ்கி விடுகிறார்.