யோகா அது ஆகா

ல்லாஹ்விடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம்”. (அல்குர்ஆன்: 3 ; 19)

பேச்சிலே சிறந்தது அல்லாஹ்வுடைய பேச்சு. நாகரீகத்தில் சிறந்தது நபிகள் நாயகம்   அவர்கள் காட்டிய நாகரீகம்.

நமக்கென்று கலாச்சாரமும் சட்ட திட்டங்களும் இருக்கிறது. அதைத்தான் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும். கல்யாணம் செய்ய வேண்டுமா?  யாரை கல்யாணம் செய்வது கூடும், யாரை  கல்யாணம் செய்வது கூடாது என்ற சட்டத்தை நாம் பின்பற்ற வேண்டும். சாப்பிட வேண்டுமா? எதை சாப்பிடுவது ஹலால், சாப்பிடுவது ஹராம் என்று அதைத் தெரிந்து அதன் பிரகாரம் நாம் நடக்க வேண்டும். வியாபாரம் செய்ய வேண்டுமா?  ஹலாலான வியாபாரம் எது, ஹராமான தடுக்கப்பட்டது எது என்பதை  தெரிந்து நாம் அதை தவிர்த்து கொள்ள வேண்டும். இப்படி வாழ்வியலின் எல்லா துறைகளுக்கும் வழிகாட்டிய இஸ்லாம், மனிதனுடைய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை வைத்திருக்கிறது. இஸ்லாத்தில் தீர்வு இல்லாத எந்த பிரச்சனைகளும் இல்லை.

மனிதனுக்கு வெற்றி கிடைக்க வேண்டும். மனிதனுக்கு நிம்மதி கிடைக்க வேண்டும். மனம் அமைதி அடைய வேண்டும். அதற்கு என்ன வழி ?  அதற்கும் இஸ்லாத்தில் வழி இருக்கிறது. அல்லாஹ்வை திக்ர் செய்ய வேண்டும்இ தியானம் செய்ய வேண்டும்.

الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

“அல்லாஹ்வை திக்ர் செய்வதைக் கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகிறது” (13;28) என்று அல்லாஹ் “அலா “அறிந்து கொள்ளுங்கள்! என்று அழுத்தம் திருத்தமாக நமக்கு சொல்லிக் காட்டுகிறான்.

நாம் சாப்பிடுவதற்காக, பசி அடங்க வேண்டும் என்பதற்காக எதையும் சாப்பிடமாட்டோம். கல்யாணம் செய்ய வேண்டும், நம்முடைய  இச்சைகளை தனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி எந்த பெண்ணையும் நாம் கல்யாணம்  செய்ய மாட்டோம். வியாபாரம் செய்ய வேண்டும், பணம் வர வேண்டும், செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக எல்லா வகையான வியாபாரத்தையும் நாம் செய்ய மாட்டோம். அதைப் போல மனம் நிம்மதி அடைய வேண்டும் என்பதற்காக, நம்முடைய மனம் சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக மார்க்கத்திற்கு முரணான எந்த வழியாக  இருந்தாலும் நாம் அதை ஒருக்காலும்  தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடாது.

இன்று உலகத்தில் “யோகா” வைப் பற்றி அதிகமாக விளம்பரம் செய்யப்படுகிறது. அந்த யோகாவில் கலந்து கொள்ளக்கூடிய தலைவர்களைப் பற்றியும், அதிலே ஈடுபடக்கூடிய கலைத் துறையைச் சார்ந்தவர்களைப் பற்றியும் அதில் ஈடுபடக்கூடிய பெரும் பெரும் தொழில் அதிபர்களைப் பற்றியெல்லாம் விளம்பரத்தில் காட்டப்படுகின்றது. உலகத்திலுள்ள பெரும் நகரங்களில் எல்லாம் யோகா நடப்பதைக் காட்சிகள் எடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு காட்டப்படுகிறது.

அதை பார்க்கிற முஸ்லிம்களுக்கு நாமும் அந்த  யோகாவில் கலந்து கொண்டால் என்ன?  என்ற ஒரு நினைப்பு வருகிறது. அந்த யோகாவில் கலந்து கொண்டவர்களுக்கு ஏற்படுகின்ற உடல் ரீதியான,  உள ரீதியான மாற்றங்களையும் அதனால் ஏற்படுகிற பலன்களையும் பார்க்கிறபொழுது, அறிகின்றபொழுது, கேள்விபடுகின்றபொழுது இஸ்லாத்தைச் சார்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதில் ஈடுபட்டால் என்ன?  என்ற ஆசை வருகிறது என்பது மட்டுமல்ல! எத்தனையோ நம்முடைய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள்  அந்த யோகாவில் கலந்து கொண்டு அந்தப் பயிற்சயில் ஈடுபடுகிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம் அல்ல! ஆபத்தான விஷயம்.

மனம் நிம்மதி அடைய வேண்டும் என்பதற்காக வேண்டி நமக்கென்று ஒரு வழிமுறையை  அல்லாஹ்வும்,  ரசூலும்   சொல்லித்தந்து இருக்கிற பொழுது அதைத்தான், அந்த மார்க்கத்தைத் தான் பின்பற்ற வேண்டுமே தவிர,  அதற்கு விரோதமான ஒரு மார்க்கம், அதற்கு விரோதமான ஒரு வழி அது யோகாவின் மூலமாக வந்தாலும் சரி, அல்லது வேறு ஏதாவது ஒரு பெயரில் வந்தாலும் சரி நாம் அதை பின்பற்றுவதோ,  அதன் பிரகாரம் நடப்பதோ நமக்கு அது தடை செய்யப்பட்டு இருக்கின்றது.